Published:Updated:

கால்பந்து: ரொனால்டோ ஓய்வு அறிவிப்பு

பிப்.15,2011

கால்பந்து: ரொனால்டோ ஓய்வு அறிவிப்பு

உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள பிரபல பிரேசில் வீரர் ரொனால்டோ நசாரியோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ##~~##

இதுவரை உலக கோப்பை போட்டிகளில் 15 கோல்களை அடித்த அவர், மூன்று முறை ஃபிஃபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 18 ஆண்டு கால கால்பந்து விளையாட்டில் தனக்கென பல உச்சங்களையும் சில வீழ்ச்சிகளையும் கண்டவர் ரொனால்டோ.

வேகத்தைக் கூட்ட வேண்டிய நேரத்தில் கூட்டியும், குறைக்க வேண்டிய நேரத்தில் குறைத்தும் சரியான தருணத்தில் தவறாமல் வலைக்குள் பந்தைத் திணித்து கோலாக்குவதில் ரொனால்டோவுக்கு நிகர் அவரே என்பார்கள் விமர்சகர்கள்.

1996-97 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடிய அவர், இண்டர் மிலான் அணிக்கு மாறியபோது தான் கவனிக்கப்பட்டார்.

அவரது திறமையை கண்டுகொள்ள தொடங்கிய காலக்கட்டத்தில் முழங்கால் பிரச்னையால் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டு, மீண்டும் வெகுண்டெழுந்து  2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் வென்ற போது, அவரது புகழ் உச்சத்தை எட்டியது.

இந்தச் சூழலில், உடலைத் தகுதியுடன் வைத்துக் கொள்வதில் சிரமம், ரசிகர்கள் மற்றும் நிருபர்களுடனான வன்முறைச் சம்பங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவரை கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.