Published:Updated:

`90-க்கு 3 விக்கெட்... அப்புறம் வந்தான் பாரு ஒருத்தன்... யுவராஜ் சிங்..!' - யுவி பிறந்தநாள் பகிர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுளை இழந்து ஸ்தம்பித்துக்கொண்டிருந்தது இந்தியா. அப்போது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நான் எப்போதும் என் மீது நம்பிக்கை இழந்ததில்லை. எப்போதும் உங்களை நீங்கள் நம்புங்கள்!" - ஓய்வு அறிவிப்பின்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்த யுவராஜ் சிங் சொன்ன வார்த்தைகள் இவை. பல ஏற்றத் தாழ்வுகளையும், பலரது எதிர்மறைச் சொற்களையும் தாண்டி இந்திய கிரிக்கெட் அணியில் 19 ஆண்டுகள் நிலைத்து நின்றதற்குக் காரணம், அவரது `நம்பிக்கை' என்ற ஒற்றைத் தாரக மந்திரம்தான்!  

இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 58 டி-20 போட்டிகள், 40 டெஸ்ட்கள் எனப் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜுக்கு கிரிக்கெட்டுக்கு முன், டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங்கில்தான் ஆர்வமும் கவனமும் அதிகம். ஸ்கேட்டிங் போட்டிகளில் தேசியளவில் பல பதக்கங்களை வென்று குவித்திருக்கிறார். ஆனால், தன் மகன் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டுமெனக் கருதி யுவியின் தந்தை யோக்ராஜ் சிங், வென்ற பதக்கங்கள் மொத்தத்தையும் தூக்கியெறிந்தார். தந்தையின் கனவை தன் கனவாக்கிக்கொண்டு, அதைச் சாத்தியப்படுத்தவும் கிளம்பினார் அந்த நம்பிக்கை நாயகன். 

யுவராஜ் - கங்குலி
யுவராஜ் - கங்குலி

ஆட்ட நாயகனின் ஆட்டம் ஆரம்பம்!

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளாலும், மேட்ச் ஃபிக்சிங் புகார்களாலும் இந்திய கிரிக்கெட் அணி தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தது. `இந்திய அணியின் எழுச்சிக்காக ஒரேயொரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா' என இந்திய அணியினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். துவண்டுபோயிருந்த இந்திய அணியைத் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் அப்போதைய கேப்டனான கங்குலிக்கு இருந்தது.

ஃபீல்டிங், மிடில் ஆர்டர், ஆல்-ரவுண்டர் போன்ற சிறப்பம்சங்களில் இந்திய அணி சற்று பலவீனமாகவே இருந்தது. அதைச் சிறப்பாகக் கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்த கங்குலிக்கு, ஒரு மேஜிக்கல் வீரர் கிடைத்தார். அவர் பெயர் யுவராஜ் சிங்.

2000-ம் ஆண்டு... ஐசிசியின் நாக்-அவுட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அறிமுகமான முதல் தொடரில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும், பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன் மட்டுமே கொடுத்து எதிரணியை தத்தளிக்கச் செய்தார். தனது அசகாய திறமையின் மூலம் ரசிகர்களின் பார்வையை தன் மீது விழச் செய்தார்.

அதேத் தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுளை இழந்து ஸ்தம்பித்துக்கொண்டிருந்தது இந்தியா. காம்ப்ளி - ராபின் சிங்கின் பார்டனர்ஷிப் ஓரளவு கைகொடுக்க, அதை இறுகப்பற்றிக்கொண்டு வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது யுவராஜின் வெறியாட்டம். பொறுமையாக பந்துக்குப் பந்து ஆடிய யுவராஜ், மேட்சை தன்வசப்படுத்திக்கொண்டார். 80 பந்துகளில் 84 ரன்களைக் குவித்தார். 19 வயதேயான அந்த இளம் யுவராஜ், ஆட்ட நாயகனுக்கான விருதினையும் பெற்றார்.

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில், நம்மை அடங்காத அதிர்ச்சியிலும் புளகாங்கிதத்தாலும் ஆழ்த்திய அந்தச் சிறப்பான சம்பவம், 2007-ம் ஆண்டில் நிகழ்ந்தது. டி-20 உலகக் கோப்பைக்காக இந்திய அணியை இளம் வீரர்களைக்கொண்டு கட்டியெழுப்பியிருந்தார்கள். அந்த 11 `ஆங்க்ரி யங் மென்கள்' கொண்ட அணியைத் தலைமையேற்க வந்தவர்தான் `கேப்டன் கூல்' தோனி. அவருக்குப் பக்கபலமாக நிற்க, துணை கேப்டனென்ற பொறுப்போடு வந்தார் யுவராஜ். இளம் ரத்தத்தை அணிக்குப் பாய்ச்சியது வீண்போகவில்லை. தலைவன் தோனி, தளபதி யுவராஜின் தலைமையில் டி-20 உலகக் கோப்பை எனும் போரைச் சந்தித்த இந்திய அணி, கோப்பையையும் கைப்பற்றியது. இந்தத் தொடர் முழுக்கவே யுவராஜ் ருத்ரதாண்டவமாடினார்.

குறிப்பாக, இங்கிலாந்துடனான போட்டியில் ஃபிளின்டாஃபுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பௌலிங் போட வந்த ஸ்டுவார்ட் ப்ராடின் பந்துகளை, தன் பேட்டுக்கு இரையாக்கினார் யுவி. ப்ராட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி வதம் செய்தார். தவிர, யுவராஜுக்கும் இது பெரிய மைல்ஸ்டோனாக அமைந்தது.

தொடர் நாயகன்!

இந்திய அணி 2011 உலகக் கோப்பை வென்றதில் மிக முக்கிய பங்கு யுவராஜுக்கு உண்டு. அந்தத் தொடர் முழுக்கவே யுவராஜ் ஆட்டம் வெறித்தனம். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்ப, தனி ஒருவனாக நின்று, அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்தார். அவருடைய சதம் மைதானத்திலிருந்த அனைவரையும் நிம்மதி பெருமூச்சை விடச் செய்தது. கூடவே இரண்டு விக்கெட்களையும் எடுத்ததால் அப்போட்டியின் ஆட்ட நாயகனானார். அன்றிரவு, மூச்சுத் திணறல், ரத்த வாந்தி என அவதிப்பட்டார். ஓய்வெடுக்கும்படி தோனி, சச்சின் வலியுறுத்த, `அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்லை' என அவர்களைச் சமாளித்துவிட்டு மைதானத்தில் காலடியெடுத்து வைத்தார். 

Yuvraj Singh
Yuvraj Singh

இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இந்தியாவின் பௌலிங்கும் ஓப்பனிங் பேட்டிங்கும் கைகொடுக்காமல் போனதால் தோல்வியின் விளிம்பில் நின்றது இந்தியா. ஆனால், காம்பிரின் பக்குவமான ஆட்டமும் தோனியின் வெறித்தன ஆட்டமும் இந்திய அணியை மீட்டெடுத்தது. `28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது' என்று ரவி சாஸ்த்ரியின் அந்த கமென்ட்ரி இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. சச்சினைக் கட்டியணைத்தபோது வெளிவந்த யுவராஜின் கண்ணீருக்குள் அத்தனை அர்த்தம் புதைந்திருக்கிறது. அதே ஆனந்த கண்ணீருடன் தொடருக்கான ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போராளி... 

ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டனாக இருந்த யுவி, மீண்டும் மூச்சுத் திணறல், ரத்த வாந்தியால் அவதிப்பட, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அணியில் நல்ல ஃபார்மில் இருந்த யுவிக்கு இச்செய்தி பெரும் மனவருத்தத்தைக் கொடுத்தது. இருப்பினும், அவரது உடல் மிகவும் மோசமடைய, சற்றும் தாமதிக்காமல் சிகிச்சைபெற வேண்டிய கட்டாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து கடுமையான பயிற்சியை மேற்கொண்ட அவரால், பழைய துடிப்பான, ஆக்ரோஷமான யுவராஜை மீட்டெடுக்க முடியவில்லை. 2017-ல், இந்திய அணிக்காக யுவி களமிறங்கினார். ஐ.பி.எல் போட்டிகளிலும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம்பெற முடியவில்லை. முடிவில், சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Yuvraj Singh
Yuvraj Singh

ஓய்வுக்குப் பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைப் பழக்கமாக்கிக்கொண்டார், அந்த அசகாய வீரன். ``எனக்கான பாதை... அதை நான் தன்னம்பிக்கையுடன் கடப்பேன்" எனப் போராடிக்கொண்டிருக்கும் யுவராஜ்தான் இன்று பல இளம் கிரிக்கெட்டர்களின் இன்ஸ்பிரேஷன்.

பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி!

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு