பார்ல் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்து தொடரையும் இழந்திருந்தது. முதல் போட்டியை போல இந்தப் போட்டியிலும் இந்திய மிடில் ஆர்டர் சோபிக்கவில்லை என்றாலும் மோசமான பௌலிங்கே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி அனுபவமில்லாத கே.எல்.ராகுலின் கேப்டன்சி இந்திய அணியின் ஆட்டத்திற்கு சிறிது அளவு கூட பங்களிக்கவில்லை என்பதே உண்மை.

இந்தியாவின் மோசமாக பர்ஃபாமன்ஸ் குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா, தன் அணியில் உள்ள வீரர்களை எப்படி கையாள்கிறார் என்பதை ராகுல் கவனிக்க வேண்டும். பவுமா, சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு இரண்டையும் தனித்தனியாக பயன்படுத்தவில்லை. இதனை ராகுல் கற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து உங்களிடம் உள்ள திறமைகளில் சிறந்தவற்றை வெளிக்கொணர வேண்டும். வெங்கடேஷ் ஐயரை ஊக்கப்படுத்த விரும்பினால், நீங்கள் அவருக்கு பந்து வீச வாய்ப்பளிக்க வேண்டும். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு சரியான திட்டம் வகுத்து அதற்கு தயாராகும் தருணம் இதுவே. தோல்வியில் இருந்துதான் ஒரு வீரன் பாடம் கற்றுக் கொள்வான்" என்று கூறினார்.
அவர் கூறியது போல அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக்கொண்டு, கேப்டன்சியிலும் அனுபவமில்லாத பவுமா அடுத்தடுத்த வெற்றிகளை ருசித்துள்ளார். அதுவும் அனுபவம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக! ஆனால் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் போன்ற பல திறமை வாய்ந்தவர்களை ராகுல் பயன்படுத்தத் தவறியிருக்கிறார். அத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயரை பயன்படுத்த தவறிய ராகுல் பந்துவீச்சிலும் சரியான முறையில் பௌலர்களை ரொட்டேட் செய்யாமல் இருந்தது அவரின் கேப்டன்சியில் உள்ள குறைகளைக் காட்டுகிறது.

அதே சமயம் தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, போட்டியின் முதல் ஓவரிலேயே ஸ்பினை கொண்டுவந்தார். அதுவும் பகுதி நேர பந்துவீச்சாளரான எம்டன் மார்க்ரமை வீச வைத்ததோடு ஸ்பின், ஃபாஸ்ட் எனக் கலந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் திணறடித்து வெற்றியும் கண்டனர்.
மேலும் ராகுலின் கேப்டன்சி குறித்து கூறும் ஜாகிர் கான், "முதலில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பளியுங்கள். அப்போதுதான் அவர் முன்னேறுவார். அவர் மட்டுமல்ல தேவையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு தேவையான வீரர்கள் கிடைப்பார்கள்" என்றார். கே எல் ராகுலுக்கு கேப்டன் அனுபவம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அணியில் உள்ள வீரர்களை சரியாக பயன்படுத்தி இருந்தாலே இந்தியா அணி வெற்றி பெற்றிருக்கும்.
எடுத்துக்காட்டாக, தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா கேப்டன்சியில் அதிகம் அனுபவம் இல்லாதவர்தான். ஆனால் தன்னுடைய அணியில் உள்ள வீரர்களை சரியான இடத்தில் பயன்படுத்தியதால் அவரால் வெற்றியை ருசிக்க முடிந்தது. எனவே தனக்கு கேப்டன்சி அனுபவம் இல்லை எனக் கூறி இந்தியாவின் தோல்வியில் இருந்து கே எல் ராகுல் நழுவிவிட முடியாது.