Published:Updated:

`பன்ட்... நீ கலக்கு; நாங்க இருக்கோம்!’ - மெய்சிலிர்க்க வைத்த சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ரிஷ்ப் பன்ட்-க்கு ஆதரவாக மைதானத்துக்கு பதாகைகளை ஏந்தி வந்தனர்.

இந்திய ரசிகர்கள்
இந்திய ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் க்ரவுண்ட். உலகம் முழுவதும் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் சென்னை ரசிகர்கள் வேற வெலல். உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. சென்னையில் நடக்கும் போட்டியில் தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

காலையில் இருந்தே சமூகவலைதளத்தில் தோனி தொடர்பான மீம்ஸ்கள் உலா வந்தன. தோனி விளையாடாததால் விக்கெட் கீப்பிங் பணியை ரிஷப் பன்ட் செய்து வருகிறார். ரிஷப் பன்ட்-க்கு வாய்ப்பு கிடைத்தும், அதை சரியாகப் பயன்படுதத் தவறிவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மைதானத்தில் ரிஷப் பன்ட், தவறு செய்யும்போது ரசிகர்கள் `தோனி... தோனி' என கூச்சலிடுகின்றனர். இது ரிஷப் பன்ட்-க்கு மேலும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரசிகர்கள் ரிஷப் பன்ட்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேனர்களை ஏந்தி வந்தனர். `மிஸ் யூ தோனி' என்ற பதாகைகளும் சேப்பாக்கம் மைதானத்தில் காண முடிந்தது.

`ஜடேஜா ரன்அவுட் சர்ச்சை; ஃபீல்டிங்கில் 12வது ஆள்!' - சேப்பாக்கத்தில் 287 ரன்கள் சேர்த்த இந்திய அணி

பன்ட்டுக்கு ஆதரவளிக்கும் வகையிலான இன்ஸ்டாகிராமில் உள்ள சிஎஸ்கே ஃபேன் பக்கத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ``ரிஷப் பன்ட், சிறப்பாகச் செயல்படுங்கள். முடிவுகளை விட செயல்படுவது மிகவும் முக்கியமானது. கற்றலைத் தொடருங்கள். தவறுகளை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்” என பதிவிட்டுள்ளனர்.

ரசிகர்கள்
ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான சரவணன் பேசுகையில், ``சிஎஸ்கே ரசிகர்கள் பன்ட்-க்கு ஆதரவளிப்பார்கள். இந்திய அணிக்காக தோனி என்ன செய்தாரோ அந்தப் பணியை ரிஷப் செய்து வருகிறார். நாங்கள் தோனியை மிஸ் செய்கிறோம். பன்ட், இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். அவர் இந்திய அணிக்காக விளையாடுகிறார். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்”எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் ஏமாற்றமளிக்க இந்திய அணி 80 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அப்போது களமிறங்கிய ரிஷப் பன்ட், ஸ்ரேயஸ் ஐயருடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பாக விளையாடிய பன்ட், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 70 ரன்களிலும், ரிஷப் பன்ட் 71 ரன்களில் அவுட்டானார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.