Election bannerElection banner
Published:Updated:

``மூன்றே ஷாட்... மூன்றும் கோல்... ரொனால்டோ மேஜிக்கிலிருந்து ஸ்பெயின் மீள வேண்டும்!’’ - ராவணன்

``மூன்றே ஷாட்... மூன்றும் கோல்... ரொனால்டோ மேஜிக்கிலிருந்து ஸ்பெயின் மீள வேண்டும்!’’ - ராவணன்
``மூன்றே ஷாட்... மூன்றும் கோல்... ரொனால்டோ மேஜிக்கிலிருந்து ஸ்பெயின் மீள வேண்டும்!’’ - ராவணன்

``மூன்றே ஷாட்... மூன்றும் கோல்... ரொனால்டோ மேஜிக்கிலிருந்து ஸ்பெயின் மீள வேண்டும்!’’ - ராவணன்

கால்பந்து ரசிகர்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் தேவையில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக ஆட்சிபுரியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரிய ஆனந்தம் என்ன இருந்துவிடப் போகிறது? உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே, அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் ரொனால்டோ! இந்த ஆட்டத்தை போர்ச்சுகல் vs ஸ்பெயின் என்று ஃபிஃபாவின் ரெக்கார்டுகள் சொல்லும். ஆனால், இதை ரொனால்டோ vs ஸ்பெயின் என்றுதான் வரலாறு சொல்லும். 

உலகக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டதும் இந்தப் போட்டிக்குத்தான் உச்சபட்ச எதிர்பார்ப்பு. அதை எந்தக் குறையும் இல்லாமல் நிவர்த்தி செய்துவிட்டனர் இரு அணியின் வீரர்களும். ஆட்டம் முழுக்க முழுக்க ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், போட்டியின் முடிவை முடிவு செய்தது என்னவோ ரொனால்டோ என்னும் தனி ஆள். 90 நிமிடங்களில் போர்ச்சுகல் டார்கெட் நோக்கி அடித்தது வெறும் மூன்றே ஷாட்கள். மூன்றுமே அவர் அடித்தது. மொத்தப் போட்டியிலும் ஒன்றிரண்டு மிஸ்பாஸ்கள் மட்டுமே. அதைத்தவிர்த்து அவரது பாஸிங்கிலும் 100 சதவிகித பெர்ஃபெக்ஷன். 

ரொனால்டோ இந்தப் போட்டிக்கு மனதளவிலும் ரொம்பவே தயாராகியிருக்கிறார். தன் அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுள்ளார். அணியின் ஒரே பலம் - ரொனால்டோ! அவர்தான் தன் அணியின் முடிவை நிர்ணயிக்கப் போகிறார். பக்காவாக மேஜிக்கல் பாஸ் கொடுக்க இந்த அணியில் இஸ்கோ, அசேன்ஸியோ போன்றவர்கள் இல்லை. கிராஸ் செய்ய கர்வகாலும், கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கும் லாங் பால் போட ரமோஸும் இல்லை. எல்லோரும் எதிரணியில்! அவர்தான் கோல் போடவேண்டும். அதற்கான வாய்ப்பையும் அவரே உருவாக்கவேண்டும். 

அதை அருமையாகச் செய்தும் முடித்தார் ரொனால்டோ. கால்பந்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாதியிலும் முதல் 10 நிமிடங்களும், கடைசி 10 நிமிடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவை. ரொனால்டோ, அதைத் தெளிவாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் ஸ்பெயினின் டிஃபன்ஸை அட்டாக் செய்தது அந்தத் தருணங்களில்தாம். அந்த ஒவ்வொரு தருணத்திலும் ஸ்பெயினை அசரடித்தார். கோலுக்கான வாய்ப்புகளைத் தானே உருவாக்கினார். நான்காவது நிமிடத்தில் பெனால்டி, 88-வது நிமிடத்தில் ஃப்ரீ-கிக். இதுதான் ஒரு ஜாம்பவானின் புத்திசாலித்தனம்...அனுபவம்..!

ரொனால்டோவைத் தவிர்த்து போர்ச்சுகல் அணியின் ஆட்டத்தை அலசினால், அங்கு பெரிதாக ஒன்றுமே இல்லை. இளம் வீரர் வில்லியம் சில நல்ல பாஸ்கள் கொடுத்தார். அது ஒன்றுதான் பாசிட்டிவ். ஆனால், அவரும் தடுப்பாட்டத்தில் அணிக்கு உதவவேண்டும். குறைந்தபட்சம் Midfield third ஏரியாவிலாவது டிஃபன்ஸுக்கு உதவவேண்டும். மற்ற நடுகள வீரர்கள் ரொனால்டோவுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. உலகின் மிகப்பெரிய Aerial threat அவர். ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்ட கிராஸ்கள் மொத்தமே இரண்டுதான். கார்னர்களும் சரியாக எடுக்கப்படவில்லை. எல்லா ஆட்டத்திலும் ரொனால்டோவே ஆடுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒருவேளை அவருக்குக் காயம் ஏற்பட்டால்..?

போர்ச்சுகல் அணியின் டிஃபன்ஸ் ஆட்டம் முழுக்க திக்கற்றுத் திரிந்தது. ரமோஸ், பிக்கே இருவரும் நடுகளம் வந்து விளையாடிக்கொண்டிருக்க, இவர்கள் பாக்ஸுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். அதுவும் சரியான கெமிஸ்ட்ரியும் இல்லை. அனைத்து வீரர்களும் பாக்ஸுக்கு அருகிலேயே இருந்தபோதும், ஸ்பெயின் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தனர். இஸ்கோ, கோஸ்டா இருவருக்கும் அதிக ஸ்பேஸ் கிடைத்தது. இதையும் அவர்கள் சரிசெய்துகொள்ளவேண்டும். 

ஸ்பெயின் அணியைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால், ரொனால்டோ என்ற தனிமனிதனை அவர்களால் தடுக்க முடியவில்லை. டியாகோ கோஸ்டா மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். முதல் கோல் மிகவும் சிறப்பாக அடித்தார். இஸ்கோ, இனியஸ்டா, சில்வா ஆகியோருக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களின் ஃபினிஷிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வரும் போட்டிகளில் அவர்கள் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். டி கே - மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அதிலிருந்து மீண்டுவருவது அவசியம்.

பயிற்சியாளரை மாற்றியிருப்பது ஸ்பெயின் அணியின் ஆட்டத்தைப் பாதித்திருக்குமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. இரண்டு நாள்களில் ஒரு பயிற்சியாளர் மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. அனைவரும் மிகப்பெரிய க்ளப்களில் ஆடுபவர்கள், மிகப்பெரிய தொடர்களில் ஆடியவர்கள். அமெச்சூர் வீரர்கள் இல்லை. சப்ஸ்டிட்யூஷன் தவிர்த்து புதிய பயிற்சியாளரால் இரண்டு நாள்களில் வேறு எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியாது. அதனால் அதைக் காரணமாகச் சொல்வது சரியாகாது. ஸ்பெயின் `ரொனால்டோ' அட்டாக்கிலிருந்து விரைவில் வெளிவரவேண்டும். 

ராவணன் தர்மராஜ் - தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர். டெம்போ, மோகன் பகான், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற முன்னணி ஐ -லீக் அணிகளில் விளையாடிய அனுபவ டிஃபண்டர். இந்திய 23 வயதுக்குட்பட்ட அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். புனே சிட்டி அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணிக்கு விளையாடிவருகிறார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு