Published:Updated:

`கோலி புகழைத் தடுக்க வேண்டுமென்றே அப்படி ஆடினாரா தோனி?’ - யுவராஜ் தந்தை தாக்கு!

கலிலுல்லா.ச

`தோனி வேண்டுமன்றுதான் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தோற்றிருக்கிறார்’ என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

யோகராஜ்
யோகராஜ்

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தின் குப்தில் த்ரோ செய்த பந்து நேரடியாக ஸ்டம்பில் அடிக்க, தோனி ரன்அவுட்டாகி வெளியேறினார். இது ரசிகர்களின் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவாதங்கள் நீண்டுகொண்டேயிருக்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தோல்வி குறித்து தோனியைக் குற்றம்சாட்டியுள்ளார்.

தோனி
தோனி

ஆனால், தோனி மீது அவர் குற்றம்சாட்டுவது முதன்முறையில்லை. ஏற்கெனவே பலமுறை தோனியின் மீதான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய யோகராஜ், ``தோனி வேண்டுமென்றுதான் நியூசிலாந்து அணியின் டார்கெட்டை கடக்க அணிக்கு உதவவில்லை. இந்திய அணியில் தன்னைத்தவிர, மற்ற எந்த கேப்டனும், உலகக் கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்துவிடக் கூடாது என்பதுதான் தோனியின் எண்ணம்.

``அதை `லக்’ என்றுதான் சொல்ல வேண்டும்..!” - தோனி ரன்அவுட் நிமிடங்களை விவரிக்கும் கப்தில்

துப்பாக்கிகளிலிருந்து வெளிவரும் குண்டுகளைப்போல ரவீந்திர ஜடேஜா ஆடி இந்தியாவின் இலக்கை நெருங்கும்போது, தோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்துவிட்டார். ரவீந்திர ஜடேஜா களத்துக்கு வந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் 77 ரன்களில் விளையாடும்போது, அவரிடம் போய், `அதிரடி ஆட்டம் ஆடு’ என்று சொல்கிறீர்கள் (தோனி). முன்னதாக ஹர்திக் பாண்டியாவிடம் ஸ்பீன்னர்ஸ் ஓவரில் அடித்து ஆட சொல்கிறீர்கள்.

தோனி - யுவராஜ்
தோனி - யுவராஜ்

மிஸ்டர் தோனி, நீங்கள் நிறைய ஆட்டங்களை ஆடியிருக்கிறீர்கள். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற குறைந்தபட்ச சென்ஸ் கூட இல்லையா. யுவராஜ் உங்களைப் போல எந்த வீரரிடமாவது சென்று, `அதிரடியான ஆட்டத்தை ஆடு’ என்று கூறியிருப்பாரா? நீங்கள்தான் பெரிய சிக்ஸர்களை அடித்தீர்களே, அன்று உங்களுக்கு என்ன ஆனது? எது உங்களை கவலையடையச் செய்தது? நீங்கள் அவுட்டாகி வெளியேறியிருந்தால் மட்டும் என்ன வித்தியாசம் நிகழ்ந்துவிடப்போகிறது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.