Election bannerElection banner
Published:Updated:

` `டேஷ்’ஷாட் என்று கூறி என் தொண்டையை அறுப்பேன் என்றார்!' -யுவராஜ் சிங் பகிர்ந்த ஃப்ளாஷ்பேக் சம்பவம்

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

கோபத்தில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியிருப்பார். இந்த சம்பவத்தை நினைவில் வைத்து பிளிண்டாஃப் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது ஏன் என பீட்டர்சன் இந்த உரையாடலில் கேள்வி எழுப்பினார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒலிம்பிக் முதல் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், விளையாட்டு வீரர்கள் துடிப்புடன் உள்ளனர். ஃபிட்னஸ் பயிற்சி மற்றும் சமூக வலைதளங்களில் உரையாடல் என விளையாட்டு வீரர்கள் தங்களது பொழுதைக் கழித்துவருகிறார்கள். சமீபத்தில்கூட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமூக வலைதளங்களில் `` Keep it Up" என்ற சவாலைத் தொடங்கியுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கருக்கு சவால் விடுத்தது அதிக கவனம் ஈர்க்கப்பட்டது. இதற்கிடையே, யுவராஜ் சிங் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் உடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
twitter

அப்போது, 2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களுடன் 12 பந்துகளில் அரைசதம் அடித்தது குறித்து பேச்சு எழுந்தது. அந்தப் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்களை அடிப்பதற்கு முன்பாக இங்கிலாந்து பவுலர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் உடன் யுவராஜ் சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்திருப்பார். இதன்பின் கோபத்தில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியிருப்பார். இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்து பிளிண்டாஃப் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது ஏன் என பீட்டர்சன் இந்த உரையாடலில் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த யுவராஜ் சிங், ``பிராட் ஓவருக்கு முன்னதாக பிளிண்டாப் பந்துவீசினார். அதில் இரண்டு நல்ல பந்துகளை வீசியிருப்பார். அப்போது ஒரு யார்க்கரை நான் பவுண்டரி அடித்துவிட்டேன். நான் அடித்த ஷாட்டைப் பார்த்த பிளிண்டாப் `டேஷ்’ஷாட் என்று கூறி என் தொண்டையை அறுப்பேன் என்றார். நான் அதற்கு ``என் கையில் என்ன பேட் இருக்கிறது, பாருங்கள், இதைக் கொண்டு உங்கள் பந்துகளை எங்கெல்லாம் அடிக்கப்போகிறேன் என்பதை மட்டும் பாருங்கள்'' என்றேன்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

அதன்படி பிராட் ஓவரில் சிக்ஸர்கள் அடித்தேன். 6 சிக்ஸர்கள் அடிக்கும்போது நான் அதிகமான கோபத்தில் இருந்தது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இதற்கு முன் டிமிட்ரி மஸ்கரன்ஹாஸ் எனது ஒரு ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசியிருப்பார். அதை நியாபகம் வைத்து பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த பின்பு, முதலில் டிமிட்ரி மஸ்கரன்ஹாஸையே பார்த்தேன், அதன்பிறகே பிளிண்டாஃபைப் பார்த்தேன்" என்று ஃப்ளாஷ்பேக்கை நினைவுகூர்ந்தார் யுவராஜ் சிங்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு