Published:Updated:

ரொனால்டினோவின் ஃப்ரீ கிக்... இனியஸ்டாவின் கோல்... இன்றைய வீரர்களின் அந்தநாள் ஞாபகம்! #FifaWorldCup2018

ரொனால்டினோவின் ஃப்ரீ கிக்... இனியஸ்டாவின் கோல்... இன்றைய வீரர்களின் அந்தநாள் ஞாபகம்! #FifaWorldCup2018
ரொனால்டினோவின் ஃப்ரீ கிக்... இனியஸ்டாவின் கோல்... இன்றைய வீரர்களின் அந்தநாள் ஞாபகம்! #FifaWorldCup2018

ரொனால்டினோவின் ஃப்ரீ கிக்... இனியஸ்டாவின் கோல்... இன்றைய வீரர்களின் அந்தநாள் ஞாபகம்! #FifaWorldCup2018

முப்பத்து இரண்டு நாடுகள் பங்குபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை வரும் 14-ம்தேதி  ரஷ்யாவில் தொடங்குகிறது. தங்கள் ஆஸ்தான நாயகர்களின் ஆட்டத்தைப் பார்க்க உலகமே ஆவலோடு இத்தொடரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால், இவர்களும் ஒருநாள் நம்மைப் போல் இந்தத் தொடரை வியந்து ரசித்தவர்கள்தான். இந்தப் போட்டியில் பங்குபெறும் நட்சத்திரங்கள் சிலர் தங்களின் கடந்த கால உலகக் கோப்பை நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளனர்.  

லூகா மோட்ரிச், குரோஷியா: 
"1998-ம் ஆண்டு. அப்போது எனக்கு 13 வயதிருக்கும். பிரான்ஸ்தான் கோப்பையைத் தட்டிச் சென்றது. அதேசமயம், ஒவ்வொரு வெற்றியின் மூலமாகவும் குரோஷியா கொஞ்சம் கொஞ்சமாக உலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒருநாள் நாமும் அங்கு சென்று விளையாடவேண்டும் என்று எண்ணிக்கொள்வேன். மறக்கமுடியாத நினைவுகள் அவை!"

ரடாமல் ஃபால்காவோ, கொலம்பியா: 
"1990-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஃபிரெட்டி ரின்கனின் கோலினை மொத்த ஊரும் கொண்டாடியது, நேரலையில் பார்த்ததைவிட, ரீப்ளே செய்து செய்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த கோலை அதிகமுறை பார்த்திருப்பேன். அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும் என்று நினைக்கிறேன்"

ஜேவி ஹெர்னாண்டஸ், மெக்சிகோ: 
"எனக்கு நன்றாக நினைவிலிருந்த உலகக்கோப்பை என்றால், அது 1998 உலகக் கோப்பைதான். என் ஆதர்ச நாயகன், ரொனால்டோ விளையாடிய ஒரே காரணத்துக்காக, பள்ளியிலிருந்து வேகவேகமாக வந்து போட்டிகள் பார்த்த நினைவெல்லாம் இன்றும் நெகிழ்வாக இருக்கிறது".

ஹேரி கேன், இங்கிலாந்து: 
"2002-ம் ஆண்டு – ரொனால்டினோ இங்கிலாந்துக்கு எதிராகக் காலிறுதியில் அடித்த ஃபிரீ கிக்..! இன்றுவரை மறக்க முடியாத ஓர் அனுபவம். ஆழமாகப் பதிந்த அந்த நினைவுதான் என்றாவது அங்கு சென்று விளையாடவேண்டும் என்று உந்தியது". 

ஜூலியன் டிராக்ஸ்லர், ஜெர்மனி: 
"2002-ம் ஆண்டு நான் மிகவும் சிறிய குழந்தை. எனக்கு நன்றாக நினைவு தெரிந்து பார்த்த போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. அப்போது போட்டி ஜெர்மனியில் நடந்ததால் குடும்பத்துடன் குதூகலமாக ஒவ்வொரு போட்டியையும் ரசித்துப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது".

தியெரி ஹென்றி (பெல்ஜியம் அணியின் துணை மேலாளர் மற்றும் ஃபிரான்ஸ் அணியின் உலககோப்பை வெற்றியாளர்): 
"1982-ம் ஆண்டு... எனக்கு ஐந்து வயதிருக்கும். விடுமுறைக்காலம் என்பதால் நான் குடும்பத்தோடு மேற்கிந்தியத் தீவுகளில் இருந்தேன். அரையிறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக ஃபிரான்ஸ் வீரர் மரியஸ் ட்ரெசர் கோல் அடித்தார். அவர் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்தவர் என்பதால் பயங்கரக் கொண்டாட்டம். வீடே இரண்டுபட்டுப் போகும் அளவிற்குக் கொண்டாட்டங்கள். உண்மையாக நான் அப்போது 'வீடு வெடித்துவிடுமோ' என்று எண்ணினேன்".

நெய்மர், பிரேசில்: 
"இரண்டு வயது சிறுவனாக முதன்முதலாகக் கால்பந்து பார்த்தேன். 1994-ம் ஆண்டு கால்பந்துப் போட்டியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹாலந்திற்கு எதிரான ரோமாரியோவின் கோல். பெபெடோ போட்ட கிராஸ், அதை அவர் உடனடியாக 'கனெக்ட்' செய்து கோலடித்தது... நீங்காத நினைவுகள்!"

இகோர் அகின்ஃபீவ். ரஷ்யா: 
"1994-ம் ஆண்டு நான் உலகக்கோப்பையை அமெரிக்காவில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நொடியும் அது தீர்க்கமாக விளையாடப்படும் விளையாட்டு என்று நான் அப்போதுதான் புரிந்துகொண்டேன். என்னால் மறக்கமுடியாத காலம் அது. மிகச்சிறந்த நினைவு எது என்று கேட்டால், கேமரூனுக்கு எதிராக ஒலேக் சலேன்கோ கோல்கள் அடிக்க, ரஷ்யா 6-1 என்ற கோல் கணக்கில் விளையாடி வென்றதுதான்! 

தியாகோ அல்கான்ட்ரா, ஸ்பெய்ன்: 
"1994 உலகக்கோப்பையின்போது எனக்கு மூன்று வயதிருக்கும். அப்பா (பிரேசிலின்  முன்னாள் உலகக்கோப்பை வெற்றியாளர் மஸினியோ) கோல் அடித்து வெற்றிபெற்றதும் எல்லாரும் எழுந்து கத்தினார்கள். அப்பா வீட்டிற்கு வந்தது, அந்த கொண்டாட்டம் எல்லாமே நினைவில் இருக்கிறது. அதற்குப் பிறகு முக்கியமான போட்டி என்றால் 2010-ம் ஆண்டு ஸ்பெய்னும் நெதர்லாந்துக்கும் இடையில் நடந்த இறுதிப்போட்டிதான். நான் அப்போது பத்தொன்பது வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இருந்தேன். ஸ்பெய்ன் கால்பந்து வரலாற்றிலேயே முக்கியமான போட்டி அது. இனியஸ்டா கோல் அடித்தபிறகு, தீ அணைப்பான், கத்தி என என்ன என்னவோ உருண்டது. டீ.வியே தரையில்தான் கிடந்தது!"
 
பால் போக்பா, பிரான்ஸ்: 
"1998-ம் ஆண்டு, ஃபிரான்ஸ் பிரேசிலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. எனக்கு அப்போது ஆறு அல்லது ஏழு வயதுதான் இருக்கும். ஆனால், வீட்டில் பார்க்கும்போது, எல்லாரும் கார்மேலே ஏறிப்போய் உட்கார்ந்தோம். ஹார்ன் சத்தமும் சந்தோஷமுமாக அன்றைய நாள் கழிந்தது!" 

அடுத்த கட்டுரைக்கு