Published:Updated:

`நீங்கள் சந்தித்த அடுத்த பந்தைப்போல்..!'- பாண்ட்யாவின் பிறந்தநாள் பதிவுக்கு ஜாகீரின் அசத்தல் பதிலடி

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் ஹர்திக் பாண்ட்யா!

Pandya - Zaheer
Pandya - Zaheer

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்ட அவருக்குக் கடந்தவாரம் லண்டனில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை முடிந்த கையோடு புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்போது அவர் கையில் அணிந்திருந்த வாட்ச் வைரல் ஆனது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரம்தான் இந்தப் போட்டோ பதிவின் ஹைலைட்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 80 லட்ச ரூபாய் வாட்ச்! - ஹர்திக்கின் பதில் என்னவாக இருந்திருக்கும்?
பாண்ட்யா பதிவு
பாண்ட்யா பதிவு

மருத்துவமனையில் ஓய்வில் இருந்தாலும் சமூகவலைதளம் மூலம் தொடர்ச்சியாகப் பதிவுகள் போட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான பதிவில் ஒரு உள்ளூர் போட்டியில் ஜாகீர் கான் பந்துவீச்சில் பாண்ட்யா சிக்ஸர் விளாசும் வீடியோவைப் பகிர்ந்து, ``ஹேப்பி பர்த்டே ஜாகீர்... நான் இங்கு சிக்ஸர் விளாசுவதுபோல் நீங்களும் விளாசுவீர்கள் என நம்புகிறேன்” என ஜாகீர் கானை டேக் செய்து பதிவிட்டார். ஹர்திக் பாண்ட்யாவின் இந்தப் பதிவு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ` மூத்த முன்னாள் வீரருக்கான மரியாதையை அவர் வழங்கவில்லை' எனப் பலரும் விமர்சித்திருந்தனர். மேலும் ஜாகீர், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, பாகிஸ்தானின் சோயப் அக்தர் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிக்ஸர்கள் பறக்கவிட்டிருக்கிறார். அவர் இல்லாவிட்டால் 2011 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியிருக்க முடியாது எனச் சிலர் பாண்ட்யாவுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜாகீர் கான். அப்போது பாண்ட்யாவின் பதிவுக்கும் அவர் பதிலளித்திருந்தார். ``உங்களின் வாழ்த்துக்கு நன்றி பாண்ட்யா... உங்கள் அளவுக்கு எனக்கு பேட்டிங் திறமை இல்லை. ஆனால் எனது பிறந்த நாள், இதே போட்டியில் நீங்கள் சந்தித்த எனது அடுத்த பந்தைப் போன்று சிறப்பாக இருந்தது” என்றார். இதன் மூலம் சிறப்பான முறையில் பாண்ட்யாவுக்கு தனது பதிலடியைக் கொடுத்துவிட்டார் ஜாகீர் கான் எனப் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

சர்ச்சையான கருத்துகள் தெரிவிப்பது பாண்ட்யாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த சர்ச்சை கருத்தும் அதற்கு அவர் சந்தித்த சிக்கல்களும் அனைவரும் அறிந்ததே.