FIFA நடத்தும் 22- வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் நவம்பர் 21 ம் தேதி கத்தாரில் கோலாகலமாகத் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இந்தக் கால்பந்துத் திருவிழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்த கத்தார் அரசு கால்பந்துத் திருவிழாவை காணவரும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
வழக்கமாக உலகக்கோப்பை தொடர் ஜூன், ஜூலை, மாதங்களில் நடத்தப்படும். ஆனால் அந்த மாதங்களில் கத்தாரில் 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்பதால் குளிர்காலத்தில் நடத்த முடிவு செய்து தற்போது போட்டியை நடத்தி வருகின்றனர். குளிர்காலத்தில் நடத்தப்படும் முதல் உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் என்ற பெருமையை இப்போட்டி பெற்றுள்ளது.
மொத்தம் 32 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. தற்போது நடைபெற்று வரும் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதிச் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். கால் இறுதிச் சுற்று டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 13 மற்றும் 14-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன.

சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 18-ம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லும் வெற்றியாளர்களுக்கு சாம்பியன் பட்டத்தை தீபிகா படுகோன் வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தீபிகா படுகோன் கத்தார் நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.