Published:Updated:

சென்னையின் எஃப்.சி-யில் இன்னொரு தமிழக வீரர்... யார் அந்த சீனிவாசன் பாண்டியன்?!

சென்னையின் எஃப்.சி-யில் இன்னொரு தமிழக வீரர்... யார் அந்த சீனிவாசன் பாண்டியன்?!
சென்னையின் எஃப்.சி-யில் இன்னொரு தமிழக வீரர்... யார் அந்த சீனிவாசன் பாண்டியன்?!

சென்னையின் எஃப்.சி-யில் இன்னொரு தமிழக வீரர்... யார் அந்த சீனிவாசன் பாண்டியன்?!

நடப்பு ஐ.எஸ்.எல் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி, மற்றோர் இளம் தமிழக வீரரை ஒப்பந்தம் செய்து, சென்னை ரசிகர்களுக்கும் தமிழக கால்பந்து ரசிகர்களுக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறது. ஆம், இதுவரை ஐ லீக் தொடரில் சென்னை சிட்டி எஃப்சி அணிக்காக விளையாடிவந்த தஞ்சாவூரைச் சேர்ந்த 22 வயதான இளம் வீரர் சீனிவாசன் பாண்டியன், சென்னையின் எஃப்சி அணிக்காக விளையாடப்போகிறார். ஏற்கெனவே சென்னையின் எஃப்.சி அணியில் சூப்பராக விளையாடிவரும் தனபால் கணேஷுடன் பாண்டியனும் சேர்ந்து சென்னையின் அணிக்கு `லோக்கல் டச்' கொடுக்கின்றனர்.

இரண்டு முறை ஐ.எஸ்.எல் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி, நடந்து முடிந்த 2017-18 சீசனில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் க்ரகரியின் பயிற்சியின் கீழ் டிஃபென்ஸ், மிட்ஃபீல்டு மற்றும் அட்டாக் என அனைத்து ஏரியாக்களிலுமே சூப்பர் ஃபார்மை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. நடுக்களத்தில் ரஃபேல் அகஸ்டோ, அனிருத் தாபா, பிக்ரம்ஜித் சிங் ஆகியோருடன் `நம்ம பையன்' தனபால் கணேஷ் பட்டையைக் கிளப்பினார். முந்தைய சீசன்களில் ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்புபெறாத அவர், இந்த சீசனில் சென்னை டீமின் `கோர்' பிளேயராக உருவெடுத்தார். உள்ளூர் வீரர் ஒருவர் சென்னை அணிக்காக முக்கியமான ரோலில் விளையாடியதால், சென்னை அணிக்கு இந்த வருடம் வரவேற்பு அதிகமானது. அதை உணர்ந்துள்ள சென்னையின் அணி நிர்வாகம் மீண்டும் இன்னொரு தமிழக வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையின் எஃப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான விதா தானி, பாண்டியனை வரவேற்றுப் பேசுகையில், ``தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரர், எங்களை முன்னெடுத்துச் செல்ல இருப்பது இந்த க்ளப்பில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் சவால்கொண்ட சீசனை நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், எங்களுடன் அவர் இணைந்திருப்பது ஆர்வமிக்க நிகழ்வாகும். கடந்த சில வருடங்களாக, அவர் ஏற்ற-இறக்கங்களைச் சந்தித்தாலும், எங்களோடு அவர் சிறப்பை மட்டுமே அடைவார்” என்றார்.

சென்னையின் எஃப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் க்ரகரி, ``உள்ளூர் திறமையைக் கண்டறிந்து ஊக்குவிப்பது என்பது, எந்த ஒரு கால்பந்து க்ளப்புக்கும் பெருமைதான். இந்தியாவில் உள்ள இளம் திறமைசாலிகளில் பாண்டியனும் ஒருவர். அவரிடம் அதீத திறமைகள் இருப்பதாக நம்புகிறேன். மேலும், அவருடன் ப்ரீ சீசனில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்” என்றார்.

சென்னை எஃப்சி அணியின், தற்போதைய துணை பயிற்சியாளர் சையது சபீர் பாஷா, இந்தியன் பேங்க் அணியில் ஏற்கெனவே பாண்டியனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமுடையவர். பாண்டியனின் ஒப்பந்தம் பற்றி அவர் பேசும்போது, ``பாண்டியன், எங்களது (வீரர்கள்) படைக்கு சிறந்த இணை. அவருடன் கடந்தகாலத்தில் நெருக்கமாகப் பணியாற்றியதாலும், அவரது வளர்ச்சியை நன்றாகக் கவனித்ததாலும் நான் அவரிடமிருந்து அரிய செயல்களை எதிர்பார்க்கிறேன். அவரால் ஆட்டத்தை பிரேக்-அப் செய்யவும், நல்ல பாஸிங் ரேஞ்சுடன் விரைவான இயக்கத்தால் களத்தில் அதிக தொலைவை கவர் செய்யவும் முடியும். நிச்சயமாக அவர் எங்களின் மிட்ஃபீல்டுக்கு நல்ல ஊக்கமாக இருப்பார்” என்றார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த 22 வயதான சீனிவாசன் பாண்டியன், இதுவரை சென்னை சிட்டி எஃப்சி அணிக்காக ஐ லீக் தொடரில் விளையாடிய சென்ட்ரல் மிட்ஃபீல்டர். லோன் ஆப்ஷனாக இல்லாமல், நிரந்தர மாற்றமாக வரவிருக்கும் பாண்டியன், இனி மூன்று வருடங்களுக்கு சென்னையின் எஃப்சி அணியில்தான் விளையாடப்போகிறார். கடந்த ஐ லீக் சீசனில் சென்னை சிட்டி எஃப்சி அணிக்காக 17 போட்டிகளில் களமிறங்கியுள்ள பாண்டியன், மற்ற பிளேயர்களை ஓவர்டேக் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சென்னை சிட்டி அணியில் தனது இருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். 

பாண்டியனின் இரண்டு அண்ணன்களும் கால்பந்து வீரர்களே. தனது சகோதரர்களைப்போலவே காரைக்குடியில் உள்ள `Noble’ கால்பந்து அகாடமியில் தன் பயிற்சியைத் தொடங்கினார். அதன்பிறகு 2015-16-ம் ஆண்டு சீசனில் இந்தியன் பேங்க் அணியிலும், 2016-17-ம் ஆண்டு சீசனில் விவா சென்னை அணியிலும் விளையாடி, 2017-18-ம் ஆண்டு சீசனில் சென்னை சிட்டி எஃப்சி அணியால் வாங்கப்பட்டார்.

சத்தமே இல்லாமல், நடுக்களத்தை இயக்கும் ஆற்றல்கொண்ட ஒரு வீரர் பாண்டியன். மேலும் சென்னையின் எஃப்சி அணிக்காக ஒப்பந்தமான தனது கனவு நிறைவேறியதைப் பற்றி அவர் கூறுகையில், ``சென்னையின் எஃப்சி-யில் இணைவதில் பெருமையடைகிறேன். ஐ.எஸ்.எல் தொடரில் சென்னையின் எஃப்சி-க்காக விளையாட நான் எப்போதுமே ஆர்வமாக இருந்தேன். மேலும், எனது சொந்த மாநிலத்திலேயே ஐ.எஸ்.எல் சாம்பியனுடன் இணைவது சிறப்பான உணர்வைத் தருகிறது. மேலும், தனபால் கணேஷ், நல்லப்பன் மற்றும் மோகன்ராஜ் போன்ற வீரர்களை என் முன்னோடிகளாக நான் மதிப்பதுடன், அவர்களைப் பின்பற்றி எனது க்ளப்பையும் அதன் ஆதரவாளர்களையும் பெருமையடையச் செய்வேன்” என்று உறுதியளித்தார். 

அடுத்த கட்டுரைக்கு