Published:Updated:

ரசிகர்களின் ஆதரவும், 1987 உலகக் கோப்பை வரலாறும்! சேத்ரி ஏன் கெஞ்சினார்? #BackTheBlue #Chhetri100

ரசிகர்களின் ஆதரவும், 1987 உலகக் கோப்பை வரலாறும்! சேத்ரி ஏன் கெஞ்சினார்?  #BackTheBlue #Chhetri100
ரசிகர்களின் ஆதரவும், 1987 உலகக் கோப்பை வரலாறும்! சேத்ரி ஏன் கெஞ்சினார்? #BackTheBlue #Chhetri100

ரசிகர்களின் ஆதரவும், 1987 உலகக் கோப்பை வரலாறும்! சேத்ரி ஏன் கெஞ்சினார்? #BackTheBlue #Chhetri100

ஒருவாரம் முன்பு... அந்த சனிக்கிழமை மும்பை திருவிழா கொண்டாடியது. வான்கடே மைதானத்தை மொய்த்தார்கள் நம் ரசிகர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து பல படைகள் மும்பையின் தெற்கு கடற்கரையை முற்றுகையிட்டன. மஞ்சளும் ஆரஞ்சும் போதாதென்று நீலமும் அவர்களோடு சேர்ந்தது. மும்பை ஆடவில்லை; அவர்களின் பரம வைரி சூப்பர் கிங்ஸ் மூன்றாவது கோப்பையை முத்தமிடக் களமிறங்குகிறது. ஆனாலும், மும்பைவாலாக்கள் வான்கடேவில் நிரம்பினார்கள். ஏனெனில், இது இந்தியா... இது ஐபிஎல்... இது கிரிக்கெட்! 

இந்த ஜூன் 2, அதே மும்பை; வான்கடேவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் `மும்பை ஃபுட்பால் அரேனா'... இந்தியா - சீன தைபே கால்பந்து அணிகள் `Intercontinental cup' தொடரின் முதல் போட்டியில் விளையாடுகின்றன. 2,569 ரசிகர்களின் `பேராதரவோடு' சீன தைபேவை நசுக்குகிறது இந்தியா. எட்டு ஆண்டுகள் கழித்து சர்வதேசப் போட்டிகளில் ஹாட்ரிக் அடிக்கிறார் கேப்டன் சுனில் சேத்ரி. இப்போது விளையாடிவரும் கால்பந்து வீரர்களில், அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறுகிறார். அந்தச் சாதனையை நேரில் பார்த்ததும், வாழ்த்தியதும், கொண்டாடியதும் அந்த 2,569 பேர்தான். ஐபிஎல் ஃபைனலுக்கு வந்திருந்த கூட்டத்தில் இது வெறும் 8 சதவிகிதம். ஏனெனில், இது இந்தியா... இது கால்பந்து... இது கிரிக்கெட் அல்ல!

இது ஊரறிந்த விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். இதைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாகப் பேசிக்கொண்டும் இருக்கிறோம். இப்போது இதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம்? இருக்கிறது, சுனில் சேத்ரி! அவர் ஹாட்ரிக் அடித்ததைப் பார்க்கவோ, சாதனை படைத்ததைப் பார்க்கவோ யாரும் இல்லை என்பதற்காக இதை எழுதவில்லை. சேத்ரி பதிவிட்ட அந்த வீடியோ... வெறும் 140 விநாடியே ஓடக்கூடிய அந்த வீடியோ, இந்த விஷயத்தை இப்போது மீண்டும் பேசவைத்திருக்கிறது. 

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, படிக்கத் தொடரவும்

இந்திய அணியின் கேப்டன்... இந்தியாவின் தலைசிறந்த கால்பந்து வீரர்... உலகத்தரம் வாய்ந்த வீரர் அல்ல. ஆனாலும், உலக அளவில் மதிக்கப்படுபவர்... சர்வதேசக் கால்பந்து அரங்கில் சிலபல சாதனைகள் படைத்தவர். கைகூப்பிக் கெஞ்சுகிறார். தாங்கள் ஆடுவதை நேரில் வந்து பார்க்கச் சொல்லி கையெடுக்கிறார். ஐ.எஸ்.எல் தொடர் மூலமாக வருடம் 1 கோடி ரூபாய்க்கு மேலாகவே சம்பாதிப்பவருக்கு, இப்படி ரசிகர்களிடம் கெஞ்ச வேண்டுமென்று என்ன அவசியம்? ``இந்திய கால்பந்துக்கு இது மிகவும் முக்கியமான தருணம். இந்தத் தேசத்தின் கால்பந்துக்கு நீங்கள் மிகவும் அவசியம்'' என்று சேத்ரி சொன்ன அந்த வரிகள், அவர் கைகூப்பிக் கெஞ்சியதன் அவசியத்தையும், இந்தக் கட்டுரையின் அவசியத்தையும் உணர்த்திவிடும். 

அதற்கு, கிரிக்கெட் இங்கு பிரபலமான கதையையும் நாம் நினைவுகூரவேண்டும். இன்று பி.சி.சி.ஐ கையசைவுக்கு தலையாட்டிக்கொண்டிருக்கும் ஐ.சி.சி., 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்கியது. அதனால்தான் முதல் மூன்று உலகக்கோப்பை தொடர்களும் ராணியின் வாசல் தாண்டி வரவில்லை. 1983 ஃபைனல்... இந்தியா சரித்திரம் படைக்கிறது. ``இந்த உலகக்கோப்பை இந்தியாவில் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?"  பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் N.K.P சால்வே, கோப்பை வென்ற இரவு ஒரு பாகிஸ்தான் அதிகாரியிடம் விளையாட்டாகக் கேட்கிறார். ``அடுத்த உலகக்கோப்பையை ஏன் நாமே நடத்தக் கூடாது?" - அந்த பாகிஸ்தான் அதிகாரி. அன்று விளையாட்டாகப் பேசப்பட்ட விஷயம் விருட்சமாகிறது. 

`கோப்பையை இந்தியா வென்றுவிட்டது. இந்த விளையாட்டை இங்கு பிரபலப்படுத்த இதைவிட சரியான சந்தர்ப்பம் அமையாது' என்பதை உணர்ந்தவர்கள் உலகக்கோப்பையை துணைக்கண்டத்துக்கு எடுத்துவர ஆயத்தமாகிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை எதிர்த்து எப்படி மற்றவர்களின் ஆதரவைச் சம்பாதிப்பது? எப்படி இந்தியா - பாகிஸ்தான் சிக்கல்களைச் சமாளித்துச் சுமுக முடிவெடுப்பது? முன்னாள் இருந்த தடங்கல்களை எல்லாம் உடைத்து, ரிலையன்ஸ் என்ற மிகப்பெரிய சக்தியின் உதவியோடு இந்தியாவுக்கு வருகிறது உலகக்கோப்பை. சரி, எல்லா தடைகளையும் வென்றாகிவிட்டன. ஆனால், இந்தத் தொடரை நல்லபடியாக முடித்தால்தான் இந்தியாவில் உலகக்கோப்பைக்கு எதிர்காலம். இல்லையேல் வாய்ப்பில்லை. ஆனால், அதை மிகப்பெரிய வெற்றியாக மாற்றினார்கள் நம் ரசிகர்கள். அரையிறுதி, இறுதி என கடைசி மூன்று போட்டிகளை நேரில் பார்த்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1,97,000. 

இந்திய கிரிக்கெட் மாற்றம் அடைந்த புள்ளி அதுதான். ஒரு வெற்றி... அதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு முடிவு... அவற்றைவிட அவர்களுக்குக் கிடைத்த அந்த ஆதரவு. அந்த ஆதரவு இல்லையேல், 1987 உலகக்கோப்பை தோல்வியடைந்திருக்கும். மீண்டும் உலகக்கோப்பை இங்கிலாந்துக்கே திரும்பியிருக்கும். அந்த உலகக்கோப்பையில் இந்தியா ஃபைனலுக்குப் போகவில்லை. ஆனாலும் ஃபைனலில் 97,000 ரசிகர்கள். எப்படி? இந்தியா மிகப்பெரிய ஒரு தொடரில் விளையாடுவதைப் பார்த்தவர்களுக்கு அந்த விளையாட்டு வெற்றி-தோல்வி கடந்து பிடித்துவிட்டது. கால்பந்து உலகக்கோப்பை எங்கு நடந்தாலும் எல்லா தேசத்து மக்களும் லட்சக்கணக்கில் குவிவது அதனால்தான் - அந்த விளையாட்டின் மீதான ப்ரியம்.

ஆம், இந்தியர்களுக்கு அந்த விளையாட்டு மீது பெரிய அபிமானமில்லை. ஏனெனில், இந்தியா இதுவரை எதுவும் சாதிக்கவில்லை. ஏன்..? ஒரு சர்வதேசப் போட்டியை வெறும் 2,500 பேர் பார்க்கச் சென்றால்? கால்பந்து ஒன்றும் வீடியோ கேம் போன்ற விளையாட்டு அல்ல. ஒரு வீரனின் செயல்பாட்டில், ஒரு ரசிகனின் சத்தம் எதிரொலிக்கும். அரங்கம் முழுக்க ஆதரவலைகள் எழும்போது 90-வது நிமிடத்தில்கூட அவனால் புயல் வேகத்தில் பந்தைக் கடத்திச் சென்று கோல் கம்பத்தை முற்றுகையிட முடியும். டேக்கிள் செய்யும்போது, விங்கில் டிராக் செய்து எதிரணி வீரரைத் துரத்தும்போது, மூன்று டிஃபண்டர்களை ஏமாற்றி நடுக்களத்திலிருந்து பந்தை கடத்திச் செல்லும்போது, அந்த ரசிகனின் கைதட்டலும், உற்சாகக் குரலும்தான் அந்த வீரனுக்கான குளூக்கோஸ். ரசிகர்களின் ஆதரவு ஒரு போட்டியின் முடிவை மாற்றும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் - 2005 சாம்பியன்ஸ் லீக் ஃபைனல்... தி மிராக்கிள் ஆஃப் இஸ்தான்புல்!

53 நிமிடம் வரை 0-3 எனப் பின்தங்கியிருந்தது லிவர்பூல். அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான லிவர்பூல் ரசிகர்கள் அழுகிறார்கள். ஆனால், யாரும் வெளியேறவில்லை. லிவர்பூல் அணியின் ஆஸ்தான பாடல் ஒலிக்கிறது `You'll never walk alone' - `நாங்கள் உங்களோடே இருப்போம்'..! இருந்தார்கள். 54-வது நிமிடம் எப்படியோ முதல் கோலை அடித்துவிட்டது லிவர்பூல். ரசிகர்கள் மகிழ்ச்சியில் உச்சத்தை அடைந்துவிட, அவர்களின் கோஷம் இன்னும் சத்தமாய் எழும்புகிறது. அடுத்த 6 நிமிடத்தில் 2 கோல்கள். 3-3. ஃபெனால்டி... லிவர்பூல் சாம்பியன்! அந்த ரசிகர்கள் கடைசிவரை தங்கள் வீரர்களை தனிமையில் விடவில்லை. இவ்வளவு ஏன், 10 நாள்கள் முன்பு - ரியல் மாட்ரிட் அணியிடம் சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் தோற்றுவிட்டது லிவர்பூல். கீவ் நகரின் அந்த மைதானத்தில் தோல்விக்குப் பிறகும் அந்தக் கீதம் ஒலித்துக்கொண்டே இருந்தது `You'll never walk alone!' இதுதான் ரசிகர்கள் தரும் பலம்.

``எங்களுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே தெரியாது" என்று சொல்லும் சேத்ரியின் வார்த்தைகளில் அவ்வளவு வலி! செனீகல், நைஜீரியா போன்ற ஏழை நாடுகளில் இருக்கும் மரியாதைகூட 135 கோடிப்பேர் வாழும் நம் நாட்டில் இல்லை எனும்போது அந்த வலி இயற்கைதான். அதுவும் இந்திய கால்பந்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் துடிக்கும் அவர் ஆதங்கப்படுவதும் நியாயம்தான். ``அவனவன் ஐரோப்பாவுல எப்படி ஆடிட்டு இருக்கான். இவங்க ஆடுற லட்சணத்தப் பார்த்தா..." - இந்த வாக்கியம் பல நூறு முறை என் காதுகளில் விழுந்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் கால்பந்து பிரபலமடையத் தொடங்கியபோது, அவர்களின் தரமும் இதுதான். ஆம், நாம் ஒரு நூற்றாண்டு பின்தங்கியுள்ளோம். ஆனால், அந்த இடைவெளியை இன்று வெகுவிரைவாகக் குறைக்க முடியும். அதற்கான ஆதரவைத்தான் கேட்கிறார் சேத்ரி. 

இந்திய கால்பந்து மீதான உங்கள் குற்றச்சாட்டை அவரும் ஏற்றுக்கொள்கிறார். ``எங்கள் ஆட்டம் ஐரோப்பாவின் தரத்தில் இல்லை. அதற்குப் பக்கத்தில்கூட இல்லை. ஆனால், எங்கள் உறுதியும் நம்பிக்கையும் நீங்கள் செலவிடும் நேரத்துக்கான மதிப்பை நிச்சயம் உங்களுக்குக் கொடுக்கும்" என்று உறுதி கூறுகிறார். இது ஏதோ பேச்சுக்காகச் சொன்னது கிடையாது. இந்திய அணியின் செயல்பாடுகள் கொடுத்த நம்பிக்கை அது. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு விளையாடிய 19 போட்டிகளில் இந்தியா 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அளவுக்கு இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அடுத்த ஆண்டு நடக்கும் ஆசியக்கோப்பைக்கு வேறு தேர்வாகியுள்ளது. அந்தத் தொடரில் இந்தியா விளையாடவிருப்பது இதுதான் நான்காவது முறை. இந்தியா நல்ல ஃபார்மில் இருக்கும்போது மிகப்பெரிய ஒரு தொடர் வரவிருக்கிறது. அதனால்தான்  ``இந்திய கால்பந்துக்கு இது மிகவும் முக்கியமான தருணம். இந்தத் தேசத்தின் கால்பந்துக்கு நீங்கள் மிகவும் அவசியம்'' என்று சொல்லியிருந்தார் சேத்ரி. 

``இணையத்தில் விமர்சிப்பதை விட்டுவிட்டு மைதானத்துக்கு வாருங்கள். அங்கு எங்கள் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு எங்களை அடியுங்கள்; எங்களைப் பார்த்துக் கத்துங்கள்; திட்டுங்கள்; அசிங்கப்படுத்துங்கள்; எங்கள் விளையாட்டைப் பற்றிப் பேசுங்கள்; கேலி செய்யுங்கள். ஆனால், எங்கள் ஆட்டத்தோடு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாள்... ஒரு நாள்... நீங்கள் எதிர்பார்த்ததைவிட வேறோர் ஆட்டத்தைக் காட்டுவோம். தயவுசெய்து மைதானத்துக்கு வாருங்கள். கால்பந்து ரசிகராக இருந்தும் பள்ளி, பணி எனக் காரணம் கூறி வராமல் இருப்பவர்களும் தயவுசெய்து வாருங்கள்" என்று கைகூப்பிக் கேட்டுருக்கிறார் சேத்ரி. நம் நாட்டில் ஒரு கேப்டன் பிரதமருக்கு ட்விட்டரில் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். மற்றொரு கேப்டன் ரசிகர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்.

சரி, நிர்வாகம் என்ன செய்தது? பி.சி.சி.ஐ 1987ல் செய்ததைப்போல் பல விஷயங்களை இந்திய கால்பந்து கூட்டமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்துவருகிறது. அண்டர் 17 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. அண்டர் 20 உலகக்கோப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. மிகச்சிறந்த லீக் ஒன்றை உருவாக்கி உலக நட்சத்திரங்களை இந்தியாவில் கால்பந்து விளையாட வைத்துள்ளது. அவர்கள் இப்படி எத்தனையோ முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லக்கூடியது ரசிகர்களின் ஆதரவு மட்டுமே! வெறுமனே வீட்டில் அமர்ந்து டிவி-யிலும் ஹாட் ஸ்டாரிலும் பார்த்தால் மட்டும் போதாது. மைதானம் காலியாக இருந்தால் பின்னர் அவற்றிலும் ஒளிபரப்ப மாட்டார்கள். இந்திய கால்பந்தின் முன்னேற்றத்தில் இன்னும் பங்களிக்காதது ரசிகர்களான நாம் மட்டும்தான். மைதானங்களில் அமர்ந்து நாம் கொடுக்கும் `இந்தியா... இந்தியா...' என்ற கோஷம்தான் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். ஏன்... அது உலகக்கோப்பை அரங்கு வரை இந்தியாவை அழைத்துச் செல்லலாம்... அழைத்துச் செல்லும்.

சேத்ரியின் கெஞ்சலுக்குப் பிறகு நேற்று சுமார் 9,000 ரசிகர்கள் கூடி இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கொட்டிய மழையிலும் இந்திய அணிக்காக கோஷங்கள் எழுப்பினர். முதல் பாதியில் கோலேதும் அடிக்காத இந்தியா, இரண்டாம் பாதியில் 3 கோல்கள் அடித்தது. இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றுவிட்டது. வெற்றிக்குப் பிறகு ரசிகர்களும் வீரர்களும் கொண்டாடிய அந்தத் தருணம் நிச்சயம் இந்திய கால்பந்தின் நெகிழ்ச்சியான தருணம். இது தொடரும்பட்சத்தில் சேத்ரி சொன்னதுபோல் ஒருநாள்... இந்தியா கால்பந்து சக்தியாக உருவெடுக்கும். அதற்கு அவர்கள் கேட்பது வேறு எதுவுமில்லை , நம் ஆதரவு மட்டுமே!

``எல்லாம் இருக்கட்டும். நான் ஏன் ஸ்டேடியம் போய் இந்த மேட்ச்சைப் பாக்கணும்?" - இதன் பிறகும் உங்களுக்கு இப்படி ஒரு கேள்வி எழுகிறதா? ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களை சேத்ரியே சொல்கிறார்...

     ``1. கால்பந்து - இது உலகின் சிறந்த விளையாட்டு.
       2. நாங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறோம்!''

அடுத்த கட்டுரைக்கு