Published:Updated:

`தோனியின் ஃபேவரைட் பிளேயர் சுரேஷ் ரெய்னாதான்!’- மனம் திறக்கும் யுவராஜ் சிங்

யுவராஜ்சிங்
யுவராஜ்சிங்

``தோனியைப் பொறுத்தவரை அவருக்குப் பிடித்தமான வீரர் சுரேஷ் ரெய்னாதான். சுரேஷ் ரெய்னாவுக்கு நல்ல சப்போர்ட் கிடைத்தது. காரணம் தோனிக்கு அவரைப் பிடிக்கும் என்பதால்''.

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், தோனி ரசிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்ட வீரர் யுவராஜ்சிங். இவரது அதிரடி ஆட்டத்துக்குத் தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

2007ம் ஆண்டு தோனி என்னும் இளம் கேப்டன் தலைமையில் இந்திய அணி, டி-20 உலகப்பையை வென்றது. லீக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து இந்தியா 5 விக்கெட்டுகளுக்கு 188 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அந்தப் போட்டியில், கில்கிறிஸ்ட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 15 ரன்கள் விதியாசத்தில் இந்திய அணி வீழ்த்த வித்திட்டார் யுவராஜ் சிங்.

யுவராஜ்சிங்
யுவராஜ்சிங்

அந்த ஆட்டத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டில் பைபர் உள்ளதா என தன்னிடம் கேட்டதாகவும் நடுவர் தனது பேட்டை சரிபார்த்ததாகவும் யுவராஜ் கூறியுள்ளார். ஆட்டம் முடிந்த பின் ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர், பேட்டின் பின்புறம் பைபர் உள்ளதா? என்றும் அது சட்டபூர்வமானதா? நடுவர் அதைப் பார்த்தாரா? என்றும் கேட்டார் என யுவராஜ் கூறினார். அதன் பின் யுவராஜ், அவரிடம் தனது பேட்டை சரிபார்க்குமாறு கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட், `வழக்கமாக உங்களுக்கு பேட் தயாரித்துக் கொடுப்பது யார்?’ என கேட்டதாகவும் யுவி கூறினார்.

தொடர்ந்து பேசிய யுவராஜ், ``அதன் பின் நடுவர் பேட்டை சரிபார்த்தார். ஆனால், உண்மையாகவே அந்த பேட் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். நான் அதுமாதிரியான பேட்டில் விளையாடியது இல்லை. அதுவும் நான் 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டும் எனக்கு தனி சிறப்புதான்" என்றார்.

2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையின் லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக யுவி, ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் பவுண்டரி லைனைத் தாண்டி வெளியே அனுப்பினார். அவர், ஆறு சிக்சர்கள் விளாசிய வீடியோ இன்னமும் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும், அந்தப் போட்டியில் 12 பந்துகளில் அரை சதமும் விளாசினார். அந்த போட்டியில் யுவராஜின் ஸ்ட்ரைக்ரேட் 194.74. அந்தத் தொடரில் பங்கேற்ற 6 போட்டிகளில் 148 ரன்கள் எடுத்தார். சராசரியாக ஆட்டத்திற்கு 29.60 ரன்கள்.

யுவராஜ்சிங்
யுவராஜ்சிங்

2011ம் ஆண்டு கேன்சர் வந்தபோதும் துவண்டுபோகாது, ஆடுகளத்திற்குள் மீண்டு வந்த தன்னம்பிக்கை நாயகன் யுவராஜ் சிங். 2007ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 ரன் வித்தியாசத்தில் வென்று உலககோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது அன்றைய இந்திய அணி.

`தோனி மிஸ் ஃபீல்ட்; நெஹ்ரா ஆங்கிரி..வைரல் வீடியோ’ – 15 வருடங்களுக்கு பிறகு மனம்திறந்த நெஹ்ரா

அதேபோல், 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் குறித்து பேசிய யுவராஜ் சிங், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா குறித்தும் தோனியின் அணித் தேர்வு குறித்தும் பேசியிருக்கிறார். ``ஒவ்வொரு கேப்டன்களுக்கும் பிடித்தமான வீரர்கள் இருப்பதுண்டு. அப்போதைய சூழலில் யூசுப் பதான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். நானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததோடு, விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொண்டிருந்தேன். அணியில் இடது கை சுழற்பந்துவீச்சாளர் இல்லாததால் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. அதேநேரம், சுரேஷ் ரெய்னா சிறப்பான ஃபார்மில் இல்லை’’ என்று அவர் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு