Published:Updated:

``உலகக்கோப்பையில் பெல்ஜியம் மிகப்பெரிய ஷாக் கொடுக்கும்'' - கால்பந்து வீரர் ராவணன்

``உலகக்கோப்பையில் பெல்ஜியம் மிகப்பெரிய ஷாக் கொடுக்கும்'' - கால்பந்து வீரர் ராவணன்

``உலகக்கோப்பையில் பெல்ஜியம் மிகப்பெரிய ஷாக் கொடுக்கும்'' - கால்பந்து வீரர் ராவணன்

Published:Updated:

``உலகக்கோப்பையில் பெல்ஜியம் மிகப்பெரிய ஷாக் கொடுக்கும்'' - கால்பந்து வீரர் ராவணன்

``உலகக்கோப்பையில் பெல்ஜியம் மிகப்பெரிய ஷாக் கொடுக்கும்'' - கால்பந்து வீரர் ராவணன்

``உலகக்கோப்பையில் பெல்ஜியம் மிகப்பெரிய ஷாக் கொடுக்கும்'' - கால்பந்து வீரர் ராவணன்

தொடங்குவதற்கு முன்பே, கால்பந்து அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்கூடாகக் காட்டியுள்ளது இந்த உலகக்கோப்பை. இத்தாலி, நெதர்லாந்து போன்ற அணிகளை வீழ்த்தும் அளவுக்கு கத்துக்குட்டிகளாகக் கருதப்பட்ட அணிகள் பலமடைந்துள்ளன. நிறைய `அண்டர்டாக்ஸ்', இளமை நிரம்பிய அணிகள் என இந்த உலகக்கோப்பை முன்பைவிட வித்தியாசமானதாகவும், எதிர்பார்ப்பைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. 

முன்னணி அணிகள் அனைத்துமே பலமாக இருப்பதால், நாக்அவுட் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில் என முன்னாள் சாம்பியன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஆனால், என்னுடைய சாய்ஸ் பிரான்ஸ். யூரோ கோப்பையில் ஆடிய அணியில் பல மாற்றங்கள். ஆனால், முன்பைவிட பலமடங்கு பலம் பொருந்திய அணியாகக் களமிறங்குகிறது பிரான்ஸ்.

முன்களத்தில் கிரீஸ்மேன், எம்பாப்பே கூட்டணி நிச்சயம் அணியின் துருப்புச்சீட்டாய் விளங்கும். விங்கில் டெம்பளேவின் வேகம் அணிக்கு ப்ளஸ். இத்தாலி அணியுடனான பயிற்சிப் போட்டியில் அவர் அடித்த அந்த கோல், பிளேயிங் லெவனில் அவருடைய இடத்தை நிச்சயம் பெற்றுத்தரும். பிளேயிங் லெவனில் ஆடும் வீரர்கள் மட்டுமல்லாமல், பெஞ்சும் பலமாக இருக்கிறது. அதனால், இந்த முறை பிரான்ஸ் முன்னணி அணிகளை நிச்சயம் அச்சுறுத்தும். 

யூரோவில் பிரான்ஸை வீழ்த்திய போர்ச்சுகல், உலகக்கோப்பையிலும் பெரிய ஷாக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் பெரிய அளவில் ஜொலிக்காத கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த முறை நிச்சயம் அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கிறேன். பெர்னார்டோ சில்வா, ஆண்ட்ரே சில்வா, ஜோ மரியோ, ஜெல்சன் போன்ற இளம் வீரர்கள் முன்பைவிட அணியை பலப்படுத்துகின்றனர். யாரும் எதிர்பாராத அளவுக்கு போர்ச்சுகல் முன்னேறும்.

அதைவிட, பெல்ஜியம் செய்யப்போகும் மாயத்தைப் பார்க்கத்தான் ஆவலாக இருக்கிறேன். எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் இருக்கிறது. பெரும்பாலான வீரர்கள் ப்ரீமியர் லீக் தொடரில் முத்திரை பதித்தவர்கள். ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என எல்லோருமே ஸ்டார் பிளேயர்கள். வீரர்களைவிட எனக்கு இந்த அணியின் மீது நம்பிக்கை வரக் காரணம், அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ்.

ப்ரீமியர் லீக் அணிகளுக்கு மேனேஜராக இருந்தபோது, சுமாரான பிளேயர்களையும் சிறந்த டெக்னிக்கல் வீரர்களாக மாற்றியவர். பெல்ஜியம் அணியிடம் இதுவரை இல்லாத `ஃபைனல் புராடெக்ட்' இவர் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். பெல்ஜியம் - இந்த உலகக்கோப்பையின் மிக முக்கிய அணி. கோப்பை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 

நடப்பு சாம்பியன் ஜெர்மனியைப் பற்றி முதல் போட்டி முடிந்ததும்தான் கணிக்க முடியும். 2010 உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியை, கடந்த உலகக்கோப்பையின்போது நன்கு கனித்துவைத்திருந்த நெதர்லாந்து, சிலி அணிகள் எளிதாகத் தோற்கடித்தன. ஜெர்மனி அணி, அவர்களைப்போல் அதே ஸ்டைலில் விளையாடினால் கொஞ்சம் சிரமம்தான். சாம்பியன் என்ற நினைப்பு இல்லாமல் விளையாடுவது அவசியம். 

அதேபோல் பிரேசில் அணியும் கடந்த முறைபோல் நெய்மரை மட்டுமே நம்பாமல் களமிறங்கவேண்டும். சொல்லப்போனால் 2014 அணியைவிட இப்போதுள்ள அணி பலமுடையதாக இருக்கிறது. கடந்த முறை ஸ்ட்ரைக்கராக ஃப்ரெட் படுமோசமாக ஆடினார். இந்த முறை கேப்ரியல் ஜீசஸ், ஃபிர்மினோ என நல்ல ஸ்ட்ரைக்கர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கொடினியோ, வில்லியன் என அனைத்து வீரர்களும் ஃபார்மில் இருப்பதால், அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடவேண்டும். 

உலகக்கோப்பையின் ஸ்பெஷலே எதிர்பாராத அதிர்ச்சிகள்தான். கடந்த முறை ஸ்பெயின் வெளியேறியது, கோஸ்டா ரிகாவின் அதிரடி என சில ஆச்சர்ய அதிர்ச்சிகள் நடந்தன. இந்த முறையும் அதுபோல் சில ஆச்சர்யங்கள் நடக்கலாம். நைஜீரியா, மொராக்கோ, செனகல் போன்ற ஆப்பிரிக்க அணிகள் நிச்சயம் ஒரு `அப்செட்' நிகழ்த்தும். 

ஆசிய அணிகளில் ஆஸ்திரேலிய ஓரளவு நன்றாக விளையாடும் என எதிர்பார்க்கிறேன். அவர்களது கேம் ஸ்டைல் உலகக்கோப்பை போன்ற அரங்கில் எடுபடும். பந்தை அதிக நேரம் தங்களிடமே வைத்திருக்காமல், லாங் பாஸ் போட்டு விளையாடும் அவர்களது `பிசிகல் கேம்' இந்தத் தொடரில் அவர்களுக்கு மிகச்சிறந்த பலன் கொடுக்கும். `செட் பீஸ்'களிலும் அவர்கள் தங்கள் பலத்தைக் காட்டுவார்கள். 

எப்படியிருந்தாலும் முதல் சுற்று முடிந்த பிறகுதான் எந்த அணியைப் பற்றியும் முழுமையான முடிவுக்கு வர முடியும். பெரிய அணிகள் சொதப்பலாம்; கத்துக்குட்டி அணிகள் கலக்கலாம். நாம் எதையும் யூகிக்க முடியாது. ஏனெனில், இது உலகக்கோப்பை!

ராவணன் தர்மராஜ் - தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர். டெம்போ, மோஹன் பாஹன், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற முன்னணி ஐ -லீக் அணிகளில் விளையாடிய அனுபவ டிஃபண்டர். இந்திய 23 வயதுக்குட்பட்ட அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். புனே சிட்டி அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணிக்கு விளையாடிவருகிறார்.