Published:Updated:

அன்று பைக் திருடன்... இன்று கால்பந்தின் பிதாமகன்! #HBDZlatan

Zlatan Ibrahimovic
News
Zlatan Ibrahimovic

இப்ராஹிமோவிச்சின் பிறந்த நாளுக்காக 2017-ல் எழுதப்பட்ட கட்டுரை இது!

அர்ஜென்டினாவின் வீதிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்களைக் கண்டுவிட முடியும். மெஸ்ஸியையும் பார்சிலோனாவையும் ஆதரிக்கும் ரசிகர்கள் போர்ச்சுக்கல் நகரங்களில் நிச்சயம் இருப்பார்கள். ஆனால், இந்த இருவரையும் கொண்டாடாத ஓர் ஊர் இருக்கிறது. அது மால்மோ, ஸ்வீடனில் உள்ள ஒரு நகரம். அந்த ஊர் சிறுவர்களைப் பொறுத்தவரை `அவர்' ஒருவர்தான் ரோல்மாடல்; அவர்தான் கால்பந்தின் ஹீரோ. அவர்கள் கொண்டாடும் ஒரே பெயர் `ஸ்லாடன்' (ZLATAN). தங்கள் நகரத்தில் பைக் திருடிக்கொண்டிருந்து, பிறகு உலகம் வியக்கும் ஒரு நட்சத்திரமாக உயர்ந்து, வறுமையில் வாடும் தங்களையெல்லாம் போராடத் தூண்டும் அவர்தான் அவர்களுக்கு `கால்பந்துக் கடவுள்'. ஸ்லாடன் இப்ராஹிமோவிச் - கால்பந்து உலகின் `தனி ஒருவன்'!

மெஸ்ஸியின் ட்ரிபிள், ரொனால்டோவின் ஸ்கில்ஸ், பெக்காமின் ஃப்ரீ- கிக், ஜிடேனின் பாஸ் ஆகியவற்றைக் கண்டு சிலாகித்துக்கொண்டே இருப்பான் கால்பந்து வெறியன். அவனிடம் சென்று `ஸ்லாடனிடம் என்ன பிடிக்கும்?' எனக் கேட்டால், புன்னகையே பதிலாக வரும். காரணம், அவனால் ஸ்லாடனின் ஸ்பெஷல்களைப் பட்டியலிட முடியாது. ஏனெனில், அவர் ஒரு வாழும் மியூசியம். அவரது ஒவ்வொரு செயலும் அசைவும் வித்தியாசமானவை; கொஞ்சம் விநோதமானவை; தனித்துவம் வாய்ந்தவை; ஒவ்வொன்றும் ரசிக்கத் தூண்டுபவை. களத்தில் இறங்கினால் கோல்கள் பறக்கும். பேட்டி கொடுத்தால் மைக்குகள் தெறிக்கும். கால்பந்து உலகம் கண்ட Unique வீரர் ஸ்லாடன். 

Zlatan's arrival in Paris
Zlatan's arrival in Paris

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

222 மில்லியன் கொடுத்து வாங்கி, நெய்மாருக்கு `காஸ்ட்லி வீரர்' என்ற அடையாளத்தைக் கொடுத்தது பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி. ஆனால், உலக அரங்கில் அந்த அணிக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் ஸ்லாடன் இப்ராஹிமோவிச். 31 வயதில் அந்த அணியுடன் ஒப்பந்தமாகிறார். `வயதாகிவிட்டது. கடைசிக் காலத்தை பிரான்ஸில் நிம்மதியாகக் கழிக்க வருகிறார்' என்றார்கள். ``வயசானாலும் என் ஸ்டைலும் திறமையும் என்னைவிட்டுப் போகாது" என்று சொல்லாமல் சொன்னார். அந்த அணிக்காக 180 போட்டிகளில் 156 கோல்கள். ஒரு பட்டத்துக்கு ஏங்கியிருந்த அணிக்கு நான்கு ஆண்டுகளில் 12 பட்டங்கள் வென்று தந்தார். PSG அணியின் சரித்திரம், `நெய்மாருக்கு முன், நெய்மாருக்குப் பின்' என எழுதப்படாது. அது `ஸ்லாடனுக்கு முன், ஸ்லாடனுக்குப் பின்' என்றுதான் எழுதப்படும். கால்பந்தை தீவிரமாகப் பார்க்காதவர்களுக்கு இவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவரின் திறமைக்கு சாம்பிளாக இந்த வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு, அடுத்த பத்தியைப் படிக்கத் தொடங்குங்கள்...

இப்படியொரு கோல் வேறு எந்த ஒரு ஜாம்பவானாலும் சாத்தியமில்லை. ஸ்லாடனால் மட்டுமே முடியும். அனைவரும் ஆடுவதைப்போல் ஆடுவது அவரது ஸ்டைல் அல்ல. அவரது ஸ்டைல் தனி ஸ்டைல். அவரது ஆட்டம் தனியாகத் தெரியும். எப்பேர்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் தங்கள் ஸ்கில்களை பாக்ஸுக்கு வெளியேதான் காட்டுவார்கள். பாக்ஸுக்குள் கோலடிக்க முயல்வது வழக்கமான ஷாட்கள் மூலம்தான். ஆனால், ஸ்லாடன் பாக்ஸுக்குள்தான் வித்தையே காட்டுவார். காலணியின் அடிப்பகுதியைக் கொண்டுகூட பல கோல்கள் அடித்து அசத்தியவர். `குங்ஃபூ கிக்' ஸ்லாடனின் ஸ்பெஷல்களில் ஆகச்சிறந்தது. டேக்வாண்டோ கற்றுத் தேர்ந்தவராயிற்றே. ஆனால், அவற்றையெல்லாம்விட ஸ்பெஷல் அவரது Attitude.

இவரைப் போன்ற Attitude கொண்டுள்ள ஒரு வீரரைக் கண்டிட முடியாது. தற்பெருமைகொண்டவர், கோபக்காரர், சண்டைக்கோழி. இதன் காரணமாகவெல்லாம் இவரை அவ்வளவு சீக்கிரம் வெறுத்திட முடியாது. ஒருவரை இகழ்ந்து இவர் சொல்வதை தன்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்வதைக்கூட நம்மால் ரசிக்க முடியும். அவருக்குள் ஷேக்ஸ்பியர் ஒளிந்திருக்கிறாரோ என்றுகூடத் தோன்றும். கால்பந்து உலகமே கொண்டாடும் பயிற்சியாளர் கார்டியாலோ. அவர் பயிற்சியின் கீழ் விளையாடாத வீரர்கள்கூட அவரைப் புகழ்வர். ஆனால், ஸ்லாடனைப்போல் கார்டியாலோவை வறுத்தெடுத்த ஆள் நிச்சயம் இருக்க முடியாது.

பார்சிலோனா அணியில் அவர் ஆடியபோது இருவருக்கும் முட்டிக்கொள்ள, பிறகு ஒருமுறை அவரைப் பொளந்துகட்டினார். ``யாருய்யா அவன், சும்மா கண்ணீர், வியர்வை, ரத்தம்னு பேசிட்டிருக்கான்" என்று பொறிந்த அவர், ``அவர் ஃபெராரியை வாங்கிவிட்டு, அதை ஃபியட் காரைப்போல் ஓட்டினார்" என்று சொல்ல பல மாதங்கள் டிரெண்டிங்கில் இருந்தது அந்த டயலாக். ``மெஸ்ஸி, இனியஸ்டா போன்றோரெல்லாம் ஸ்கூல் பையன்களைப்போல் கார்டியாலோ சொல்வதையெல்லாம் கேட்பார்கள். என்னால் அதெல்லாம் முடியாது" என்று தில்லாகக் கூறினார். இதே வார்த்தைகளை வேறொரு வீரன் சொல்லியிருந்தால் மெஸ்ஸியின் ரசிகர்கள் காலிசெய்திருப்பார்கள். இது ஸ்லாடன் ஆயிற்றே!

Zlatan Ibrahimovic
Zlatan Ibrahimovic

சொற்களால் மட்டுமல்ல, நேரடியாகவும் பலரைத் தாக்கி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் ஸ்லாடன். சர்வதேசப் போட்டி ஒன்றில் ஆடியபோது, தன் க்ளப் வீரரைத் தாக்கினார். பயிற்சியின்போது சொந்த அணி வீரர்களையே தாக்கியுள்ளார். போட்டிகளில் எதிர் அணி வீரர்களைப் பதம்பார்த்துள்ளார். பலரையும் அடித்துள்ளார், உதைத்துள்ளார், மிதித்துள்ளார். சேரியில் இருந்து வந்தவர். ஏழ்மையை, வறுமையை, புறக்கணிப்பை அனுபவித்துவந்தவர். வாழ்க்கையின் மறுமுகத்தை, கோரமுகத்தை அருகில் நின்று பார்த்துணர்ந்தவர். 

ஸ்லாடனின் அப்பா, போஸ்னியாவைச் சேர்ந்தவர். அம்மா குரோஷியா. 1981-ம் ஆண்டில் ஸ்லாடன் பிறக்க இரண்டு ஆண்டுகளில் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். முதலில் அம்மாவுடன்தான் இருந்தான். அரவணைப்பு கிடைக்கவில்லை. பல நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட, வெளியில் இருந்த மைதானம் அவனுக்கு உறைவிடம் ஆனது. சிறிது காலத்தில் உலகமாகவும் ஆனது. ஒரு பிரச்னை காரணமாக அப்பாவுடன் வளரத் தொடர்கிறான். அவர் தன் பிரச்னைகளில் மூழ்கிக்கிடக்க, தனிமையும் ஏழ்மையும் மொத்தமாக அவனை ஆட்கொண்டது. ரோஷன்கார்ட் நகரச் சிறுவர்களோடு சேர்ந்துகொண்டு சைக்கிள், பைக்குகள் திருடத் தொடங்கினான். கால்பந்து பொழுதுபோக்காகவும், திருட்டு ஒரு தொழிலாகவும் மாறிப்போனது. ``அவன் நல்ல திறமையான திருடன்'' என அவன் நண்பர்களே கூறுகிறார்கள். அவனை சரிசெய்ய, அவனைக் கால்பந்து பயிற்சியில் பயிற்சியாளர் மூழ்கடிக்க, ஒருநாள் அவர் வண்டியையே களவாடிச் சென்றானாம் இளம் ஸ்லாடன். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்தின் மீது கவனம் செலுத்த, தன் கோபம், முரட்டுத்தனத்துக்கெல்லாம் களத்தில் வடிவம் கொடுத்தான். மெஸ்ஸி, ரொனால்டோவைபோல் தன் பதின் பருவத்திலேயே பெயர் பெற்றவன் அல்ல அவன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் செதுக்கிக்கொண்டான். இதோ இன்று 33 பதக்கங்கள் வென்று, க்ளப்களுக்காக அதிகப் பதக்கங்கள் வென்றவர்கள் பட்டியலில் அவர்களுக்கு முன் நிற்கிறான்.

இப்படியொரு சூழலில், பின்புலத்திலிருந்து வந்ததால்தான் ஸ்லாடனிடம், அந்தக் கடுமையான குணம், சண்டையிடும் போக்கு அனைத்தும் மிகுதியாக இருக்கின்றன. தன் பிரச்னைகளிலிருந்து மீண்டு வர, அவன் கவனித்தது முகம்மது அலியை. அவரது போர்க்குணம் அப்படியே இவனுக்குள் புகுந்தது. தன்னை நிலைநாட்டிக்கொள்ள தன் பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டதால் அவன் போராளியாகவே தன்னை வெளிப்படுத்தினான். ஸ்வீடன் அகராதியில், `ஆகச்சிறந்த திறமையால் ஒரு செயலைச் செய்வது' என்பதைக் குறிக்க `To Zlatan' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவரது  சுபாவம் பலம்வாய்ந்தது. ஸ்லாடனின் சண்டைகளைவிட, சச்சரவுகளைவிட ஸ்லாடனின் பேட்டிகள் எல்லாம் மரண வைரல். அதற்காகவே அவரது ரசிகர்கள் ஆனவர்களும் உண்டு. கூகுளில் `Zlatan quotes' என டைப் செய்தால் போதும், அருவியாகக் கொட்டும். அந்தப் பேட்டிகள்கூட ஸ்லாடனின் தனித்துவத்தை அழகாக எடுத்துரைக்கும்.

ஆர்சனல் க்ளப் ப்ரீமியர் லீகில் மாபெரும் சக்தியாகக் கிளம்பிக்கொண்டிருந்தது. அப்போது ஸ்லாடனுக்கு வயது 17. கால்பந்து அணிகள் இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு `trial' பார்ப்பது வழக்கம். ஆர்சனல் அணியின் பயிற்சியாளர் ஆர்சன் வெங்கர், ஸ்லாடனை trials-க்கு அழைக்கிறார். மாபெரும் அணியின் மிகச்சிறந்த பயிற்சியாளர் அழைக்கிறார். புறக்கணிக்கிறான் ஸ்லாடன். வெங்கருக்கு ஆச்சர்யம்... அதிர்ச்சி! `ஸ்லாடன் trials-க்கு எல்லாம் வர மாட்டான்' என்று ஸ்லாடன் கூறியபோது, அவன் வயது 17. வெங்கருக்குச் சொன்ன பதில் ஒட்டு மொத்த கால்பந்து உலகையும்  ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தில், அந்த கெத்து... அதான் ஸ்லாடன்!

அவர் எப்போது பேசினாலும், தன்னையே மூன்றாம் நபர்போலத்தான் குறிப்பிடுவார். உதாரணமாக, `இது என்னுடையது' என்று கூற மாட்டார். `இது ஸ்லாடனுடையது' என்பார். இப்படி அனைத்திலும் அவர் தனித்துவமானவர். தன்னை எந்த இடத்திலும் உயர்த்தித்தான் பேசுவார். எரிக் கான்டோனா, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் கேப்டன். `கிங் ஆஃப் மான்செஸ்டர்' என்று அழைக்கப்பட்டவர். ``அவரைப்போல் நீங்களும் மான்செஸ்டரின் கிங் ஆவீர்களா?'' என்று கேட்க, ``No, I will be God of Manchester" என்று அவர் பதிலளிக்க, மெர்சலாகினர் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள். இதுதான் ஸ்லாடன். தனக்கு மேலானவர் எவருமே இல்லை என நினைப்பவர். பொதுவாகவே `நான்' என்ற அகந்தையை வெறுக்கும் இந்த உலகம், ஸ்லாடனின் அகந்தையை மட்டும் ரசிப்பது விநோத முரண்.

Zlatan Ibrahimovic
Zlatan Ibrahimovic

மூர்க்கத்தனுமும் தற்பெருமையும் நிறைந்தவர் என அவரை ஒதுக்கிவிட முடியாது. இதுதான் ஸ்லாடன் என்று நீங்கள் நினைத்தால், அது அல்ல அவர். ஏனெனில், அவர் ஸ்லாடன். ``என்னால் அமைதியாகவும் இருக்க முடியும்" என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பலமுறை தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த அந்த `ஸ்வீட்' மிருகத்தையும் நடமாடவிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு ஒரு போட்டியில் கோல் அடித்த ஸ்லாடன், அதைக் கொண்டாட தன் ஜெர்சியைக் கழற்றினார். வழக்கமாக அவர் உடலை அலங்கரித்திருக்கும் டாட்டூக்களுக்கு நடுவே பல புதிய `temporary' டாட்டூக்கள். பெயர்கள்போல் தெரிந்தன. ஆம், உலகெங்கும் பசியால் செத்துக்கொண்டிருக்கும் 50 பேரின் பெயர்களை தன் உடலில் பச்சை குத்தியிருந்தார் இந்தச் சண்டைக்காரர். பசியின் கொடுமையை உலகுக்கு உணர்த்த...

மாற்றுத்திறனாளிகள் உலகக்கோப்பை கால்பந்துக்கு ஸ்வீடன் வீரர்களை அனுப்ப காசு இல்லை. ஸ்வீடன் சீனியர் அணி வீரர்களின் ஜெர்சிகளை வாங்கி, அதை ஏலத்தில்விட்டு பணம் ஏற்பாடு செய்யத் திட்டுமிட்டு வீரர்களிடம் கேட்கின்றனர். ஒருசில வீரர்கள் அதற்கு உதவ, தங்கள் ஜெர்சியை அளித்தனர். ஸ்லாடனிடம் வந்து கேட்கிறார்கள். அவருக்குக் கோபம். ``ஒரு ஜெர்சி எவ்வளவு தொகை பெற்றுத்தரும்?" கத்திக்கொண்டே  51,000 அமெரிக்க டாலர்களை எடுத்து நீட்டுகிறார்.

அவர் தன் ஜெர்சியில் `இப்ராஹிமோவிச்' என்று எழுத, காரணம் இருக்கிறது. தன் தாயின் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர் ஏன் தந்தை வழி வந்த பெயரைக்கொண்டிருக்க வேண்டும்? அதுதான் அவர் எங்கிருந்து வந்தார் என்பதற்கான அடையாளம். தான் எங்கிருந்து வந்தோம் என்பதை உலகம் உணர்ந்துகொள்ள, தான் வளர்ந்த இடத்தில் இருப்பவர்கள் `ஸ்லாடனால் முடியுமென்றால், நம்மாலும் முடியும்' என்று நம்பிக்கைகொள்ள, ஸ்லாடன் என்று முன்பு எழுதியிருந்ததை மாற்றினார் இவர்.

Zlatan Ibrahimovic
Zlatan Ibrahimovic

அர்ஜென்டினாவின் வீதிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்களைக் கண்டுவிட முடியும். மெஸ்ஸியையும் பார்சிலோனாவையும் ஆதரிக்கும் ரசிகர்கள் போர்ச்சுக்கல் நகரங்களில் நிச்சயம் இருப்பார்கள். ஆனால், இந்த இருவரையும் கொண்டாடாத ஓர் ஊர் இருக்கிறது.தான் வளர்ந்த இடத்திலிருந்து இன்னொருவன் பைக் திருடப் போய்விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அதனால் ரோஷன்கார்டில், சிறுவர்கள் விளையாட `ஸ்லாடன் கோர்ட்' என்ற சிறு கால்பந்து அரங்கம் அமைத்துக்கொடுத்துள்ளார். தான் முதன்முதலாக விளையாடிய FBK Balkan அணிக்கு இன்னும் உதவிவருகிறார். அவரைப் பொறுத்தவரை தன்னால் முடிந்தது, அங்குள்ள எந்தச் சிறுவனாலும் முடியும். அவர்கள் அனைவரும் தான் தொட்ட உயரம் தொட வேண்டும். அவ்வளவே. இந்தக் குணங்கள்தான் அவரின் நெகட்டிவ்களை முற்றிலுமாகப் புறந்தள்ளி அவரை ரசிக்கவைக்கிறது; அவருக்கு வெற்றியை வழங்கியது. ஸ்லாடன் செய்த பல சாதனைகள் யாராலும் செய்ய முடியாதவை. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆறு வேறு அணிகளுக்காக கோல் அடித்துள்ள ஒரே ஆள் ஸ்லாடன்தான். இந்த ஆண்டு அது ஏழாகக்கூட ஆகலாம். இந்தச் சாதனைகளைத் தாண்டி ஸ்லாடனின் கோல்கள், அவர் செய்து சாகசங்கள் வேற லெவல். 

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் ஸ்லாடன், கடந்த ஏப்ரல் மாதம் காயமடைந்தார். ``இன்னும் ஒரு வருடம் ஆகிவிடும். ஸ்லாடனின் கால்பந்து வாழ்க்கை முடிந்தது" என்றார்கள். மான்செஸ்டர் அணியும் அவரது ஒப்பந்தக் காலம் முடிந்ததும், கல்தா கொடுத்தது. அவர் அணிந்திருந்த 9-ம் நம்பர் ஜெர்சியை அவர் அனுமதியோடு தனதாக்கினார் லுகாகு. விடுவாரா ஸ்லாடன்? `மான்செஸ்டரின் கடவுள் ஆவேன்' எனச் சொன்னவராயிற்றே. சாதாரணமாகப் போய்விடுவாரா என்ன? பரபரவென தன்னைத் தயார்படுத்தினார். ஐந்தே மாதங்களில் அவர் ரெடி. மீண்டும் அவரை வான்ட்டடாக ஒப்பந்தம் செய்தது யுனைடெட். ரூனி விட்டுச் சென்ற 10-ம் நம்பர் ஜெர்சி, இப்போது அவருடையது. ட்வீட்டினார் - `I never left. I just upgraded my number'. மீண்டும் அதிர்ந்தது மான்செஸ்டர். இதுதான் ஸ்லாடன்!

 ஸ்லாடன் ஒருமுறை சொன்னது, ``நான் கண்ணாடி முன்பு நின்றால், என் கண்களுக்கு எதுவுமே தெரியாது. ஏனெனில், இந்த உலகத்தில் ஒரே ஒரு ஸ்லாடன்தான்" என்றார். உண்மை. மெஸ்ஸிக்கு முன்பு மரடோனா இருந்தார். இப்போது நெய்மார். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முன்பு ரொனால்டோ நஸாரியோ இருந்தார். இப்போது எம்பாப்பே எழுந்துகொண்டிருக்கிறார். எப்படிப்பட்ட வீரனைப்போலவும் முன்பு ஒருவர் இருந்துள்ளனர். புதிதாக ஒருவர் பிறக்கிறார். ஆனால், ஸ்லாடனைப்போல்! அவருக்கு முன்பும் அப்படி ஒருவர் இருந்ததில்லை. இனியும் ஓர் ஆள் பிறக்கப்போவதில்லை. Because Zlatan is Zlatan!

ஹேப்பி பர்த்டே ஸ்லாடன்!