Published:Updated:

ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்!

ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்!

ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்!

Published:Updated:

ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்!

ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்!

ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்!

பார்சிலோனா, இந்தப் பெயரை தெரிந்தோ தெரியாமலோ சமீபத்தில் அதிகமாக கடந்து வந்த்திருப்பீர்கள். ஸ்பெயின் நாட்டின் டாப் இரண்டு கிளப்புகளில் ஒன்றுதான் பார்சிலோனா. புரியும்படி சொன்னால் கால்பந்து உலகின் மேஸ்ட்ரோவும், அர்ஜெண்டினா தேசிய அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி விளையாடிவரும் கிளப் அணிதான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்த பார்சிலோனா அணி. ஒரு காலத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்ற இந்த அணி  சமீபமாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பிரேசில் நட்சத்திரம் நெய்மாரின் விலகல், ரியல் மாட்ரிட் அணியிடம் பேக் டூ பேக் தோல்வி, அணி நிர்வாக  குழப்பம், வீரர்கள் தேர்வு என சமீபகாலமாக தொடர்ந்து சறுக்கிக் கொண்டிருக்கிறது. என்னதான் பிரச்னை, இனி என்ன செய்யப் போகிறது, சறுக்கலிலிருந்து மீண்டு வருமா பார்சிலோனா அணி!

பை பை நெய்மார்
கால்பந்து உலகத்தையே புரட்டிப்போட்டது, 222 மில்லியன்  யூரோக்களுக்கு வாங்கப்பட்ட நெய்மாரின் பிஎஸ்ஜி டிரான்ஸ்பர். இது பார்சிலோனா வீரர்கள் இடையே குழப்பத்தையும் தொய்வையும் ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத உண்மை. பணத்திற்காக நெய்மார் அணி மாறினார் என்று பார்சிலோனா நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டாலும் பார்சிலோனா நிர்வாகத்தின் பொறுப்பின்மைதான் நெய்மார் வெளியேறக் காரணம். நெய்மாரின் தந்தை கேட்ட போனஸ் தொகையை அளிக்காமல்  தண்ணி காட்டப்பட்டதே நெய்மார் வெளியேறக் காரணம் என்பது பரவலாக கூறப்படும் உண்மை.பிஎஸ்ஜி அணிக்கு மாறிய பிறகும் கூட மெஸ்சி ,சுவாரஸ் ஆகியோர் நெய்மாரை சந்தித்து பேசியுள்ளதால் வீரர்களுக்கிடையில் எந்த பிளவுமில்லை என்பது தெளிவாகிறது. பிஎஸ்ஜி அணிக்கு வந்த பிறகு பார்சிலோனா நிர்வாகம் தான், தான் வெளியேறக் காரணமென்றும்,பார்சிலோனா நிர்வாகத்தில் உள்ள பிரச்னை குறித்து பேச விரும்பவில்லை எனவும் நெய்மார் பேட்டி ஒன்றில் கூறியதன் பின்னால் பல காரணங்கள் இருப்பினும் முக்கியமான காரணம் தவறான முடிவுகளை எடுக்கும் பார்சிலோனா அணி நிர்வாகம் தான்  என்பதே உண்மை.

தொடர் தோல்விகள்
எப்போதும் அனல் பறக்கும் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையே நடைபெறும் எல் கிளாசிகோ என அழைக்கப்படும் போட்டிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்சிலோனா அணி மண்ணைக் கவ்வியது அந்த அணி நிர்வாகத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. ஸ்பானிஷ் சூப்பர் கப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜெரார்டு பிக்கே தெரியாமல் ஓன் கோல் அடித்துவிட அதையே தோல்விக்கான காரணமாக சொல்லியது பார்சிலோனா நிர்வாகம். இத்தனைக்கும் பிக்கே சிறு வயதிலிருந்தே பார்சிலோனா அணியில் விளையாடி அணியின் வெற்றிக்கு பல காலமாக தூணாக இருக்கும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மூத்த வீரர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் நிர்வாகத்தின் மேல் வீரர்கள் அதிருப்தியிலிருப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதன்  எதிரொலியே இந்த பேக் டூ பேக் தோல்விகள்.

தவறான முடிவுகள்
நெய்மார் போன்ற ஒரு சூப்பர்ஸ்டார் அந்தஸ்துள்ள ஒரு வீரரின் இழப்பை ஈடுகட்ட அவரைப்போல் சம பலமுள்ள வீரரை தேடுவதுதான் சாலச் சிறந்தது. பிலிப்பே கோடின்ஹோ தான் நெய்மாருக்கான மாற்று, ஓசுமானே டெம்பல்லே போன்ற இளம் வீரர்தான் நெய்மரின் இடத்தை நிரப்ப முடியும் என கால்பந்து உலகம் அறிவுரைத்த போது யாருமே எதிர்பாரா வண்ணம் 29 வயதான பிரேசில் வீரர் பாலின்ஹோவை ஒப்பந்தம் செய்து உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது பார்சிலோனா அணி நிர்வாகம். ஏனெனில் பாலின்ஹோ சொல்லிக்கொள்ளும்படியான வீரர் இல்லை, ஆனாலும் அவரை 40 மில்லியன் யூரோக்கள் கொடுத்து வாங்கி விமர்சனத்துக்குள்ளானது பார்சிலோனா நிர்வாகம். நல்ல வேளையாக அவரை நெய்மாருக்கான மாற்று என அறிவிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். டேனி ஆல்வஸ் சென்ற பின் ஏற்பட்ட டிபென்ஸ் ஓட்டையும் இன்னும் அப்படியேதான்  உள்ளது.  ஆக்ரோசமான தடுப்பாட்ட வீரரை வாங்கினால் மட்டுமே இந்த ஓட்டையை அடைக்க முடியும். ஆனால் இன்னும் அப்படிப்பட்ட ஒரு வீரரை தேடிக்கொண்டே இருப்பது தான் கடந்த தோல்விகளுக்கு காரணமாக விளங்குகிறது. நெய்மார், டேனி ஆல்வஸ் என திறமையான வீரர்களை ஜஸ்ட் லைக் தட் என வெளியேற்றிவிட்டு வெற்றியைத் தேடுவது காணல் நீரைப் பருக நினைப்பது போலத்தான்.

நிர்வாகம் தான் காரணமா
ஜோசப் மரிய பெர்டோமு தலைமையிலான பார்சிலோனா நிர்வாகம் தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்பது பார்சிலோனா ரசிகர்களின் கூற்று. சமயங்களில் அதை மெய்பிப்பது போலத்தான் இருந்தது பார்சிலோனா நிர்வாகத்தின் நடவடிக்கைகளும். நெய்மாரின் விலகல்,பாலின்ஹோ வருகை என எல்லாவற்றிலுமே விமர்சனத்துக்குள்ளானது அணி நிர்வாகம்தான். வீரர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பார்சிலோனா நிர்வாகத்தின் மேல் தொடுக்கப்பட்டுள்ளது .பிக்கே, செர்ஜியோ புஸ்கட்ஸ் போன்ற வீரர்களின் பேட்டிகளும் அதைதான் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன. வீரர்களுக்கு போனஸ் தொகை கொடுத்து ஊக்குவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியும், அணியின் தோல்விக்கு வீரர்களை மட்டுமே காரணமாக்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும், பாலின்ஹோ மாதிரியான நட்சத்திர அந்தஸ்து இல்லாத வீரருக்கு அதிக தொகை அளித்தது சரிதானா என்ற கேள்வியும் கால்பந்து வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களால் பார்சிலோனா அணி நிர்வாகத்திற்கு எதிராக எழுப்பப்படுகின்றன.

என்ன செய்யப்போகிறது நிர்வாகம்
‛பெர்டோமு வெளியேறு’ என்ற கோஷம் ஓங்கி ஒலித்தாலும் வழக்கம் போல் சர்ச்சைகளுக்கு பதிலளிக்காமல் சமாளிக்கிறது பார்சிலோனா நிர்வாகம். நெய்மாரின் இழப்புக்கு ஈடுசெய்ய புதிய வீரர்களை தேடிக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமே ஆறதல். கோடின்ஹோ,ஓசுமானே டெம்பல்லே ,ஜீன் செரி என டார்கெட்டுகள் பலமாக இருந்தாலும் டெம்பல்லேவை தவிர வேறு எந்த வீரரும் இன்னும் உறுதியாக நெருங்கவில்லை. லிவர்பூல் அணி பிடி கொடுக்காததால் மூன்று முறை முயற்சித்தும் கோடின்ஹோவை வாங்க முடியவில்லை. சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் எர்னெஸ்டோ வெல்வெர்டே வின் வியூகங்களும் இன்னும் வீரர்களுக்கு செட் ஆகவில்லை அல்லது வீரர்கள் இன்னும் அவரின் ஸ்டைலுக்கு மாறவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் விரைவாக மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயத்திலுள்ளது பார்சிலோனா அணி. எப்படியும் ஜீன் செரி,கோடின்ஹோ போன்ற திறமையான வீரர்களை  ஒப்பந்தம் செய்து அட்டாக்கிங், டிபென்ஸ், மிட்ஃபீல்ட் என அனைத்து ஏரியாக்களிலும் முன்னேற முயற்சிக்க வேண்டும் பார்சிலோனா அணி. ஆனால் நிர்வாகம் அதற்கு ஒத்துழைப்பு நல்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


மிரட்டுவாரா ஓசுமானே டெம்பல்லே

இறுதியாக பல போராட்டங்களுக்கு பின்பு பொருஷியா டோர்ட்மண்ட் அணியிலிருந்து பிரான்சு நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் ஓசுமானே டெம்பல்லேவை 105 மில்லியன் யூரோக்களுக்கு  வாங்கி கால்பந்து ரசிகர்களையும் பார்சிலோனா ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளது பார்சிலோனா அணி நிர்வாகம் . நெய்மாரின் 11 ம் நம்பர் ஜெர்சியை அணியவுள்ள,  நெய்மாரைப்போலவே இளமையும் திறமையும் கொண்ட  டெம்பல்லே உண்மையிலேயே நெய்மாருக்கு மாற்றாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

கிடைக்குமா கம்பேக்
கால்பந்து உலக வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் பட்டியலில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் பார்சிலோனா அணி ஒரு காலத்தில் கால்பந்து உலகத்தையே ஆண்டது. புயோல், ஜாவி ,மெஸ்சி போன்ற ஜாம்பாவான்களை உருவாக்கி அவர்களின் கூட்டுமுயற்சியால் பல வெற்றிகளைக் குவித்த பார்சிலோனா அணி  இப்போது  சூப்பர்ஸ்டார் மெஸ்சியை மட்டுமே வைத்துக்கொண்டு கூட்டுமுயற்சி இல்லாமல் தடுமாறுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மைதான் என்றாலும் தடுமாற்றத்திலிருந்து தடம் மாறி மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் என்பது உலக பார்சிலோனா ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. தலைசிறந்த அணிகளுள் ஒன்றான பார்சிலோனா நிச்சயம் மீண்டு வரும் என்பது கால்பந்து நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது .

மீண்டு வா பார்சிலோனா!