Published:Updated:

`நானும் இங்கு விளையாடத்தான் வந்திருக்கிறேன்!’-கைஃப் பதிலடியால் அமைதியான கங்குலி.. #Natwest நினைவுகள்

Kaif In lords
Kaif In lords

``அப்போது ஷார்ட் பந்துகளை அடித்து ஆடுவதில் எனக்கு கொஞ்சம் திறன் இருந்தது. அதனால் வழக்கமான ஷாட் அடித்தேன். அது சிக்ஸுக்குச் சென்றுவிட்டது” -கைஃப்

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐசிசியின் உலகக் கோப்பை முதற்கொண்டு எத்தனையோ கிரிக்கெட் தொடர்களை விளையாடி இருந்தாலும், எவராலும் மறக்க முடியாத ஒரு தொடர் என்றால் அது 2002 -ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் சீரீஸ் எனலாம். அந்நிய மண்ணில் சொதப்பும் அணியாக இருந்த இந்தியா, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

கங்குலி
கங்குலி

நடுவரிசையில் விஸ்வரூபம் எடுத்த யுவராஜ் சிங், ஃபீல்டிங்கில் யுவி, கைஃப் காம்பினேஷன், கங்குலியின் ஆக்ரோஷக் கொண்டாட்டம் என மறக்கவே முடியாத தொடர் அது. இந்தப் போட்டியைப் பார்த்த ரசிகர்களாலே இந்தப் போட்டியை மறக்க முடியாது என்றால், களத்தில் இருந்த வீரர்களால்... ஆட்டத்தை வெற்றியின் பக்கம் இழுத்துச் சென்ற ஒரு வீரர்களால் எப்படி மறக்க முடியும்?

கொரோனாவால் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க, விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் சமூகவலைதளத்தில் விர்ச்சுவல் உரையாடல்களை நடத்தி வருகிறார்கள். நாட்வெஸ்ட் சீரீஸில் கலக்கிய யுவி, கைஃப் இன்ஸ்டாகிராம் லைவ்-ல் இணைந்து நடத்திய உரையாடலில், அந்தத் தொடர் குறித்த பேச்சு இல்லாமல் போயிடுமா என்ன?

யுவராஜ் - கங்குலி
யுவராஜ் - கங்குலி

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய, இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி. டி20 இல்லாத காலத்தில் 50 ஓவர்களில் 326 ரன்கள் என்ற கடினமாக இலக்கை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு நிர்ணயம் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய சேவாக், கங்குலி ஜோடி இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கம் தந்தது. 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்று 100 ரன்களைக் கடந்தது. ஆனால் கங்குலி 60 ரன்னில் ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. விக்கெட் இழப்பின்றி 106 ரன்கள் என்ற கணக்கிலிருந்து 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர்தான் கைஃப், யுவராஜ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். யுவராஜ் 69 ரன்னில் ஆட்டமிழக்க, கைஃப் 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்கள் 8 விக்கெட்டுகள் இழந்து 326 ரன்கள் எடுத்தது.

யுவராஜ், கைஃப் உரையாடலில் இருவரின் எதிர்காலம் குறித்தும் கடந்த கால நினைவுகள் குறித்தும் பேசினர். அப்போது உரையாடல் நாட்வெஸ்ட் தொடருக்குள் வந்தது. அன்றைய போட்டியில் தொடக்கத்தில் யுவராஜ் அதிரடி காட்ட, கைஃப் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரம் செல்லச் செல்ல ஆட்டம் சூடுபிடிக்க, பெவிலியனில் இருந்த கங்குலி, கைஃபிடம் சிங்கிள் எடுத்து யுவராஜ்-க்கு ஸ்ட்ரைக் கொடுக்கும்படி கத்தினார். இனி, யுவராஜ், கைஃப் உரையாடலுக்கு வருவோம்.

யுவராஜ், கங்குலி முகமது கைஃப்!
யுவராஜ், கங்குலி முகமது கைஃப்!

கைஃப்: அன்று நடந்தது இன்னும் அப்படியே நினையில் இருக்கிறது. தாதா(கங்குலி) பெவிலியனிலிருந்து, ``சிங்கிள் எடு... சிங்கிள் எடு... யுவராஜ்-க்கு ஸ்ட்ரைக் கொடு” எனக் கத்தினார்.

யுவராஜ்: ஆமாம்.. தாதா அன்று சிங்கிள் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் தரச் சொல்லி சத்தமாகக் கத்தினார். ஆனால் நீ அடுத்த பந்தில் என்ன செய்தாய்?

கைஃப்: அடுத்த பந்தே எனக்கு ஷார்ட் பாலாக வந்தது. அப்போது ஷார்ட் பந்துகளை அடித்து ஆடுவதில் எனக்குக் கொஞ்சம் திறன் இருந்தது. அதனால் வழக்கமான ஷாட் அடித்தேன். அது சிக்ஸுக்குச் சென்றுவிட்டது.

யுவராஜ்: அந்த கிச்ஸருக்குப் பின்னர், நீங்கள் என்னை நோக்கி வேகமாக வந்து, எனது கையிலே ஓங்கி பஞ்ச் செய்த பிறகு, ``நானும் இங்கு விளையாடத்தான் வந்திருக்கிறேன்” என என்னிடம் ஆக்ரோஷமாக தெரிவித்தீர்கள். அதன் பின்னர் தாதா அமைதி ஆகிவிட்டார். கைஃபாலும் சிக்ஸர்கள் அடிக்க முடியும் என அந்த ஒரு சிக்ஸர் அவருக்குப் புரிய வைத்திருக்கும்.

#LordsBalconyMemories
#LordsBalconyMemories

கைஃப்: அன்று, அந்த நேரத்தில் பவுண்டரி அருகே ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் மைதானத்துக்குள்ளே, தாதாவின் செய்தியை எடுத்துவரத் தயாராக இருந்தார். தாதா நான் சிங்கிள் எடுக்க வேண்டும் என்ற மெஸ்ஸேஜை என்னிடம் சொல்லச் சொல்லி இருப்பார். ஆனால் அந்த சிக்ஸருக்குப் பின்னால், யாரும் தண்ணீர் எடுத்து உள்ளே வரவில்லை.

இப்படியாக அந்தச் சுவையான உரையாடல் தொடர்ந்து செல்கிறது. லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்று தனது ஜெர்சியைக் கழற்றி ஆக்ரோஷமாகச் சுற்றும் அந்த `தாதா’வை எந்த கிரிக்கெட் ரசிகர்களும் மறந்திருக்கமாட்டீர்கள் தானே....!

அடுத்த கட்டுரைக்கு