Published:Updated:

சென்னைனாலே ஜெயிப்போம்! சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..? #IrudhiYuttham #PoduMachiGoalu #HeroISL

சென்னைனாலே ஜெயிப்போம்! சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..? #IrudhiYuttham #PoduMachiGoalu #HeroISL
சென்னைனாலே ஜெயிப்போம்! சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..? #IrudhiYuttham #PoduMachiGoalu #HeroISL

சென்னைனாலே ஜெயிப்போம்! சென்னையின் எஃப்.சி சாம்பியன் ஆனது எப்படி..? #IrudhiYuttham #PoduMachiGoalu #HeroISL

​'வாடர்ன்னாலே அடிப்போம்' என்பதுபோல் 'சென்னைனாலே ஜெயிப்போம்' என்று சொல்லி அடித்துள்ளது சென்னையின் எஃப்.சி! 5 மாதங்கள் நடந்த ஐ.எஸ்.எல் தொடரின் நான்காவது சீசனின் சாம்பியன்கள் சென்னைதான். அதுவும் இரண்டாவது முறையாக! பலம் வாய்ந்த பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில், சொந்த ரசிகர்களுக்கு முன்னால் இறுதிப் போட்டியில் தூக்கி அடித்து, மீண்டும் கோப்பையைத் தூக்கியுள்ளனர் சூப்பர் மச்சான்ஸ். தொடரின் முதல் வார முடிவில், சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஏனெனில், நிலமை அப்படியிருந்தது. முதல் போட்டியிலேயே படுதோல்வி கண்டிருந்தது சென்னையின் எஃப்.சி. அப்படியிருந்த அணி எப்படி கோப்பையைக் கைப்பற்றியது..?

3 ஆண்டுகள் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த மார்கோ மடராசி, பதவியிலிருந்து விலகிக்கொள்ள, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் க்ரகரி பொறுப்பேற்றார். அணியிலும் நிறைய மாற்றங்கள். ஒருசில இந்திய வீரர்களைத் தவிர்த்து, பெரும்பாலும் புதிய வீரர்கள். ரஃபேல் அகஸ்டோ தவிர, அனைத்து வெளிநாட்டவர்களுமே புதியவர்கள். மற்ற அணிகளைப் போல் இல்லாமல், மார்க்கீ வீரரை ஒப்பந்தம் செய்யாமல் களமிறங்கியது சென்னை. பெயரளவில் நல்ல டீம்தான். ஆனால், அவர்கள் செட் ஆவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. காரணம் கால்பந்தைப் பொறுத்தவரை, வீரர்களின் A to Z பயிற்சியாளருக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதேபோல், பயிற்சியாளரின் தேவைக்கேற்ப வீரர்கள் தங்களின் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். வீரர்களுக்கு இடையிலான புரிதலும் பெர்ஃபெக்டாக இருக்கவேண்டும். 

சென்னை அணியின் முதல் போட்டியில் இவற்றுள் எதுவுமே சரியாக இல்லை. பிரீமியர் லீக் போன்ற மிகப்பெரிய தொடரில், ஆஸ்டன் வில்லா (Aston Villa) போன்ற மிகப்பெரிய அணியின் மேனேஜராக இருந்தவர் க்ரகரி. அங்கு அவர் 3 டிஃபண்டர்கள் உள்ளடக்கிய ஃபார்மேஷனைக் கடைபிடித்துவந்தார். ஆனால், இந்திய கால்பந்துக்கு அந்த ஃபார்மேஷன் அந்நியம். நம் இந்திய வீரர்களும், இதற்கு முன் ஐ.எஸ்.எல் தொடரில் ஆடிய வீரர்களும் அந்த ஃபார்மேஷனில் ஆடியதில்லை. ஆனால், அவற்றை யோசிக்காமல், அதைக் கடைபிடித்தார் க்ரகரி. கோவாவுக்கு எதிரான முதல் போட்டியில், முதல் 38 நிமிடங்களிலேயே 3 கோல்கள் வாங்கியது சென்னை. அந்த அளவுக்கு அணியினரின் கெமிஸ்ட்ரி, பயிற்சியாளரின் திட்டங்கள் அனைத்துமே மோசமாக இருந்தது. 'சென்னை அவ்வளவுதான்' என்று ரசிகர்கள் நினைத்தனர்.

கால்பந்தைப் பொறுத்தவரை பயிற்சியாளர்கள்தான் முதன்மையானவர்கள். அவர்களுக்கு எப்போதுமே ஒரு ஈகோ இருக்கும். அதுவும் பிரீமியர் லீகில் பணிபுரிந்த ஒரு பயிற்சியாளருக்கு..? அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் தங்களின் திட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டார்கள். ஆனால், க்ரகரி அந்த நினைப்பை உடைத்தார். தன் அணிக்கு செட் ஆகாது என்று உணர்ந்தவுடனேயே தன் திட்டங்களை ஒதுக்கிவிட்டு, இந்த வீரர்களுக்கு எது ஒத்துவருமோ அதைப் பின்பற்றினார். அடுத்த போட்டியிலேயே 4 பேர் கொண்ட பின்களத்துக்கு மாறினார். அணியில் மாற்றங்கள் செய்தார். 3-0 என வெற்றி பெற்றது சென்னை. அதுமுதல் அந்த அணியின் பயணம் சீராகவே இருந்தது. ஆனால், இதனால் மட்டும் க்ரகரியின் செயல்பாட்டை புகழ்ந்திட முடியாது. 

பெங்களூரு வீரர்களான மிகு (Miku), சுனில் சேத்ரி ஆகியோர் இந்தத் தொடரில் முறையே 15 மற்றும் 14 கோல்கள் அடித்தனர். கோவா வீரர் காரோமினாஸ் 18 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். அரையிறுதிக்கே தகுதி பெறாத டெல்லி அணியின் காலு உசே கூட 13 கோல்கள் அடித்தார். ஆனால், சென்னை சார்பாக ஒருவர் கூட 10 கோல்களுக்கு மேல் அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஜீஜே 9 கோல்கள் அடித்தார். இவருக்கு அடுத்து அதிக கோல்கள் அடித்தது (4 கோல்கள்) - தடுப்பாட்டக்காரரான மெய்ல்சன்! ஆம், எந்தவொரு தனிப்பட்ட வீரரும் சென்னை அணிக்காக ஜொலிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்கள வீரர்கள் முக்கியமான பல போட்டிகளில் கோல் அடிக்கவேயில்லை. ஆனாலும் சென்னை ஜெயித்தது. காரணம் - ஜான் க்ரகரி!

கால்பந்து பயிற்சியாளர்களின் காட்ஃபாதராகக் கருதப்படும் சர் அலெக்ஸ் ஃபெர்குசன் ஒருமுறை சொன்னார் - "Attack wins you games, defence wins you titles". 'ஒரு கோப்பையை வெல்வதற்கு முன்களத்தைவிட தடுப்பாட்டம் முக்கிய பங்காற்றும்' என்பதை அப்படிச் சொல்லியிருப்பார் அவர். அவரது அணியை எதிர்த்து மோதியவரான க்ரகரி அதைத்தான் பின்பற்றினார். தடுப்பாட்டத்தை அரணாக மாற்றினார். அதிகபட்சம் 5 வெளிநாட்டு வீரர்கள்தான் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியும். கொஞ்சமும் யோசிக்காமல் மூவரை தடுப்பாட்டத்திலேயே பயன்படுத்தினார். மெய்ல்சன் ஏல்வ்ஸ், ஹென்ரிக் செரேனோ, இனிகோ கால்டிரான் மூவரும் துளைக்க முடியாத சுவராக நின்றனர். இவர்களுடன் 19 வயது ஜெர்ரியும் சேர்ந்து ஆட்டம் காட்டினார். ஆகச்சிறந்த முன்களத்தைக் கொண்டிருந்த பெங்களூரு மற்றும் புனே அணிகள்கூட சென்னையின் எஃப்.சி-க்கு எதிராக கோல் அடிக்கத் தடுமாறின. சென்னை அணியின் வெற்றிக்கான அடித்தளம் இங்கிருந்துதான் தொடங்கியது.

மற்ற இடங்களுக்கான வீரர்கள் தேர்வையும் பக்காவாகச் செய்தார் க்ரகரி. ஸ்ட்ரைக்கராக ஜீஜே. பிளே-மேக்கராக ரஃபேல் அகஸ்டோ. இவர்கள் இருவருமே நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். மற்ற 4 பொசிஷனுக்கான வீரர் தேர்வுதான் அணியின் பெர்ஃபாமன்ஸை நிர்ணயிக்கும். 4-2-3-1 என்ற வழக்கமான ஃபார்மேஷனைக் கையில் எடுத்தவர், அதற்குச் சரியான வீரர்களைத் தேர்வு செய்தார். இன்னும் ஒரு வெளிநாட்டு வீரரைத்தான் பயன்படுத்த முடியும். ரெனே, ஜேமி கேவிலான், ஜூட் (Jude) ஆகியோரில் ஒருவர்தான் அந்த இடத்தில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தேர்வு செய்தது க்ரகரி நெல்சன்! அதேபோல் மடராசி தொடர்ந்து புறக்கணித்துவந்த தமிழக வீரர் தனபால் கணேஷ் முதன் முறையாக வாய்ப்பு பெற்றார். இரண்டு ஆண்டுகள் சென்னை அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்த தோய் சிங் இடத்தில் ஃப்ரான்சிஸ் ஃபெர்னாண்டஸ் களமிறக்கப்பட்டார். இப்படி இந்த பொசிஷனில் இவர் எடுத்த ஷாக்கிங் முடிவுகள்தான் உண்மையில் சென்னை அணியின் சிறந்த பெர்ஃபாமன்ஸுக்குக் காரணமாக அமைந்தன. 

வீரர்கள் தேர்வோடு மட்டும் ஜான் க்ரகரி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு வீரருக்கும், அவர்களுக்கான ரோல் இதுதான் என்பதை பக்காவாகத் தீட்டினார். 'ஹோல்டிங் மிட்ஃபீல்டர்' ரோலில் விளையாடிய கணேஷுக்கு, possession வெல்வதும் அதைத் தக்கவைத்துக்குள்வதும் மட்டும்தான் வேலை. அட்டாக்கில் ஈடுபடுவது அவரது சிலபஸில் இல்லை. பந்து நம் வசம் இருந்தால், அதை எதிரணிக்கு விட்டுவிடக்கூடாது. அதில் மிகவும் கவனமாக இருந்தார் கணேஷ். பந்து தன்னிடம் இருக்கும்போது, முன்கள வீரர்களைவிட தடுப்பாட்டக்காரர்களுக்கே பாஸ் செய்வார். அதுதான் க்ரகரி அவருக்குக் கொடுத்த வேலை. அதேபோல், விங்கில் ஆடிய நெல்சன், ஃபெர்னாண்டஸ் இருவரும் எதிரணி வீரர்களை 'track back' செய்து தடுப்பாட்டத்துக்கும் உதவவேண்டும். ரெனே, கேவிலான் ஆகியோருக்குப் பதில் நெல்சன் அணியில் இடம்பெறக் காரணமே இதுதான். ஆனால், அவர் அதைச் சரியாகப் பயன்படுத்தி, முன்களத்தில் அசத்தி, அந்த இடத்தை தனக்கே உரித்தாக்கிக்கொண்டார். 

ஹோல்டிங் மிட்ஃபீல்டில் இருக்கும் மற்றொரு பொசிஷனுக்குத்தான் பெரும் போட்டி நிலவியது. பிக்ரம்ஜித் சிங், ஜெர்மன்ப்ரீத் சிங், அனிருத் தாபா என மூவரும் மாறி மாறி பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கவனித்து, நாக் அவுட் சுற்றுக்கான சரியான ஆளைத் தேர்வு செய்யத் திட்டமிட்டார் க்ரகரி. அவர்களுள் அவரின் முதல் சாய்ஸ் - பிக்ரம்ஜித். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். ஒரு மணி நேரத்துக்கு மேல், அவரின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது. முதல் 60 நிமிடம் முழு உத்வேகத்துடன் ஆடுபவரால், அதற்கு மேல் அதே வேகத்துடன் ஆட முடிவதில்லை. 

அதை ஈடு செய்ய, 20 வயது அனிருத் தாபா பயன்படுத்தப்பட்டார். 60 நிமிடங்களுக்கு மேல், 'automatic substitution' என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும், பிக்ரம்ஜித்துக்குப் பதில் தாபா களமிறக்கப்பட்டார். எந்தவொரு பயிற்சியாளரும், தொடர்ந்து ஒரே மாதிரியான substitution-யை செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால் க்ரகரி அதைச் செய்ய சற்றும் தயங்கவில்லை. லீக் போட்டிகளில் மட்டுமல்லாது, அரையிறுதி, ஃபைனல் வரை அதைப் பயன்படுத்தினார். கடைசி 30 நிமிடங்களில் பிக்ரம் கொடுத்த அதே வேகத்தை தாபா கொடுக்க, எந்த சிக்கலும் இல்லாமல், நடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தியது சென்னையின் எஃப்.சி!

மிகச்சிறந்த திட்டமிடல் மூலம் மட்டும் பயிற்சியாளர்களால் போட்டிகளை வென்றுவிட முடியாது. களத்துக்கு வெளியே பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையிலான உறவும் மிக முக்கியம். உதாரணமாக செல்சீ அணியைப் பற்றிச் சொல்லலாம். கடந்த முறை பிரீமியர் லீக் சாம்பியன் அவர்கள்தான். அந்த அணியின் டியாகோ கோஸ்டா 20 கோல்கள் அடித்து அசத்தினார். ஆனால், பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்டே, கோஸ்டா இருவருக்குமான உறவு சரியில்லை. கோஸ்டா பயிற்சி செய்ய மறுத்தார். கான்டே அவரை அணியில் எடுக்க மறுத்தார். இறுதியில் இரு தரப்பும் பாதிக்கப்பட்டது. நடப்பு சாம்பியன் செல்சீ இப்போது ஐந்தாவது இடத்தில் தடுமாறுகிறது. 

இந்த விஷயத்தில் ஜான் க்ரகரி - ஜெம்! தன் வீரர்களை மிகவும் அற்புதமாகக் கையாண்டார். தோல்விகளின்போது ஒருமுறை கூட எந்த வீரரையும் குறை சொல்லவில்லை. கேப்டன் செரேனோ, தனபால் கணேஷ் போன்றவர்கள் தொடர்ச்சியாக மஞ்சள அட்டை பெற்று சஸ்பெண்ட் ஆகிக்கொண்டிருந்தபோதும், 'அணியை அது பாதிக்கும்' என்று கருதாமல், அதைப் பற்றிப் பேசினால் அவர்களின் இயற்கையான ஆட்டம் பாதிக்கும் என்று கருதி, அதைக் கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் கையாண்டார். 18 வயது போடோ (Bodo) முதல் போட்டியில் சொதப்பியதும், அவரை முழுமையாகப் புறக்கணிக்காமல், ரிசர்வ் அணியோடு பயிற்சி செய்தபோதும் சில போட்டிகளில் வாய்ப்பளித்தார். அரையிறுதிக்குத் தகுதி பெற்றதும், லீக் டேபிளில் பெறப்போகும் இடத்தைப் பற்றி யோசிக்காமல், அதிகமாக விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார். வாய்ப்பளித்தார்.

அணியின் நட்சத்திர வீரரான ஜீஜே, தொடர்ந்து 5 போட்டிகளில் கோலடிக்கத் தவறியிருந்தார். அந்த இடத்தில் வேறொரு பயிற்சியாளர் இருந்திருந்தால், ``ஜீஜே அடுத்த போட்டியில் நன்றாக விளையாடவேண்டும்" என்று துளியேனும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பர். அல்லது அவருக்குப் பதில் வேறொரு வீரரை பிளேயிங் லெவனில் எடுத்திருப்பர். ஆனால், க்ரகரி கோல் அடிப்பதை மட்டும் ஒரு வீரரின் உழைப்பாகக் கருதவில்லை. 90 நிமிடம் ஜீஜே எப்படிப் போராடுகிறார் என்பதைத்தான் அவர் முக்கியமாகக் கருதினார். அதற்கு மதிப்பளித்தார். கடைசிவரை நம்பிக்கை கொண்டார். மிகமுக்கியமான அரையிறுதியில் 2 கோல்கள் அடித்து அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார் ஜீஜே. இதுதான் க்ரகரி பெற்ற வெற்றி.

மிகப்பெரிய அனுபவசாலிதான். ஆனாலும், இந்தியா போன்ற கால்பந்து பிரசித்தியில்லாத தேசத்தில் பணியாற்ற வந்து, இந்த வீரர்களோடு ஒருங்கிணைந்து, தன் ஈகோவையெல்லாம் புறந்தள்ளி வேலை செய்த ஜான் க்ரகரி உண்மையில் இந்த வெற்றியில் மிகப்பெரிய பங்குடையவர். அதேசமயம், எந்த விதத்திலும் இந்த வீரர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. எந்தவித பாகுபாடும் இல்லாமல் பழகினார்கள். களத்துக்கு வெளியே அவர்கள் இருக்குமிடம், கல்லூரி மாணவர்கள் விடுதியில் இருப்பதுபோலத்தான் இருக்கும்.  அவ்வளவு ஜாலியாக இருப்பார்கள். களத்தினுள் யாரேனும் தவறு செய்தாலும், அதைப் பெரிதுபடுத்தாமல் மிகவும் கூலாகவே அனைவரும் கையாண்டனர். ஜெர்ரி, தாபா போன்ற இளம் வீரர்களுக்கு இனிகோ, ரெனே போன்ற முன்னணி வீரர்கள், கால்பந்து நுணுக்கங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல் தோழமையுடன் பழகினர். ஜாம்ஷெட்பூர் அணியிலெல்லாம் வீரர்கள் பயிற்சியாளர் இடையே ஈகோ மோதல் ஏற்பட்டு பெரிய பிரச்னையான நிலையில், சென்னையின் எஃப்.சி அதற்கு நேர்மாராக விளங்கியது. அதுதான் அவர்களை சாம்பியனும் ஆக்கியது!

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் - ரசிகர்களின் ஆதரவு. இந்தியாவில் கிரிக்கெட்டின் நிழலில் மறைந்துகிடக்கும் இந்த விளையாட்டின்மீது தங்களின் கால்பந்துக் காதலால் வெளிச்சம் பாய்ச்சினார்கள் சென்னை ரசிகர்கள். நேரு மைதானத்தில் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 15,000 ரசிகர்கள் கூடினார்கள். அதிலும், BSB, சூப்பர் மச்சான்ஸ் என இரு fan clubகள் சென்னை கால்பந்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றன. Anthem பாடுவது, பேனர்கள் வைப்பது, எதிரணியினரை வம்பிழுப்பது என ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களாகவே மாறிப்போயிருந்தனர். பொதுவாக ஐ.எஸ்.எல் போட்டிகளில், உள்ளூர் அணி ரசிகர்கள் மட்டும்தான் மைதானத்தில் இருப்பார்கள். 'Away fans' அதிகபட்சம் 40 முதல் 50 பேர் வரை மட்டுமே இருப்பார்கள். ஆனால், சென்னை ரசிகர்கள் அதிலும் விதிவிலக்காக அமைந்தனர்.

பெங்களூரு, கொச்சி நகரங்களில் நடந்த போட்டிகளுக்குப் படையெடுத்தனர். அந்தப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் கலந்துகொண்டு away gallery போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தினர். அதிலும், இறுதிப் போட்டியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள சென்னை வீரர்கள் உச்சகட்ட உற்சாகமடைந்தனர். இறுதிப் போட்டிக்கு மறுநாள், சென்னை நேரு பூங்காவில் நடந்த நன்றி கூறும் விழாவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கூறியது இதுதான் - "நாங்கள் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்குறோம். இப்படியான ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. Love you all". வெற்றிக்கு இவர்களும்கூடக் காரணம்தான். ஏனெனில், இவர்கள் சென்னைக்காரர்கள்... இது சென்னை..!

அடுத்த கட்டுரைக்கு