ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

சி.எஸ்.கே சறுக்கியது ஏன்?

தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
தோனி

சென்னை அணியின் மிகப்பெரிய பலம் அதன் கோர் டீம் எனப்படும் மைய வீரர்கள்தான். தோனி, ரெய்னா, ஜடேஜா இவர்கள் மூவரைச் சுற்றி இன்னும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள்

கிரிக்கெட் பற்றி ஒவ்வொருமுறை எழுதுவதற்கு முன்பும் ஒரு தாளில் தேவையான தரவுகளை, தகவல்களைக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்வது என் வழக்கம்.

அப்படி தோனி ஓய்வு அறிவித்தபோது அவரின் சாதனை களைப் பட்டியலிட்ட அதே தாளின் மறுபக்கத்தில்தான் இன்று அவர் சி.எஸ்.கே-வை வழிநடத்தும்போது செய்த தவறுகளையும் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, நிஜத்தில் எல்லாருமே தோனி தலைமைத்துவத்தின், சி.எஸ்.கே அணியின் மறுபக்கத்தை கவலையும் கண்ணீரும் கோபமுமாகப் பார்த்த முதல் தொடர் இது.

‘ஐ.பி.எல்னா என்னாப்பா? - ஏழு டீம் கஷ்டப்பட்டு சண்டை போட்டு ப்ளே ஆஃப்புக்கு வந்து சி.எஸ்.கேவோட சண்டை செய்ற லீக்’ - இதுதான் ஐ.பி.எல் தொடர்பான இத்தனை ஆண்டுக்கால பார்வைகளின், விமர்சனங்களின், ரிப்போர்ட்களின், மீம்களின் உள்ளடக்கமும். இவ்வளவுதான். ஆனால், இனிமேல் இப்படிப் பெருமையாக மஞ்சள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள சென்னை ரசிகர்களால் முடியாது. மற்ற அணி ரசிகர்களை, ‘அடுத்து சென்னை கூடவா மேட்ச்? போச்சு’ எனப் புலம்ப வைத்த சிங்கத்தின் கர்ஜனை இனி பழைய வீரியத்தில் எதிரிகளை பயமுறுத்தாது. ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக ப்ளே ஆஃப்பிற்குத் தகுதி பெறாமல் வெளியேறியிருக்கிறது சென்னை.

‘ஒரே ஒருதடவை மிஸ்ஸாகிடுச்சு. இதுக்கு இவ்ளோ கோபமா?’ எனச் சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கோபத்திற்குக் காரணமும் சென்னை அணிதான். இத்தனை சீசன்களாக வெற்றிக்கு மட்டுமே தன் ரசிகர்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது சென்னை. வெற்றி ஒரு அதீத போதை. அதனால்தான் ஆற்றாமையில் பொங்கித்தீர்க்கிறார்கள் ரசிகர்கள். மற்ற அணி ரசிகர்களுக்குப் பழகிப்போன தோல்விகள் சென்னை ரசிகர்களை வந்தடைய 11 முழு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. தோல்வியின் வாசம் இத்தனை ஆண்டுகள் நம்மை அண்டாமல் அரணாய் நின்றவர்கள் துவளும்போது தூக்கிவிட்டு ‘இதெல்லாம்தான் தப்பாயிடுச்சு. அடுத்த தடவை பாத்துக்கலாம்’ எனத் தட்டிக்கொடுப்பதுதானே நியாயம்? நாம் அதை மட்டும்தான் செய்கிறோமா?

தோனி
தோனி

எக்கச்சக்க கொண்டாட்டங்களை, நெகிழ்ச்சித் தருணங்களை, கோப்பைகளை, நண்பர்களை நமக்குக் கொடுத்த சென்னை அணிக்கு இந்தத் தருணத்தில் நாம் திருப்பிக்கொடுக்க வேண்டியது நிறைய அன்பையும் சொல்லியே ஆகவேண்டிய விமர்சனங்களையும்தான். சரி, தவற்றுக்கு அப்பாற்பட்ட வெளிக்கு விளையாட்டில் இடமில்லையென்பதால் தனி நபர் தாக்குதல்களை விடுத்து இந்தப் பத்தியின் முதல் மூன்று வரிகளை விரிவாகப் பார்ப்பது மட்டுமே அடுத்தடுத்த சீசன்களில் சென்னை அணியை மேலும் பலம் வாய்ந்த அணியாக உருவாக்கும்.

எங்கே மிஸ்ஸானது ப்ளே ஆஃப்?

சென்னை அணிக்கு முதல் சறுக்கல் இடமாற்றத்தில் வந்தது. சேப்பாக்கம் மைதானத்தை மனதில் வைத்தே ஒவ்வொரு முறையும் ஏலத்தை அணுகும் சென்னை அணி நிர்வாகம். அங்கே நடக்கும் ஏழு போட்டிகளில் ஐந்து, ஆறு போட்டிகளில் வென்றாலே போதும். மீதி மூன்று வெற்றிகளை மற்ற மைதானங்களில் அதிக நெருக்கடி இல்லாமல் பெற்றுவிடலாம் என்பதுதான் கணக்கு. பியூஷ் சாவ்லா பல கோடிக்கு எடுக்கப்பட்டதன் காரணமும் சேப்பாக்கம் ஸ்பின்னர்களின் சொர்க்கபுரி என்பதால்தான். யு.ஏ.இ மைதானங்கள் ஸ்லோ பிட்ச் எனச் சொல்லப்பட்டாலும் தொடரின் முதல் பாதியில் அது ஸ்பின்னர்களுக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடரின் சிறந்த ஸ்பின்னரான ரஷித் கான் முதல் ஐந்து ஆட்டங்களில் ஐந்து விக்கெட்கள்தான் எடுக்க முடிந்தது. சாஹலும் ஐந்து ஆட்டங்களில் ஆறு விக்கெட்கள்தான் எடுத்திருந்தார். ஸ்பின்னர்களைப் பெரிதாக நம்பும் சென்னை அணி முதல் பாதியில் நிறைய ஆட்டங்களைத் தோற்றதற்கு இதுவும் ஒரு காரணம்.

சென்னை அணியின் மிகப்பெரிய பலம் அதன் கோர் டீம் எனப்படும் மைய வீரர்கள்தான். தோனி, ரெய்னா, ஜடேஜா இவர்கள் மூவரைச் சுற்றி இன்னும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள் பிராவோ, டுப்ளெஸ்ஸி போல. இந்த மையக்குழு எல்லா அணிகளுக்கும் மிகவும் முக்கியம். பிட்ச், கோர் டீம் இவை இரண்டுதான் ஒவ்வொரு அணியின் பிளான் ஏ, பிளான் பி-க்கான காரணங்கள். அப்படிப்பட்ட மைய அணியில் விரிசல், அதன் காரணமாக ரெய்னா விலகல் போன்ற தகவல்கள் சென்னை வீரர்களை மனதளவில் நிறையவே குலைத்திருக்கும் என விமர்சகர்கள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தார்கள். அது களத்தில் நன்றாகவே எதிரொலிக்கவும் செய்தது. செட்டிலான பேட்டிங் ஆர்டரை டிஸ்டர்ப் செய்யவேண்டியதிருக்க, அது அணியின் பிளான் ஏ. பிளான் பி என இரண்டு திட்டங்களுக்கும் வேட்டு வைத்தது.

புதிதாக யோசிக்கவேண்டும். அதேசமயம் கோவிட் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள், அணியில் பலருக்கு கோவிட் தொற்று, அதனால் தாமதமான பயிற்சி என, தொடக்கம் முதலே நிறைய சறுக்கல்கள். அது தொடரின் முதல் பாதி முழுக்கவே அப்பட்டமாகத் தெரிந்தது.

சென்னை அணியின் ஏல முறையை கவனிப் பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். அணி நிர்வாகத்திற்கு பெயர்போன வீரர்கள் மட்டுமே இலக்கு. அவர்களைத் துரத்தித் துரத்தி வாங்கிவிட்டு அதன்பின் கணக்கிற்காக இளம் வீரர்களை வாங்குவார்கள். 2018 கம்பேக் சீசனிலும் இதே யுக்தியைப் பயன்படுத்தித்தான் கோப்பை வென்றது சென்னை. ஆனால் இந்தமுறை அது வேலைக்கு ஆகாததன் காரணம் சீனியர்கள் வீரர்கள் எல்லாரும் கடந்த ஓராண்டாகவே கிரிக்கெட் ஆடவில்லை என்பதுதான். வாட்சன், விஜய், தோனி என எல்லாரும் பெரிய பிரேக்கில் இருந்து திரும்பியிருந்தார்கள். ஹேண்ட் - ஐ கோ ஆர்டினேஷன் சுத்தமாகத் தப்பிப்போயிருந்தது.

தோனி
தோனி

‘டேலன்ட் ஸ்கெளட்டிங்’ என்பது உள்ளூர் வீரர்களின் திறமையை வளர்த்து அவர்களை ஐ.பி.எல் அணிகளுக்கான வீரர்களாக மாற்றுவது. மும்பை அணியின் சக்சஸ் பார்முலாவில் முக்கியமானது இது. ஆனால் சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் உள்ளூர் வீரர் இடம்பெறுவதென்பது குதிரைக் கொம்புதான். டி.என்.பி.எல் ஒருவகை டேலன்ட் ஸ்கெளடிட்ங்தான் என்றாலும் அதிலிருந்து தேர்வாகும் வீரர்கள் சென்னை அணியின் பெஞ்ச்சில் மட்டுமே இருப்பார்கள். திறமை வாய்ந்த நாராயணன் ஜெகதீசன் மூன்று சீசன்களில் முதல் ஆட்டத்தையே கடந்த வாரம்தான் ஆடினார். ஏகப்பட்ட விமர்சனங்களுக்குப் பின்தான் மகாராஷ்டிர வீரர் ருத்துராஜே களமிறக்கப்பட்டார். ஆசிஃப், பவுலிங் ஆல்ரவுண்டர் மோனுகுமார், சைத்தன்யா பிஷ்னோய், துருவ் ஷோரி போன்றவர்களுக்கும் இதுதான் நிலைமை. ஆனால் சீனியர்கள் எவ்வளவு சொதப்பினாலும் தொடர்ந்து வாய்ப்புகள் தரப்படும். ஒருபக்கம் வயதாவதால் முன்போல் பெர்பார்ம் செய்யமுடியாத வீரர்கள், மறுபக்கம் ஸ்பார்க் இல்லை எனச் சொல்லப்பட்டு வாய்ப்பு மறுக்கப்படும் இளம் வீரர்கள் - இந்த முரண்பாடு வெடித்ததன் விளைவே இந்த சீசன் தோல்வி.

தல போல வருமா?

இப்படிக் கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களையெல்லாம் ‘பழைய தல போல வருமா?’ என மாற்றிக் கேட்க வைத்திருக்கிறது தோனியின் பார்ம். கடைசி வரை இழுத்துச் சென்று வெற்றி பெறும் தோனியால் இப்போது அதைச் செய்யமுடியவில்லை. முன்பைவிட ஸ்பின்னை சமாளிக்க ரொம்பவே போராடுகிறார். தோனிக்கு பிட்னஸ் பிரச்னையே இல்லை என்றவர்களை திடுக்கிட வைத்திருக்கிறது அவரின் தடுமாற்றம். மொத்தத் தொடரிலும் மிகக் குறைந்த ரன்கள் இந்த சீசனில்தான். பிசிக்கல் பார்ம்தான் பிரச்னை என்பதில்லை. அவரின் மனவோட்டத்திலும் சிக்கல்கல் இருக்கின்றன. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிடிவாதமாக மறுத்தது, கேட்டதற்கு ஸ்பார்க் இல்லை என்றது, ஏழரைக் கோடி சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக கேதாரை திரும்பத் திரும்ப இறக்குவது, அதனாலேயே டி20-ல் ஆல்ரவுண்டரின் இடமான ஆறாவது இடத்தை அவருக்கு விட்டுக்கொடுத்து ஐந்தே பவுலர்களோடு களமிறங்கியது என ஏகப்பட்ட முரண்கள். இவற்றையெல்லாம் அவர் உணர்ந்தபோது ப்ளே ஆஃப் வாய்ப்பு கையைவிட்டுப் போயிருந்தது.

என்னவாகும் எதிர்காலம்?

பஞ்சாபிற்கு எதிராக சிக்ஸ் அடித்துவிட்டு தன்னைத் தானே அடித்துக்கொள்ளும் ஆக்ரோஷ தோனி, பெவிலியனிலிருந்து இறங்கிவந்து அம்பயரிடம் சண்டை பிடிக்கும் கோபக்கார தோனி, கம்பேக் பற்றிப் பேசும்போது சட்டெனக் குரல் உடைந்து கண்கலங்கும் பாசக்கார தோனி என சி.எஸ்.கே அவருக்கு ரொம்பவே நெருக்கம். அதற்காகவே, அவர் தனக்குப் பின்னால் ஒரு டீமை உருவாக்காமல் சட்டென விலகிவிடமாட்டார் என்பதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும். பார்ம் அவுட் என்பதும் சீசனல்தான். கெயில் சாட்சி. விட்டுப்போன நம்பிக்கையை மீட்டெடுத்து, தன் பட்டாளத்தோடு மீண்டும் கெத்தாய் களமிறங்குவார் தோனி என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது.

“Now just because you deserve this doesn’t mean they’re gonna give it to you. sometimes you gotta take what’s yours.”

- புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் படமான கோச் கார்டரின் இறுதியில் வரும் வசனம் இது. இதை நம் எல்லாரையும்விட தோனி நிறையவே உணர்ந்திருப்பார். நிச்சயம் திரும்பி வருவார். காட்டின் ராஜாவான சிங்கத்திற்கு வயதாகலாம். ஆனால் அதன் வேட்டை குணத்திற்கும் சண்டை செய்யும் மனதிற்கும் வயதாவதில்லை. தன் அடுத்த தலைமுறைக்கும் அது அவற்றைக் கடத்திக்கொண்டே இருக்கும். தலைவன் இருக்கிறான்!