Published:Updated:

`குடிபோதையில் ஏழு வயதுச் சிறுவனை அடித்தாரா?' - கிரிக்கெட்டர் பிரவின் குமாரைச் சுற்றும் சர்ச்சை

இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரவீன் குமார், தனது அண்டை வீட்டில் வசிக்கும் 7 வயதுச் சிறுவனையும் அவரது தந்தையும் அடித்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

பிரவீன் குமார்
பிரவீன் குமார் ( Twitter )

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் பிரவீன் குமார் வசித்து வருகிறார். இந்தநிலையில், பிரவீன் தன்னையும் தனது 7 வயது மகனையும் அடித்ததாக அவரது அண்டைவீட்டில் வசிக்கும் தீபக் ஷர்மா போலீஸில் புகாரளித்தார். இதுகுறித்து பேசிய தீபக் ஷர்மா,``மது அருந்திய நிலையில், அவர் என்னையும் எனது மகனையும் அடித்தார். இந்த விவகாரம் குறித்து போலீஸில் புகார் அளித்த நிலையில், முதலில் அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதால், உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சொன்னார்கள்'' என்று குற்றம்சாட்டினார்.

`பன்றிப்பால்' சர்ச்சை, ஜெயஸ்ரீ கலவரம், கைலாச நித்யானந்தா... போன வார வைரல்கள்! #NewsNotToMiss

இதுகுறித்து பேசிய அப்பகுதி காவல்துறை எஸ்.பி அகிலேஷ் நாராயணன்,``இருவரும் அருகருகே இருக்கும் வீடுகளில் வசித்து வருகின்றனர். இரண்டு தரப்பிலும் போலீஸாரிடம் தங்கள் தரப்பு வாக்குமூலங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது'' என்றார்.

அதேநேரம், தீபக் ஷர்மாவின் புகாரில் உண்மையில்லை என கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ``சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருப்பவன் நான். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

பிரவீன் குமார்
பிரவீன் குமார்
ANI

அப்படி இருக்கும்போது சிறுவன் ஒருவனை நான் எப்படி தாக்குவேன்? என் மீது புகார் தெரிவித்த தீபக் ஷர்மா மற்றும் அவரது மகன் இருவரும் எனது வீட்டருகே நேற்று மாலை நான் காரிலிருந்து இறங்கியபோது என்னைத் தாக்கினர். இதுவே நடந்தது'' என்று கூறியிருக்கிறார்.