Published:Updated:

`ஓய்வை தோனி முடிவுசெய்வார்; ரிஷப்பிடம் வேலைவாங்கணும் கோலி!'‍‍- யுவராஜ் சொல்லும் லாஜிக்

தோனி ஓய்வு குறித்து அவரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் பேசியுள்ளார்.

Dhoni and yuvraj singh
Dhoni and yuvraj singh

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கும் தோனி தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அவரது ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களுக்குத் தோன்றியவாறு முடிவுரைகளை எழுதி வருகின்றனர். ஆனால், தோனியோ அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. அவரின் மனைவி சாக்ஷியோ `அனைத்தும் வதந்தி' என ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார். இருந்தும் தோனி ஓய்வு குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளது. இதற்கிடையே, தோனி ஓய்வு குறித்து அவரது நெருங்கிய நண்பரும், முன்னாள் அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் பேசியுள்ளார்.

dhoni
dhoni

இந்தியா ஆன் ட்ராக் ஏற்பாடு செய்த `தி ஸ்போர்ட்ஸ் மூவ்மென்ட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ``என்னைப் பொறுத்தவரை தோனிதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். தோனி ஒரு சிறந்த வீரர் மட்டுமில்லை, இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தவர். எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னும் விளையாட வேண்டும் என்று அவர் முடிவெடுத்தாலும் அந்த முடிவை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும். அவருக்குத் தேவையான கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும்" என்றவரிடம் தோனி - ரிஷப் பன்ட் ஒப்பீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

`நம்பர்-4ஐப் பற்றி யோசிக்கவில்லை; இந்தியாவின் திட்டம் என்னவாக இருந்தது?' - கேள்வியெழுப்பும் யுவராஜ் சிங்

அதற்கு, ``தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தான பங்களிப்பை அளித்தவர். அந்த வகையில் பார்த்தால் தோனியுடன் ரிஷப் பன்டை ஒப்பிடுவது என்பது நியாயமில்லாத ஒன்று. தோனி என்பவர் ஒருநாளில் உருவான வீரர் இல்லை. தோனி ஒரு சிறப்பான வீரராக மாற நிறைய ஆண்டுகள் தேவைப்பட்டன. அதேபோல்தான் அவருக்கு இணையான வீரரை கண்டுபிடிக்க சில காலம் ஆகும். தோனிக்கு சமமான இடத்தை ரிஷப் பிடிக்க வேண்டும் என்றால் அவருக்கும் நிறைய காலம் பிடிக்கும்.

Dhoni, Rishab Pant
Dhoni, Rishab Pant

ரிஷப்பிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தைப் பெற வேண்டும் என்றால் அவரின் குணநலன்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவரின் குணத்தின் தன்மையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப அவருடன் வேலை செய்ய வேண்டும். அவரை அடக்க நினைத்தால் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தைப் பெற முடியாது. ஆம்.. அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், நீங்கள் அவரிடமிருந்து சிறந்ததை எவ்வாறு பெறுவீர்கள். அவரைக் கண்காணிக்க நிறைய நபர்கள் உள்ளனர். பயிற்சியாளர்கள், கேப்டன் கோலி ஆகியோர்தான் அவருக்குத் தேவையான வலிமையைக் கொடுத்து வேலைவாங்க வேண்டும்" என வற்புறுத்தியுள்ளார்.

`தோனி எனக்கு குரு; ஆனால், ஒப்பீடு..?' - மனம்திறக்கும் ரிஷப் பன்ட்