Published:Updated:

பார்சிலோனாவுக்குச் சவால்விடத் தயாராகும் மான்செஸ்டர் சிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பார்சிலோனாவுக்குச் சவால்விடத் தயாராகும் மான்செஸ்டர் சிட்டி!
பார்சிலோனாவுக்குச் சவால்விடத் தயாராகும் மான்செஸ்டர் சிட்டி!

பார்சிலோனாவுக்குச் சவால்விடத் தயாராகும் மான்செஸ்டர் சிட்டி!

பார்சிலோனா - ஃபேஷன் நகரம். பழைமைவாதத்தைப் போற்றும் ஸ்பெய்னில் மாடர்ன் கலாசாரத்தைப் புகுத்திய நகரம். இங்கு நடக்கும் ஃபேஷன் ஷோக்கள் உலக பிரசித்தி. ஆனால், இந்த உலகைப் பொறுத்தவரை பார்சிலோனா என்றால் 'ஃபுட்பால் க்ளப் பார்சிலோனா' தான். இப்போது கால்பந்துதான் இந்நகரின் அடையாளம். பார்சிலோனாவைப் போலத்தான் இங்கிலாந்தின் மான்செஸ்டர். உலகின் தலைசிறந்த டெக்ஸ்டைல் நகரம். இந்த நகருக்கு அடையாளமாக இருப்பதும் கால்பந்துதான். காரணம், மான்செஸ்டர் யுனைடட். இங்கிலாந்தின் தலைசிறந்த கிளப். ஆனால், இனி இந்நிலை மாறும். மான்செஸ்டர் நகருக்குப் புதியதோர் அடையாளத்தைத் தேடிக்கொடுக்கக் கிளம்பிவிட்டது மான்செஸ்டர் சிட்டி... இங்கிலாந்து கால்பந்தின் இன்றைய சென்சேஷன்.

ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் `டெர்பி' என அழைக்கப்படும். உதாரணமாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மும்பை இந்தியன்ஸ், புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் மோதிய போட்டியை, `மஹாராஷ்டிரா டெர்பி’ என்பார்கள். அப்படிக் கால்பந்தில் டெர்பி போட்டிகள் பலவும் பிரபலம். அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் மான்செஸ்டர் யுனைடட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதும் மான்செஸ்டர் டெர்பி. 1980, 90-களில் இந்தப் போட்டிகளுக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது. ஐரோப்பிய அளவில் ஆதிக்கம் செலுத்திய யுனைடட், மான்செஸ்டர் சிட்டி அணியை அசால்டாக அடித்து நொறுக்கும். ஆனால், இன்று அப்படியில்லை. யுனைடட் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப்போனால், அது முன்பைப் போன்று ஆதிக்கம் செலுத்தும் அணியில்லை. மறுபுறம் மான்செஸ்டர் சிட்டி உலகக் கால்பந்தின் மாபெரும் சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 

2017-18 சீசன் பிரீமியர் லீக் தொடரில் 27 போட்டிகள் முடிவடைந்துவிட்டன. பொதுவாக இந்தத் தருணம்தான் ஒவ்வொரு டாப் அணியும் டைட்டிலுக்காகக் கடுமையாகப் போட்டி போடும். இம்முறையும் மான்செஸ்டர் யுனைடட் (56 புள்ளிகள்), லிவர்பூல் (54 புள்ளிகள்), செல்சீ (53 புள்ளிகள்), டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் (52 புள்ளிகள்) என 4 அணிகள் 3 இடங்களுக்குப் போட்டிபோடுகின்றன. ஆனால், அது முதல் 3 இடங்களுக்கான போட்டி அல்ல. சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு பெற்றுத்தரும் 2 முதல் 4-ம் இடங்களுக்கான போட்டி. ஏனெனில், இந்த அணிகளுக்கு எட்டாத தூரத்தில், யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. 

பிரீமியர் லீகில் 27 போட்டிகளில் 23 வெற்றிகள்... FA கப் போட்டியில் ஐந்தாம் சுற்றுக்கு முன்னேற்றம்... லீக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி, சாம்பியன்ஸ் லீக் குரூப் பிரிவில் முதலிடம் எனப் பங்கேற்றுள்ள 4 தொடர்களிலும் பட்டையைக் கிளப்பிவருகிறது. அதுவும் பிரீமியர் லீகில் தொடர்ந்து 18 போட்டிகளில் வெற்றிபெற்று அல்லு கிளப்பியது 'சிட்டிசன்ஸ்' என்று அழைக்கப்படும் மான்செஸ்டர் சிட்டி அணி. இந்த 27 போட்டிகளில் 79 கோல்கள் அடித்து அசத்தியுள்ளனர். இந்த சீசன் முழுதுமே இதுவரை 2 தோல்விகள்தான். இந்த வெற்றிகள், கோல்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது அந்த அணியின் 'கன்சிஸ்டென்ட்' ஆட்டம்தான். 

கால்பந்து பார்க்காதவர்கள்கூட 2010, 2011 ஆண்டுகளில் பார்சிலோனா அணி ஆடியதைப் பார்த்தால் மெய்மறந்து போவார்கள். கோல்களும் வெற்றிகளும் குவியும். ஆனால், அவர்கள் ஆடும் அந்த ஆட்டம் பார்ப்பவர்களை மெய்மறக்கச்செய்யும். வெறும் பாஸ்கள்தான். ஆனால், எதிரணியை ரணகளப்படுத்துவார்கள். மெஸ்ஸி, இனியஸ்டா, ஜாவி, டேனி ஆல்வேஸ் எனக் கால்களில் மாயவித்தை காட்டும் வித்தகர்கள் நிறைந்திருந்த அந்த அணியை, அவர்களின் ஆட்ட நுணுக்கத்தைச் சிறப்பாகக் கட்டமைந்திருந்தார் அன்றைய பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியாலோ - இன்றைய மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர். சிட்டி அணியின் ஆட்டம் இந்த அளவுக்கு மெருகேறியிருப்பதற்குக் காரணம் நிச்சயம் அவர்தான். 

டேவிட் சில்வா, செர்ஜியோ அகுவேரோ, கெவின் டிப்ருய்னே என ஏற்கெனவே உலகத்தரத்தில் இருந்த வீரர்களை, மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் இருக்கும் ஏலியன் லெவலுக்குப் பக்கத்தில் உயர்த்திவிட்டார். அதேபோல் ரஹீம் ஸ்டெர்லிங், லெராய் சனே, ஜான் ஸ்டோன்ஸ், கேப்ரியல் ஜீசஸ் என இளம் தலைமுறையையும் பக்காவாக ரெடியாக்கிவிட்டார். ஒவ்வொரு வாரமும், ``இதோ இந்த வாரம் சிட்டி சறுக்கிடும்... இன்னைக்கு எப்படியும் தோத்துடுவாங்க’’ என மற்ற அணிகளின் ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருக்க, நம்ப முடியாத கன்சிஸ்டென்ஸியை வெளிப்படுத்தினார்கள். டிப்ருய்னே, டேவிட் சில்வா இருவரும் மான்செஸ்டர் சிட்டியின் இனியஸ்டா, ஜாவியாக மாற... கார்டியாலோ மிஸ் செய்தது மெஸ்ஸியை மட்டுமே!

மெஸ்ஸியின் சக நாட்டவரான அகுவேரோ, பிரீமியர் லீகின் தலைசிறந்த ஸ்டிரைக்கர். ஆனால், மெஸ்ஸி...! அதனால், யாரும் அறிந்திடாத கேப்ரியல் ஜீசஸை பிரேசிலிலிருந்து வரவழைத்து அகுவேரோவுக்கு டஃப் கொடுத்தார் கார்டியாலோ. அவர் செய்த இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக், கால்பந்து ஜாம்பவான்களுக்கு வியப்பளித்தது. முதல் சீசனில் பெரிய அளவு சாதிக்க முடியாததால், அணியை ஒட்டுமொத்தமாக மாற்றத் தீர்மானித்தார் கார்டியாலோ. வீரர்களை மாற்றினார். டிஃபன்ஸிலிருந்து ஆட்டத்தை நகற்றுவதற்கு ஏதுவான கோல்கீப்பர், டிஃபண்டர்கள் என தன் ஸ்டைலுக்கு ஏற்ற வீரர்களை வாங்கினார். பார்சிலோனாவில் தான் புகுத்திய 'Tiki Taka'வை முழுமையாக இங்கு அப்கிரேட் செய்தார். சிட்டி வீரர்கள் தங்களை பார்சிலோனா வீரர்களாக நினைத்துக்கொண்டனர்... பார்சிலோனா போல ஆடினர்... பார்சிலோனாவாகவே மாறிவிட்டனர்!

மொத்த இங்கிலாந்தும் ஆடிப்போய்க் கிடக்கிறது. 'இந்த அணியால் சாம்பியன்ஸ் லீகை வெல்ல முடியாது' என்கிறார்கள். இந்த ஆண்டு முடியாவிட்டாலும், விரைவில் அதை கார்டியாலோ சாத்தியப்படுத்திவிடுவார். ஆனானப்பட்ட ஜோசே மொரினியோவே ``நாங்கள் இரண்டாம் இடத்துக்குத்தான் ஆடுகிறோம்’’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிட கார்டியாலோவுக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் பெரிய வெற்றி தேவையில்லை. காரணம், மான்செஸ்டர் யுனைட்டெட், சிட்டி இரு அணிகளின் நிலைமையும் மாறியிருக்கின்றன. ஆனா, இந்த மாற்றங்கள் கார்டியாலோவால் மட்டும் நிகழ்ந்தது அல்ல. இந்த மாற்றத்துக்கான விதை 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது!

மான்செஸ்டர் யுனைடட் அன்று ஆதிக்கம் செலுத்தியதற்கும், மான்செஸ்டர் சிட்டி இன்று ஆதிக்கம் செலுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அன்று மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடிய பால் ஸ்கோல்ஸ், வெஸ் ப்ரௌன், கேரி நெவில், ஃபில் நெவில் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் அந்த அணியின் அகாடமியிலிருந்து வந்தவர்கள். அவர்களை வைத்துத்தான் சர் அலெக்ஸ் ஃபெர்குஸன் அசத்தலான அணியை உருவாக்கினார். ஆனால், சிட்டியில் அப்படி அகாடமி ப்ராடக்ட்கள் இல்லை. ரியான் கிக்ஸ் போன்றவர்களைக்கூட அன்றைய காலகட்டத்தில் யுனைட்டெட் அணிக்குத் தாரை வார்த்துக்கொடுத்தனர். அப்படிப்பட்ட அணி எப்படி இப்போது சாதிக்கிறது. காரணம், அந்த அணியின் உரிமையாளர்கள்.

2008-ம் ஆண்டு மான்செஸ்டர் சிட்டி அணியை 210 மில்லியன் பவுண்ட்களுக்கு வாங்கியது அபுதாபி யுனைட்டெட் குரூப். அன்று முதல் வீரர்களை வாங்குவதில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியது. இங்கிலாந்தின் மற்ற அணிகளைவிட அதிக செலவு செய்யத் துணிந்தது. கடந்த ஆண்டு தடுப்பாட்டத்தில் அந்த அணி தடுமாறியதால், இதுவரை தடுப்பாட்டத்துக்கு மட்டும் 300 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாகச் செலவுசெய்து தரமான டிஃபண்டர்களை வாங்கியுள்ளது. கைல் வால்கர், பெர்னார்ட் மெண்டி, எடர்ஸன், ஜான் ஸ்டோன்ஸ், ஆய்மெரிக் லபோர்டே, டனிலோ எனக் கால்பந்து உலகின் காஸ்ட்லி டிஃபன்ஸ், இந்த அணியுடையதுதான். இவ்வளவு ஏன், பல உலக நாடுகள் தங்கள் டிஃபன்ஸுக்கு (தேசிய பாதுகாப்பு) செய்யும் செலவைவிட இந்த அணி அதிகமாகச் செலவு செய்துள்ளது. 

``பணத்தை வைத்துக் கோப்பை வாங்குகிறார்கள்’’ என்று பலரும் குற்றம் சொல்வதுண்டு. ஆனால், இவர்களின் தொலைநோக்குத் திட்டங்கள், அவர்களின் அணுகுமுறையை மாற்றும். அவர்களின் எதிர்காலத்தை மாற்றும். 2013-ல் 'சிட்டி ஃபுட்பால் குரூப்' என்பதை உருவாக்கினார்கள். அதன்பின் ஒவ்வொரு நாட்டிலும், ஓர் அணியில் பங்குகள் வாங்கி, அவற்றை மான்செஸ்டர் சிட்டி அணியின் 'சிஸ்டர் டீம்'களாக மாற்றினர். இதன்மூலம், அந்த அணிகளில் நன்றாக விளையாடும் இளம் வீரர்கள், மான்செஸ்டர் சிட்டி அணிக்குப் பின்னர் ஒப்பந்தம் செய்யப்படுவர். அதேபோல், சிட்டி அணியில் இருக்கும் இளம் வீரர்களை, அந்த அணிகளுக்கு லோனில் அனுப்பி, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவலாம். இதுவரை மட்டும் ஆஸ்திரேலியா (மெல்போர்ன் சிட்டி), ஜப்பான் (யோகஹாமா எஃப்.மரினோஸ்), அமெரிக்கா (நியூ யார்க் சிட்டி), உருகுவே (கிளப் அத்லெடிக் டார்க்), ஸ்பெய்ன் (ஜிரோனா) என 5 அணிகளில் பங்குகள் வைத்துள்ளது சிட்டி ஃபுட்பால் குரூப்.

2011-12, 2013-14 என இரண்டு சீசன்களில் பிரீமியர் லீக் வென்றிருந்தாலும், சாம்பியன்ஸ் லீக் வெல்ல வெண்டும் என்ற அவர்களின் லட்சியத்துக்காக அனைத்து வகையிலும் செயல்பட்டனர். முதலாவதாக, தலைசிறந்த மேனேஜர் வேண்டும். டிசம்பர் 20, 2015 - கார்டியாலோ அணியிலிருந்து விடைபெறுவார் என்று அறிவிக்கிறது அன்று அவர் பயிற்சியளித்த பேயர்ன் மூனிச் அணி. அடுத்த 40 நாள்களில், நடப்பு சீசன் முடிவதற்கு 4 மாதங்களுக்கு முன்பே அவரை ஒப்பந்தம் செய்தது மான்செஸ்டர் சிட்டி நிர்வாகம். அடுத்து அவர் கைகாட்டிய வீரர்களை முடிந்தவரை வாங்கியது. கடந்த சீசனில் நொலிடோ, க்ளாடியோ பிராவோ, ஸ்டோன்ஸ், குண்டோகன், கேப்ரியல் ஜீசஸ், சனே உள்ளிட்ட 8 வீரர்களை வாங்கிக் குவித்தவர்கள், பெர்னார்டோ சில்வா, கைல் வால்கர் என இந்த சீசனும் 6 வீரர்களை வாங்கினர். இந்த அளவுக்கு அணியின் முன்னேற்றத்துக்காக முதலீடு செய்துள்ளனர். 

நிர்வாகத்தின் காசும், கார்டியாலோவின் கால்பந்து அறிவும் சேர்ந்துதான் இன்று மான்செஸ்டர் சிட்டி அணியின் அடித்தளத்தை அமைத்துள்ளது. மற்ற அணிகளைப் போல் உடனுக்குடன் பயிற்சியாளரை மாற்றுவது போன்ற செயல்களைச் செய்யாமல் இருந்தால், அன்றைய பார்சிலோனா அணி போல் மகத்தான அணியாக மான்செஸ்டர் சிட்டி உருவெடுக்கும். அன்று, மான்செஸ்டர் நகருக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய கால்பந்துக்கே அவர்கள் அடையாளமாகத் திகழ்வார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு