Published:Updated:

மெஸ்ஸி அடித்த 2 கோல்களும் யுனிக்... செல்சியை வெளியேற்றிய பார்சிலோனா! #UCL #Messi100

மெஸ்ஸி அடித்த 2 கோல்களும் யுனிக்... செல்சியை வெளியேற்றிய பார்சிலோனா! #UCL #Messi100
மெஸ்ஸி அடித்த 2 கோல்களும் யுனிக்... செல்சியை வெளியேற்றிய பார்சிலோனா! #UCL #Messi100

"மெஸ்ஸி, 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் அபூர்வ வீரர்" - இது, பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியைப் புகழ, செல்சி கிளப் மேனேஜர் ஆன்டோனியோ கான்ட்டே தேர்ந்தெடுத்த வார்த்தைகள். பிரிமியர் லீக் சாம்பியன் அணியின் பயிற்சியாளர் ஒருவர், தங்களை சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து வெளியேற்றிய ஒரு அணியின் வீரரை மனம்திறந்து பாராட்டுகிறார் எனில், அந்த வீரர் களத்தில் ஏதோ மேஜிக் செய்திருக்க வேண்டும்தானே? மெஸ்ஸி அப்படியென்ன வித்தை காட்டினார்? #UCL 

சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கிளப் பார்சிலோனா, இங்கிலாந்தைச் சேர்ந்த கிளப் செல்சியைச் சந்தித்தது. செல்சியின் சொந்த மண்ணில் நடந்த முதல் சுற்றுப் போட்டி 1-1 என டிரா ஆனதால், பார்சிலோனாவின் சொந்த மைதானமான கேம்ப் நு-வில் நேற்றிரவு நடந்த இரண்டாவது லெக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முக்கியமான போட்டியில் அணியை வெற்றிபெறச் செய்வதுதானே கீ பிளேயரின் பிரைமரி அஜண்டா. மெஸ்ஸி, பார்சிலோனாவின் ஜாம்பவான். அவர் ஒருபோதும் பார்கா ரசிகர்களை ஏமாற்றுவதில்லை.

போட்டி தொடங்கிய 128-வது நொடியிலேயே மெஸ்ஸி தன் கோல் கணக்கைத் தொடங்கிவிட்டார். ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே நிலை குலைந்தது செல்சி. எடுத்த எடுப்பிலேயே இப்படியொரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. `இந்தக் கோணத்தில் இருந்து அவர் (மெஸ்ஸி) கோல் அடிப்பார் என சிந்திக்கவே இல்லை’ என்றார் செல்சி கோல் கீப்பர் கோர்டஸ்.  

கோல் போஸ்ட்டில் இருந்து 30 யார்டு தூரத்தில் இருந்த மெஸ்ஸியின் காலுக்குப் பந்து கிடைத்தது. உடனடியாக அவரை மடக்கினார் செல்சியின் ஹசார்ட். அவரை ஏமாற்றி விருட்டென பாக்ஸுக்குள் நுழைய மெஸ்ஸிக்கும் ரொம்ப நேரம் தேவைப்படவில்லை. பாக்ஸுக்குள் இருந்த சக வீரர் டெம்பலேவிடம் பாஸ் கொடுத்தார் மெஸ்ஸி. அது அலோன்சா காலில் பட்டு, சுவாரஸிடம் சிக்க, அதை மீண்டும் மெஸ்ஸி பக்கம் தட்டிவிட்டார் சுவாரஸ். மெஸ்ஸி ரொம்பவும் சிரமப்படாமல் கோல் கீப்பர் கோர்டஸின் இரு கால்களுக்கும் இடையில் தட்டி விட்டு கோல் அடித்தார்.  ஆட்டத்தின் முதல் கோல். இதுமட்டுமல்ல, மெஸ்ஸி தன் கால்பந்து வரலாற்றில் வேகமாக அடித்த முதல் கோல் (இரண்டு நிமிடங்கள் எட்டு நொடி). பார்சிலோனா 1-0 என முன்னிலை பெற்றது. கேம்ப் நு மைதானம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

அடுத்த 17-வது நிமிடத்தில் அதாவது 20 நிமிடத்தில், மெஸ்ஸி செட் செய்து கொடுத்ததை டெம்பலே அசத்தலாக கோல் அடித்தார். மைதானத்தின் பாதியில் இருந்து  இரண்டு டிஃபண்டர்களை ஏமாற்றி பாக்ஸுக்குள் முன்னேறிய மெஸ்ஸி, தன்னை இரண்டு டிஃபண்டர்கள் சூழ்ந்து விட்டதை உணர்ந்து, தனக்கு வலதுபுறம் மார்க் செய்யப்படாத இடத்தில் இருந்த டெம்பலேவுக்கு பாஸ் கொடுத்தார். வந்த பந்தை நிறுத்த ஒரு டச், அடுத்து கோல் நோக்கி ஒரு ஷாட். ஆக, இரண்டே டச்சில் நேர்த்தியாக கோல் அடித்தார் டெம்பலே. முதல் பாதி முடிவில் பார்சிலோனா 2-0 என முன்னிலை.

இரண்டாவது பாதியில் மீண்டும் மெஸ்ஸி மேஜிக். 63-வது நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்த முறை சுவாரஸ் கொடுத்த பாஸை வாங்கி கோல் கம்பத்தின் இடதுபக்கம் நகர்ந்த மெஸ்ஸி, தன் ஃபேவரிட் லெஃப்ட் ஃபுட் மூலம் கோல் அடித்தார். இதுவும் கோல் கீப்பரின் கால்களுக்கு இடையே சென்ற கோல். இது சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் மெஸ்ஸி அடித்த 100-வது கோல். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ (117) முதலிடத்தில் உள்ளார்.

பார்சிலோனா 3-0 என முன்னிலை பெற, செல்சி ரசிகர்கள் தலை மேல் கைவத்தனர். கேம் ஓவர். இரண்டு சுற்று முடிவில் 4-1 என பார்சிலோனா வெற்றி. தொடர்ந்து 11 சீசன்களாக காலிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனா. சொந்த மண்ணில் பார்சிலோனா உக்கிரமாக இருக்கும் என்பது மீண்டும் நிரூபனமானது. இதுவரை கேம்ப் நு மைதானத்தில் நடந்த செல்சிக்கு எதிரான 33 போட்டிகளில் இரண்டில் மட்டுமே பார்சிலோனா தோல்வியடைந்துள்ளது.

போட்டி முடிந்ததும் கான்ட்டே, மெஸ்ஸியை தனிப்பட்ட முறையில் மனம்திறந்து பாராட்டினார். ``மெஸ்ஸி எனும் அபாரமான வீரரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அவர், எந்த அணிக்கு எதிராகவும் முக்கியமான நேரத்தில் கோல் அடிக்கக் கூடியவர். மெஸ்ஸிக்கும், பார்சிலோனாவுக்கும் இடையிலான கதை சுவாரஸ்யமானது. பல அணிகள் அவரை வாங்கத் துடிக்கின்றன. அவர் பார்சிலோனாவில்தான் தன் கால்பந்து வாழ்க்கையை ஆரம்பித்தார். இங்குதான் முடிப்பார்’’ என, பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் கான்ட்டே. அப்போது நிருபர்கள், `நீங்கள் மெஸ்ஸியுடன் என்ன பேசினீர்கள்?’ எனக் கேட்டதற்கு அவர், ``சிறந்த வீரரை வாய்ப்பு கிடைக்கும்போது வாழ்த்த வேண்டும். இல்லையா? அதனால்தான் போட்டி முடிந்தபின் கிடைத்த வாய்ப்பில் மெஸ்ஸியை வாழ்த்தினேன்’’ என்றார்.

வேடிக்கை என்னவென்றால், மெஸ்ஸியின் வித்தை தவிர்த்து, பார்சிலோனாவின் இயல்பான ஆட்டம் வெளிப்படவில்லை. அதேநேரத்தில் செல்சியின் ஆட்டமும் மோசம் என்று சொல்ல முடியாது. ``நீங்கள் போட்டியை உன்னிப்பாக கவனித்திருந்தால் தெரியும், ஃபைனல் ரிசல்ட் நியாயமில்லை என்று... இரண்டு சுற்றுகளிலும் நாங்கள் மொத்தமாக நான்குமுறை கிராஸ் பார் அல்லது போஸ்ட்டில் அடித்திருக்கிறோம்’’ என்றார் கான்ட்டே. அவரது கருத்தும் ஏற்புடையதே. இருந்தாலும், எதிரணி 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் அபூர்வ வீரரைப் பெற்றிருக்கும்போது செல்சியால்தான் என்ன செய்ய முடியும்!