Published:Updated:

`இதைப் பொறுத்துக்கொள்ளப் போகிறோமா?' - நோபால் சர்ச்சையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் #SAvENG

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பௌலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நோபால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஜோஃப்ரா ஆர்ச்சர்

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 284 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 175 ரன்கள் முன்னிலைபெற்றிருக்கிறது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
AP

இரண்டாம் நாள் ஆட்டநேரத்தில் 5 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளசிஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து, அந்த அணியின் நைட் வாட்ச்மேனாக பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே களமிறங்கினார். இரண்டாவது இன்னிங்ஸின் 19-வது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர், அந்த ஓவரின் கடைசி பந்தை ஸ்லோ ஃபுல் டாஸாக வீசினார். இது, பேட்ஸ்மேனின் தலையை நோக்கி பீமராகப் பறந்தது. உயரம் காரணமாக அந்தப் பந்தை கள நடுவர்கள் நோ பாலாக அறிவித்தனர். இதையடுத்து, அடுத்த பந்தையும் ஃபுல் டாஸாகவே ஆர்ச்சர் வீச, இந்த விவகாரம் சர்ச்சையானது. அதையும் களத்தில் இருந்த நடுவர் பால் ரீஃபில் நோபாலாக அறிவித்தார். பின்னர், இரண்டாவது பந்தை நோபாலாக அறிவித்த தனது முடிவை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

`அவர்களின் ஆதரவு என்னை கவர்ந்தது; அந்த ஒருவரைத் தவிர!’- நியூசிலாந்தில் நிறவெறியால் கலங்கிய ஆர்ச்சர்

ஐசிசி விதிமுறைப்படி டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் அடுத்தடுத்த பந்துகளை அதிக உயரத்தில் பேட்ஸ்மேனை நோக்கி ஃபுல் டாஸாக வீசினால், அந்த இன்னிங்ஸில் அவர் பந்துவீசுவதைத் தடை செய்யலாம். ஜோஃப்ரா ஆர்ச்சர் விவகாரத்தில், கள நடுவர் தனது முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் தடையிலிருந்து அவர் தப்பினார்.

ஆன்ரிச் நோர்ட்ஜே
ஆன்ரிச் நோர்ட்ஜே
AP

இதுகுறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர், ``களத்தில் அப்போது என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால், போட்டிக்குப் பின் அதுகுறித்து ஒரு விவாதமே நடந்தது. என்னைப் பொறுத்தவரை, நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில், இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் நமது விளையாட்டு இருக்க வேண்டும். இந்த விவகாரத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோமா அல்லது இதுபோன்ற மனநிலையைப் பொறுத்துக்கொள்ளப் போகிறோமா? அதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு நடுவர்களிடம் இருக்கிறது'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.