Published:Updated:

`அந்த வீரர்களின் பெயர்களை வெளியிடுவேன்!’ - மத பாகுபாடு விவகாரத்தில் தானிஷ் கனேரியா காட்டம்

பாகிஸ்தானின் அனைத்து கிரிக்கெட்டர்களிடமும் உதவி கேட்டுள்ளேன். பாகிஸ்தன் பிரதமர் இம்ரான்கான் எனது கஷ்டங்களைத் தீர்க்க உதவ வேண்டும்.

தானிஷ் கனேரியா
தானிஷ் கனேரியா ( ANI )

பாகிஸ்தான் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் தானிஷ் கனேரியா. தன் திறமை மூலம் பாகிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். ஆனால், அணியில் அவர் இருந்தபோது மதம் ரீதியாக அவர் பல இன்னல்களைச் சந்தித்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஷோயப் அக்தர்
ஷோயப் அக்தர்

இந்தத் தகவலை முதலில் வெளிக்கொண்டு வந்தது பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளரான அக்தர்தான். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அக்தர், ``எனது கிரிக்கெட் வாழ்வில், எனது அணியிலே ஒரு சிலருடன் பேராட வேண்டியிருந்தது. காரணம் அவர்கள் மதம் குறித்து பேசினார்கள். கராச்சியில் இருந்து வந்தவர்கள் யார், பஞ்சாபில் இருந்து வந்தவர்கள் யார் போன்ற விவாதங்கள் எனக்கு கோபமூட்டியது.

அங்கு இந்து மதத்தைப் பின்பற்றும் ஒருவர் இருந்து, அவர் சிறப்பாகச் செயல்பட்டால்தான் என்ன பிரச்னை? ஒரு சிலர், `தானிஷ் கனேரியா எப்படி இங்கிருந்து உணவை எடுக்கலாம்’ என கேள்வி எழுப்புவது உண்டு. அதே இந்து மதத்தைச் சேர்ந்த கனேரியாதான் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியை வெல்ல காரணமாக இருந்தார். பாகிஸ்தான் அணிக்காக அவர் நிறைய விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அணிக்காகத் தொடர்ந்து விளையாட அவரை அனுமதிக்க வேண்டும். அன்று கனேரியாவின் முயற்சி இல்லாமல் சில தொடர்களை வென்றிருக்க முடியாது. ஆனால், அதற்கான கிரெடிட்டை அணியில் இருக்கும் பலரும் அவருக்கு வழங்கியது கிடையாது” என்றார்.

தானிஷ் கனேரியா
தானிஷ் கனேரியா
ANI

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய தானிஷ் கனேரியா, ``அக்தரின் தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்தேன். உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன அவருக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றிகள். அதே நேரத்தில் என்னை ஆதரித்த எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து வீரர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எனது மதத்தைத் தாண்டி என்னை ஆதரித்த சக வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.

சமூகத்தில் சிலர் என்னை எதிர்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பு என்னை ஆதரித்தவர்களின் அன்புக்கு முன்னால் ஒன்றும் இல்லாமல் ஆனது. நான் எனது வாழ்க்கையில் எப்போதும் பாசிட்டிவாக இருக்க விரும்புவேன். அதனால் எதிர்ப்புகளை புறம்தள்ளிவிடுவேன்“ என்றார். மேலும், அவர் அணியில் இருந்தபோது மத ரீதியாக தான் அனுபவித்த இன்னல்களை வெளிப்படையாகச் சொல்ல தைரியம் இல்லாமல் இருந்ததாகவும் மத ரீதியாகத் தன்னை ஒதுக்கி வைத்த வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

முன்னதாக ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய கனேரியா கடந்த பல ஆண்டுகளாகக் கடுமையான காலகட்டங்களை அனுபவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``என்னுடையை வாழ்க்கை சிறப்பானதாக இல்லை. பல இன்னல்களை அனுபவித்து வருகிறேன். பாகிஸ்தானின் அனைத்து கிரிக்கெட்டர்களிடம் உதவி கேட்டுள்ளேன். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எனது கஷ்டங்களைத் தீர்க்க உதவ வேண்டும். சிக்கலில் மாட்டிய பலருக்கும் உதவிகள் கிடைத்துள்ளன. ஒரு கிரிக்கெட்டராகப் பாகிஸ்தான் அணிக்கு எனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளேன். அதுதான் எனக்குப் பெருமையான விஷயம். பாகிஸ்தான் மக்கள் எனக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.