Election bannerElection banner
Published:Updated:

கனவில் மிதக்கும் கால்பந்து உலகம்... பார்சிலோனாவைப் பந்தாடிய ரோமா! #UCL

கனவில் மிதக்கும் கால்பந்து உலகம்... பார்சிலோனாவைப் பந்தாடிய ரோமா! #UCL
கனவில் மிதக்கும் கால்பந்து உலகம்... பார்சிலோனாவைப் பந்தாடிய ரோமா! #UCL

ரோமா - கால்பந்து உலகை கற்பனையில் மிதக்கவிட்டது, அதன் வரலாற்றில் மிகப்பெரிய சரித்திரம் படைத்துவிட்டது, பார்சிலோனாவைத் தோற்கடித்துவிட்டது. அதுவும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில்!

ஸ்டேடியோ ஒலிம்பிகோ மைதானம் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது. களத்துக்குள் இருக்கும் வீரர்கள் அழுகிறார்கள். கேலரியில் இருக்கும் ரசிகர்களும் அழுகிறார்கள். `அவே டீம்' ரசிகர்களும் அழுகிறார்கள். கேமராக்கள் திரும்பிய இடமெல்லாம் அழுகை மட்டுமே. ரோமா அணியின் ரசிகன் அந்தக் கொடியை மார்பில் ஒத்திக்கொண்டு அழுகிறான். பார்சிலோனா ரசிகனோ கண்ணில் கொடியைப் பொத்திக்கொண்டு அழுகிறான். 11 மாதங்களுக்கு முன்னால் அந்த மைதானம் இப்படித்தான் அழுதுகொண்டிருந்தது. 25 ஆண்டுகள் அந்த அணிக்கு விளையாடிய ஃப்ரான்செஸ்கோ டோட்டி ஓய்வு பெற்றபோது மொத்த ரோம் நகரமும் கண்ணீர் சிந்தியது. இந்த மைதானத்தில் கண்ணீர் மட்டுமே மிஞ்சியிருந்தது. ஆனால், இம்முறை கண்ணீரின் காரணம் வேறு. நேற்று இரவு... ரோமா - கால்பந்து உலகை கற்பனையில் மிதக்கவிட்டது, அதன் வரலாற்றில் மிகப்பெரிய சரித்திரம் படைத்துவிட்டது, பார்சிலோனாவைத் தோற்கடித்துவிட்டது. அதுவும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில்!

ரோமா - இத்தாலி சீரி-ஏ தொடரில் விளையாடும் அணி. பிரீமியர் லீக், லா லிகா மட்டுமே தெரிந்திருக்கும் நம்மவர்கள் இப்படியோர் அணியின் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். 90 வருடங்களில் 3 சீரி-ஏ கோப்பைகள்தாம் வென்றிருக்கிறது. ஆனால், இத்தாலிய கால்பந்தின் தவிர்க்கமுடியாத அணி. கால்பந்து ஜாம்பவான்களை ஒப்பந்தம் செய்து, அவர்களின் அடையாளத்தில் பிரபலமடைந்த அணிகளுக்கு மத்தியில், தனக்கென்ற தனி அடையாளத்தைத் தேடிக்கொண்ட அணி. நூறு மில்லியன் டாலருக்கு விலைபோகும் வீரர்கள் இல்லை. நூறு மில்லியன் டாலருக்கு எந்த வீரரையும் வாங்கியதுமில்லை. மிகப்பெரிய அணிகளிலிருந்து கழட்டிவிடப்பட்ட வீரர்கள் சிலர், சில அணிகளிலிருந்து லோனில் வாங்கப்பட்ட வீரர்கள் சிலர் எனப் பெரிய நட்சத்திரங்கள் இல்லாத அணியை வைத்து பில்லியன் டாலர் மதிப்புள்ள பார்சிலோனாவைப் பந்தாடியுள்ளது. ரோமா...இத்தாலியக் கால்பந்தில் மட்டுமல்ல, சர்வதேசக் கால்பந்திலும் தவிர்க்க முடியாத அணி.

பார்சிலோனா அணி ரோம் நகரில் இறங்கியபோது 4-1 என்ற முன்னிலையோடு இருந்தது. கேம்ப் நூ மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதியின் முதல் சுற்றில் அப்படியோர் அபார வெற்றியைப் பெற்றிருந்தது பார்சிலோனா. ஐரோப்பியக் கால்பந்து வரலாற்றில் 2 அணிகள் மட்டுமே 3 கோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அப்படியொரு கம்பேக்கை ரோமா கொடுக்குமா..? அதுவும் பார்சிலோனாவுக்கு எதிராக..? சான்ஸே இல்லை. சாம்பியன்ஸ் லீக் தொடரில் தாங்கள் விளையாடிய கடைசி 10 போட்டிகளில் மூன்றே கோல்கள் மட்டுமே விட்டிருந்தது பார்சிலோனா. இந்த லா லிகா சீசனிலும் 31 போட்டிகளில் அவர்கள் வாங்கியுள்ளது 16 கோல்கள்தாம். அப்படிப்பட்ட அரணை உடைத்து 90 நிமிடங்களில் 3 கோல்கள் அடிக்க முடியுமா?

சரி, மூன்று கோல் அடித்துவிட்டாலும் வெற்றி எந்த வகையில் நிச்சயம்? பார்சிலோனாவின் அட்டாக்கைத் தடுக்க முடியுமா? இனியஸ்டாவுக்கும் மெஸ்ஸிக்கும் இடையிலான கம்யூனிகேஷனை `ஜேம்மர்' வைத்துத்தான் தடுக்கவேண்டும். அவர்கள் தனியே செய்யும் மந்திர தந்திரங்களை அடக்கிவைக்க வேண்டும். சுவாரஸ் என்ற அரக்கன் கோல் கம்பத்தை முற்றுகையிடாமல் டைவர்ஷன் செய்ய வேண்டும். களத்தில் இறங்கும் 11 வீரர்களும், அதுவரை தங்கள் வாழ்நாளில் விளையாடிராத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். பிராக்டிகலாக அது சாத்தியமில்லை. ஏனெனில், எதிரணி பார்சிலோனா. 2 கோல் பின்தங்கியிருந்தாலும் கடைசி 2 நிமிடங்களில் அனைத்தையும் தலைகீழாக்கிவிடுவார்கள். ஏப்ரல் 1-ம் தேதி இவர்களிடம் முட்டாளான செவியா அணியின் டிஃபண்டர்களுக்கு அது நன்றாகத் தெரியும். எப்படிப் பார்த்தாலும், அரையிறுதியில் பார்சிலோனா ஆடுவதை பார்சிலோனா ரசிகர்கள் மட்டுமன்றி, மொத்தக் கால்பந்து உலகமுமே நிர்ணயித்திருந்தது.

ஆட்டத்துக்கு 1 மணி நேரம் முன்பு... இரு அணிகளின் பிளேயிங் லெவன்களும் அறிவிக்கப்படுகின்றன. முதல் சுற்றில் விளையாடிய அதே பார்சிலோனா லெவன். 4-1 என வென்றவர்களை எதற்காக மாற்ற வேண்டும்? ரோமா - 3 மாற்றங்கள்... ஃபார்மேஷனும் 4-5-1ல் இருந்து 3-5-2 ஆக மாறியிருந்தது. இது வழக்கமாக இத்தாலிய அணிகள் விளையாடும் ஃபார்மேஷன்தான் என்பதால், அதைப் பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆட்டம் தொடங்கியது... உண்மையான மாற்றத்தின் உருவம் களத்தில்தான் தெரிந்தது.

சாத்தியப்படாத ஒன்றைச் சாத்தியப்படுத்துவதற்காக... மோசமான தோல்விக்குப் பிறகும் தங்கள் மீது நம்பிக்கைகொண்டு, கொடி ஏந்தி நிற்கும் அந்த ரசிகர்களுக்காக... நடுவரின் விசில் சத்தம் கேட்ட நொடியிலிருந்தே வெறியாட்டம் ஆடினர். நெஞ்சில் இருந்த வேட்கையை கால்கள் வழியே கடத்தினர். 6-வது நிமிடம்... அவர்கள் எதிர்பார்த்தது நடந்தது. ரோமா அணியின் கொடி காற்றில் வேகமாக அசைந்தது, ரசிகர்களின் ஆரவாரம் காதைப் பிளந்தது, கோல் விழுந்தது! ரோமா - முதல் கோலை அடித்தது.

டனிலோ டி ரோஸி... 34 வயது, 17 வருடங்களாக இந்த அணிக்கு விளையாடிவருகிறார். ஆனால், ஒரு சீரி -ஏ கோப்பை கூட வெல்ல முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மேட்சில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். இந்த ஆண்டு முதல்முறையாக கிளப் கேப்டன். இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வுபெற வேண்டும். அதற்குள் கேப்டனாக இந்த அணிக்கு என்ன செய்யப்போகிறார்? பார்சிலோனாவுக்கு எதிரான முதல் சுற்றில் `own goal' வேறு அடித்திருந்தார். அதனால் அவர் மீது அவ்வளவு நெருக்கடி. மற்ற ரோமா வீரர்கள் 200 சதவிகிதம் பெர்ஃபார்ம் செய்தால், இவர் 400 சதவிகிதம் செய்ய வேண்டும். ஆனால், எப்படி அவ்வளவு கூலாக, அவ்வளவு பெர்ஃபெக்டாக ஒரு பாஸ்..?! அதனால்தான் அவர் ஒரு லெஜன்ட்!

ரோமா அடித்த அந்த முதல் கோல், டி ரோஸி கொடுத்த வேற லெவல் பாஸினால் அடிக்கப்பட்டதுதான். சென்டர் சர்க்கிளில் பந்து அவர்வசம் இருக்கிறது. பாஸ் வாங்க பின்னால் இரண்டு டிஃபண்டர்கள் இருக்கிறார்கள். அருகில் ஸ்ட்ரூட்மேன் நிற்கிறார். எளிதாக ஷார்ட் பாஸிங் செய்திருக்கலாம். செய்யவில்லை. வலது விங்கில் ஃப்ளோரன்ஸி, இடது பக்கம் கொலரோவ் இருவரும் `மேன் மார்க்' செய்யப்படாமல் ஃப்ரீயாக இருக்கிறார்கள். ஈஸியாக விங்கிலிருந்து அட்டாக் செய்திருக்கலாம். அவருக்கும் கொடுக்கவில்லை. கண்முன்னே நெய்ன்கோலன்... நோ பாஸ். அவரைத் தாண்டி பாட்ரிக் ஷிக்... அவருக்கும் பின்னால் ஈடன் ஜெகோ. அவர்களை மார்க் செய்து உம்டிடி, ஜோர்டி ஆல்பா இருவரும் நிற்கிறார்கள். மார்க் செய்யப்படாமல் இருக்கும் 6 வீரர்களை விட்டுவிட்டு, மார்க் செய்யப்பட்ட ஜெகோவுக்கு பாஸ் செய்யத் தீர்மானித்தார் டி ரோஸி.

இப்படியான அதிரடி முடிவுகள்தாம் எதிர்பாராத பலன் கொடுக்கும். அதுவும் கால்பந்தில், எதிரணி வீரர் பந்தைப் பிடுங்க நெருங்கும் அந்த ஓரிரு விநாடிகளில் எடுக்கப்படும் இப்படியான முடிவுகள், காலத்துக்கும் அந்த வீரனின் பெயர் சொல்லும். அந்த பாஸ், ரோமா அணியின் அடுத்த ஜெனரேஷன் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடித் தீர்ப்பார்கள். அப்படிப்பட்ட பாஸ் அது. தன்னை மார்க் செய்த ஜோர்டி ஆல்பாவிடமிருந்து விலகி ஓட முயற்சி செய்கிறார் ஜெகோ. அவருக்கு இடது புறம், அவரை மார்க் செய்ய உம்டிடி நகர்கிறார். அந்த சென்டர் சர்க்கிளிலிருந்து பார்சிலோனா பாக்சுக்குள் lofter pass. ஆல்பா, உம்டிடி இருவருக்கும் நடுவே, ஓடிக்கொண்டிருக்கும் ஜெகோவின் கால்களுக்கு முன்னால் பெர்ஃபெக்டாக விழுகிறது பந்து. அதை அற்புதமாக கன்ட்ரோல் செய்து கோலாக்கினார் ஜெகோ. ஆனால், அவர் கோல் அடித்ததைவிட, அந்த பாஸ்... வாட்டே விஷன்..!

அந்தக் கோலை அவர்கள் கொண்டாடவில்லை. ஏனெனில், அவர்களின் மிஷன் இன்னும் முடிந்திடவில்லை. ரோமா தொடர்ந்து அட்டாகிங் கேம் ஆடுகிறது. ஜெகோ, ஷிக், நெய்ன்கோலன் என அனைவரும் கோல் நோக்கி பந்தைப் பறக்கவிடுகின்றனர். விங்கிலிருந்து கிராஸ் மழை பொழிகிறது. பார்சிலோனா பின்வாங்குகிறது. அதுவே ரோமாவுக்கு மிகப்பெரிய வெற்றிதான். ஆனால், அந்த இரண்டாவது கோல் அவ்வளவு எளிதில் கிடைத்திடவில்லை. பார்கா கோல்கீப்பர் டெர் ஸ்டேகன் சில வாய்ப்புகளைத் தடுத்தார். சில ஷாட்கள் போஸ்டுக்கு வெளியே சென்றன. ஆனால், இரண்டாவது கோலுக்கான அந்த வாய்ப்பை, பார்சிலோனா வீரர் ஒருவரே ஏற்படுத்திக்கொடுத்தார்.

58-வது நிமிடம், ஜெகோவை பாக்சுக்குள் இழுத்துத் தள்ளினார் பிக்கே. பெனால்டி. பந்தின் முன் மீண்டும் டி ரோஸி. வலது கார்னரில் பலமான ஷாட்... கோல். இன்னும் ஒரேயொரு கோல் அடித்தால் away goal அடிப்படையில் அரையிறுதியில் ரோமா. இப்போது ரோமா வீரர்கள் ஆர்ப்பரித்தனர். ரசிகர்கள் கட்டித்தழுவி கொண்டாடினர். டி ரோஸி நிம்மதியடைந்தார். அந்த own கோலுக்கு பிராய்சித்தம் தேடிக்கொண்டார். ஆனால், இன்னும் ஒரு அந்தப் பிராய்சித்ததுக்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தார் - கோஸ்டாஸ் மனோலஸ். முதல் சுற்றில் இவரும் ஒரு own goal அடித்திருந்தார். பிராய்சித்தம் தேடத் துடிப்பார்தானே..?

அதற்கும் வாய்ப்பு கிடைத்தது. 82-வது நிமிடம்... கார்னர் கிக் எடுக்கிறார் செங்கிஸ் அண்டர். பார்சிலோனா கோலின் near post அருகே வருகிறது பால்... ஒரு கூல் ஹெடர்... ஆல்பா, பிகே, டெர் ஸ்டெகன் அனைவரையும் ஏமாற்றி, பார்சிலோனாவின் கனவுகளை உடைத்துக்கொண்டு கோலுக்குள் நுழைகிறது பந்து. ஸ்டேடியோ ஒலிம்பிகோ மிரண்டுவிட்டது. ரோமா வீரர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். சப்ஸ்டிட்யூட் வீரர்கள் ஓடிச்சென்று அவர்களைக் கட்டியணைக்கிறார்கள். பொங்கி எழுந்த எமோஷன்களை அடக்க முடியாத `ball boys' எனப்படும் சிறுவர்களும்கூட அவர்களுடன் சேர்ந்து ஓடியாடிக் கொண்டாடுகிறார்கள். அந்தக் கொண்டாட்டம் ஓய்ந்ததும் கொஞ்சம் பயம் பற்றிக்கொள்கிறது. இன்னும் 10 நிமிடம் பார்சிலோனா கோலடிக்கக்கூடாதே... மெஸ்ஸி வசம் பந்து சிக்கக்கூடாதே... அமைதியின் உச்சத்தை அடைகிறது அரங்கம்.

90 நிமிடங்கள் முடிகின்றன. 4 நிமிடம் ஸ்டாப்பேஜ் டைம் வழங்கப்படுகிறது. 2-வது நிமிடம் கோல்கீப்பர் ஆலிசன் பாக்சின் அருகே வந்து பந்தை உதைக்கிறார். அது ஓஸ்மான் டெம்பெளே வசம் சிக்குகிறது. கோல் போஸ்டில் யாரும் இல்லை. பாக்சுக்கு வெளியே இருந்து அடிக்கிறார். ரோமா ரசிகர்களின் இதயத்துடிப்பு இரட்டிப்பாகிறது. நல்லவேளை, பந்து போஸ்டுக்குக் கொஞ்சம் மேலே சென்றது. அடுத்த இரண்டு நிமிடமும் பார்சிலோனாவைக் கட்டுக்குள் வைக்கிறது ரோமா. விசில் சத்தம் கேட்கிறது... ரோமா வெற்றி. 34 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி... இவையனைத்துக்கு மேல் பார்சிலோனா தோற்றுவிட்டது!

சொல்லப்போனால், இந்த வெற்றிக்கு அந்த 3 கோல்களும், அதை அடித்தவர்களும் மட்டும் காரணம் கிடையாது. அந்த அணியின் 11 வீரர்களும் ஆடிய அற்புத ஆட்டம். பார்சிலோனா என்னும் மாபெரும் அணியைப் பல் பிடுங்கிய பாம்பாக்கியது ரோமாவின் திட்டங்கள். அதற்கு மிகமுக்கியக் காரணம் அந்த அணிப் பயிற்சியாளர். குடோஸ் டி ஃப்ரான்செஸ்கோ! கால்பந்தைப் பொறுத்தவரை, பந்து நம் வசம் இருக்கும்போது உள்ளதைவிட, பந்து எதிரணியின்வசம் இருக்கும்போதுதான் புத்திசாலித்தனமாக விளையாடவேண்டும். நேற்று ரோமா அணியின் இன்டெலிஜென்ட் லெவல் - நூற்றுக்கு நூறு! 

மெஸ்ஸி, இனியஸ்டா போன்றவர்களிடம் பந்து இருக்கும்போது, அவர்களை யோசிக்கவிடாமல் press செய்தனர். நடுகளம் ரொம்பவுமே ஒருங்கிணைந்திருந்தது. செல்சீ அணியுடன் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில்  மோதியபோது, 3 பேர் கொண்ட தடுப்பாட்டத்திடம் திணறியது போலவே நேற்றும் பார்சிலோனா திணறியது. சொல்லப்போனால் ரோமா செல்சீயைவிட பலமடங்கு பெர்ஃபெக்டாக விளையாடியது. Offside trapல் பட்டையைக் கிளப்பினார்கள். அதுவும் 93-வது நிமிடத்தில் சுவாரஸை ஆஃப்சைடில் டிராப் செய்ததெல்லாம் அக்யூரஸியின் மறுபெயர். இந்த முழுக் கட்டுரையைவிட ஒரு ஸ்டேட்ஸ் ரோமாவின் அதிஅற்புத ஆட்டத்தை விளக்கிவிடும் - பார்சிலோனா அணியின் பாஸிங் சக்சஸ் 75 சதவிகிதம்தான்! வழக்கமாக 85 சதவிகிதத்துக்கும் மேல் பாஸ் சக்சஸ் வைத்திருக்கும் பார்கா. பாஸிங்தான் அவர்களின் கேமே. இங்குதான் பார்சிலோனாவின் கேம் பிளானை சிதைத்து வாகை சூடியது ரோமா. 

தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறுகிறது பார்சிலோனா. மெஸ்ஸி எதுவுமே செய்யமுடியவில்லை. மறுபுறம் ரொனால்டோ ஒன் மேன் ஷோ நடத்தி, ரியல் மாட்ரிட்டை ஹாட்ரிக் கோப்பைக்கு அழைத்துச் செல்கிறார். ரோமா ரசிகர்களோடு மாட்ரிட் ரசிகர்களும் இந்த வெற்றியை வெறித்தனமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டுமன்றி நியூட்ரல் கால்பந்து ரசிகனும் ரோமாவின் வெற்றியை உச்சிமுகர்கிறான்...கொண்டாடுகிறான். காரணம், ரோமா விளையாடியது அக்மார்க் இன்டெலிஜென்ட் ஃபுட்பால்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு