Published:Updated:

கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico

கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico

கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico

Published:Updated:

கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico

கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico

கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico

‘எல் கிளாசிகோ’ – கால்பந்து உலகின் சென்ஷேசன் வார்த்தை. நார்கோலெப்சி பிரச்னை இருப்பவரையும் நடுநிசி வரை கண் உறங்காமல் வைத்திருக்கும் மந்திர வார்த்தை. சீரான இதயத்தை சி.பி.ஆர் இன்ஜின் போல் அலறவைக்கக்கூடிய வார்த்தை. அப்படி என்ன இந்த கிளாசிகோவில் ஸ்பெஷல்? ரியல் மாட்ரிட், பார்சிலோனா என்னும் மாபெரும் இரு அணிகள் தங்கள் கௌரவத்திற்காகப் போராடும் 90 நிமிட யுத்தமே இந்த எல்-கிளாசிகோ. சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை விட கிளாசிகோ மேட்ச்சுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று இந்த சீசனின் முதல் கிளாசிகோ மோதல். மொத்தக் கால்பந்து உலகமும் காத்துக்கிடக்கிறது. #ElClasico 

இருவருக்கிடையே பகை வளர பெர்சனல் காரணங்கள் இருக்கவேண்டியது இல்லை. இருவரும் ஏதோ ஒரு துறையில் முதலிரு இடங்களில் இருந்தாலேபோதும். அவர்களை இந்தச் சமூகமே எதிரிகளாக்கிவிடும் அல்லவா? மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரசிகர்கள் எதிரிகளாக்கி இருப்பதைப் போல. சரி, அந்த எதிரிகள் இருவரும் ஒரு போட்டியில் மோதினால்? அதுவும் உலகின் மிகப்பெரிய இரு கிளப்களிலிருந்து இருவரும் தத்தம் அணிகளுக்காக மோதினால்? பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காதுதானே? பகைமைக்கு மேல் பகைமை பரந்து கிடக்கும் இப்போட்டி ஹாலிவுட் சினிமாவையும் மிஞ்சும்.

கிளாசிகாவில் கடந்த சில ஆண்டுகளாக பார்சிலோனா ஆதிக்கம் செலுத்துகிறது. ரியல் மாட்ரிட்டும் சளைக்காமல் போராடுகிறது. ஓரிரு வீரர்களை மட்டுமே சார்ந்திருக்காமல் இரு அணியின் அனைத்து நட்சத்திரங்களும் ஒருசேர ஜொலிப்பதாலேயே கிளாசிகோவுக்கு இவ்வளவு மவுசு. ஒருபுறம் லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ், மற்றொருபுறம் கரீம் பென்சிமா, கேரத் பேல், கிறிஸ்டியானோ ரொனால்டோ. மாயவித்தை காட்ட இனியஸ்டா, ஃப்ரீ-கிக்கில் பயமுறுத்த டோனி க்ரூஸ், பெனால்டி பாக்ஸில் படம் காட்ட ஜெரார்டு பீக்கே, கடைசி நிமிடத்தில் ஹெட்டர் கோல் அடித்து கலங்கடிக்க செர்ஜியா ரமோஸ் என எல்-கிளாசிகோ ஒவ்வோர் ஆண்டும் வேற லெவல்.

மெஸ்சி - ரொனால்டோ மோதுவதாலேயே கிளாசிகோ இவ்வளவு பிரபலம் என ஜென்-z  தலைமுறை நினைக்கலாம். கிளாசிகோவுக்குப் பின்னால் அரசியல், போர், மரணம் என ரத்தமும் சதையுமாக மாபெரும் சரித்திரம் மறைந்திருக்கிறது. ஸ்பெயினின் வரலாறு புரிந்தவர்களுக்கே இந்தப் பகைமையின் அர்த்தம் புரியும். இந்த மோதலின் உச்சம் தெரியும்.

ஸ்பெயின் – கூட்டாட்சி அரசியலமைப்பு கொண்ட தேசமல்ல. 17 தன்னாட்சி சமூகங்கள் கொண்ட ஒருமுக அரசுதான் இன்றைய ஸ்பெயின். அந்த ஒவ்வொரு தன்னாட்சி சமூகத்திற்கென்றும் ஒரு கொடி, ஒரு ஜனாதிபதி, ஒரு அரசியல் சாசனம் என வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது ஸ்பெயினின் அரசியலமைப்பு. அந்த 17 தன்னாட்சி சமூகத்தின் அங்கம்தான் கேடலோனியா, மாட்ரிட். கேடலோனியாவின் தலைநகரம் பார்சிலோனா. இரண்டு சமூகங்களும் நேரெதிர் கொள்கைகளைக் கொண்டவை. மாட்ரிட் – பழைமைவாதத்தினை விரும்பும் வலது சாரிக் கொள்கையைக் கடைபிடிக்கும் பகுதி. கடலோனியா குடியரசுத்துவத்தை ஆதரிக்கும் இடதுசாரிக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் பகுதி. 

முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளினால் இரு பிரிவினருக்கு இடையே அரசியல் ரீதியாக எப்போதுமே புகைச்சல். அந்த அரசியல் காழ்ப்புஉணர்வைத் தீர்ப்பதற்கான களமாக இருந்தது ஸ்பானிஷ் கால்பந்துத் தொடர். ரியல் மாட்ரிட் அணி தோற்றுவிக்கப்பட்ட 1902-ல் தான் இந்தக் கால்பந்து மகா யுத்தத்தின் முதல் மோதல் அரங்கேறியது. அன்று முதலே கேடலோனியா மக்களின் கருத்துகளை மாட்ரிட் ரசிகர்கள் எதிர்க்க, பார்சிலோனா அணியை மாட்ரிட் பகுதியினர் சாட, களம் சூடுபிடித்தது.

1930-களில் ஸ்பெயினின் அரசியல் மிகமோசமான நிலையைச் சந்தித்தது. இதனால் 1936-ல் உள்நாட்டுப் போர் மூண்டது. தேசியவாதிகள் ஒரு பிரிவாகவும், குடியரசுவாதிகள் ஒருபிரிவாகவும் போரிட்டன. அன்றைய ஸ்பெயின் சர்வாதிகாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரான்கோ, மாட்ரிட் அணிக்குப் பல்வேறு வழிகளில் பக்கபலமாய் இருந்திருக்கிறார். அந்நிலையில் 1926-ல் பார்சிலோனா கால்பந்து கிளப் தலைவராக இருந்த ஜோசம் சன்யோல், பிரான்கோவின் படையால் கைதுசெய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவங்கள் மாட்ரிட் மீதான கடலோனிய மக்களின் வெறுப்பைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது. அப்போதுதான் பார்சிலோனா அணி ‘மோர் தேன் எ கிளப்’ (கிளப் என்பதையும் தாண்டி) என்னும் மோடோவை வெளியிட்டது. இதனால் புகைச்சல் இன்னும் அதிகரித்தது.

அன்றிலிருந்து ஒவ்வொரு எல் - கிளாசிகோ மோதலும் மற்றுமோர் உள்நாட்டுப் போராகவே பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சம்பவங்கள் மேலும் திரி கிள்ளியது. 1943 கோபா டெல் ரே அரையிறுதி. பார்சிலோனாவில் நடந்த முதல் சுற்றில் 3-0 என மாட்ரிட் தோல்வி. 3 கோல்களும் தவறாக வழங்கப்பட்டவை என மாட்ரிட் அணி வம்பிழுத்தது. பார்கா ரசிகர்கள் தங்கள் பங்குக்குப் போட்டியின்போது விசில் ஊதி மாட்ரிட் வீரர்களை வெறுப்பேற்றினர். மாட்ரிட்டில் நடந்த இரண்டாம் சுற்றில் பார்காவைப் பழிதீர்த்தது ரியல் மாட்ரிட். 

பார்சிலோனா ரசிகர்கள் மைதானத்துக்கு வரத் தடை, மாட்ரிட் ரசிகர்கள் பார்கா வீரர்களைக் கேலி செய்ய டிக்கட்டோடு விசில் விநியோகம், மைதானத்திற்குள் பறந்த காசுகள், பாட்டில்கள், போலீஸால் மிரட்டப்பட்ட பார்சிலோனா பயிற்சியாளர் என அது வேறு லெவல் கேம். பெரிதும் பாதிக்கப்பட்ட பார்சிலோனா அணி 11-1 என அவமானப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்வு அந்த அணியின் வரலாற்றிலும், அதன் ரசிகர்களின் மனதிலும் அழியா வடுவாய் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த அரசியல் காழ்ப்புஉணர்வு ஒருபுறம் இருந்தாலும், சில வீரர்களாலும் கூட இரு அணிகளுக்கும் இடையிலான உறவு பலமுறை கசந்துள்ளது. கால்பந்து களத்தையும் தாண்டி மிகப்பெரிய களமான சமூக வலைதளத்தில் இரு அணி ரசிகர்களும் மூன்றாம் உலகப் போரையே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். போதாதென அவ்வப்போது ரமோசும் பிக்கேவும் போடும் ட்வீட்டுகள் ‘ஆட்டம் பாம்’ போல தான். அந்த ஃபிசன் ரியாக்சன் நிற்க பல நாள்களாகும். 

ஸ்பெயினின் முன்னாள் பயிற்சியாளர் டெல் போஸ்கிற்குக் கூட அவர்கள் இருவரையும் சமரசம் செய்யத் தெரியவில்லை. முடியவில்லை. காரணம், அவர்களுக்குள்ளும் விளையாட்டு தேசம் என்பதையும் தாண்டி அதே அரசியல் காழ்ப்புஉணர்வுதான் நிறைந்துள்ளது. வீரர்களின் டிரான்ஸ்ஃபர்கள் கூட இரு அணிகளுக்குமிடையே மாபெரும் மோதல்களை உண்டாக்கியதுதான் எல்-கிளாசிகோவின் சிறப்பு.

1953ல் ‘பிளாண்ட் ஏரோ’ எனப் புகழப்பட்ட அர்ஜென்டின ஜாம்பவான் டி ஸ்டெஃபானோவை ஒப்பந்தம் செய்ய இரு அணிகளும் மல்லுக்கட்டின. மீண்டும் பிரான்கோவின் தலையீட்டின் காரணமாக சூழ்நிலை ரியல் மாட்ரிட்டுக்குச் சாதகமாக அமைந்தது. டி ஸ்டெஃபானோ மாட்ரிட் அணிக்காக 396 போட்டிகளில் 307 கோல்களை அடித்து நொறுக்கினார். அவர் அங்கு விளாயாடிய 11 ஆண்டு காலத்தில் அந்த அணி 8 லா லிகா, 1 கோபா டெல் ரே, 1 இன்டர்-கான்டினென்டல் கோப்பைகளை வென்றது. அதையெல்லாம் தாண்டி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் வென்று மாபெரும் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தியது. இதை கேடலோனிய மக்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

2000ம் ஆண்டு பார்சிலோனா வீரர் லூயிஸ் ஃபிகோ சர்ச்சையான முறையில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற, பொங்கி எழுந்தார்கள் பார்கா ரசிகர்கள். ஃபிகோ மாட்ரிட் வீரராக பார்சிலோனாவில் களம் கண்டபோது மைதானம் முழுக்க ‘துரோகி’ என்றெழுதப்பட்ட போஸ்டர்கள் நிறைந்திருந்தன. ஃபிகோ கார்னர் கிக் எடுக்கும்போதெல்லாம் தங்கள் கைகளில் கிடைத்ததையெல்லாம் வீசினர். பாட்டில்கள், கத்தி, காசு….ஏன்... பன்றித் தலை கூட ஃபிகோவை நோக்கி வீசப்பட்டது.

இதுபோன்ற மிகப்பெரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தாலும், காலத்தில் காணப்படும் ஆக்ரோஷம், சாதாரண கால்பந்துப் போட்டியைக் காட்டிலும் பல மடங்கு இருக்கும். மஞ்சளும் சிவப்புமாய் அட்டைகள் அணி வகுக்கும். பெளல்கள், வார்த்தை மோதல்கள், வீரர் - பயிற்சியாளர் மோதல் எனப் பிரச்னை உண்டாவதற்கான அனைத்து பாசிபிலிட்டியும் இருக்கும். 

என்னதான் மோதல்கள் நிறைந்த களமாய் இருந்தாலும், ‘கிளாஸ்’ வீரர்களுக்கு இரு அணி ரசிகர்களும் மரியாதை தரத் தவறியதில்லை. முன்னாள் மாட்ரிட் வீரர் கன்னிங்ஹம் அணியின் வெற்றிக்கு வித்திட்டுவிட்டு, பெஞ்சுக்குத் திரும்புகையில் பார்சிலோனா ரசிகர்கள் அவருக்கு ‘Standing ovation’ கொடுத்தனர். அதேபோல் பார்சிலோனா வீரர்கள் மரடோனா, ரொனால்டின்ஹோ, இனியஸ்டா ஆகியோரும் சிறப்பான கோல்களுக்காக மாட்ரிட் ரசிகர்களிடம் அப்ளாஸ் பெற்றுள்ளனர். இதுவும் கிளாசிகோவின் ஒரு முகம்!

கிளாசிகோ வெறும் மெஸ்ஸி-ரொனால்டோ மோதல் மட்டுமே கிடையாது. ஆனாலும், அவர்களால் சமீப காலமாக கிளாசிகோ விறுவிறுப்பு அடைந்திருக்கிறது என்பதும் நிதர்சனம். கிளாசிகோ வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் மெஸ்ஸி (24) முதல் இடத்திலும், சிஆர்7 (17) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இன்று ப்ரைம் ஃபார்மில் இருக்கும் இவர்கள் ஓய்வு பெற்றாலும் எல்-கிளாசிகோவின் மவுசு குறையாது. ஏனெனில், அது மீம்ஸ்களுக்குள் அடங்கும் விஷயமோ, மைதானத்தில் முடியும் போட்டியோ கிடையாது. அது இருதரப்பட்ட மக்களின் உணர்வு. அவர்களின் பெருமை. அவர்களின் கௌரவம். அது அரசியல் என்னும் சேற்றில் முளைத்த செடி. வளரும், படரும், ரசிகனை குஷிப்படுத்தும், கொண்டாட வைக்கும். கால்பந்து உள்ளவரை கிளாசிகோ இருக்கும். கிளாசிகோ இருக்கும் வரை கால்பந்து ருசிக்கும்.