Published:Updated:

Sikandar Raza: யார் ராசா நீ? ஜிம்பாப்வேயின் புதிய அத்தியாயத்தை முன்னெடுக்கும் சீனியர் ஆல்ரவுண்டர்!

Sikandar Raza | சிக்கந்தர் ரசா

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் கூட ஜிம்பாப்வேவால் ஆட முடியாமல் போனது. அந்த வாய்ப்பின் மகத்துவம் தெரியாமல் ஒருசில அணிகள் போட்டியைத் தாரை வார்த்த போது, ஒரு ஒட்டுமொத்த நாடே அதனை ஏக்கத்தோடு தொலைக்காட்சியில் மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்தது.

Sikandar Raza: யார் ராசா நீ? ஜிம்பாப்வேயின் புதிய அத்தியாயத்தை முன்னெடுக்கும் சீனியர் ஆல்ரவுண்டர்!

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் கூட ஜிம்பாப்வேவால் ஆட முடியாமல் போனது. அந்த வாய்ப்பின் மகத்துவம் தெரியாமல் ஒருசில அணிகள் போட்டியைத் தாரை வார்த்த போது, ஒரு ஒட்டுமொத்த நாடே அதனை ஏக்கத்தோடு தொலைக்காட்சியில் மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்தது.

Published:Updated:
Sikandar Raza | சிக்கந்தர் ரசா

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எழுச்சிக்கான அச்சாணியாக உருவெடுத்துள்ளார் சிக்கந்தர் ரசா. "நீங்கள் ஒன்றைப் பெற மனதார விரும்பும் போது, இந்தப் பிரபஞ்சமே, அதை நீங்கள் அடைய உறுதுணையாக இருக்கும்" - பௌலோ கோய்லோ, தன் 'தி ஆல்கெமிஸ்ட்' புத்தகத்தின் மையக் கருவாக இதைப் படம் பிடித்திருப்பார். வார்த்தைகளில் வடிக்கப்பட்டிருந்தாலும் அதை வாழ்க்கையில் பார்க்க வேண்டுமென்றால் உங்கள் கண்கள் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டரான சிக்கந்தர் ரசா பக்கமாகதான் திரும்ப வேண்டும்.

நான்காண்டுகளுக்கு முன், 2019 உலகக் கோப்பையில் ஆடவே தகுதி பெறாமல் கலங்கிய கண்களோடு வெளியேறிய ஜிம்பாப்வே, தற்சமயம் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளதோடு பங்களாதேஷுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி ஆர்ப்பரித்துள்ளது. இப்புள்ளி நோக்கி அவர்களை நகர்த்திய மறைமுக விசை - சிக்கந்தர் ரசா.
சிக்கந்தர் ரசா
சிக்கந்தர் ரசா

2018-ல் அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை குவாலிஃபயரில் அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் மூன்றே ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலமாகத் தவறவிட்டது ஜிம்பாப்வே. மொத்த ஜிம்பாப்வேவையும் அதிர வைத்த தருணமது. அதிலும் வென்றே தீர வேண்டுமென்ற உத்வேகமும் உந்தமும் எரியூட்ட 53.2 சராசரியோடு 319 ரன்களை எடுத்ததோடு 15 விக்கெட்டுகளையும் அத்தொடரில் ரசா வீழ்த்தியிருந்தார். எனவே, மனதளவில் அவரை இத்தோல்வி நொறுக்கி போட்டிருந்தது. பரிசளிப்பு விழாவிலும் சரி, அதற்குப் பிந்தைய பேட்டிகளிலும் சரி, இது குறித்து நிறையவே வேதனைப்பட்டிருந்தார். பத்து அணிகள்தான் உலகக் கோப்பையில் ஆட வேண்டுமென்ற ஐசிசியின் 'கிரிக்கெட் காலனித்துவம்', ஜிம்பாப்வே உள்ளிட்ட மற்ற வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளுக்கான வாய்ப்புகளையே தட்டிப் பறித்திருந்தது.

"15 மில்லியன் மக்களின் சிதைந்த கனவுகளின் நினைவுச் சின்னமாகதான், இத்தொடர் நாயகன் விருது எனக்கு மாறியுள்ளது!"
சிக்கந்தர் ரசா

அந்தக் கோப்பையை வாங்கிய பிறகு ரசா வேதனையில் உதிர்த்த வார்த்தைகள்தான் இது. 2003 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்ட தருணத்தில் தொடர் நாயகன் விருதைப் பெற்ற போது சச்சினின் கண்களில் தென்பட்ட அதே வலியை, ரசாவின் பேச்சிலும் உணர முடிந்தது. கருகிப் போன கனவுகளைச் சுமப்பது சாளரமும் கதவும் இல்லாத அறையில் கையறு நிலையில் கட்டப்பட்டுக் கிடப்பது போன்றதுதான்; மூச்சு முட்ட வைக்கும். அப்படி ஒரு நிலையில்தான் ரசாவும் அவரது ஒட்டுமொத்த அணியும் இருந்தனர். அந்த அறையில் இருந்த வெளிச்சத்தையும் மொத்தமாக வெளியேற்றுவது போன்ற இன்னொரு நிகழ்வும் ஜிம்பாப்வேயை உலுக்கியது. அந்த ஆண்டின் இறுதியிலேயே ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டில் அரசின் தலையீடு இருந்ததைக் காரணமாகச் சொல்லி ஜிம்பாப்வேயை இடைநீக்கம் செய்தது ஐசிசி.

சிக்கந்தர் ரசா
சிக்கந்தர் ரசா

ரசா உள்ளிட்ட மொத்த ஜிம்பாப்வே படையையும் செயலிழக்கச் செய்த முடிவு இது. அச்சமயம் தனது ட்விட்டர் தளத்தில் மட்டுமின்றி பேசும் இடத்தில் எல்லாம் இதைப் பற்றி கொட்டித் தீர்த்தார் ரசா. ஒரே ஒரு முடிவு ஒரு தேசத்தின் நம்பிக்கையை எண்ணற்றவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டதைப் பற்றியும் தன் கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடிய தான் விரும்பவில்லை என்றும் வருந்திப் பேசி இருந்தார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஐசிசி விதித்த தடை எத்தனை ஆண்டுகள் நீடிக்கும், அது எவ்வளவு பாதிப்புகளைக் கொண்டு வரும் என்பது குறித்தெல்லாம் அச்சமயம் தெளிவான விளக்கமில்லை. ஆனால், அவர் பயந்தபடி அதன் பாதிப்பு நீண்ட காலம் நீடித்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் கூட ஜிம்பாப்வேவால் ஆட முடியாமல் போனது. அந்த வாய்ப்பின் மகத்துவம் தெரியாமல் ஒருசில அணிகள் போட்டியைத் தாரை வார்த்த போது, ஒரு ஒட்டுமொத்த நாடே அதனை ஏக்கத்தோடு தொலைக்காட்சியில் மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்தது.

மனதளவில் ஏற்பட்ட வேதனை மட்டுமின்றி ஐசிசியின் அந்த முடிவால் பொருளாதார ரீதியாகவும் பல இடையூறுகளை ஜிம்பாப்வே அணி சந்தித்தது. "தங்களது கிழிந்த ஷூவை தொடர்ந்து, பசையினால் ஒட்டிப் பயன்படுத்தி சமாளிப்பதற்கு ஒரு முடிவு வராதா?" என ஜிம்பாப்வேயின் ரையன் வெளியிட்டிருந்த வேதனையூட்டும் புகைப்படம் அவர்களது அவல நிலையை வெளிப்படுத்தியது. அதைச் சரி செய்ய PUMA உதவியது நெகிழ்ச்சி அளித்தாலும் ரசா முன்னரே குறிப்பிட்டது போல் அவர்கள் கடக்க வேண்டிய சோதனைக் கட்டம் பலவாக இருந்தது. அணியினால் எதிர்கொண்ட சவால்கள் மட்டுமல்ல, தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கிரிக்கெட் வாழ்க்கையிலும் ரசாவுக்குக் கடந்தாண்டு சோதனைகளையே ஒளித்து வைத்தது. கையில் ஏற்பட்ட கட்டி ஒன்று, வலி தந்ததோடு கேன்சராக இருக்குமென பயம் காட்டியது. கடந்தாண்டு ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில் கூட அந்த வலியோடுதான் ரசா பங்கேற்றார். அது கேன்சர் கட்டியல்ல என்பது தெரிய வந்தாலும் அறுவை சிகிச்சை, அதன்பின் ஓய்வு என நான்கு மாதங்கள் அவரிடமிருந்து கிரிக்கெட் விலக்கி வைக்கப்பட்டது.

சிக்கந்தர் ரசா
சிக்கந்தர் ரசா

அதிலிருந்து மீண்டு வந்தவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எந்த அணியை வெகுவாக நேசித்தாரோ அந்த அணியின் டி20 ஃபார்மேட்டில் இருந்து கழற்றி விடப்பட்டார். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், அணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்ற பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட்டின் முடிவு ரசா, சீன் வில்லியம்ஸ் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு பாதகமாக மாறியது. ஆனால், இந்தக் காலகட்டத்திலும் தனக்குள் இருந்த வேட்கை வெப்பம் தணிந்து விடாமல் ரசா பார்த்துக் கொண்டார். தொடர் பயிற்சி, தன் ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சி என பலவகையிலும் தன் திறமை நீர்த்துப் போகாமலும் தனக்குள்ளே இருந்த தாகம் உலர்ந்து போகாமலும் பார்த்துக் கொண்டார். அதுதான் அவரது புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துரை எழுதியுள்ளது.

இரண்டு உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பைத் தவறவிட்ட ரசா, இந்த முறையும் அதை நிகழவிட தயாராக இல்லை. ஜிம்பாப்வே மிடில் ஆர்டரின் முதுகெலும்பென்பதை நிருபித்தது மட்டுமின்றி தன் முப்பரிமாணத்தையும் வெளிப்படுத்த தொடங்கினார். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான குவாலிஃபயரில் 5 போட்டிகளில் 57 சராசரியோடு 228 ரன்களைக் குவித்தது மட்டுமின்றி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த நான்கு ஆண்டுகளும் அவருக்குள் கிடந்த ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் அவர் வீசிய ஒவ்வொரு பந்தும் அவர் அடித்த ஒவ்வொரு ரன்னும் பேசின. உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுவிட்டது ஜிம்பாப்வே.

சிக்கந்தர் ரசா
சிக்கந்தர் ரசா
தன் அணி தடை செய்யப்பட்ட போது, "நாங்கள் எங்களது விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் எரித்துவிட வேண்டுமா? வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? எங்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதா?!" என விரக்தியில் பேசியிருந்தார் ரசா. ஆனால் அந்த விரக்திதான், அதன் அருமையை அவருக்கு இன்னமும் புரிய வைத்து அதனை அடைவதற்கான ஆயுதமாக அவரை ஆயத்தம் செய்துள்ளது. போர்க்களத்தில் இறுதிவரை போராடும் ஒரு வீரனின் மன உறுதியோடு, அவர் எண்ணியதை எய்தியதாகவும் மாற்றிவிட்டார் ரசா. ஆனாலும், இது தொடக்கமே முடிவல்ல என்பது போலத்தான், கடந்த சில போட்டிகளில் அவரது செயல்பாடுகள் உள்ளன.

வயது கூடி விட்டது என ஜிம்பாப்வே விலக்கி வைத்த அதே ரசாதான், கடந்த எட்டு சர்வதேச டி20 போட்டிகளில், 44.3 சராசரியோடு, நான்கு அரை சதங்களோடு, 355 ரன்களை விளாசியுள்ளார். அதோடு 7 விக்கெட்டுகளையும் அவரது சுழலும் பந்துகள் எடுத்திருந்தன. பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில், அணி கோப்பையை வெல்ல, ஆட்ட நாயகன் விருதை ரசா வாங்கினார். ஆனால், அவரது பேட் எந்தளவு பசித்திருக்கிறது என்பதை பங்களாதேஷுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பார்க்க முடிந்தது. 304 என்ற கடின இலக்கைத் துரத்திய போதும், கொஞ்சமும் பின்வாங்காமல் எல்லா பௌலரையும் குறிவைத்துத் தாக்கினார் ரசா. இன்னசண்டுடனான அவரது பார்ட்னர்ஷிப்பும் 109 பந்துகளில் அடிக்கப்பட்ட 135 ரன்களும் அணியை வெற்றிக் கோட்டை எட்ட வைத்தன. சதத்தை அவர் கொண்டாடிய அந்த விதம், நான்காண்டு வலியை வெளிப்படுத்தியதோடு மிகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் இருந்தது.

இரண்டாவது போட்டியிலும், கேப்டன் ஷகாப்வாவுடனான அவரது பார்ட்னர்ஷிப்பும் பேக் டு பேக் வந்து சேர்ந்த இன்னொரு சதமும் எந்தளவு அவரது ஃபார்ம் இருக்கிறது என்பதற்கு அடிக்கோடிட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஒரே தொடரில் ஐந்தாவது இடத்தில் இறங்கி அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரசா படைத்துள்ளார். தொடரில் 2-0 என முன்னிலை பெற்று வென்றும் உள்ளது ஜிம்பாப்வே. 2013-ம் ஆண்டுக்குப் பின் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டிகளில் தோல்வியை மட்டுமே பார்த்து வந்த ஜிம்பாப்வே தொடரையே கைப்பற்றி உள்ளது. இரண்டு அடுத்தடுத்த வெற்றியிலும் இன்னொரு வீரரும் வெற்றிக்கு உறுதுணையாக நின்றிருந்தாலும் இரண்டிலும் தனித்துவமாக தெரிந்தது ரசாவின் மாஸ்டர் கிளாஸ் பேட்டிங். டி20 தொடரை இழந்தது குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த பங்களாதேஷ் அணியின் இயக்குனர் கலீத் மக்மூத் அதை அவமானமாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் ஜிம்பாப்வேவினை குறைவாக மதிப்பிட்ட இடத்தில்தான் பங்களாதேஷ் சறுக்கியது.

சிக்கந்தர் ரசா
சிக்கந்தர் ரசா

வலிமையான தோள்களால்தான் பலரது நம்பிக்கையையும் சுமக்க முடியும் எனச் சொல்லப்படுவதுண்டு. ரசாவுடைய தோள்கள் மட்டுமல்ல இதயமும் வலிமையானதுதான். அதுதான், வலிகள் உளிகளாக்கித் தந்த பாடத்தையும் கற்றுத் தெளிய வைத்து அவரை முன்னிலைபடுத்தியுள்ளது.

ப்ரோ 40 லீக், டாக்கா ப்ரிமீயர் லீக் என கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரசா, தற்சமயம் சர்வதேச அளவிலும் தன்னை முன்னைவிட பெரிதாகப் பிரகடனப்படுத்தி உள்ளார். ஜிம்பாப்வேயின் இந்த அட்டாக்கிங் கிரிக்கெட் பாணி தொடருமென சமீபத்தில் அவர்களது பயிற்சியாளர் குளூஸ்னரும் கூறியுள்ளார். இது இரண்டும் சந்திக்கும் புள்ளி ஜிம்பாப்வேயின் புதிய தொடக்கமாக இருக்குமா?