உலகக்கோப்பை தொடருக்குத் தயாராகும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கவிருந்த அர்ஜென்டினா மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கிடையேயான பயிற்சி ஆட்டம், பாலஸ்தீனத்தின் போராட்டங்கள் மற்றும் மிரட்டல்களைத் தொடர்ந்து ரத்துசெய்யப்பட்டுள்ளது. `அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனெல் மெஸ்ஸி, இஸ்ரேலுக்கு எதிரான போட்டியில் விளையாடினால், அவரின் போஸ்டர்கள் மற்றும் டி-ஷர்ட்டுகள் எரிக்கப்படும்' என்று பாலஸ்தீன கால்பந்து சங்கத் தலைவரான ஜிப்ரில் ரஜூப் சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டி கைவிடப்படுவதாக அர்ஜென்டினாவில் இருக்கும் இஸ்ரேல் தூதரகம் இன்று அறிவித்துள்ளது. இந்தச் செய்தியை, பாலஸ்தீன கால்பந்து சங்கமும் பாலஸ்தீன மக்களும் கொண்டாடிவருகின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம்காலமாக இருந்துவரும் பகை, அனைவரும் அறிந்ததே! புனிதபூமியாகக் கருதப்படும் `ஜெருசலம்’ எங்களுக்குத்தான் என இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடுவதே, அந்தப் பகையின் ஆதிக்காரணம். அதற்காக, ஏகப்பட்ட போராட்டங்களும் கலவரங்களும் இன்றுவரை அங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், முதலில் இஸ்ரேலின் `ஹைபா’ நகரில் நடப்பதாக இருந்த இஸ்ரேலுக்கு எதிரான அர்ஜென்டினாவின் இந்தப் பயிற்சிப் போட்டியை, ஜெருசலத்தில் உள்ள `மல்கா’ என்ற இடத்துக்கு மாற்றப்போவதாகவும், அதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் இஸ்ரேல் அறிவித்தது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கத் தூதரகத்தை இஸ்ரேலுக்கு மாற்ற, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தூதரகம் மாற்றப்பட்டதற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் நடத்திய போராட்டத்தில், 115-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், தங்களைத் தற்காத்துக்கொள்ளவே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது இஸ்ரேல் அரசாங்கம். இதனால், ஏற்கெனவே கொதித்துப்போயிருந்த பாலஸ்தீனர்களிடையே பெரும்கோபத்தை உண்டாக்கியது, கால்பந்து போட்டியை ஜெருசலத்துக்கு மாற்றிய இஸ்ரேலின் இந்த அறிவிப்பு.
இந்நிலையில், கால்பந்துப் போட்டியை ஜெருசலத்துக்கு மாற்றி, அதன்மூலம் இஸ்ரேல் அரசியல் செய்வதாக பாலஸ்தீன கால்பந்து சங்கத் தலைவரான ஜிப்ரில் ரஜூப், சில நாள்களுக்கு முன் குற்றம்சாட்டினார். ``இந்தப் போட்டியை, ஓர் அரசியல் கருவியாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது. இஸ்ரேல் அரசாங்கம், ஜெருசலத்தில் இந்தப் போட்டியை நடத்துவதன் மூலம், இதற்கு அரசியல் முக்கியத்துவம் தர முயல்கிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீன ரசிகர்களைக்கொண்ட அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, ஜெருசலம் சென்று விளையாடக் கூடாது. அதை மீறிப் போட்டியில் அவர் கலந்துகொண்டால், அரபு முஸ்லிம்கள் அனைவரும் மெஸ்ஸியின் போஸ்டர்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளை எரிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து, பிரச்னை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தொடர்ந்து போராட்டங்கள் வலுத்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்தப் பயிற்சிப் போட்டி கைவிடப்பட்டதை இன்று அறிவித்தது இஸ்ரேலியத் தூதரகம். `நேரடியாக மெஸ்ஸிக்கு விடப்பட்ட மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் அவரின் சகவீரர்களின் ஒருமைப்பாட்டைக் குலைத்திருப்பதால், இந்த நட்புறவுப் போட்டியில் விளையாட அவர்கள் அச்சப்படுவது நியாயமானதுதான். ஏனெனில், அந்நியர்கள் அல்லாத இஸ்ரேலியக் குடிமக்களின் நட்சத்திரங்களைக் குறிவைத்தே, வன்முறைகளும் தாக்குதல்களும் பலமுறை நடத்தப்பட்டிருக்கின்றன. அர்ஜென்டினா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான நட்புறவு, 70 ஆண்டுகளை எட்டப்போவதைக் கொண்டாடுவது என்பது வெறும் கால்பந்து போட்டியைப் பற்றியது மட்டுமல்ல. பன்முகத் தன்மைகொண்ட இந்தக் குடியரசு நாடு, அர்ஜென்டினாவின் விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரை வரவேற்கும் வாய்ப்பை எப்போதுமே எதிர்நோக்கியுள்ளது' என்று வருத்ததுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது .
இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து சங்கத் துணைத் தலைவர் ஹியுகோ மொயானோ, ``அர்ஜென்டினா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இந்தப் போட்டி கைவிடப்பட்டது நல்லது என்றே கருதுகிறேன். சரியான முடிவுதான். அவர்கள் எத்தனையோ மக்களைக் கொன்றிருக்கின்றனர். அது அந்த இடங்களில் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும், ஒரு மனிதனாக எந்த வகையிலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், வீரர்களின் உறவினர்கள் மிரட்டல்களின் காரணமாக வருந்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரம் முன்னர், ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அர்ஜென்டினா வீரர்களின் பயிற்சி மைதானத்துக்கு வெளியே பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டு, சிவப்புச் சாயம் பூசப்பட்ட அர்ஜென்டினா டி-ஷர்ட்களை வைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரு நட்சத்திர வீரருக்கு நேரடியாக விடப்பட்ட மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால், அழகான கால்பந்து விளையாட்டில் இப்போது அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு இந்த நட்புறவுப் போட்டி இப்போது கைவிடப்பட்டிருப்பது, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. மேலும், மிரட்டல்களுக்குப் பயந்து போட்டியை ரத்துசெய்திருக்கும் அர்ஜென்டினா அணி நிர்வாகம் மீது, பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.