Published:Updated:

சீனாவின் தவறிலிருந்து பாடம் கற்குமா இந்தியா... இனி என்ன செய்ய வேண்டும்? #FIFAU17WC #FootballTakesOver

சீனாவின் தவறிலிருந்து பாடம் கற்குமா இந்தியா... இனி என்ன செய்ய வேண்டும்? #FIFAU17WC #FootballTakesOver
News
சீனாவின் தவறிலிருந்து பாடம் கற்குமா இந்தியா... இனி என்ன செய்ய வேண்டும்? #FIFAU17WC #FootballTakesOver

சீனாவின் தவறிலிருந்து பாடம் கற்குமா இந்தியா... இனி என்ன செய்ய வேண்டும்? #FIFAU17WC #FootballTakesOver

``இந்தியா… இந்தியா...'' கால்பந்து அரங்குகளிலும் ஒலித்துவிட்டது இந்த முழக்கம். டெல்லி நேரு மைதானத்தில் கடந்த 6-ம் தேதி, FIFA-வின் கொடிக்குப் பக்கத்தில் இந்திய தேசியக்கொடியைப் பார்த்துவிட்டு புல்லரித்துப்போனான் கால்பந்துக் காதலன். கால்பந்து மைதானத்தில், உலகக்கோப்பை அரங்கில் முதல்முறையாக இந்திய தேசிய கீதம் ஒலித்தது. `விந்திய இமாச்சல யமுனா கங்கா…' என்ற வரியைப் பாடியபோது, அவனது கண்களிலிருந்து கோடிழுத்து வழிந்தது நீர். அவனால் நம்ப முடியவில்லை. கிரிக்கெட் போதையில் மூழ்கிக்கிடக்கும் இந்தத் தேசத்தில், கால்பந்து நடுவரின் விசில் சத்தம் ஒலித்ததை அவனால் நம்ப முடியவில்லை. சிக்ஸருக்கும் விக்கெட்டுக்குமே நடுவர் கை உயர்த்தியதைப் பார்த்தவன், இப்போது சிவப்பு அட்டை கொடுக்க நடுவர் கை உயர்த்துவதைக்கூட மகிழ்ந்து பார்க்கிறான். நீல நிற உடை அணிந்திருந்த அந்த 11 சிறுவர்களை, அமர்ஜித் சிங் வழிநடத்திக் கூட்டிவந்தபோது அவனது ஆசைகள் நிறைவேறியிருந்தன. ஆடிய மூன்று போட்டிகளும் தோல்விகள். ஆனால், அடித்த ஒரு கோலை ஏதோ திருவிழாபோல் கொண்டாடினான். அவனது தாகம் தீர்ந்துவிட்டது. கால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா விளையாடிவிட்டது!

``இந்தியா, உலகக்கோப்பையில விளையாடிருச்சு; ஒரு கோல் வேற அடிச்சிருச்சு. எனக்கு இது போதும்” - கானாவிடம் நான்கு கோல்கள் வாங்கி தோற்ற பிறகும், தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான். ``எங்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, இவர்களுக்குக் கிடைத்திருப்பது எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று ஃபீலிங்ஸ் கொட்டினார் சேத்ரி. இவரைப் போன்ற சீனியர் வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாடுவது எப்போது? இப்படிச் சமாதானம் அடைந்துகொண்டோமேயானால் நிச்சயம் வாய்ப்பில்லை. 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் விளையாட இந்தியாவுக்குத் தேவைப்பட்டிருப்பது 32 ஆண்டுகள். அதுவும் நடத்தும் நாடு என்பதால். சீனியர் உலகக்கோப்பையிலும் அதே கனவு நடந்திடுமா? அதற்கு வாய்ப்பில்லை. 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக்கோப்பை நடப்பதால் 2030-ம் ஆண்டு வரை ஆசியக் கண்டத்தில் உலகக்கோப்பை நடக்காது. எனவே, இன்னும் 15 ஆண்டுகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. தகுதிச்சுற்றில் போட்டியிட்டு தகுதி பெற்றிட முடியுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ!

இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பயிற்சியாளராகி, அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெறும் காலத்திலும்கூட, கால்பந்து உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இந்தியா தடுமாறிக்கொண்டுதான் இருக்கும். அதுதான் நிதர்சனம். இந்த உலகக்கோப்பை, ஒரு மாற்றத்துக்கான தொடக்கம். அதையும் நல்லதோர் தொடக்கமாக மாற்றவேண்டியது நம் கடமை. கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த, இந்திய அணியை உலகத்தரத்துக்கு உயர்த்த நாம் செய்யவேண்டியவை என்னென்ன? நாம் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன? அதை அலசுவதற்கு முன், சீனாவைப் பற்றி ஒரு குட்டிக் கதை…

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது சீனாவின் கதை

இந்தியாவில் இப்போது நடந்துகொண்டிருக்கும் இந்தக் கால்பந்துத் திருவிழா, 1985-ம் ஆண்டு சீன மண்ணில்தான் முதல்முறையாகத் தொடங்கியது. அதுதான் 17 வயதுக்குட்பட்டோருக்கான முதல் கால்பந்து உலகக்கோப்பை. கால்பந்து உலகில் எப்படியேனும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற சீனாவின் தாகத்துக்கான முதல் முயற்சி அது. 16 அணிகள் பங்கேற்ற அந்தத் தொடரில் காலிறுதி வரை முன்னேறியது. அதன்பிறகு அவர்கள் தேசிய அணி முன்னேற்றம் கண்டதா? இல்லை. 17 வயது உலகக்கோப்பையை நடத்தியதால், எதிர்காலத்தில் சிறப்பான சீனியர் அணியை உருவாக்க முடியும் என நினைத்தனர். ஆனால், அதற்கான மாற்றங்களைச் செய்யத் தவறியது சீனா. சீனியர் அணியின் தரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால், அது மிகவும் `ஸ்லோ ப்ராசஸா’கவே இருந்தது. உலக அளவில் போட்டியிடக்கூடிய தரமான ஓர் அணியை அவர்களால் உருவாக்க முடியவில்லை.

2002-ம் ஆண்டில் சீனியர் உலகக்கோப்பைப் போட்டியை ஜப்பானும் தென் கொரியாவும் இணைந்து நடத்தின. போட்டியை நடத்தும் நாடுகளாக அந்த அணிகள் நேரடித் தகுதி பெற்றதால், தகுதிச்சுற்று எளிதாக அமைந்து உலகக்கோப்பைக்குள் நுழைந்தது சீனா. லீக் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் தோல்வி கண்டு வெளியேறியது. ஒரு கோல்கூட அடிக்காமல், ஒன்பது கோல்கள் வாங்கியது. அதுவே சீனா ஆடிய ஒரே உலகக்கோப்பைத் தொடர். அதன் பிறகு இன்னும் அவர்களால் ஓர் உலகக்கோப்பையில்கூட விளையாட முடியவில்லை. உலகக்கோப்பையில் விளையாடுவது இருக்கட்டும், அணியேனும் தரமானதாக முன்னேற்றம் அடைந்ததா? இல்லை. உலக அளவில் இன்று 62-வது இடம். இந்த 32 ஆண்டுகளில் சீனா கண்ட கொஞ்சூண்டு முன்னேற்றம் இதுவே!

நம் நிலைமை

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற, மிகவும் கௌரவம் வாய்ந்த ஒரு விளையாட்டுப் போட்டியின் ஜூனியர் ஃபார்மட்டில் விளையாடிவிட்டோம். சீனியர் ஃபார்மட்டில் ஆடுவது எப்போது? இந்த 17 வயது சிறுவர்களைப் புகழ்ந்துகொண்டிருந்தால் மட்டும், அடுத்த 10 ஆண்டுகளில் இவர்கள் வளர்ந்துவிடுவார்களா? அடிப்படை தவறாக இருக்கும் நம் நாட்டில் செய்யவேண்டிய மாற்றங்கள் ஏராளம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில், கால்பந்து அகாடமிகளில் ஐந்து, ஆறு வயதிலேயே சிறுவர்கள் க்ளப்களின் அகாடமியில் சேர்ந்துவிடுவார்கள். அவர்கள் 10 வயதில் தேறி விடுகிறார்கள். நம் நாட்டில் 15 - 17 வயதில்தான் பாலபாடம் பயில்கிறார்கள்.

அதனால்தான் அமெரிக்கா, கொலம்பியா போன்ற நாடுகளுடன் இந்திய அணி ஈடுகொடுத்து விளையாட சிரமப்பட்டது. ஆனாலும் ,கொலம்பியாவுடனான போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அந்தப் போட்டியில் எளிதில் சரணடைந்துவிடாமல், இறுதி நிமிடம் வரை போராடியது இந்தியா. ஆனால், அடுத்த போட்டியிலேயே கானாவிடம் சரண்டர் ஆனது. கால்பந்துப் போட்டியின் போக்கை நிர்ணயிக்கும் நடுகளத்தில் கோட்டைவிட்டதே இதற்குக் காரணம். அவையெல்லாம் 15 வயதில் கற்றுக்கொள்ளும் வித்தைகள் அல்ல. சிறுவயதிலிருந்தே நுணுக்கங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்திய அணி சறுக்கிய இடம் இதுதான்.

நம்மிடம் நல்ல மைதானங்களோ, உபகரணங்களோ இல்லாமல் இல்லை. சரியான Gaming Format, அடிப்படைக் கட்டமைப்பு இல்லாததே நாம் கால்பந்தில் முன்னேறாததுக்கான காரணங்கள். கானா அணிப் பயிற்சியாளர், இந்தியாவில் இருக்கும் வசதிகளைப் பார்த்து பிரமித்துப்போனார். இங்கு இருப்பது போன்ற வசதிகள் அந்த ஏழை ஆப்பிரிக்க நாட்டில் இல்லை. அந்த அணி வீரர்களில் பலரும் புழுதிக்கு நடுவே, அந்தச் சுடும் தரையில் விளையாடியவர்களே. அவர்களிடம்தான் நாம் 4 - 0 என தோற்றுப்போனோம். வசதிகளைக் காரணம் காட்டி நாம் தப்பிக்கவே முடியாது.

`கால்பந்தில் எதிர்காலம் இல்லை' என்னும் மனநிலைதான் இன்றுவரை நம்மில் பலரை பள்ளி, கல்லூரி அளவிலோடு முடக்கிவிட்டது. கிரிக்கெட் எனப் பார்த்தால், கல்லூரிக் காலத்திலேயே டிவிஷன், இன்டர்ஜோன், ஸ்டேட் டீம் எனப் போய்விடலாம். நல்ல `எக்ஸ்போஷர்’ கிடைக்கும். அது கால்பந்துக்கு இல்லை. 21 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஐ-லீக், சம்பிரதாயத் தொடராகத்தான் நடந்துவருகிறது. இன்றைய தேதியில் நம் நாட்டில் கால்பந்துக்கு அடையாளம் கொடுப்பது ஐ.எஸ்.எல் மட்டுமே. அதுவும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே நடக்கும் தொடர். ஆக, இங்கு கால்பந்து விளையாடுபவர்களுக்கு அடையாளம் கிடைப்பது கடினம். அதனால் `புரஃபஷன்’ எனப் பார்க்கையில் விளையாட்டை அனைவரும் துறந்துவிடுகின்றனர்.

இந்த ஜூனியர் அணி..?

இந்த அணியில் இருக்கும் 21 வீரர்களை ஐ-லீக் தொடரில் விளையாட, இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது, இந்தியக் கால்பந்து சம்மேளனம். அணியின் பயிற்சியாளர் நார்டனையும், உலகக்கோப்பைக்குப் பிறகும் அணியோடு இணைந்து பணியாற்றவைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. ஓரளவு ‘செட்’ ஆன அணியை மேலும் மெருகேற்ற நினைக்கிறது நிர்வாகம். இதே வீரர்கள் சர்வதேச அளவில் ஜொலிக்க அசாத்திய வளர்ச்சி காண வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்படும் முன்னேற்றத்தைவிட, இவர்களுடன் ஆடிய கானா, அமெரிக்கா வீரர்கள் இரட்டிப்பு முன்னேற்றம் காண்பார்கள். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அவர்களில் பலரும் பெரிய கால்பந்து க்ளப்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பார்கள். அங்கு அவர்களுக்கு உலகத்தரத்தில் பயிற்சி கிடைக்கும். ஆனால், இந்திய வீரர்கள்?

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கப்போவதில்லை; தரமான எதிராளிகள் இருக்கப்போவதில்லை; உலகத்தரமான பயிற்சியாளர்களும் வல்லுநர்களும் இருக்கப்போவதில்லை. எனில், அவர்களின் எதிர்காலம்? இந்தியக் கால்பந்தின் எதிர்காலம்? ஐ-லீக் ஒப்பந்தம் மட்டும் அவர்களை, இந்திய அணியை வலுவாக்கிவிடுமா? 17 வயதிலேயே கால்பந்து அரங்கில் கலக்கி, இப்போது சென்னையின் FC அணியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஜெர்ரியை இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டுமே? மாற்றம், ஒட்டுமொத்த தேசத்திலும் நிகழ வேண்டும்; மொத்த அமைப்பிலும் நிகழ வேண்டும்.

சீனா செய்யாததும்... நாம் செய்யவேண்டியதும்!

30 ஆண்டுகாலம் எந்த முன்னேற்றத்தையும் பார்த்திடாத சீனக் கால்பந்து கூட்டமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் நாட்டில் இந்த விளையாட்டை மேம்படுத்துவதற்கான சரியான அணுகுமுறையைக் கண்டறிந்தது. தரமான அஸ்திவாரம், சரியான க்ளப் அமைப்பு, சிறப்பான அகாடமி ஆகியவையே ஒரு தேசத்தின் கால்பந்து வளர்ச்சிக்கு அவசியம் என்பதை சீனா உணர்ந்துள்ளது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் உலகக்கோப்பையில் பங்கேற்றாலும்கூட, அவர்களால் ஜொலிக்க முடியாததற்கு, சரியான கால்பந்து அமைப்பு இல்லாததே காரணம். ஐரோப்பிய அணிகளும், அமெரிக்க அணிகளும் கால்பந்து உலகை ஆள்வதற்கு அவர்களின் சரியான கட்டமைப்பே காரணம்.  இதை இவ்வளவு தாமதமாக உணர்ந்துள்ள சீனா, ஐரோப்பிய நாடுகளைப்போல் முன்னேற்றம் காண ‘சைனீஸ் சூப்பர் லீக்’ கால்பந்து தொடரை அமைத்து, உலக நட்சத்திரங்களை வளைத்துவருகிறது. சாதாரண வீரர்களுக்கும் வயதான முன்னாள் நட்சத்திரங்களுக்கும்கூட மெஸ்ஸி, ரொனால்டோ அளவுக்குச் சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துவருகிறது. சுமாராக ஆடக்கூடிய 32 வயது லவெஸிக்கு ஆண்டு வருமானம் 41.49 மில்லியன் பவுண்டுகள்! 32 ஆண்டுகளுக்கு முன்னரே சரியான முடிவுகள் எடுத்திருந்தால், இன்று மாபெரும் கால்பந்து சக்தியாக சீனா உருவெடுத்திருக்கும். உலக அளவில் போட்டியிட இன்னும் அவர்களுக்கு 20 ஆண்டுகள் தேவைப்படும்.

அவர்கள் செய்த அதே தவற்றைச் செய்யப்போகிறதா இந்தியா? ஐ.எஸ்.எல், ஐ-லீக் என இரு தொடர்கள், வெவ்வேறு ஃபார்மெட்டுகள், தொடரை புரமோட் செய்ய இன்னமும் வயதான, ஓய்வுபெற்ற ஃபாரீன் வீரர்கள் என ‘கார்ப்பரேட்’ தொடர் போலத்தான் இங்கு கால்பந்து நடந்துகொண்டிருக்கிறது. பெருமைவாய்ந்த விளையாட்டு. உணர்வுகளைச் சுமக்கும் விளையாட்டு. அதை நாம் கையாளும்விதம் மிகவும் தவறு. பயிற்சியாளர்கள் தரமானவர்களாக இருப்பது அவசியம். பெயர்பெற்ற முன்னாள் வீரர் ஒருவரால் ஓர் அணியை வடிவமைத்துவிட முடியாது. `அர்ஜென்டினாவின் கடவுள்' என வர்ணிக்கப்படும் மரடோனாவால் பயிற்சியாளராக வெற்றி காண முடியவில்லை. ஆனால், சாதாரண வீரராகத் திகழ்ந்த மொரினியோ, மாபெரும் பயிற்சியாளர்! அது மாபெரும் சூத்திரம். இதிலும் ஐ.எஸ்.எல் அணிகள் கோட்டைவிடுகின்றன.

பார்சிலோனா அணியின் அகாடமியில் சிறுவர்கள் பயிற்சிபெறும் வீடியோ

கடந்த சில மாதங்களாகத்தான் ஐ.எஸ்.எல் அணிகள் அகாடமிகளை அமைத்துவருகின்றன. அதுவும் நகரங்களைச் சுற்றியுள்ள சிறுவர்களை மட்டுமே சென்றடைகிறது. அதனால் அந்த அமைப்புமுறையையும் விரிவுப்படுத்த வேண்டும். நாட்டின் எந்த ஒரு மூலையில் ஒருவன் கால்பந்தை சுவாசித்துக்கொண்டிருந்தாலும், அவன் அடையாளம் காணப்பட வேண்டும்; அவன்மீது வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும். அதுதான் இந்தியக் கால்பந்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சீனா தோற்ற இடம் இதுதான். அதனால் இந்தியா மிகவும் உஷாராக இருக்க வேண்டும். முன்னாள் ஃபாரின் வீரர்களை நம் ஊரில் ஆடவைப்பதன் மூலம் கால்பந்தை முன்னேற்றிவிட முடியாது.

`டொமஸ்டிக்’ தொடரை ஒழுங்காக நடைமுறைப்படுத்தவேண்டும். திறமைகளைக் கண்டறிந்து சிறு வயதிலிருந்து தரமான பயிற்சியளிக்க வேண்டும். கால்பந்து விளையாடுபவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும். இவையெல்லாம் செய்துவிட்டு சீனியர் உலகக்கோப்பையில் இந்தியா விளையாடுவதைப் பற்றி கனா காண்போம்!