
வித்தியாச விளையாட்டுகள்
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தைப் பற்றியும், அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா... குதிரைகளை மையமாகவைத்து அங்கு ஒரு பெரிய கூட்டமே இயங்கிக்கொண்டிருக்கும். குதிரைப் பந்தயம்தான் அங்கே மையம். குதிரைகள்மீது பந்தயம் கட்டிவிட்டு தாங்கள் பணம் கட்டியிருக்கும் குதிரை வெல்லுமா என்பதை அறிய, நகத்தைக் கடித்தபடி அத்தனை பேரும் காத்திருப்பார்கள். வென்றால் பணம். தோற்றால், செய்த மொத்த முதலீடும் போச்சு.
கிண்டி ரேஸ் கோர்ஸில் மட்டுமல்ல, குதிரைப் பந்தயத்தை அடிப்படையாக வைத்திருக்கும் பெரும்பாலான இடங்களில் இதுதான் நடக்கிறது. திரைப்படங்களிலும்கூட நாம் இதையேதான் காலம் காலமாகப் பார்த்திருக்கிறோம். குதிரைகள் சார்ந்த விளையாட்டு என்றாலே நமக்கு, பந்தயம் கட்டி ஆடுவதுதான் முதலில் நினைவில் தோன்றும். ஆனால், பந்தயம் கட்டி ஆடுவது மட்டுமே குதிரைகள் சார்ந்த விளையாட்டின் கீழ் வராது. அதைத் தாண்டி வேறு சில தீவிரமான குதிரை ஆட்டங்களும் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில் ஒலிம்பிக்ஸில் ஆடப்படும் ‘Equestrian’ ஆட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுவும் குதிரைகளை மையமாகவைத்து ஆடப்படும் ஆட்டமே.

ஒலிம்பிக்ஸில் ஆடப்படும் இந்த விளையாட்டுக்கென்றே சில சிறப்பம்சங்களும் உண்டு. நவீன ஒலிம்பிக்ஸ் தொடர்களில் விலங்குகளைப் பயன்படுத்தி ஆடப்படும் ஒரே ஆட்டம் இந்தக் குதிரையேற்ற சாகசம் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், ஆண் பெண் வேறுபாடின்றி ஒரே பிரிவாக ஆடப்படும் ஒரே ஆட்டமும் இதுதான். 1900-ம் ஆண்டு பாரிஸில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக்ஸ் தொடரிலேயே இந்தக் குதிரையேற்றம் அறிமுகமாகிவிட்டது. இடையில் சில ஆண்டுகள் விடுபட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் இடம்பிடித்து இப்போது வரை ஒலிம்பிக்ஸில் ஆடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
குதிரை என்பது எப்போதுமே அதிகாரம் சார்ந்த விஷயத்தோடு் இணைத்தே பார்க்கப்பட்டுவந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸிலுமே ஒருகாலத்தில் இந்த ஆட்டத்தில், ராணுவத்தில் உயர்பதவியில் இருப்பவர்களால் மட்டுமே ஆட முடியும் என்கிற நிலை இருந்திருக்கிறது. பெண்களுக்கும் அதேதான். காலப்போக்கில் அந்த வரைமுறைகளெல்லாம் அப்படியே மாறி சில பிரிவுகளில் 16 வயதுக்கு மேற்பட்ட, சில பிரிவுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் எனும் நிலையை இப்போது எட்டியிருக்கிறது.

ஓட்டப்பந்தயம்போல குதிரைகள் ஓடி முதல் இடத்தை எட்டிப் பிடிப்பதுதான் குதிரைப் பந்தயத்தின் சாராம்சம். ஆனால், இந்தக் குதிரையேற்ற சாகச ஆட்டம் அப்படியானது இல்லை. இங்கே குதிரைகள் வேறு பல வித்தைகளைச் செய்து காட்ட வேண்டும். ஒலிம்பிக்ஸ் குதிரையேற்ற சாகசத்தில் டிரெஸ்ஸேஜ், ஈவன்ட்டிங், ஷோ ஜம்ப்பிங் என மூன்று பிரிவுகள் இருக்கின்றன. குதிரையின் வேகம், சமயோசிதம், சாகசத் திறன், கீழ்ப்படியும் தன்மை என அத்தனை குணாதிசயங்களும் இந்த மூன்று பிரிவுகளின் கீழ் நடுவர்களால் கணக்கிடப்படும்.
டிரெஸ்ஸேஜ் பிரிவில் குதிரை சில உடலசைவுகளைச் செய்து காட்ட வேண்டும். குதிரை மேலிருக்கும் வீரரின் ஆணைக்கிணங்க குதிரை செயல்படுகிறதா என்பதை இதன் மூலம் மதிப்பிடுவார்கள். இதே டிரெஸ்ஸேஜ்பிரிவில், ஒரு பாடலை ஒலிக்கவிட்டு சில குறிப்பிட்ட அசைவுகளை, குதிரை செய்து காட்டும்படி செய்யும் சுற்றும் இருக்கிறது.
அடுத்ததாக, ஈவென்ட்டிங். இது இன்னும் கொஞ்சம் கடினமான வகை. ஓட்டப்பந்தயத்திலேயே தடை தாண்டும் ஓட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். இடையில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை துள்ளிக் குதித்து தாண்டி வீரர்கள் இறுதி இலக்கை எட்டுவார்கள். அதேமாதிரிதான் இந்த ஈவென்ட்டிங் சுற்றும். ஆனால், இங்கே பந்தயம்போல எல்லா வீரர்களும் தங்கள் குதிரைகளோடு ஒரே சமயத்தில் ஓட மாட்டார்கள். தனித்தனியாகவே போட்டியிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், அங்குமிங்கும் வளைந்து நெளிந்து, குறுக்குமறுக்கான வழித்தடத்தில் சில தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி குதிரை இறுதி இலக்கை எட்ட வேண்டும். எந்தக் குழப்பமும் இல்லாமல் தனது குருவின் வழிகாட்டுதல்படி குதிரை சரியான பாதையில் அந்தத் தடைகளை முழுமையாக, எந்தச் சிரமமுமின்றி தாண்ட வேண்டும். ஒருவேளை இந்தத் தாண்டுதலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதற்கு பெனால்டியாக சில புள்ளிகள் வழங்கப்படும். இறுதியில் குறைவான நேரத்தில், குறைவான பெனால்டி புள்ளிகளோடு இலக்கை எட்டியிருக்கும் குதிரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். மூன்றாவதாக இருக்கும் அந்த ஷோ ஜம்ப்பிங்கும்கூட ஏறக்குறைய இதே வகைதான்.

இந்தியாவில் இந்தக் குதிரையேற்றம் என்பது அத்தனை பிரபலமானது இல்லையென்றாலும், ஜிதேந்திர சிங், குலாம் முகமது, ரகுபீர் சிங், இம்தியாஸ், இந்திரஜித் போன்றோர் 80 மற்றும் 90-களில் ஆசியப் போட்டிகளில் இந்தியாவுக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வென்றிருக்கின்றனர். வெகு சமீபத்தில் எனில், கர்நாடகாவைச் சேர்ந்த ஃபவாத் மிர்சா எனும் வீரர் இந்தக் குதிரையேற்ற சாகசத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். 2018 ஆசியப் போட்டியில் ஈவென்ட்டிங் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸிலுமே அதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பான செயல்பாட்டையே கொடுத்திருந்தார். இந்த குதிரையேற்றத்துக்கும், எல்லா பாரம்பர்யத்தைச் சேர்ந்த குதிரை வகைகளையும் பயன்படுத்திவிட முடியாது. ஃபவாத் மிர்சா, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பயன்படுத்திய குதிரை ‘செய்க்னர் மெடிகாட்’ வகையைச் சார்ந்தது. இந்தக் குதிரையை ஜெர்மனியிலிருந்து மிர்சா வாங்கியிருந்தார். 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற ஜெர்மனி வீராங்கனை பெட்டினா ஹாய் என்பவர் பயன்படுத்திய குதிரை அது. பெட்டினாவிடம் பயிற்சி எடுத்தவர் ஃபவாத் மிர்சா என்பதால், அவருக்கு இந்தக் குதிரை கிடைக்கப்பெற்றது.
யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என ஒலிம்பிக்ஸில் விதி இருந்தாலும், விலையுயர்ந்த குதிரைகளை வாங்கி, கட்டி மேய்த்து, வெளிநாட்டில் பயிற்சி பெறுமளவுக்கு வசதி இருக்கும் நபர்களால் மட்டுமே இந்த ஆட்டத்தில் எளிதில் கலந்துகொள்ள முடியும்.