Published:Updated:

மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!

மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!
மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!

மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, உலகின் டாப் மோஸ்ட் கால்பந்து க்ளப்புகள் கலந்துகொள்ளும் 2017-18 சீஸனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனா, ஃபிரான்சின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஜெர்மனியின் பேயர்ன் முனிச், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ அணிகள் தொடக்க ஆட்டத்திலேயே பட்டையைக் கிளப்பின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் யுவெண்டஸ் அணி, பார்சிலோனாவிடம் மண்ணைக் கவ்வியது.ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோமா அணிகளுக்கிடையான ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, தன் கரியரில் முதன்முறையாக யுவென்டஸ் கோல் கீப்பரான ஜாம்பவான் புஃபோனுக்கு எதிராக கோல் அடித்து முத்திரை பதித்தார். 

மெஸ்ஸி மேஜிக்... வீழ்ந்த யுவென்டஸ்!

மற்ற ஆட்டங்களை விட பார்சிலோனா - யுவென்டஸ் அணிகள் மோதிய ஆட்டமே முக்கியமானது. ஏனெனில் இரு அணிகளுமே சம பலம் வாய்ந்தவை. முந்தைய 2016-17 சாம்பியன்ஸ்லீக் சீசனில் கடைசியாக இரு அணிகளும் காலிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் மோதிக்கொண்ட போது யுவென்டஸ், பார்சிலோனாவை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்திருந்தது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக நேற்று நடந்த போட்டியில் பார்சிலோனா, யுவெண்டஸை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பழிதீர்த்தது. 

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பார்சிலோனா அணி, தேவையான நேரத்தில் கவுன்ட்டர் அட்டாக்கில் ஈடுபடத் தவறவில்லை. இருந்தாலும் யுவென்டஸ் கீப்பரான அனுபவ புஃபோனை தாண்டி பந்து செல்லவில்லை. காயத்தால் ஆடாத கெலினி, சம்மர் டிரான்ஸ்பரில் மிலன் அணிக்கு மாறிவிட்ட பொனூச்சி இல்லாத யுவென்டஸின் தடுப்பு அரணில் இருந்த ஓட்டைகளை பயன்படுத்திய பார்சிலோனா வீரர்கள் ஈசியாக கோல் பாக்சிற்கு முன்னேறினர். கோல் இன்றி கழிந்த முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் யுவென்டஸின் டெட்லாக்கை உடைத்து பந்தோடு முன்னேறிய மெஸ்ஸிக்கு சுவாரஸ் சூப்பராக அசிஸ்ட் செய்ய, பந்தை வலையின் வலது கீழ் மூலையில் திணித்து மெர்சல் செய்தார் மெஸ்ஸி. இதுதான் புஃபோனுக்கு எதிராக மெஸ்ஸி தனது கரியரில் அடித்த முதல் கோல்.

இரண்டாம் பாதியில் 57-வது நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் யுவென்டஸ் டிஃபெண்டர்களை ஏமாற்றி விட்டு பந்தோடு பாக்சிற்குள் நுழைந்தார். ஆனால் இம்முறை பந்தை சுவாரஸுக்கு பாஸ் செய்ய, அதை யுவென்டஸ் டிஃபெண்டர் கிளியர் செய்தார். ஆனாலும் பாக்ஸை விட்டு வெளியேறாமல் இருந்த பந்தை சூப்பராக வலைக்குள் அனுப்பி ,அற்புதமான கோலாக மாற்றினார் பார்சிலோனா மிட்ஃபீல்டர் இவான் ராகிடிச். தொடர்ந்து அருமையாக விளையாடிய மெஸ்ஸி 69-வது நிமிடத்தில் மூன்று டிபெண்டர்களை ஏமாற்றி விட்டு பந்தை அதே வலையின் வலது கீழ் மூலையில் திணித்து தன் இரண்டாவது கோலை பதிவுசெய்து அட்டகாசப்படுத்தினார்.

கடைசி நேரத்தில் விழித்துக் கொண்டாலும் முன்னதாக பல வாய்ப்புகளை வீணடித்த யுவென்டஸ் அணியின் ஸ்டிரைக்கர்களால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. அதனால் யுவென்டஸ் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. 105 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்ட பார்சிலோனாவின் டெம்பல்லே முழு திறமையைக் காட்டவில்லை. பார்சிலோனாவின் நெல்சன் செமடூ, ஜோர்டி ஆல்பா, புஸ்கட்ஸ், ராகிடிச் மற்றும் இனியஸ்டா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுவாரஸ் தடுமாறினாலும், மெஸ்ஸி சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார். நெய்மாரின் விலகலுக்கு பின் சிறிது தடுமாறிய பார்சிலோனா மீண்டும் தன் பழைய பலத்தைக் காட்டியுள்ளது.

நெருப்பாய் எரித்த பிஎஸ்ஜி

ஸ்காட்லாந்த்தைச் சேர்ந்த செல்டிக் அணியை அதன் சொந்த மண்ணிலேயே  5-0 என்ற கோல் கணக்கில் பொசுக்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். பி.எஸ்.ஜி-யின் டெட்லி அட்டாக்கிங் கூட்டணியான நெய்மார், எடின்சன் கவானி மற்றும் கிலியன் எம்பாப்பே ஆகிய மூவருமே கோல் அடித்து அசத்தினர். 19-வது நிமிடத்தில் செல்டிக் அணியின் கோல் கீப்பரை ஏமாற்றி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார் நெய்மார். 34-வது நிமிடத்தில் கவானி மிஸ் செய்த பந்தை கோலாக்கி அசத்தினார் இளம் எம்பாப்பே.  41-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அனுபவ கவானி தவற விடவில்லை. 83-வது நிமிடத்தில் செல்டிக் வீரர் லுஸ்டிக் தவறுதலாக ஓன் கோல் அடித்து விட, ஆட்டத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி கோலை 85-வது நிமிடத்தில் பதிவுசெய்தார் கவானி. பெருந்தொகை கொடுத்து நெய்மாரையும், கிலியன் எம்பாப்பேவையும் வாங்கியதிலிருந்தே பி.எஸ்.ஜி- யின் அட்டாக் ரேட்டிங் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. அது இந்த ஆட்டத்திலும் தெளிவாகவே தெரிந்தது. மேலும் கவானியுடன் சேர்ந்து இருவரும் தீயாக வேலை செய்து பிரெஞ்சு லீக்- 1 தொடரிலும் கோல் மழை பொழிந்து வருகின்றனர்.

தெறிக்கவிட்ட செல்சீ

கடந்த வருடம் சாம்பியன்ஸ் லீக்கில் கலந்து கொள்ளாத செல்சீ, இம்முறை வெற்றியுடன் முதல் அடியை எடுத்து வைத்தது. அந்த அணியின் பெட்ரோ, ஜப்பகோஸ்டா, ஆஸ்பிளிக்யூட்டா, பாகயோகோ மற்றும் பாட்ஷுவாயி கோல் அடித்துக் கைகொடுக்க 6-0 என்ற கோல் கணக்கில் அஜெர்பெய்ஜான் நாட்டின் காராபாக் அணியை சூறையாடி அபார வெற்றி பெற்றது பிரீமியர் லீகின் நடப்பு சாம்பியன்!

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றிநடை

ஸ்விட்சர்லாந்தின் எஃப்.சி பேசல் அணியை எதிர்கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டனாக அணியை வழிநடத்திய பால் போக்பா காயத்தால் வெளியேறினாலும், அவருக்கு மாற்று வீரராக வந்த ஃபெலாய்னி 35-வது நிமிடத்தில் சூப்பர் ஹெடர் மூலம்  ஆட்டத்தின் முதல் கோலை பதிவுசெய்தார். பிறகு லுகாகுவும் தன் பங்குக்கு 53-வது நிமிடத்தில் கோல் அடிக்க, இறுதியில் இளம் ராஷ்ஃபோர்டு ஆட்டத்தின் இறுதி கோலை 84 வது நிமிடத்தில் அடித்து சுபம் போட்டார்.

பேயர்ன் முனிச் வெற்றி

பெல்ஜியத்தின் ஆண்டர்லெக்ட் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது பேயர்ன் முனிச். அந்த அணியின் ராபர்ட் லெவண்டோஸ்கி, ஜோஷ்வா கிம்மிச் மற்றும் தியாகோ கோல் அடித்தனர். பதில் கோல் திருப்ப பல வழிகளிலும் போராடிய ஆண்டர்லெக்ட் இறுதிவரை கோல் அடிக்காமல் தோல்வியைத் தழுவியது.

அட்லெடிகோ மாட்ரிட் டிரா

அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் ரோமா அணிகளுக்கிடையேயான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிவடைந்தது.

இன்று நள்ளிரவு ரியல் மாட்ரிட், லிவர்பூல், செவியா, டார்ட்மண்ட், நேபொலி, மொனாகோ உள்ளிட்ட முன்னனி அணிகள் தங்களின் 2017 சாம்பியன்ஸ் லீக் பயணத்தைத் தொடங்குகின்றன.

அடுத்த கட்டுரைக்கு