Published:Updated:

2018 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறாதது ஏன்?

2018 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறாதது ஏன்?
2018 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறாதது ஏன்?

2018 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறாதது ஏன்?

Football is all about drama. இந்த நாடகத்தில் நெகட்டிவ் கிளைமேக்ஸ்தான் ட்விஸ்ட். இதோ, 2018 உலகக் கோப்பையிலிருந்து இத்தாலி வெளியேறியதைப் போல...1930 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறவில்லை. 1958 உலகக் கோப்பையிலும் அதேநிலை. 2018 உலகக் கோப்பையிலும் அவர்கள் விளையாடப்போவதில்லை. ஆக, இத்தாலி உலகக் கோப்பையை மிஸ் செய்வது இது முதன்முறை அல்ல. ஆனால், 60 ஆண்டுகளுக்குப் பின் இது முதன்முறை. இத்தாலி கால்பந்து வரலாற்றில் இது செமத்தியான அடி. ‘THE END’ என முடிவுரை எழுதிவிட்டன அந்நாட்டுப் பத்திரிகைகள். கிட்டத்தட்ட பூகம்பம் ஏற்பட்டது போல பேரிழப்பு. இதிலிருந்து மீள நாளாகும்.


பெரிய அணிகள் உலகக் கோப்பையில் இடம்பெறாமல் போவது இயற்கை. 1966-ல் இங்கிலாந்து உலகச் சாம்பியன். ஆனால், அவர்களால் 1974, 1978, 1994-ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்கமுடியவில்லை. இங்கிலாந்துக்கு ஓகே; ஒருமுறை சாம்பியன். இத்தாலி அப்படி அல்ல, நான்கு முறை உலகச் சாம்பியன். இரண்டு முறை உலகக் கோப்பை ரன்னர் அப். இத்தாலியின் டிஃபன்ஸ் இரும்புக்கோட்டை. இருந்துட்டுப் போகட்டும். பழைய பெருமையெல்லாம் கால்பந்தில் எடுபடாதே! உலகச் சாம்பியனே என்றாலும் தகுதிச்சுற்றில் வென்றால்தானே அடுத்த உலகக் கோப்பையை நினைத்துப் பார்க்க முடியும்! இதுதான் பியூட்டிஃபுல் கேமின் பியூட்டி!
 

எங்கே சொதப்பியது...?  


ரஷ்யாவுக்குச் செல்லும் ஃபிளைட்டை இத்தாலி மிஸ் செய்துவிட்டதை விட, அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது ஸ்வீடன் என்பதுதான் சுவாரஸ்யம். ஆம், 2006-க்குப் பின்முதன்முறையாக ஸ்வீடன் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான டிரா வெளியானதுமே இத்தாலிக்குக் கிலி. காரணம், ஸ்பெயின், இத்தாலி என ஒரே குரூப்பில் பலம் வாய்ந்த அணிகள். ஸ்வீடனுக்கு எதிரான இரண்டு போட்டியிலும் இத்தாலியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 180 நிமிடங்கள், 27 இலக்கை நோக்கிய ஷாட்கள், 40 கிராஸ்கள், 76 சதவீத possession, ஆனால், ஒரு கோல்கூட அடிக்கவில்லை. பின் எப்படி அவர்களால் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும்? இத்தாலியின் இந்தப் பின்னடைவு ஆச்சர்யம்தானே தவிர அதிர்ச்சி இல்லை. 

 
ஒரு முறையான சிஸ்டம் இல்லையென ஃபெடரேஷன்மீது சிலர் குற்றம் சுமத்தலாம். பயோ டேட்டா வெயிட்டாக இல்லாதவரை மேனேஜராக நியமித்தது தவறு எனப் பழி போடலாம். இப்படி, தோல்விக்குப் பல காரணங்களை அடுக்கலாம். ஆனால், இத்தாலி கோட்டைத் தாண்ட முடியாததற்கு காரணம் வீரர்களே. 2016 யூரோ கோப்பைத் தொடரில் பங்கேற்ற இத்தாலி அணி படு வீக். பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்ட்டே மட்டும் மூளையைக் கசக்காமல் இருந்திருந்தால், அவர்கள் கதி அதோகதிதான். காலிறுதிக்குக் கூட வந்திருக்க மாட்டார்கள். 

அனுபவத்திலிருந்து பாடம் கற்காத அணி விளங்கவே விளங்காது. அணி மட்டுமல்ல மேனேஜரும்தான். உதாரணம், இத்தாலி பயிற்சியாளர் கியான் பியரோ வென்சுரா. ஸ்வீடனுக்கு எதிரான உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றின் ஃபர்ஸ்ட் லெக்கில், இத்தாலி பிளேயிங் லெவனில் இருந்த ஏழு வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். மிலன் நகரில் நேற்று நடந்த செகண்ட் லெக்கில் ஆறு சீனியர் பிளேயர்கள். இள ரத்தமே இல்லை. சீரி ஏ தொடரில் அதிக கோல்கள் அடித்த நேபோலி கிளப் வீரர் ஜார்ஜினோ எப்போதோ, இத்தாலி ஜெர்ஸி அணிந்திருக்க வேண்டியவர். நேற்றுதான் அவர் முதன்முறையாகக் களமிறங்கினார். அதுவும் டூ லேட். போதாக்குறைக்கு லோரென்ஸோ இன்சிக்னேவை பெஞ்சில் உட்கார வைத்து விட்டார் மேனேஜர். சில மேனேஜர்களுக்கு முக்கியமான கட்டத்தில்தான் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். வென்ச்சுரா அதற்கு நேர் எதிர்!


ஸ்வீடனுக்கு எதிரான போட்டி மட்டுமே இத்தாலிக்குப் பிரச்னை இல்லை. கடந்த யூரோ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2-0 என ஸ்பெயினை வென்றது இத்தாலி. இரண்டரை மாதங்கள் கழித்து டுரின் நகரில் நடந்த போட்டியில் மேட்ச் 1-1 என டிரா. இந்த செப்டம்பர் மாதம் மாட்ரிட் நகரில் நடந்த போட்டியில் 3-0 என இத்தாலியைத் துவம்சம் செய்தது ஸ்பெயின். கான்ட்டே இத்தாலி பயிற்சியாளராக இருந்தபோது 3 பேர் கொண்ட டிஃபன்ஸ் ஃபார்மட்டை செயல்படுத்தினார். இது கோல் அடிக்கப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என ஸ்பெயின் வீரர் ஜாவி தெரிவித்திருந்தார். ஆனால், வென்ச்சுரா 4-2-2 ஃபார்மெட்டை விடாப்பிடியாகக் கடைப்பிடிக்க, மிட்ஃபீல்டில் ஸ்பயெின் புகுந்து விளையாடியது. கடந்து ஐந்து ஆண்டு கால இத்தாலியின் கால்பந்து வரலாற்றைத் திருப்பினால், லக்சம்பர்க், ஹைதி அணிகளுக்கு எதிராகவும் டிரா செய்துள்ளது. இந்த அணிகளுக்கு எதிராக வெற்றிபெற முடியாமல் போனது, இத்தாலி எந்தளவு கோல் அடிப்பதில் வீக் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

இப்படியே போனால், உலகக் கோப்பையில் இத்தாலியின் செயல்பாடு படு மோசமாகி விடும். 2006-ல் உலகக் கோப்பை வென்ற பின், 2022 கத்தார் உலகக் கோப்பை வரை, இத்தாலி உலகக் கோப்பையில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும். ஆம், 2010, 2014-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இனி புதிய பயிற்சியாளராகப் பதவியேற்பவர் உடனடியாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது. தவிர, முன்னணி வீரர்கள் டனிலோ டீ ரோஸி, கியான்லூயி பஃபான், ஆண்ட்ரே பர்ஸாக்லி எல்லோரும் ஓய்வுபெற்றுவிட்டதால், தரமான இளம் வீரர்கள் உருவெடுக்கவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் ஜாம்பவான்களுக்கு இணையான மாற்று வீரர்களைக் கண்டுவிட்டது. இத்தாலி அவர்களைப் பின்பற்ற வேண்டிய நேரமிது.

அடுத்த கட்டுரைக்கு