Published:Updated:

லெஜெண்டாக வந்து லெஜெண்டாகவே விடைபெற்ற ஜினடின் ஜிடேன்! #GraciasZidane

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லெஜெண்டாக வந்து லெஜெண்டாகவே விடைபெற்ற ஜினடின் ஜிடேன்! #GraciasZidane
லெஜெண்டாக வந்து லெஜெண்டாகவே விடைபெற்ற ஜினடின் ஜிடேன்! #GraciasZidane

லெஜெண்டாக வந்து லெஜெண்டாகவே விடைபெற்ற ஜினடின் ஜிடேன்! #GraciasZidane

'செல்சீ பயிற்சியாளர் கான்டே எப்போது வெளியேற்றப்படுவார்?', 'அந்த இடத்துக்கு ரோமன் ஆப்ரமோவிச் யாரை நியமிப்பார்?', 'அர்சென் வெங்கர் அடுத்து என்ன செய்வார்?', 'உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஸ்பெயின் யாரைக் களமிறக்கும்?', 'மெஸ்ஸி, ரொனால்டோ தங்கள் கடைசி உலகக் கோப்பையில் கோப்பை வெல்வார்களா?', 'ஜெர்மனி உலகக் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளுமா?' இப்படிப் பலவாறாக கால்பந்து ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாக கேள்விகளுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

உலகக் கோப்பை, பிரீமியர் லீக், மேனேஜர் மாற்றங்கள், பிளேயர் டிரான்ஸ்ஃபர் என வழக்கத்தைவிட கொஞ்சம் பிசியாகவே இருந்தது கால்பந்து உலகம். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் சிலபஸிலேயே இல்லாத ஒரு குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டார் ஜிடேன். ஹாட்ரிக் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற ஐந்தே நாள்களில் ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளில் யாரும் செய்திடாத சாதனையைச் செய்துவிட்டு, யாருமே எதிர்பாராமல் அவர் கொடுத்திருக்கும் இந்த ட்விஸ்டில் ரியல் மாட்ரிட் மட்டுமல்ல மொத்த கால்பந்து உலகமுமே ஆடித்தான் போயிருக்கிறது. 

மூன்று ஆண்டுகள் முன்னால் ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக ஜிடேன் அறிவிக்கப்பட்டபோதும் ஆச்சர்ய ரியாக்ஷன்கள் எழத்தான் செய்தது. அதுவரை அவர் மேனேஜராக இருந்தது ரியல் மாட்ரிட் ஜூனியர் அணியான 'காஸ்டில்லா' அணிக்கு மட்டுமே. ஒரு சீனியர் அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு இருக்கவில்லை. ஆன்சலோட்டி பயிற்சியாளராக இருந்தபோது மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் மட்டும் இடம்பிடித்திருந்தார். "மிகப்பெரிய அணியை வழிநடத்தும் திறமை ஜிடேனுக்கு இருக்கிறதா" என்று பலரும் சந்தேகம் கொண்டார்கள். என்னதான் உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்தாலும், பயிற்சியாளர் பதவி என்பது முற்றிலும் வித்தியாசமான முடிவுகளைக் கொடுக்கக் கூடியது. மரடோனா போன்ற ஜாம்பவான்களே அந்த இடத்தில் சோபிக்க முடியாமல் திணறினார்கள். அதனால் ஜிடேன் பதவியேற்றபோது கேள்விகளும் அவநம்பிக்கையும் மட்டுமே சூழ்ந்திருந்தது. 

ரியல் மாட்ரிட் சோபிக்காமல் இருந்தாலே பயிற்சியாளர்களின் தலை உருளும். அதுவும் பார்சிலோனா பட்டையைக் கிளப்பும்போது மாட்ரிட் சொதப்பினால் அவ்வளவுதான். எப்போது தூக்குவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. வாட்ஸ்அப்பில் 'Hai' மெசேஜ் அனுப்புவதுபோல் 'You are sacked' என்று மெசேஜ் தட்டிவிடுவார்கள். அப்படி ரஃபா பெனிட்ஸ் வெளியேற்றப்படவும்தான் மேனேஜரானார் ஜிஜோ. 2014-15 சீசனில் லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கோபா டெல் ரே என treble வென்றிருந்தது பார்சிலோனா. அனைத்துப் பெரிய தொடர்களிலும் அவர்கள்தான் நடப்பு சாம்பியன். பெனிட்ஸ் தலைமையிலான அணி தொடர்ந்து சொதப்ப 2016 ஜனவரியிலேயே பதவியேற்றார். 'ஜிடேன் என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறார்?', 'எந்தெந்த வீரர்களைத் தூக்கப் போகிறார்?' மாட்ரிட் ரசிகர்களிடம் ஆயிரம் கேள்விகள்.  

பொதுவாக ஒரு அணிக்குப் புதிய மேனேஜர் வரும்போது அவர்களின் அணுகுமுறை, வியூகங்கள், கேம் ஸ்டைல் அனைத்திலும் கொஞ்சம் மாறுதல் இருக்கும். அந்தப் பயிற்சியாளர் தன் ஸ்டைலை அணிக்குள் புகுத்தியிருப்பார். அதுவும் ஜிடேன் போன்ற ஒரு மிகச்சிறந்த டெக்னிக்கல் வீரர் பயிற்சியாளராகும்போது அவர்கள் பாஸிங்கில் இருந்து ஒவ்வொரு ஏரியாவிலும் ஆட்ட முறையை மாற்றுவார்கள். ஆனால், ஜிடேன் அணுகுமுறையை மட்டும் மாற்றினார். ஸ்டைலை மாற்றவில்லை... மாற்ற முயற்சி செய்யவுமில்லை. 

அந்த பாதி சீசனிலேயே அணியை சிறப்பாக வழிநடத்தினார். சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றார்... லா லிகா பதக்கம் ஒற்றைப் புள்ளியில் கையை விட்டு நழுவியது. 'ஜிடேன்தான் இனி நமக்கு' என்று ரசிகர்கள் ஆசுவாசப்பட்டார்கள். ஆனால், விமர்சகர்கள்... தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள். 'ஒரு முழுமையான சீசனில் ஜிடேனால் சாதிக்க முடியுமா?' கேள்விகள் தொடர்ந்தது. ரியல் மாட்ரிட் ஆண்டாண்டாக செய்துவரும் பழக்கத்தை மாற்றினார். ஒவ்வொரு சீசன் தொடக்கத்திலும் மில்லியன்கள் கொடுத்து ஸ்டார் வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தவேண்டும் என்று அணியின் தலைவர் ஃபியோரென்டினா பெரெஸ் விரும்புவார்.  But, Zidane had other ideas! ஸ்டார் வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்த அவர் விரும்பவில்லை. அகாடெமி வீரர்களை ஸ்டார் பிளேயர்களாக்க விரும்பினார்.  அசேன்ஸியோ, லூகாஸ் வஸ்க்யூஸ் என இளம் ரத்தங்கள் பாய்ந்தது. இஸ்கோ பிராதான வீரரானார். மாட்ரிட் புதிய உருவம் பெற்றது. 

'சரி, ஆட்ட முறையில் ஜிடேன் எப்படி செயல்படுவார்?', 'பார்சிலோனாவைவிட சிறந்த அணியாக ரியல் மாட்ரிட்டை உருவாக்கிவிடுவாரா?' ஜிடேன் அசரவில்லை. இரண்டு விஷயங்களில் தெளிவாக இருந்தார். ஒன்று.. வீரர்களை rotation முறையில் மாற்றிக்கொண்டே இருப்பது. இரண்டு... தன் முதல் பிளானை எதற்காகவும் மாற்றிக்கொள்ளக்கூடாது. தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் ஜொலிக்க முடியாமல் தடுமாறிய ரொனால்டோவுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கத் தொடங்கினார். சிறிய அணிகளுடனான 'Away' கேம்களில் அவரை மாட்ரிட்டிலேயே விட்டுச் சென்றார் ஜிடேன். ஒரு வீரரை பெஞ்சில் அமரவைப்பது சாதாரண விஷயம்தான். ஆனால், ரொனால்டோவை அமரவைப்பது என்பது சாதாரணம் கிடையாது. தோற்றால் நிர்வாகம் கேள்வி எழுப்பும். வெற்றி பெற்றால்..? அப்போதும் கேள்வி எழும். மெஸ்ஸியைவிட கோல் வித்தியாசத்தில் ரொனல்டோ பின்தங்கிவிட்டால் அதற்கும் ரசிகர்கள் முதல் பலரும் எழுப்பும் கேள்விகள் துரத்தும். சுருங்கச் சொன்னால் இதுதான் ரியல் மாட்ரிட்..! வெற்றியோ, தோல்வியோ... சாதனைகள் புரிந்தாயோ, சரித்திரம் படைத்தாயோ... உன் இடம் என்றுமே கேள்விக்குறிதான். 

ரொனால்டோ, பென்சிமா, மோட்ரிச் எனப் பலருக்கும் அடிக்கடி ஓய்வு கொடுத்தார். அவ்வப்போது கேப்டன் ரமோஸ், மார்செலோ ஆகியோருக்கும். சீனியர்கள் இல்லாத நிலையில், தங்களின் திறமையைக் காட்டக் கிடைத்த வாய்ப்பை 200 சதவிகிதம் பிடித்துக்கொண்டார்கள். இஸ்கோ புதிய ஹீரோவானார். அசேஸியோ பலருக்கும் செல்லப் பிள்ளை ஆனார். மொராடா நம்பிக்கை நாயகன் ஆனார். பார்சிலோனாவைப் பின்னுக்குத் தள்ளியது மாட்ரிட். 5 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக லா லிகா பட்டம். மொத்த நகரும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. 'லா லிகா மட்டும் போதுமா, சாம்பியன்ஸ் லீகும் தர்றேன்' என அதையும் வாங்கிக்கொடுத்தார் ஜிடேன். சாம்பியன்ஸ் லீக் குரூப் பிரிவு போட்டிகளிலும் மிகவும் தடுமாறிய சி.ஆர்.7, ஜிடேன் தந்த ஓய்வுகளால் புத்துணர்ச்சி பெற்று நாக் அவுட் சுற்றுகளில் விஸ்வரூபம் எடுத்தார். 26 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது மாட்ரிட். இப்போது இன்னுமொரு மகத்தான சாதனை சாம்பியன்ஸ் லீக் ஹாட்ரிக்! எவரும் நினைத்துக்கூடப் பார்க்காத விஷயத்தை கூலாக சாத்தியப்படுத்தினார் ஜிடேன். 

அவரது அணுகுமுறைகள் பலமுறை கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பென்சிமாவை அணியில் தக்கவைத்து மொராடாவை வெளியனுப்பியது. மாட்ரிட் ரசிகர்கள் பெரிதும் நம்பிய கேரத் பேல், ஜேம்ஸ் ராட்ரிக்யூஸ் போன்ற வீரர்கள்மீது நம்பிக்கை வைக்காமல், அவர்களைப் பயன்படுத்தத் தவறியது போன்ற சில முடிவுகளை, அவரை வெகுவாகப் பாராட்டியவர்களும் விமர்சித்துள்ளனர். இந்த சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் கேரத் பேல் வெற்றிக்கான இரண்டு கோல்களையும் அடித்தபோது, நிச்சயம் ஜிடேனுக்கும் தன் முடிவுகளின்மீது சந்தேகம் எழுந்திருக்கலாம். 

உண்மையில் இந்தச் சந்தேகம்தான் அவரது ராஜினாமாவுக்குக் காரணம். ரொனால்டோவின் செயல்பாடு ரொம்பவே குறைந்துவிட்டது. ரொனால்டோவாக வெளியேறும்வரை, அவர் இல்லாத ஒரு அணியை ஜிடேனால் உருவாக்க முடியாது. பென்சிமா - பிரான்ஸ் அணியில் இடமில்லை. நிச்சயம் எந்த அணியும் வாங்க முன்வராது. ஆனால், ரொனால்டோ கிரீன் சிக்னல் தராமல் அவரது இடத்தில் இன்னொரு வீரரை அமர்த்த முடியாது. பேல் மீது அவருக்கு இன்னமும் நம்பிக்கை இல்லை. நடுகளமும் பின்களமும் பலமாக இருக்கின்றன. ஆனால், அவர்களின் உயிர்நாடியான முன்களம்? இந்த அணி அடுத்த ஆண்டு லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கோபா டெல் ரே ஒன்றை வெல்லுமா என்பதிலும் அவருக்குச் சந்தேகம். ஏனெனில், ஈகோ அதிகம் கொண்ட ஸ்டார் வீரர்களுக்கும், எதற்கும் தயங்காத நிர்வாகத்துக்கும் இடையில் அவரால் இனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அப்படி அடுத்த சீசன் சுமாராக இருந்தால், கோப்பைகள் இல்லாமல் கழிந்தால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஜிடேன் பதவியிலிருந்து தூக்கப்படுவார் என்பதே உண்மை. 

2006 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜிடேன் பெற்ற சிவப்பு அட்டைதான் அவரது கால்பந்து வாழ்க்கையின் கடைசிப் புள்ளி. என்றுமே மறக்க முடியாத, அழிக்க முடியாத கறுப்புப் புள்ளி. அப்படியொரு முடிவு தன் பயிற்சியாளர் பயணத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு முடிவை மகத்தான வெற்றிக்குப் பின்பு எடுத்திருக்கிறார் ஜிடேன். லெஜண்டாக மாட்ரிட்டுக்கு வந்தார்... லெஜண்டாகவே விடைபெற்றார்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு