Published:Updated:

பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது? #WorldCup

பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது? #WorldCup

பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது? #WorldCup

Published:Updated:

பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது? #WorldCup

பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது? #WorldCup

பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி... கோப்பையை முத்தமிடப் போகும் கால்பந்து அணி எது? #WorldCup

21-வது கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் ரஷ்யாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது. கோப்பையை வென்று சரித்திரம் படைக்க ஒவ்வொரு அணியும் கடுமையாகப் பயிற்சி செய்துவருகின்றன. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அளவுக்குப் பலமாக இருக்கும் அணிகளைப் பற்றி ஒரு பார்வை. 

ஜெர்மனி

பயிற்சியாளர் ஜொயாகிம் லோ தலைமையில் மூன்றாவது உலகக் கோப்பையில் களமிறங்குகிறது நடப்பு சாம்பியன் ஜெர்மனி. கடந்த 4 உலகக் கோப்பையிலும் குறைந்தபட்சம் அரையிறுதியாவது சென்றிருக்கும் ஜெர்மனிதான் இந்த முறை விமர்சகர்களின் முதல் சாய்ஸ். கடந்த ஆண்டு நடந்த 'கான்ஃபெடரேஷன் கோப்பை' தொடரை 21 வயதுக்குட்பட்ட அணியை வைத்தே வென்று மெர்சல் காட்டினார் லோ. அந்த அளவுக்கு அணியில் திறமைசாலிகள் அதிகம். உலகக் கோப்பையில் இதுவரை 10 கோல்கள் அடித்து அசத்தியிருக்கும் தாமஸ் முல்லர், குளோஸின் சாதனையை இத்தொடரில் முறியடிக்கக்கூடும். இளம் மான்செஸ்டர் சிட்டி விங்கர் லெரோய் சனே அணியில் சேர்க்கப்படாதது சில விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், அவர் இல்லாதது அணியைப் பெரிய அளவில் பாதிக்காது. வழக்கமான 4-2-3-1 ஃபார்மேஷனில்தான் அணி களமிறங்கும். ஆனால், கடந்த 2 உலகக் கோப்பைகளிலும் நடப்பு சாம்பியன்கள் லீக் சுற்றோடு வெளியேறியிருப்பதால் கவனம் தேவை. 

பலம் : நடுகளம். டோனி குரூஸ், கெதிரா, முல்லர், ட்ரேக்ஸ்லர், மெசூட் ஒசில் என ஆட்டத்தை கன்ட்ரோல் செய்யும் வீரர்கள் ஜெர்மனியின் நடுக்களத்தில் அணிவகுக்கின்றனர்.

பலவீனம் : கேப்டன் நூயர் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டாரா என்பது சந்தேகமே.

ட்ரம்ப் கார்ட் : தாமஸ் முல்லர்

ஸ்பெயின்

2014 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது ஸ்பெயின். இம்முறை அப்படியெதும் நடந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். ஸ்டார் வீரர்களையெல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு இளம் நட்சத்திரங்கள் எழுச்சியடைந்திருப்பது அணிக்கு மிகவும் நல்லது. டேவிட் சில்வா, இனியஸ்டா, செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ரமோஸ், பிக்கே என அனுபவ வீரர்கள் அணிவகுக்கும் அணியில் லுகாஸ் வஸ்க்யூஸ், அசேன்ஸியோ, இஸ்கோ போன்ற அடுத்த தலைமுறை நட்சத்திரங்களும் இருப்பது அணிக்கு சரியான பேலன்ஸ் கொடுக்கிறது. 2010 உலகக் கோப்பையில் ஸ்பெய்ன் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் அன்றைய கேப்டன் கசியஸ். அவரது இடத்தில் இப்போது டேவிட் டீ கே. ஸ்பெய்ன் அணியின் மிகப்பெரிய அரண். இவர் இருப்பது அவர்களது டிஃபன்ஸை பல மடங்கு பலப்படுத்தும். ரமோஸ், பிக்கே, டியாகோ கோஸ்டா போன்ற ஆங்க்ரி பேர்ட் வீரர்கள் ரெட் கார்டு வாங்காமல் இருந்தால் நல்லது.

பலம் : மிட்ஃபீல்ட், டிஃபன்ஸ் இரண்டு ஏரியாக்களிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களும், அவர்களுக்கு சற்றும் குறையாத பேக்-அப் ஆப்ஷன்களும் இருக்கின்றன.

பலவீனம் : பிரதான ஸ்ட்ரைக்கர்கள் நல்ல ஃபார்மில் இல்லை.

ட்ரம்ப் கார்ட் : டேவிட் சில்வா

அர்ஜென்டினா

பெரும்பாலானோர் அர்ஜென்டினாவை 'ஒன் மேன்' டீம் என்றே கருதுகிறார்கள். ஆனால், மெஸ்ஸியைத் தவிர்த்து ஹிகுவெய்ன், அகுவேரோ, டிபாலா, டி மரியா என எக்கச்சக்க நட்சத்திரங்கள் அந்த அணியில் குவிந்துகிடக்கின்றனர். ஆனால், இதுவரை அவர்கள் ஓர் அணியாக கிளிக் ஆகவில்லை. கோபா அமெரிக்காவின்போதே ஓய்வுபெற்ற மெஸ்ஸி, இம்முறை கோப்பை வென்று, தன் தேசத்துக்காக முதல் கோப்பையை வென்றுகொடுக்க வேட்கையோடு காத்திருப்பார். இதுதான் அவருக்குக் கடைசி உலகக் கோப்பை என்பதால், மற்ற வீரர்களும் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினால் அர்ஜென்டினா போன முறை விட்டதைப் பிடித்துவிடலாம். முன்களத்தில் எக்கச்சக்க வீரர்கள் இருப்பதால் பயிற்சியாளர் சாம்போலி யாரை எங்கு களமிறக்குவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் அலஜாண்ட்ரோ சாபல்லா சில போட்டிகளில் மெஸ்ஸியை பிளே மேக்கர் ரோலில் களமிறக்கினார். அதுபோன்ற முடிவுகள் இம்முறை பலன் தரலாம். ஆனால், சாம்போலி தகுதிச் சுற்றில் இரண்டு டிஃபண்டர்களோடு களமிறங்கியதுபோல் செய்தால், மெஸ்ஸியின் ஓய்வு சீக்கிரம் நிகழ்ந்துவிடும். 

பலம் : மெஸ்ஸி, ஹிகுவெய்ன், அகுவேரோ, டிபாலா ஆகியோர் அடங்கிய ஃபார்வேர்டு லைன்.

பலவீனம் : டிஃபன்ஸ். பயிற்சியாளர் சாம்போலி அவ்வப்போது எடுக்கும் ஜீனியஸ் முடிவுகள்

ட்ரம்ப் கார்ட் : லயோனல் மெஸ்ஸி

பிரேசில்

சொந்த மண்ணில் ஜெர்மனியிடம் அடைந்த அவமானத்தை இம்முறை கோப்பை வென்றால் மட்டுமே துடைக்க முடியும். நல்ல வேளையாக, பயிற்சியாளர் டிடே பதவியேற்றபின் வெற்றிப் பாதைக்கு பிரேசில் அணி திரும்பிவிட்டது. மிட்ஃபீல்ட், டிஃபன்ஸ், ஃபார்வேர்ட் என எல்லா ஏரியாக்களிலும் சிறப்பான வீரர்களைக் கொண்டிருக்கும் பிரேசில் அணி, நெய்மர் என்னும் ஒற்றை ஆயுதத்தைத்தான் இம்முறையும் பெரிதாக நம்பியிருக்கிறது. கொடினியோ, ஃபிர்மினோ, வில்லியன், பாலினியோ என அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ``எல்லோரும் தலைசிறந்த வீரர்கள். ஆனால், பிரேசில் ஒரு முழுமையான அணியாக எனக்குத் தெரியவில்லை" என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்  ஜாம்பவான் பீலே. அவரது சந்தேகத்தை டிடே அண்ட் கோ உடைத்தெறிவது அவசியம். கேப்ரியல் ஜீசஸ் இடத்தில் ஃபிர்மினோ இறக்கப்பட்டால் அணிக்கு நல்ல பேலன்ஸ் கிடைக்கும். 

பலம் : நெய்மர், கொடினியோ, ஃபிர்மினோ, கேப்ரியல் ஜீசஸ் என அற்புதமான முன்களத்தைக் கொண்டிருக்கிறது பிரேசில். கோல் மழை பொழியும்!

பலவீனம் : நெய்மரை அதிகமாக நம்பியிருப்பது.

ட்ரம்ப் கார்ட் : நெய்மர்

பெல்ஜியம்

இந்த உலகக் கோப்பையின் டார்க் ஹார்ஸ். சொல்லப்போனால் இந்தத் தலைமுறையின் சிறந்த அணி. ஆனால், பெரிய தொடர்களில் சொதப்பிவிடுகிறார்கள். கொம்பனி, ஹசார்ட், டி ப்ருய்னே, லுகாகு என பிரீமியர் லீகில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் இந்த அணிக்கு அசுர பலம் சேர்க்கிறார்கள். குரூப் பிரிவு ஈசியாக இருப்பதால், நாக் அவுட் தொடரில்தான் இவர்களின் உண்மையான பலம் தெரியும். ஒருசிலர் ஃபிரான்ஸ் அணியை 'அவுட்சைடர்கள்' என்று கூறுகிறார்கள். அதுவும் பலமான அணிதான். ஆனால், அவர்களைக் காட்டிலும் பெல்ஜியும் முழுமையான அணி. இளமையும் வேகமும் மட்டுமே கொண்ட ஃபிரான்ஸ் அணியைவிட, பொறுமையும் நிதானமும் கொண்ட வீரர்கள் பெல்ஜியம் அணியில் அதிகம். அதனால் இந்த உலகக் கோப்பையின் டார்க் ஹார்ஸஸ் இவர்கள்தான்!

பலம் : ஹசார்ட், லுகாகு, மெர்டன்ஸ் ஆகியோரோடு டி ப்ருய்ன் இணைவது எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனம்.

பலவீனம் : பெல்ஜியம் வீரர்கள் சமீபமாக அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டனர். கேப்டன் கொம்பனி இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை.

ட்ரம்ப் கார்ட் : டி ப்ருய்னே