Published:Updated:

ப்ரோ, வேர்ல்ட் கப் ப்ரோ... அதுவும் இந்தியாவுல... விட்ற முடியுமா! #BackTheBlue #FIFAU17WC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ப்ரோ, வேர்ல்ட் கப் ப்ரோ... அதுவும் இந்தியாவுல... விட்ற முடியுமா!  #BackTheBlue #FIFAU17WC
ப்ரோ, வேர்ல்ட் கப் ப்ரோ... அதுவும் இந்தியாவுல... விட்ற முடியுமா! #BackTheBlue #FIFAU17WC

ப்ரோ, வேர்ல்ட் கப் ப்ரோ... அதுவும் இந்தியாவுல... விட்ற முடியுமா! #BackTheBlue #FIFAU17WC

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். 2014-ம் ஆண்டில் கால்பந்து உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்தது. பிரேசிலில் நடந்ததால், விடுதியில் இரவு 2 மணிக்கெல்லாம் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தோம். பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற முன்னணி அணிகளின் ஆட்டம் என்றால் மட்டும் சீனியர்கள் இருப்பார்கள். நான் மட்டும் மெக்ஸிகோ - கேமரூன், அல்ஜீரியா - ரஷ்யா போன்ற போட்டிகளுக்கும் கண்விழித்து உட்கார்ந்திருப்பேன். அந்த அணிகளின் வீரர்களைப் பற்றி பெரிதாகத் தெரியாதுதான். ஆனால், பிரேசிலின் பிரமாண்ட மைதானங்களில் அமர்ந்து 90 நிமிடமும் கோஷம் எழுப்பிக்கொண்டிருக்கும் அந்த ரசிகர்களைக் காண்பதற்காகவே எல்லா போட்டிகளையும் பார்ப்பேன். கால்பந்து அரங்கில் கேட்கும் அந்தச் சத்தம், இளையராஜாவின் இசை போல பிரமிப்பூட்டும். நொடிப்பொழுதில் மயக்கிவிடும். அந்த மயக்கம்தான் ஒவ்வொரு நாளும் என்னைத் தூங்கவிடாமல் செய்தது.

கேலரியில் அமர்ந்திருப்போர் கண்களில், ஏனோ பிறவிப்பயன் அடைந்துவிட்ட மகிழ்ச்சி தெரியும். சிலரின் தோற்றமும் செயல்களுமே அவர்கள் எந்த நாட்டவர் என நமக்கு hint கொடுக்கும். குட்டி மூக்கு, இளஞ்சிவப்பு நிறம் - சீனாவாகவோ, ஜப்பானாகவோ இருக்கலாம். முகத்தில் `+' சிம்பள் வரைந்திருக்கிறான் - இங்கிலாந்துக்காரன். கோப்பையுடன் ஃபேபியோ கனவாரோ இருக்கும் புகைப்படம் ஏந்தியிருக்கிறான்... நிச்சயம், இவன் இத்தாலியன்.

பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அந்த `சம்பா' நாட்டுக்குள் படையெடுத்திருப்பார்கள் வெறியர்கள். ஆம், தன் நாட்டு அணி ஆடாத போட்டியிலும் கால்பந்து வெறியன் அமர்ந்திருப்பான்; வேற்று நாட்டு வீரனை ஊக்கப்படுத்துவான். கால்பந்தின் மீதான நேசம் அப்படியானது. கால்பந்து வெறியனிடமிருந்து மட்டுமல்ல, அந்த உற்சாகத்தை, கால்பந்தை சாதாரணமாகப் பார்க்கும் ஒரு ரசிகனிடத்திலும் கண்டுவிடலாம். ஏனெனில், கால்பந்து - ஒரு மாயகாந்தம். ஒரு வீரனின் ஒற்றை `மூவ்' நம்மை ஆட்கொண்டுவிடும். கோல்கள்கூடத் தேவையில்லை. அப்படி மயங்கிக் கிடந்ததால்தான் Internal test-கள் பற்றிக் கவலைப்படாமல் தினமும் மேட்ச் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

துவண்டுபோயிருக்கும் அணியைத் தூக்கி நிறுத்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எழுந்து நின்று பாடுவார்கள். கிரிக்கெட்டுக்கு நேர்எதிர்! எதிரணி வீரர்களை உசுப்பேற்றவும் செய்வார்கள். அதெல்லாம் நமக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால், போட்டி முடிந்து நடக்கும் விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஆட்டம் முடிந்ததும் தங்கள் ரசிகர்களுக்கு கேலரியின் அருகில் சென்று நன்றி சொல்வது வீரர்களின் மரபு. தங்கள் அணி தோற்றிருந்தாலும் ரசிகர்கள், தங்கள் வீரர்களை அப்போது பாராட்டிக்கொண்டிருப்பார்கள். ரசிகர்களுக்கு மத்தியில் ஜெர்சியைக் கழட்டி வீசுவார் ஒரு வீரர். கடும் போட்டிக்குப் பிறகு அதைக் கைப்பற்றும் அந்த ரசிகனின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஊற்றாகப் பெருகும். தங்கள் அணி தோற்றுப்போனால் கதறி அழுவார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நமக்கே எமோஷன்ஸ் பொங்கும்; நம் கண்களும் கண்ணீர் சிந்தும். இதுபோன்ற காட்சிகளை கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் காண முடியாது. அப்போது முடிவெடுத்தேன், `உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை ஒருமுறையேனும் நேரில் பார்க்க வேண்டும்'. எந்த அணி ஆடினாலும் சரி... ஒரு போட்டியாவது பார்த்திட வேண்டும். ஆனால், ஃபாரீன் போக வேண்டுமே! 2018-ம் ஆண்டில் ரஷ்யா, 2022-ம் ஆண்டில் கத்தார். பரவாயில்லை. இவற்றில் ஒரு போட்டிக்காவது போக வேண்டும். நாலு காசு சம்பாதித்து எப்படியாவது போக வேண்டும். அந்த கேலரியில் அமர்ந்து கால்பந்தின் அடிநாதத்தைச் சுவைத்திட வேண்டும். 

சிறிது காலம் கழித்துத்தான் தெரியவந்தது இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை நடக்கப்போகிறது என்று. அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டில் கால்பந்து உலகக்கோப்பை நடக்கப்போகிறது. ஆம், நம் நாட்டில் நடக்கும் ஒரு கால்பந்து போட்டியை, மொத்த உலகமும் ரசிக்கப்போகிறது. நம்ப முடியவில்லைதான். போய்ப் பார்த்துவிடவேண்டும். 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாக இருந்தாலும், அது football world cup. FIFA நடத்தும் போட்டி. உச்சகட்ட மகிழ்ச்சி. க்யூரியாசிட்டி கிளம்பியது. ரொனால்டோவோ, மெஸ்ஸியோ வரப்போவதில்லை. ஆனால், நான் இன்று பார்க்கும் வீரன் ஒருநாள் அவர்கள்போல் ஜொலிக்கக்கூடும். `பிரேசிலில் இருந்தது போன்ற உற்சாகம் இந்திய மைதானங்களில் இருக்குமா? இருக்கும். ISL தொடருக்கு உலகின் `Fourth most attended football league' என்ற பெருமையை ஒரே ஆண்டில் பெற்றுத்தந்த ரசிகர்கள் இவர்கள். போட்டி நடக்கும் கொல்கத்தா, கோவா, கவுகாத்தி போன்ற ஊர்களில் கால்பந்து ஏற்கெனவே பிரபலம். பிரேசிலில் இருந்த அந்த ஃபீல் கிடைக்காது என்றாலும், கால்பந்தை ரசித்துவிட முடியும்'. என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

வெளிநாட்டில்தான் நிறைவேறும் என்று நான் நினைத்திருந்த என் வாழ்நாள் ஆசை, நம் மண்ணிலேயே நிறைவேறப்போகிறது. யெஸ்... ஃபுட்பால் வேர்ல்டு கப் பார்க்கப்போகிறேன்! அப்போது, விடுதியில், நாம் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதற்குக் காரணம் சொல்ல வேண்டும். போர்ச்சுகல் - ரொனால்டோ ஃபேன். அர்ஜென்டினா - மெஸ்ஸி ஃபேன். பிரேசில் - ரொனால்டினோ. ரொனால்டினோவின் ரசிகரான ஒரு சீனியர் இருக்கத்தான் செய்தார். அந்த பிரேசிலியன் மாயக்காரன் ஆயிற்றே!

``நீ எந்த டீமுக்கு சப்போர்ட் தம்பி?"

``இங்கிலாந்து ப்ரோ"...

கண்கள் விரிந்து நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள். உலக அரங்கில் இங்கிலாந்தின் செயல்பாடு அப்படி. ``என்ன... ரூனி ஃபேனா?", ``இல்ல ப்ரோ, ஜான் டெர்ரி". ஒரு தடுப்பாட்ட வீரரை, அதுவும் ஓய்வுபெற்ற ஒரு வீரரை `ஃபேவரைட் வீரர்' எனச் சொல்லும்போது கொஞ்சம் வித்தியாசமாகத்தானே பார்ப்பார்கள். ஆனால், இந்த முறை அப்படி யாரும் கேட்கப்போவதில்லை. ஏனெனில், நான் ஆதரிக்கப்போவது என் தேசத்தை. ஆம்... இந்தியா, கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடப்போகிறது!

87 ஆண்டுகால கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முதலாகப் பங்கேற்கிறது நம் இந்திய நாடு. கிரிக்கெட்டை Unofficial national game-ஆகக்கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில், இதுவே பெரிய சாதனை. ISL தொடர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூரில் பிரபலமடைந்துவரும் இந்த உலக விளையாட்டுக்கு, நம் தேசத்தில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இந்த உலகக்கோப்பை. மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் போட்டோக்களை Profile picture-ஆக வைத்துக்கொண்டு, மான்செஸ்டர் யுனைடெட், செல்சீ அணிகளின் ஜெர்சிகளைப் போட்டுக்கொண்டு தெருக்களிலும், பீச்களிலும் விளையாடிக்கொண்டிருக்கும் பல லட்சம் இந்திய சிறுவர்களுக்கும் யூத்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி இது. ப்ரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்களுக்கும், ஐ.டி இளைஞர்களுக்குமான கொண்டாட்டம் இந்தத் தொடர். 

ஆனால், எப்படியான வெற்றியை இந்தத் தொடர் பெற்றிடப்போகிறது? அது விளையாடுபவர்களிடத்தில் இல்லை... 130 கோடி பிரஜைகளிடத்தில் இருக்கிறது; நாம் எப்படி இந்தத் தொடரை ஆதரிக்கிறோம் என்பதில் இருக்கிறது. பொடியன்கள் விளையாடப்போகிறார்கள். பெக்காம் போல் ஃப்ரீ - கிக்கோ, ஜிடேன் போன்ற மேஜிக்கல் பாஸோ இவர்களால் செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த முடியாது. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் அந்தத் தாகம், கால்பந்தின் மீதான காதல்... நிச்சயம் நம்மை வசீகரிக்கக்கூடும். குழந்தையின் கிறுக்கலை ரசிக்கும் நம்மால், அந்தச் சிறுவர்களின் ஆட்டத்தையும் ரசித்திட முடியும். அவர்கள் அடிக்கும் சாதாரண கோல்களையும் கொண்டாட முடியும். ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு நம் குரலையும், தடுக்கி விழுபவனுக்கு நம் கரங்களையும் கொடுத்திட முடியும். கிரிக்கெட் மைதானங்களில் நீல நிற உடைக்காகக் குரல்கொடுக்கும் நம்மால், அதே நீல உடையோடு ஆடப்போகும் 21 இந்தியச் சிறுவர்களுக்கும் குரல் கொடுக்க முடியும்.

நான் நேசிக்கும் விளையாட்டை, நான் பிரமித்த ஒரு தொடரில் என் தேசம் விளையாடுவதைப் பார்க்கப்போகிறேன். அவர்கள் வெற்றி பெற வேண்டாம். கோல் அடிக்கக்கூட வேண்டாம். ஆனால், ஆதரவளிக்கப்போகிறேன். உலக அரங்கில் முதன்முதலாக இந்திய உடை அணிந்து கால்பந்தை உதைக்கும் அந்த வீரர்களுக்குக் குரல் கொடுக்கப்போகிறேன். நாளை இந்தத் தேசத்தில் `கால்பந்து' என்னும் அற்புத விளையாட்டு எழுச்சிபெற வேண்டும் என்ற ஆசையில் குரல் கொடுக்கப்போகிறேன். கால்பந்து மைதானத்தில் இன்னும் கொஞ்ச நாள்களில் ``இந்தியா... இந்தியா..." என்ற குரல் கேட்கும். அந்த நிமிடத்தில், என் வாழ்நாள் ஆசை நிறைவேறிவிடும். ஆனால், எனது குரல் தாண்டிக் கேட்கும் உங்கள் குரல்தான், கால்பந்தை உதைத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரம் இந்தியக் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும்!

Back The Blue

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு