Published:Updated:

இந்த உலகக் கோப்பையில் இவங்கதான் ஸ்டார்! #FootballTakesOver #FIFAU17WC #BackTheBlue

இந்த உலகக் கோப்பையில் இவங்கதான் ஸ்டார்! #FootballTakesOver #FIFAU17WC #BackTheBlue
இந்த உலகக் கோப்பையில் இவங்கதான் ஸ்டார்! #FootballTakesOver #FIFAU17WC #BackTheBlue

ஜோராக நடந்து வருகிறது 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை (#FIFAU17WC). வரும் காலங்களில் கால்பந்து உலகை ஆளப்போகும் இளம் சூப்பர் ஹீரோக்களை அடையாளம் காணும் இந்தத் தொடரில் 24 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. அவர்களில் யாரெல்லாம் இந்திய மண்ணில் தங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறார்கள்? ரொனால்டோ, மெஸ்ஸி போன்றோர் இல்லாத இத்தொடரில் நாம் யாரைக் கண்டு மெய்சிலிர்ப்பது? இதோ இத்தொடரில் முத்திரை பதிக்கக்கூடிய சில இளம் நட்சத்திரங்கள் பற்றிய அப்டேட்...

ஜோஷ் சார்ஜென்ட் (அமெரிக்கா)

பிரேசிலின் விசினியஸ் பங்கேற்காத நிலையில், இந்தத் தொடரின் மிகப்பெரிய அட்ராக்சன் சார்ஜென்ட் என்பதில் சந்தேகமில்லை. CONCACAF தொடரில் 5 கோல்கள் அடித்து அமெரிக்க அணி உலகக்கோப்பைக்குத் தகுதிபெற முக்கியக் காரணமாக விளங்கினார். அதிக அனுபவத்துடன் இந்தத் தொடரில் கலந்துகொள்பவரும் இவர்தான். 17 வயதே ஆன சார்ஜென்ட் ஏற்கெனவே அண்டர்-20 உலகக்கோப்பையிலும் பங்கேற்றுள்ளார். காலிறுதியில் அமெரிக்கா தோல்வியடைந்தாலும், அந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்து அசத்தினார். ஐரோப்பாவின் பல முன்னணி க்ளப்கள் இவரை ஒப்பந்தம் செய்ய தேர்வு நடத்திவருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே தன் கோல் கணக்கைத் தொடங்கிவிட்டார். 

ஜேடன் சான்சோ (இங்கிலாந்து)

சில மாதங்களுக்கு முன் நடந்த அண்டர் 17 யூரோ கோப்பையின் ‘கோல்டன் பிளேயர்’ சான்சோ. 5 கோல்கள் அடித்து அசத்தியது மட்டுமல்லாமல், 5 அசிஸ்டுகளும் செய்து, இங்கிலாந்து அணி ஃபைனலுக்குள் நுழைவதற்குக் காரணமாக இருந்தார். மான்செஸ்டர் சிட்டி அணியின் யூத் டீமில் இருந்தவரை 10 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியது ஜெர்மனியின் முன்னணி அணியான பொருசியா டார்ட்மண்ட். அதோடு, அவருக்கு 7-ம் நம்பர் ஜெர்சியையும் அளிக்க, கால்பந்து ரசிகர்களின் புருவம் உயர்ந்தது. அவர்மீது அந்த அணிக்கு அவ்வளவு நம்பிக்கை. இங்கிலாந்து அணியும் அதே நம்பிக்கையை அவர்மீது வைத்திருந்தது. கடினமான F பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, சான்சோவின் பங்கு அவசியம். அணியின் தேவையைப் பூர்த்தி செய்யும் அனைத்துத் திறமையும் வாய்க்கப் பெற்றவர் இந்த இங்கிலாந்துக்காரர். இந்த உலகக் கோப்பையில் சிலிக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து, கவனிக்க வைத்துவிட்டார். 

அபெல் ரூயிஸ் (ஸ்பெய்ன்)

அண்டர் 17 யூரோ கோப்பையை வென்ற ஸ்பெய்ன் அணியின் கேப்டன் ரூயிஸ், இந்த உலகக்கோப்பையின் முக்கிய ஸ்டார். 2015-ல் இருந்தே 17 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிவரும் ரூயிஸ், தன் அணியை உலக சாம்பியனாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறார். ஸ்பெய்ன் அண்டர் 17 அணிக்காக இதுவரை 19 கோல்கள் அடித்துள்ளார். யூரோ அண்டர் 17 தொடரில் 4 கோல்கள் அடித்து வெள்ளிக் காலணி விருதையும் வென்றார். இவற்றையெல்லாம் விட, அவரது பெருமையைப் பறைசாற்ற ஒரு செய்தி போதும். இவர், பார்சிலோனா – பி அணி வீரர்!

ஜேன்- ஃபிடே அர்ப் (ஜெர்மனி)

அண்டர் 17 யூரோ கோப்பையில் 4 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகள் அடித்து பட்டையைக் கிளப்பினார் ஃபிடே அர்ப். அதுவும் போஸ்னியா அண்ட்ட் ஹெர்சகோவினா அணிக்கு எதிராக, ஹாட்ரிக்கைப் பூர்த்தி செய்ய அவர் எடுத்துக்கொண்டது 13 நிமிடங்களே. ஜெர்மனி அணி பெரிதாக சோபிக்காத நிலையிலும், ஃபிடே அர்ப் தன் சிறப்பான செயல்பாடுகளின் மூலம் கவனம் பெற்றார். 21-ம் நூற்றாண்டில் பிறந்து ஜெர்மனியின் பண்டஸ்லிகா தொடரில் விளையாடிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்த அர்ப், இந்த உலகக்கோப்பையிலும் ஹாட்ரிக்குகள் நொறுக்கக் காத்திருக்கிறார். இவரே ஜெர்மனி அணியின் அடுத்த, மிரஸ்லேவ் க்ளோஸ் என்றும் ஆருடம் சொல்கிறார்கள் நிபுணர்கள். அந்த உலகக்கோப்பை நாயகனைப் போல் இவரும் உலகக்கோப்பையில் சாதிப்பாரா? 

அமைன் கௌரி (பிரான்ஸ்)

யூரோ அண்டர் 17 தொடரின் சாதனை நாயகன். 9 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார், ஒலிம்பிக் லயான் கிளப்புக்கு ஆடிவரும் அமைன். உலகக்கோப்பைக்குத் தகுதிபெற ஹங்கேரி அணியுடன் பிளே-ஆஃப் போட்டியில் விளையாடியது ஃபிரான்ஸ். வெற்றி பெறும் அணி உலகக்கோப்பைக்குத் தகுதிபெறும். கோல்களே இல்லாமல் சென்ற அந்தக் கடினமான போட்டியின் ஒற்றைக் கோலை அடித்தது அமைன்தான். உலகக்கோப்பைக்குத் தங்கள் அணியை அழைத்துச்சென்ற அமைனை நம்பியே ஃபிரான்ஸ் அணி இந்தியாவில் அடியெடுத்து வைத்தது. நியூ கேல்டோனியாவுக்கு எதிராக 2 கோல்கள் அடித்து தன் வருகையை அறிவித்துவிட்டார் அமைன்.

அனிகேத் ஜாதவ் (இந்தியா)

‘ஃபாரீன் பிளேயர்கள் சரி, இந்திய வீரர்களில் யாரைக் கவனிப்பது?’ என்னும் உங்களின் கேள்விக்கான பதில் அனிகேத் ஜாதவ். 2014-ம் ஆண்டு நடந்த பேயர்ன் முனிச் அணியின் யூத் கேம்பில் பங்கேற்றவர் என்பதே இவரது பெருமை சொல்லப்போதுமானது. விங்கராக ஆடிவந்தவரின் கோல் அடிக்கும் திறமையைப் பார்த்து, இவரை ஸ்ட்ரைக்கராக்கிவிட்டார் இந்திய அணியின் பயிற்சியாளர். எதிரணி டிஃபண்டர்களை ஏமாற்றி அவர்கள் பாக்சுக்குள் நுழைவதில் அனிகேத் கெட்டிக்காரர். கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கும் மாபெரும் வாய்ப்பு இவரது கால்களில்! இவரைத் தவிர்த்து நடுகள வீரர் கோமல் தடாலும் கவனிக்கப்பட வேண்டியவர்.