
அஷ்வினை ஒரு முறை நேரில் சந்தித்தாலே போதும் என நினைத்திருந்தேன். அப்படியிருக்க அவரே என்னைப் பற்றி அவதானித்துப் பேசியது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
`ஹசரங்காவுக்கு அடுத்து யார்னு யோசிச்சா வியாஸ்காந்த்தான்.' இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் திசாரா பெராராவின் கூற்று இது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையில் வளர்ந்து வரும் இளம் வீரர்களின் பட்டியலில் உச்ச இடத்தில் இருக்கிறார். லெக் ஸ்பின்னராக லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி ‘ஜாஃப்னா கிங்ஸ்' அணி சாம்பியன் பட்டத்தை வெல்லக் காரணமாக அமைந்த வியாஸ்காந்த், இப்போது இலங்கையைத் தாண்டி வங்கதேச ப்ரீமியர் லீகிலும் கால்பதித்திருக்கிறார். விரைவில் ஐ.பி.எல் தொடரிலும் இவரின் வருகையை எதிர்பார்க்கலாம். சமீபத்தில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் கூட இவரை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார். இலங்கையின் சமூக அரசியல் சூழலில் வடகிழக்குப் பகுதி தமிழ்க் குடும்பத்திலிருந்து ஒரு வீரர் மேலே வந்து இவ்வளவு வெளிச்சம் பெறுவது எளிதான விஷயமல்ல.
‘‘யாழ்ப்பாணத்துல கிரிக்கெட் ஆடுறது ரொம்பவே கஷ்டம். நிறைய அவமானங்களையும் சிரமங்களையும் தாண்டிதான் வாய்ப்புகளைப் பெற்றேன்'' என்று பேசத் தொடங்குகிறார் வியாஸ்காந்த்.
`` ‘ஜாஃப்னா கிங்ஸ்' அணியை சாம்பியனாக்கிய இந்த சீசனில் உங்களுடைய பயணம் எப்படியிருந்தது?’’
‘‘இலங்கையின் முக்கிய ஸ்பின்னரான ஹசரங்கா எங்கள் அணியில் இல்லை. அது எனக்குக் கொஞ்சம் பதற்றத்தையும் கூடுதல் பொறுப்பையும் கொடுத்தது. அணியின் முக்கிய ஸ்பின்னராக முன்னிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பணியை முழுமையாகச் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். ‘யாரைப் போலவும் செயல்பட விரும்பாதே, வியாஸ்காந்தாக மட்டுமே இரு. உன் திறனை முழுமையாக வெளிக்காட்டு' என்ற என் பயிற்சியாளர்களின் அறிவுரை பேருதவியாக இருந்தது. இறுதிப்போட்டிக்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து ஹேமங் பதானி சில ஆலோசனைகளைச் சொன்னார். அவையும் பெரிய அளவில் பயனளித்தன.''
``கிரிக்கெட்மீதான ஆர்வம் எங்கிருந்து வந்தது?’’
‘‘மூன்று வயதிலிருந்தே கிரிக்கெட் பார்க்கத் தொடங்கிவிட்டேன். அப்பா கிரிக்கெட் ரசிகர். அப்பவே நான் மிகப்பெரிய தோனி ரசிகன். தோனியை ரசித்து அவர் மூலமாகவே கிரிக்கெட்டைக் கற்றுக்கொண்டு வளர்ந்தேன். அதேநேரத்தில், அஷ்வினையும் ரொம்பவே பிடிக்கும். நான் அஷ்வின் மாதிரி இருப்பதாக பலரும் கூறுவார்கள். அஷ்வினை பிடித்துப்போனதற்கு அதுவும் ஒரு காரணம். அவர் ஒரு ஆஃப் ஸ்பின்னர். நான் லெக் ஸ்பின்னர். இந்த வேறுபாடு இருந்தாலும் அவரிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. உலகின் எந்த மைதானத்திலும் விக்கெட் எடுக்கக்கூடிய அவரின் திறன் எப்போதுமே என்னை வியக்க வைக்கும்.''

``அஷ்வின் தனது யூடியூப் சேனலில் உங்களைப் பற்றியும் பேசியிருந்தாரே?’’
‘‘அஷ்வினை ஒரு முறை நேரில் சந்தித்தாலே போதும் என நினைத்திருந்தேன். அப்படியிருக்க அவரே என்னைப் பற்றி அவதானித்துப் பேசியது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அஷ்வினை சந்திக்க முடிந்தால் எனது பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள சில டிப்ஸ்களைப் பெறுவேன். தோனி, அஷ்வின் இவர்களைக் கடந்து ஷேன் வார்னே, அஜந்தா மெண்டீஸ், சங்ககரா போன்றோரையும் ரொம்பவே பிடிக்கும். வார்னே ஒரு மேஜிக் மேன். ஷேன் வார்னே வீசும் ஃபிளிப்பர் வகை பந்துகளை வீசக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதேமாதிரி அஜந்தா மெண்டீஸும் பயிற்சி முகாம்களில் தனிப்பட்ட முறையில் நிறைய ஆலோசனைகளைப் பகிர்ந்திருக்கிறார். சங்ககராவின் புகைப்படத்தை என் அறையிலே மாட்டி வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு அவர்மீது ஈர்ப்பு உண்டு.''
``ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட ஆசை இருக்கிறதா?’’
‘‘ஐ.பி.எல் ஆட வேண்டும் என்பது எல்லா வீரர்களுக்குமே ஒரு கனவுதான். 2020-லேயே ஐ.பி.எல் ஏலத்திற்குப் பெயரைப் பதிவு செய்திருந்தேன். தமிழ்ப் பையன் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டாயம் வாங்கும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த அணியும் என்னை வாங்கவில்லை. இப்போதும் தோனியின் சென்னை அணிக்காக ஆட வேண்டும் என்பதே என் விருப்பம். இலங்கை அணியின் மஹீஸ் தீக்சனா சென்னை அணிக்காக ஆடிவருகிறார். தோனியுடனான தீக்சனாவின் அனுபவமும் உரையாடலும் எப்படியிருக்கும் என ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொண்டே இருப்பேன். நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஏக்கமாக இருக்கும். விரைவில் அந்தக் கனவு நிஜமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.''
``இலங்கையில் கிரிக்கெட் சூழல் எப்படியிருக்கிறது. சிங்கள - தமிழர் வேறுபாடு கிரிக்கெட்டிலும் வெளிப்படுகிறதா?’’
‘‘என்னுடன் வேறு இரண்டு தமிழ் வீரர்களுமே லங்கா ப்ரீமியர் லீகில் ஆடினார்கள். எங்களைத் தாண்டியும் இங்கே நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள். உண்மை என்னவெனில், யாழ்ப்பாணத்திலோ அல்லது தமிழர்கள் வாழும் வேறு பகுதியிலோ கிரிக்கெட் ஆடி முன்னேறுவது என்பது கடினமே. கொழும்பில் கிரிக்கெட் ஆடி பயிற்சி பெறும் ஒருவரையும் தமிழ் நிலத்தில் பயிற்சி பெறும் ஒருவரையும் ஒப்பிடவே முடியாது. முதலாவது, மொழி வேறுபாடு. கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில் சிங்களர் - தமிழர் பிரச்னை காரணமாக பெரும் பயமும் தயக்கமும் எனக்கு இருந்தது. இதுவே ஒரு பெரிய தடைதான். அடுத்ததாக கொழும்பில் இருக்கும் சௌகர்யம் எதுவும் இங்கிருப்பவர்களுக்குக் கிடைக்காது. பயிற்சியாளர்கள் பெரிதாக இல்லை. நல்ல உடற்பயிற்சிக் கூடங்கள் எதுவும் இல்லை. இங்கு பயிற்சி செய்ய ஒரு நன்கு பக்குவப்படுத்தப்பட்ட பிட்ச்சே கிடையாது. இப்படி ஒரு சூழலில் வளர்ந்து வரும் வீரர், கொழும்பில் அத்தனை சௌகரியத்தையும் அனுபவித்து வரும் வீரரோடு போட்டி போட்டு முன்னேறுவது கடினம்தான். நிறையவே பொறுமை தேவை. நாம் சில கஷ்டங்களைக் கடந்துதான் வெல்ல வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் தாண்டி வந்துவிட்டால் எல்லாரும் இலங்கையர் எனும் எண்ணம் மேலோங்கியிருப்பதை மறுக்க முடியாது. வனிந்து ஹசரங்காவும் மஹீஸ் தீக்சனாவும் எனக்குப் பல சமயங்களில் எந்த வேறுபாடும் பார்க்காமல் உதவியிருக்கிறார்கள்.''
``இலங்கை கிரிக்கெட்டே இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறதே?’’
‘‘உண்மைதான். ஆனால், சமீபமாக நாங்கள் மீண்டெழ ஆரம்பித்திருக்கிறோம். ஆசியக்கோப்பையை வென்றிருக்கிறோம். கபில்தேவிற்குப் பின் பல வீழ்ச்சிகளையும் சரிவுகளையும் சந்தித்து இந்தியா 2011-ல் உலகக்கோப்பையை வென்றதைப் போல இலங்கையும் வெல்லும். வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்.''