Published:Updated:

`பானிபூரி விற்பனை; கட்டாய சமையல் வேலை!' - சாதித்த 17 வயது `இரட்டை சத' நாயகன்

எந்த நிலையிலும் மும்பையில் தான் படும் கஷ்டங்களை தன் பெற்றோருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்!

பானிபூரி விற்கும் கிரிக்கெட் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
பானிபூரி விற்கும் கிரிக்கெட் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ( Twitter.com )

``அன்று எனக்கு எல்லாமே சரியாக நடந்தது. சதம் அடித்த பின்னர் என்னால் சில நல்ல ஷாட்களை ஆட முடிந்தது. அதனால் விரைவாக 150 ரன்கள் எடுத்தேன். என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயஸ் ஐயர், `டபுள் செஞ்சுரி குறித்து யோசிக்காதே, உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து' என்றார். முதல் முதலாக இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது மகிழ்ச்சி” - ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் இரட்டை சதம் அடித்த மும்பை அணியின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சொன்னது. 50 ஓவர் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நேற்று நிகழ்த்தியுள்ளார் இந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரர்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
Twitter

17 வயதிலே மகத்தான சாதனை நிகழ்த்தியுள்ளார் ஜெய்ஸ்வால். இனி அவருக்கு என்ன.... செம லைஃப் தான் என நினைக்கலாம். ஆனால், 17 வயதில் சாதனைகளை நிகழ்த்துவதற்காக அவர் கடந்துவந்த பாதை அத்தனை எளிதாக இருக்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் பஹோதி என்னும் இடத்தில் ஒரு சிறிய கடை ஒன்றை நடத்திவருகிறார் ஜெய்ஸ்வாலின் தந்தை. சிறு வயது முதலே கிரிக்கெட் என்றால் அத்தனை ஆர்வம். அவனது ஆர்வம் மற்றும் களத்தில் காட்டும் டெடிகேஷனைக் கண்ட சில சீனியர்கள், `நீ இங்கு இருந்தால் ஜொலிக்க முடியாது. கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர வேண்டும் என்றால் மும்பை செல்ல வேண்டும்’ என்றனர்.

ஜெய்ஸ்வாலுக்கும் அவரின் தந்தைக்கும் அதுவே சரியாகப்பட மும்பை புறப்பட்டனர். அங்கு அவரின் மாமா வீட்டில் தங்க வைத்தார் ஜெய்ஸ்வாலின் தந்தை. ஆனால், ஜெய்ஸ்வால் அங்கு ஒரு மாதம் மட்டுமே தங்க முடிந்தது. அது மிகச் சிறிய வீடு என்பதால், அந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பால் பொருள்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் 12 வயதில் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், கடையில் இருக்கும் அதிகப்படியான பணியால் அவரால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. காலை 5 மணிக்கு எழுந்து பயிற்சிக்குச் செல்ல வேண்டும். மதியம் வந்து கடையில் பணியாற்ற வேண்டும். பயிற்சி முடிந்து சில நாள்கள் ஜெய்ஸ்வால் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டிய கடையின் உரிமையாளர் அவரை வேலையிலிருந்து துரத்தினார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
Twitter

இதைத்தொடர்ந்து, மும்பையில் புகழ்பெற்ற குழந்தைகள் கிரிக்கெட் பயிற்சி பெறும் ஆசாத் மைதானம் வந்து சேர்ந்தார். அங்கு இம்ரான் என்னும் நபரை சந்தித்தார். ``நீ இங்கு சிறப்பாக கிரிக்கெட் விளையாடினால் மைதானத்தில் இருக்கும் டென்ட்டில் தங்க அனுமதிப்பேன்’ என்று சொல்ல தனது ஆட்டம் மூலம் 3 வருடங்கள் அங்கே தங்கியுள்ளார்.

பயிற்சி மைதானத்துக்கு எளிதில் செல்லலாம் என்பதைத் தவிர அங்கும் அவருக்கு எல்லாம் சரியாக நடக்கவில்லை. டென்ட்டில் அவர் தோட்டப் பணி செய்யும் நபர்களுடன்தான் தங்கியிருந்தார். பயிற்சி நேரம் போக மீதி நேரங்களில் அந்தப் பணியாளர்களுக்காக சமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார். தவிர தனியாக அங்கு கழிவறை வசதி கூட இல்லை. அங்கு தன்னுடையை கவலைகளைச் சொல்லக்கூட ஆள் இல்லாமல் இருந்துள்ளார் ஜெய்ஸ்வால்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
Twitter

கையில் காசு இருந்தால் மகனுக்கு கொஞ்சம் செலவுக்கு அனுப்புவார் தந்தை. ஆனால், அது ஜெய்ஸ்வாலுக்கு போதுமானதாக இல்லை. இதனால் அசாத் மைதானத்தில் இரவு நேரங்களில் பானி பூரி விற்கும் பணி செய்தார். இது தொடர்பாக பேசிய ஜெய்ஸ்வால், ``அப்பா அனுப்பும் காசு எனக்குப் போதாது. அதனால் இரவில் பானி பூரி விற்றேன். பல நாள்கள் பானிபூரி விற்றும் வெறும் வயிற்றில் பசியோடுதான் படுத்தேன்” என அந்த நாள்களை நினைகூர்கிறார் ஜெய்ஸ்வால். ஆனால், எந்த நிலையிலும் மும்பையில் தான் படும் கஷ்டங்களை தன் பெற்றோருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

ஜெய்ஸ்வாலின் சிறு வயது கிரிக்கெட் பயிற்சியாளர் ஜவாலா சிங், ``அவனை சிறுவயதில் பார்க்கும்போது, உன் வீடு எங்கே எனக் கேட்டேன். அப்போது அவர் சொன்ன பதில் இப்போதும் நினைவில் இருக்கிறது. `எங்கே இடமிருந்தாலும் அங்கு தங்கிக்கொள்வேன். அதுவே எனது வீடாக இருக்கும்' என்றார். அவனது பதில் எனக்கு அன்று அதிர்ச்சி தந்தது” என்றார். அன்று முதல் இன்றுவரை ஜெய்ஸ்வாலுக்கு பெரும் ஆதரவாக இருந்துவருகிறார் ஜவாலா சிங்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
Twitter

இந்த இளம் வீரர் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், ``ஜெய்ஸ்வாலிடம் நிறைய திறமை இருக்கிறது. விட்டுக்கொடுக்கக் கூடாது என்னும் போராட்டக் குணம் இருக்கிறது. இந்தக் காலத்தில் அந்தக் குணம் அரிதாகி விட்டது. அவனை நான் சந்திக்கும்போது அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னேன். `கிரிக்கெட் மட்டும்தான் வேண்டும் என நீ முடிவெடுத்தால், பல விஷயங்களை நீ தியாகம் செய்ய வேண்டி இருக்கும்’ என்றேன். அவன், அதை ஏற்கத் தயாராக இருந்தான்” என்றார். இந்தியன் ஆயில் அணிக்காக ஜாபருடன் இணைந்து விளையாடிய ஜெய்ஸ்வால், அந்த தொடரில், மேன் ஆஃப் தி சீரிஸ் பட்டம் வென்றார். வாசிம் ஜாபரும் ஜெய்ஸ்வாலின் இளம் வயது கோச்சான ஜவாலா சிங் ஆகிய இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், 154 பந்துகளில் 203 ரன்கள் குவித்தார். இதில் 12 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடக்கம். அதிரி புதியான இந்த ஆட்டம் முடிந்த பின்னர் வாசிம் ஜாபர் ஜெய்ஸ்வாலுக்கு வெல்டன் பாய் என ஒரு மெசேஜ் அனுப்பினார். ``ஒரே சீசனில் ஒரு வீரர் அண்டர் 16, அண்டர் 19, விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி ஆகிய தொடர்கள் விளையாடியதாக என நியாபகம் இல்லை. ஆனால், ஜெய்ஸ்வால் விளையாடுகிறார் என்றால் அவரது திறமையை யோசித்துப் பாருங்கள். எல்லா தொடரில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், 17 வயதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருன் ஆரோண், ஸ்பின்னர் நதீம் போன்ற அனுபவ வீரர்களை எதிர்த்து களத்தில் நின்று 200 ரன்கள் அடிப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. இது வெறும் தொடக்கம் தான்'' என்றார் ஜாபர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அண்டர் 19 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் ஜெய்ஸ்வால்...

வாழ்த்துகள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்!