Published:Updated:

`பிங்க் நிறப் பந்துகளில் இருக்கும் சவால்!' - விராட் கோலி சொல்லும் லாஜிக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தைச் சேர்க்கலாம். ஆனால் பொழுதுபோக்குக்காக மட்டுமே அதை விளையாட முடியாது.

விராட் கோலி
விராட் கோலி

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்தியா விளையாடப்போகும் முதல் பகலிரவு போட்டி இதுதான். டெஸ்ட் போட்டிகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்த நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பகலிரவு போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டியில் பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளது. முதல்முறையாக பிங்க் நிறப் பந்துகளில் விளையாடுவதால் இரு அணிகளும் அந்தப் பந்துகளில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

விராட் கோலி
விராட் கோலி

போட்டிக்கு முன்னதாகப் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ``டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது பகலிரவில் மட்டுமே நடைபெறும் போட்டியாக மட்டும் இருந்துவிடக் கூடாது. ஏனென்றால், போட்டியின்போது காலை வேளையில் உண்டாகும் அந்தப் பதற்றத்தை நீங்கள் இழந்துவிடுவீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சுவாரஸ்யத்தைச் சேர்க்கலாம். ஆனால், பொழுதுபோக்குக்காக மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. ஒரு நாள் முழுவதும் களத்தில் தாக்குப்பிடிக்க போராடும் பேட்ஸ்மேன்கள்; அந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்த திட்டம் வகுக்கும் பந்துவீச்சாளர்கள். இதுதான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டின் பொழுதுபோக்காக இருக்க வேண்டும். எல்லா ரசிகர்களும் இதை விரும்புவதில்லை என்பதற்காக அவர்கள் விரும்பும்படி அழுத்தம் தரக்கூடாது.

கண்களுக்கு சவால்... ஸ்பின்னர்களுக்கு சிரமம்... கோலிக்கு டெஸ்ட்... எப்படி இருக்கும் பிங்க் டெஸ்ட்?!

களத்தில் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையும் வீழ்த்தத் துடிக்கும் பந்துவீச்சாளர்களையும்... இந்த நாள் முழுவதும் விக்கெட்டை இழக்கக் கூடாது எனப் போராடும் பேட்ஸ்மேன்களின் போட்டி மனப்பான்மையைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள், டெஸ்ட் போட்டியைக் காண வர வேண்டும். அவர்களுக்குத்தான் களத்தில் என்ன நடக்கிறது என்பது புரியும். பிங்க் நிறப் பந்துகளில் விளையாடுவது சவாலானதாக இருக்கிறது. பந்து கனமானதாக இருக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு பந்துகளைக் காட்டிலும் சற்று கனமானதாக இருக்கிறது. பிங்க் பந்து எடை அதிகமான இருக்கிறது. ஸ்லிப் கேட்சுகளைப் பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி

பந்து கைகளைக் கனமாகத் தாக்குகிறது. இது ஹாக்கி பந்துகளில் அடிவாங்குவதுபோல் உள்ளது. ஃபீல்டர்களுக்கு கொஞ்சம் சிரமாக இருக்கும். எல்லைக்கோடுகளில் இருந்து விக்கெட் கீப்பர்களை நோக்கி ஃபீல்டர்கள் பந்துகளை வீசும்போது சற்று கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். உயரமாக வரும் கேட்சுகளைப் பிடிப்பதும் சவால்தான். வெள்ளை மற்றும் சிவப்பு நிறப் பந்துகள் எவ்வளவு வேகத்தில் கீழே வரும் என உங்களுக்குத் தெரியும். எனவே, கேட்ச் பிடிக்கும்போது கணித்துவிடலாம். ஆனால், இந்தப் பந்தை உள்ளங்கையில் பார்க்காவிட்டால் பந்து போய்விடும்” என்றார். பிங்க் பந்துகள் பேட்ஸ்மேன்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிங்க் நிறப் பந்துகளை ஸ்பின் செய்வதிலும் சிரமங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.