Published:Updated:

`2014 டி20 உலகக் கோப்பை ஃபைனல்; வில்லன்... வீட்டில் கல்லெறி!’ - யுவராஜ் சிங் ஷேரிங்ஸ்

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தனது கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக யுவராஜ் சிங் கருதியிருக்கிறார்.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 (முதலாவது டி20 உலகக் கோப்பை) மற்றும் 2011 ஆகிய தொடர்களில் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டி ஃபர்பாமென்ஸ் என யுவராஜ் பலவிதங்களில் கொண்டாடப்பட்டார். அதேபோல்தான் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் யுவராஜ் சிங், இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
twitter

ஆனால், 2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி யுவராஜ் சிங்குக்குச் சிறப்பாக அமையவில்லை. இலங்கை அணிக்கெதிரான அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா நிர்ணயித்த இலக்கை இலங்கை, 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. அந்தப் போட்டியில் 21 பந்துகளை சந்தித்த யுவராஜ், 11 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். அதுவும் டெத் ஓவர்களில் அவரது பேட்டிங் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

Vikatan

அந்தப் போட்டி குறித்தும் தனது கிரிக்கெட் கரியரின் பல்வேறு அனுபவங்கள் குறித்தும் யுவராஜ் சிங் தற்போது நினைவுகூர்ந்திருக்கிறார். கிரிக்கெட் தொடர்பான யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள யுவராஜ் சிங், அந்தப் போட்டிக்குப் பிறகு கொலை ஒன்றைச் செய்துவிட்ட வில்லன்போல், தான் உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``அதற்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அன்றைய தினம் நான் சிறப்பாக விளையாடவில்லை. துரதிருஷ்டவசமாக அது உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக அமைந்துவிட்டது. மற்ற ஏதாவது ஒரு போட்டியில் அப்படி நான் விளையாடியிருந்தால், அது பெரிதுபடுத்தப்பட்டிருக்காது.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
twitter

அந்தப் போட்டி முடிந்து நான் தாயகம் திரும்பியபோது, என்னை நான் வில்லன் போல் உணர்ந்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது விமான நிலையத்திலிருந்து நான் வெளியேறியபோது ஊடகங்கள் என்னை நோக்கிக் கேள்விகளை சத்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தன. நல்லவேளையாக நான் ஹெட்போன்ஸ் போட்டிருந்தேன்.

எனது வீடும் தாக்கப்பட்டது. சில கற்கள் வீட்டில் வந்து விழுந்தன. ஏதோ குற்றமிழைத்தவன் போல் நான் என்னைக் கருதினேன். கொலை செய்துவிட்டு சிறை சென்றதைப் போல் உணர்ந்தேன்.

அதன்பின்னர், அதிலிருந்து நான் மீண்டுவந்தேன். ஆனால், அந்தச் சூழல் என்ன மாதிரியான உணர்வைக் கொடுத்தது என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
யுவராஜ் சிங்

அந்தநேரத்தில் எனக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்திருந்தார்; பின்னர் மக்கள் புரிந்துகொண்டனர். நான் வீடு திரும்பியதும், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த பேட் என்னிடம் இருப்பதை நினைவுகூர்ந்தேன். எனது தொப்பியை அந்த பேட்டின் மீது வைத்தேன். அப்போது எனது கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக நான் நினைத்தேன்’’ என்று அசைபோட்டிருக்கிறார் யுவராஜ் சிங்.

`தோனியின் ஃபேவரைட் பிளேயர் சுரேஷ் ரெய்னாதான்!’- மனம் திறக்கும் யுவராஜ் சிங்

ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள யுவராஜ் சிங், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது அழுத்தத்தை உணர்ந்ததாகவும் அங்கிருந்து வெளியேறவே விரும்பியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``ஒரு அணிக்காக 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. விராட் கோலி, தோனி, ரோஹித் ஷர்மா போன்றவர்கள் ஒரே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி வருகிறார்கள். அதனால், அந்த அணியில் செட்டில் ஆக அவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுபோன்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடியபோது அங்கிருந்து வெளியேறவே விரும்பினேன். கேப்டனாக இந்த வீரர்கள் வேண்டும் என்று நான் கேட்டபோது, அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. ஆனால், அங்கிருந்து நான் வெளியேறியபின்னர் ஆச்சர்யமாக அந்த வீரர்களை அவர்கள் வாங்கினார்கள். பெயரளவில் மட்டுமே அங்கு நான் கேப்டனாக இருந்தேன். பஞ்சாபுக்காக விளையாடுவதை நான் பெரிதும் விரும்பினேன். ஆனால், அந்த அணி நிர்வாகத்திடமிருந்து தனித்திருக்கவே ஆசைப்பட்டேன்’’ என்று தனது கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு