Published:Updated:

பாதிக் கிணறு தாண்டியாச்சு... இந்தியாவுக்கு FIFA பாராட்டு! #FIFAU17WC #FootballTakesOver

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதிக் கிணறு தாண்டியாச்சு... இந்தியாவுக்கு FIFA பாராட்டு! #FIFAU17WC #FootballTakesOver
பாதிக் கிணறு தாண்டியாச்சு... இந்தியாவுக்கு FIFA பாராட்டு! #FIFAU17WC #FootballTakesOver

பாதிக் கிணறு தாண்டியாச்சு... இந்தியாவுக்கு FIFA பாராட்டு! #FIFAU17WC #FootballTakesOver

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

FIFA U-17 உலகக் கோப்பையின் குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்ததும், கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில், FIFA அதிகாரிகள், உலகக் கோப்பையைப் பொறுப்பேற்று நடத்தும் அதிகாரிகள் என அனைவரும், இந்தியா உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தி வருவதாகப் பாராட்டினர்.

இதுவரையிலான உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியா சிறப்பாக நடத்தியிருக்கிறது. இந்தியக் கால்பந்து ரசிகர்களும், பாரபட்சமின்றி அனைத்து அணிகளுக்கும் ஆதரவளிக்கின்றனர். டெல்லியில் மட்டுமே இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெற்றன. அங்கு போதிய வசதிகள் இல்லாதபோதும், ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். கொச்சி, கோவா, கெளகாத்தி நகரங்களில் மற்ற அணிகளின் போட்டியையும் உற்சாகமாகப் பார்த்து வருகின்றனர். மற்ற இடங்களை விட கொச்சி ஒரு படி மேல். விமானநிலையத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை, திரும்பிய இடமெல்லாம் உலகக்கோப்பை படங்கள்தான்.

FIFA அதிகாரிகள் இந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. “மைதானத்தின் தரம் மற்றும் அரங்கில் ரசிகர்களின் உற்சாகம் இரண்டும்தான் இந்த உலகக் கோப்பையின் பேசுபொருள். இந்தத் தொடர் சிறந்த தொடராக அமைந்துள்ளது. இதற்கு இந்தியர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொரு மைதானத்திலும் அட்டகாசமான சூழல் உள்ளது. ஒவ்வொரு ஸ்டேடியத்துக்குச் செல்லும்போதும், Old Trafford அல்லது Bernabeu ஸ்டேடியங்களுக்குச் செல்வதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.’’ என்றார், FIFA தலைமைப் பயிற்சியாளர் பிரானிமிர் ஜெவிச்.

“FIFA நடத்தும் உலகக் கோப்பைத் தொடர் முதன்முறையாக இந்தியாவில் நடக்கிறது. ஆனால், டோர்னமென்ட்டைப் பார்த்தால் முதன்முறை போலத் தெரியவில்லை. ஒவ்வொரு போட்டியின்போதும் ஒவ்வொரு விஷயம் மெருகேறி வருகிறது. சிறார்களுக்கான இந்தத் தொடரில் கூட்டம் கூட்டமாக மைதானத்துக்குப் படையெடுத்து, வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டனர் இந்திய ரசிகர்கள். சிலியில் 2015-ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரைவிட இங்கு அதிக ரசிகர்கள் வந்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு போட்டிக்கும் 23,000 ரசிகர்கள் வந்துள்ளனர். இந்தியா விளையாடிய போட்டிகளில் ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அதாவது 49,000 ரசிகர்கள் நேரு மைதானத்தில் #BackTheBlue கொடியைப் பிடித்து நின்றனர். உண்மையிலேயே இது பெரிய விஷயம்’’ என்றார், இந்தத் தொடரின் இயக்குநர் ஜேவியர் செப்பி. 

“முதன்முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளை மைதானத்தில் இருந்து பார்த்த 10-12 வயது சிறுவர்களுக்கு, நிச்சயம் இது அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த உலகக் கோப்பையை நடத்த தீர்மானித்தன் முக்கிய நோக்கம் இதுவே. இந்தியக் கால்பந்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். இன்னும் பல விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான விதை தற்போது தூவப்பட்டுள்ளது. அந்த வகையில் மகிழ்ச்சி’’ என்றார், இந்த உலகக் கோப்பையின் திட்ட இயக்குநர் ஜாய் பட்டாச்சார்யா.

“இந்தியாவில் ஏராளமான கால்பந்து ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களுக்கு உலகக்கோப்பையைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் இனி தொடர்ந்து கால்பந்தை ஆதரிப்பர். இன்று கால்பந்து பார்க்கும் சிறுவர்கள் பின்னாளில் கால்பந்து வீரர்களாக மாறுவார்கள் என்றில்லை. அவர்கள் ரசிகர்களாகவே இருக்கலாம், பயிற்சியாளர் ஆகலாம்... ஏதோ ஒரு வழியில் கால்பந்துடன் தொடர்பில் இருக்கலாம்.’’ என்பது ஜேவியர் செப்பி கருத்து.

இந்திய அணியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, “இந்த உலகக் கோப்பை இந்திய அணிக்குக் கற்றுக்கொள்ள ஏதுவான தொடர். அவர்களைப் பயிற்சியாளர் உடல் ரீதியாகவும், டெக்னிக்கல் ரீதியாகவும் நன்கு தயார்படுத்தியிருந்தார். தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரரும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இருந்தாலும், இதுதான் அவர்களுக்கு முதல் உலகக் கோப்பை. முதல்முறை எனும்போது இயல்பாகத்தான் இருக்க முடியும். ஜொலிக்க முடியாது. ஆனாலும், 16 வயது சிறுவன் ஜேக்சன் சிங் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்று விட்டான். காரணம், FIFA உலகக் கோப்பையில் அவன் கோலடித்ததே.’’ என்றார்  பிரனிமிர் ஜெவிச்.

இதை ஆமோதித்த ஜாய் பட்டாச்சார்யா, “2019-ல் நடக்கவுள்ள ஆசியக் கோப்பைக்கும் இந்தியா தகுதிபெற்றுள்ளது. இது முக்கியமான விஷயம். தற்போது இந்தியாவில் 16 முதல் 19 வயது வரையிலான ஏஜ் குரூப்பில் 30 முதல் 35 வீரர்கள் உள்ளனர் என்பது பெருமையளிக்கிறது’’ என்றார்.  

வரவேற்பில் ஹேப்பி!
 ஹோட்டல் முதல் மைதானம் வரை தங்களுக்குக் கிடைத்த வசதி வாய்ப்புகள் மற்றும் இந்தியர்களின் வரவேற்பில் மற்ற அணிகள் திருப்தியடைந்துள்ளன. “நியூ கேலடோனியா அணி முதன்முறையாக 45,000 ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியுள்ளது. FIFA நடத்தும் தொடரில் அவர்கள் முதல் புள்ளியைப் பெற இந்தக் கூட்டம் உதவியாக இருந்துள்ளது. இது அவர்களுக்குக் காலத்துக்குமான நினைவு’’ என்றார் ஜேவியர் செப்பி.

ஃபைனலுக்குக் கூட்டம் அள்ளும்
“குரூப் சுற்றுக்கு வந்த ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது ஃபைனலுக்கு இன்னும் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது கிட்டத்தட்ட சீனியர் உலகக் கோப்பை ஃபைனல் போல இருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஃபைனலுக்கான டிக்கெட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இப்போதே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன’’ என ஜேவியர் செப்பி சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.. 

“நடப்பதையெல்லாம் பார்த்தால் எல் கிளாசிகோ மேட்சுக்குக் கூட டிக்கெட் வாங்கிவிடலாம் போல, இந்த உலகக் கோப்பை ஃபைனலுக்கு டிக்கெட் கிடைப்பது கஷ்டம்...’’ என பிரமின் ஜெவிக் சொன்னது அத்தனை உண்மை.

இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்து விட்டது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு