Published:Updated:

WTC Final: மழை, வெளிச்சமின்மை, ஸ்விங்க் எல்லாவற்றையும் சமாளித்த இந்தியா! இன்று நல்ல ஸ்கோரை எட்டுமா?

WTC Final | INDvsNZ ( twitter.com/ICC )

"மழையோடு விளையாடி, பந்து ஸ்விங்கோடு உறவாடி, வெளிச்சம் கண்ணாம்மூச்சி ஆடி..." என அச்சுறுத்தும் அத்தனை விஷயத்தையும் தாண்டி, இரண்டாவது நாள் ஆட்டத்தை, 146 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று வெற்றிகரமாக முடித்துள்ளது இந்தியா.

WTC Final: மழை, வெளிச்சமின்மை, ஸ்விங்க் எல்லாவற்றையும் சமாளித்த இந்தியா! இன்று நல்ல ஸ்கோரை எட்டுமா?

"மழையோடு விளையாடி, பந்து ஸ்விங்கோடு உறவாடி, வெளிச்சம் கண்ணாம்மூச்சி ஆடி..." என அச்சுறுத்தும் அத்தனை விஷயத்தையும் தாண்டி, இரண்டாவது நாள் ஆட்டத்தை, 146 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று வெற்றிகரமாக முடித்துள்ளது இந்தியா.

Published:Updated:
WTC Final | INDvsNZ ( twitter.com/ICC )
முதல் நாள் ஆட்டம், டாஸ் கூடப் போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. டாஸை நியூசிலாந்து வெல்ல, எதிர்பார்த்ததைப் போலவே, முதலில் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார் வில்லியம்சன். இதுவரை இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான போட்டிகளில், டாஸ் வென்று, நியூசிலாந்து பௌலிங்கைத் தேர்ந்தெடுத்த போட்டிகளில், ஏழில், ஆறு போட்டிகளில் நியூசிலாந்தே வென்றுள்ளது என்ற புள்ளிவிவரம் தொடக்கத்திலேயே பயமுறுத்தியது. ஸ்பின்னர்களே இல்லாமல் வேகப்பந்து வீச்சை மட்டுமே நம்பி இறங்கியது நியூசிலாந்து. இந்தியா, ஏற்கெனவே அறிவித்திருந்த பிளேயிங் லெவனில் மாறுதலைக் கொண்டு வர வாய்ப்பிருந்தும், அறிவித்த அணியோடே இறங்கினார் கோலி.

ரோஹித் மற்றும் கில், இந்திய இன்னிங்ஸைத் தொடங்க, சவுத்தி மற்றும் போல்டைக் கொண்டு நியூசிலாந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே, மிகப் பொறுமையான, பொறுப்பான ஆட்டத்தை, இருவரும் ஆடத் தொடங்கினர். மழையின் காரணமாக மைதானம் பௌலிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் விக்கெட்டை முதல் ஒரு மணி நேரத்திற்கு இழந்துவிடக்கூடாது என மிக கவனமாக ஆடினார்கள். கில்லின் ஆட்டம் ஆரம்பம் முதலே அற்புதமாக இருந்தது. ஸ்விங் ஆகும் பந்துகளைச் சந்திக்க பிரத்யேகப் பயிற்சியோடு வந்துள்ளேன் என்பதைப் போல், கிரீஸிற்கு வெளியே இறங்கிவந்து பல பந்துகளை முன்கூட்டியே எதிர்கொண்டு பௌலர்களின் ரிதத்தைக் கெடுத்துக் கொண்டே இருந்தார்.

WTC Final | INDvsNZ
WTC Final | INDvsNZ
twitter.com/ICC

வெளிநாடுகளில், குட் லெந்த்தில் வீசப்படும் பந்துகளில், ரோஹித் அதிகமுறை ஆட்டமிழந்திருக்கிறார் என்பதால், அவரைக் குறிவைத்தனர் நியூசிலாந்து பௌலர்கள். குறிப்பாக போல்ட் வீசிய பந்துகளில் பெரும்பாலானவை குட் லெந்த்தில் வந்தன. அதையும் அழகாகச் சமாளித்துக் கொண்டிருந்தார் ரோஹித். கடினமான பெரும்பாலான பந்துகளை, பேக்ஃபுட்டில் ஆடி ரன்களைச் சேர்த்தனர். இன்னொரு பக்கம், சவுத்தியின் தொடக்கம் சரியாக அமையவில்லை, அவரது பந்து சரியான லைனில் விழாமல் போக, அதை பயன்படுத்தி, ரன்களைக் குவிக்கத் தொடங்கினார்கள் ரோஹித்தும், கில்லும். இருவரும் நன்றாக ஆட விக்கெட் இழப்பின்றி, முதல் ஒருமணி நேரம் நகர, 50 ரன்கள் என்று பார்ட்னர்ஷிப்பைச் சேர்த்தது இக்கூட்டணி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விக்கெட் விழுந்தே ஆகவேண்டுமென்பதை உணர்ந்த வில்லியம்சன், ஜேமீசனையும், கிராண்டோமையும் உள்ளே கொண்டு வந்தார். இவர்களைக் கொண்டு இரண்டு புறமும், தாக்கத் தொடங்கினார். ஆளுக்கொருவர் என்று பாகம் பிரித்துக் கொண்டதைப் போல், ஜேமீசனது ஓவர்களை கில்லும், கிராண்டோமுடைய ஓவர்களை ரோஹித்தும் மாற்றி மாற்றி எதிர்கொண்டனர். அதிலும், ரோஹித்தை அடிக்கவைத்து ஆட்டமிழக்க வேண்டுமென்ற எண்ணத்தோடே, நிறைய அவுட் ஸ்விங்கள் வீசப்பட்டன.

காற்றின் ஈரப்பதம் காரணமாக, பந்துகள் நன்றாகவே ஸ்விங் ஆனது. குறிப்பாக, ஜேமீசனின் பந்துகள் சற்று அதிகமாகவே ஸ்விங் ஆனதோடு, சீம் மூவ்மெண்டும் சேர, ஐந்து ஓவர்களை ஜேமீசன் வீசியும், பௌலிங் மாற்றம் கொண்டு வராமல், ஜேமீசனைத் தொடர்ந்து வீச வைத்தார் வில்லியம்சன். கில் ஸ்விங்கைச் சமாளிக்க, கிரீஸை விட்டு வெளியே வந்து ஆடிக்கொண்டிருக்க திடீர் என்று பவுன்சர் வீசப்பட, அது அவரது ஹெல்மெட்டைத் தாக்கிப் பதம் பார்த்தது. ஆனாலும் பெரிய அடி இன்றி தப்பித்துக் கொண்டார் கில்.

WTC Final | INDvsNZ
WTC Final | INDvsNZ
twitter.com/ICC

ரோஹித்துக்கு, தொடர்ந்து அவுட் ஸ்விங்க்கர்களாக வீசப்பட்டு வந்த நிலையில் ஜேமீசன் திடீர் என்று ஃபுல் லெங்த்தில் வீச, அதை அடித்து ஆட முயன்று, ரோஹித் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மிக வெளியே போன அப்பந்தை ரோஹித் தொடாமலே விட்டிருக்கலாம். அருமையாகத் தொடங்கிய ரோஹித், மீண்டும் அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறி வெளியேற, புஜாரா உள்ளே வந்தார்.

'பௌலிங் சேஞ்ச்' என வாக்னரையும் உடனே உள்ளே வில்லியம்சன் கொண்டுவர, வீசிய முதல் ஓவரிலேயே, கில்லின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். வாக்னர் வீசிய 4-வது ஸ்டம்ப் லைன் பந்தில் ஆட முயன்று, கீப்பர் கேட்ச் கொடுத்து, கில் அவுட் ஆக கேப்டன் கோலி உள்ளே வந்தார். 20 ஓவர்கள் விக்கெட் விழாமல் நகர்ந்த நிலையில், உணவு இடைவேளைக்கு முன், இரண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியது நியூசிலாந்து. அதேபோல் ரன்கள் சேர்ப்பையும் கட்டுப்படுத்தி, கம்பேக் கொடுத்தது. முதல் செஷசன் இந்தியாவுக்குச் சாதகமாக முடிந்திருக்க வேண்டிய நிலையை மாற்றி சரிசமமாக முடித்தது.

கோலியின் விக்கெட்டை, டெஸ்டில் மூன்று முறை வாக்னர் வீழ்த்தி இருக்கிறார் என்பதால், அவரையே தொடர்ந்து வீச வைத்தார் வில்லியம்சன். இன் ஸ்விங்கர்களும் அவுட் ஸ்விங்கர்களும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன, நியூசிலாந்து பௌலர்களிடமிருந்து. இன் ஸ்விங்களை கோலி இலகுவாகச் சமாளிக்க, புஜாரா முடிந்த அளவு, அதைத் தாமதமாக ஆடிச் சமாளித்தார். வழக்கம் போல, பிட்ச் மெல்ல மாறுவதற்காகவும், பந்துகள் தேய்வதற்காகவும், பௌலர்கள் சோர்ந்து போவதற்காகவும் ஆடத் தொடங்கினார் புஜாரா. ஒரு கட் ஷாட் அடித்து, அதை பவுண்டரியாக மாற்றும் வரை, 35 பந்துகள் ரன் எதுவும் எடுக்காமல், மிகப் பொறுமையாக ஆடினார் புஜாரா. மறுபுறம் கோலியின் ஆட்டத்தின் அணுகுமுறையும் அப்படித்தான் இருந்தது. ஃபுல் லெந்த் பால்களை மட்டுமே அடித்து ஆடிய கோலி, குட் லெந்த்தில் வந்த பந்துகளைத் தவிர்த்து விட்டார்.

WTC Final | INDvsNZ
WTC Final | INDvsNZ
twitter.com/ICC

இன்னொரு விக்கெட் விழுந்தேயாக வேண்டுமென, புஜாராவைக் குறிவைக்கத் தொடங்கினார்கள் நியூசிலாந்து பௌலர்கள். புஜாராவுடைய இன்ஸ்விங் பலவீனத்தை வைத்து, அவருக்கு ஸ்கெட்ச் போடத் தொடங்கினார்கள். போல்டை திரும்பக் கொண்டு வந்ததும், தனது இரண்டாவது ஸ்பெல்லின் இரண்டாவது பந்திலேயே புஜாராவின் விக்கெட்டை போல்ட் காலி செய்தார். போல்ட் வீசிய இன் ஸ்விங்கை, ஃப்ரன்ட் ஃபுட்டில் ஆடித் தடுத்தாட புஜாரா முயன்று, பேடில் பந்து பட, எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா போன்ற வேகமான நாடுகளில் ரன்களைக் குவித்தாலும், இங்கிலாந்து போன்ற ஸ்விங் மைதானத்தில், புஜாரா இன்னும் திணறிதான் வருகிறார் என்பதையே இன்றைய ஆட்டமும் எடுத்துக்காட்டியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டிகளில், இந்தியாவின் சார்பில், அதிக ரன்களைச் சேர்த்தவரான ரஹானே உள்ளே வந்தார்.

அதே ஓவரின் இறுதியிலேயே, போல்ட் வீசிய பந்து, லெக் சைடில் நகர்ந்து, கோலியின் பேட்டினைக் கடந்து, விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் புக, அப்பீல் செய்தார் போல்ட். அம்பயர் விக்கெட் தர மறுத்ததால், ரிவ்யூவுக்கு போக போல்ட் விரும்ப, வில்லியம்சன் தயங்கிக் கொண்டிருந்த நேரத்திலேயே, டிஆர்எஸ்ஸுக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்தது. யாரும் எதிர்பார்க்காத வேளையில், ஃபீல்ட் அம்பயர், தேர்ட் அம்பயரிடம் போக, அங்கிருந்தும் அது அவுட் இல்லை என முடிவு வந்தது. நியூசிலாந்தே ரிவ்யூக்கு போக தயங்கிய பந்தில், அதுவும் டிஆர்எஸ்ஸுக்கான நேரம் முடிந்த பின்பு, ஃபீல்ட் அம்பயர், தேர்ட் அம்பயரிடம் கேட்டது, சற்றுநேரம் சலசலப்பை உண்டாக்கியது.

இதன்பின் இக்கூட்டணியை அச்சுறுத்த ஜேமீசனை மறுபடி கொண்டு வந்தார் வில்லியம்சன். மற்றவர்களின் பந்துகளைவிட, அவரது பந்துகள் சற்று அதிகமாக ஸ்விங் ஆன அதேநேரத்தில், சற்றே அதிகமாக பவுன்சாகவும் செய்தது. எனவே அவரையும், போல்டையும் கொண்டே தாக்கிக் கொண்டிருந்தார் வில்லியம்சன். பயன் எதுவும் இல்லை. கட்டுக்கோப்பாக, மிகமிக கன்ட்ரோலோடு இந்த இருவரணி ஆடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், ரஹானேவை, இதற்குமுன் நேர்கொண்ட ஐந்து சந்தர்ப்பங்களில், நான்கில் வீழ்த்தியுள்ள சவுத்தியைக் கொண்டு வந்தார் வில்லியம்சன். ஆனாலும், ரஹானே அசரவேயில்லை. டெஸ்ட் போட்டிக்காகவே வடிவெடுத்த அவரா அசைந்து கொடுப்பார்?

மறுபுறம், கோலியின் ஆட்டம் மிகச் சிறப்பாகச் சென்றது. அவுட் சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் வீசப்பட்ட பந்துகளைத் தவிர்ப்பதில் தொடங்கி, தவறான ஷாட் ஒன்றைக் கூட ஆடி விடக்கூடாது என்பதில் வெகுகவனமாக இருந்தார். இடையில், வெளிச்சம் போதவில்லை என்பதால், தேநீர் இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட, அந்நிலையில், 120/3 என்ற நிலையில் இருந்தது இந்தியா.

WTC Final | INDvsNZ
WTC Final | INDvsNZ
twitter.com/ICC

இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கப்பட்ட அடுத்த மூன்று ஓவர்களுக்குள்ளாகவே, மறுபடி வெளிச்சம் போதாததால் ஆட்டம் ஓரிரு முறை தடைபட்டது. எனினும், கோலியின் ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்படவில்லை. திரும்பிவரும் ஒவ்வொரு முறையும், முன்னிலும் சிறப்பாகவே ஆடினார். ஸ்விங்கின் சொர்க்கபுரியான பிட்சில், உலகத்தரம் வாய்ந்த நியூசிலாந்துப் பந்துவீச்சு அவரிடம் எந்த நடுக்கத்தையும் கொண்டு வரவில்லை. 7500 டெஸ்ட் ரன்களைக் கடந்த கோலியின் ஆட்டம், மிகப் பக்குவமானதாக இருந்தது.

மழை பெய்து, பிட்ச் சற்றே ஈரமாக, பவுண்டரி லைனை பந்து தாண்ட விடாமல், இந்தியாவின் ரன் குவிப்பு வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ரன்களை ஓடியேதான் எடுக்க வேண்டும் எனப் புரிந்து கோலி, ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து கொண்டே இருந்தார். மொத்தமாக அவர், நாளின் இறுதியில் சேர்த்திருந்த 44 ரன்களில், ஒரு பவுண்டரி மட்டுமே வந்திருந்ததது. மிச்சமிருந்த 40 ரன்களையும் ஓடியேதான் எடுத்திருந்தார்.

மழையினாலும் போதிய வெளிச்சமின்மையாலும், ஆட்டம் பலமுறை தடைபட்டது, பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி, பௌலர்களது ரிதத்தையும், பாதித்துக் கொண்டே இருந்தது. மன ரீதியாகவும் அவர்களால் முழுப் பங்களிப்பை அளிக்க முடியவில்லை. செட் ஆகி விளையாடத் தொடங்கிய போதெல்லாம், ஆட்டம் தடைபட்டது. இதுவும் போட்டியின் மொமண்டத்தை வெகுவாகக் குலைத்தது.

WTC Final | INDvsNZ
WTC Final | INDvsNZ
twitter.com/ICC

இறுதியாக, 65-வது ஓவர் வீசப்பட்டிருந்த போது, தடைபட்ட ஆட்டம், மீண்டும் தொடங்கப்பட முடியாத அளவு வெளிச்சம் குறைவாகவே இருந்ததால், இரண்டாவது நாள் ஆட்டம், முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. 146/3 என்ற நிலையில் இந்தியா இருக்க, கோலி 44 ரன்களுடனும், ரஹானே, 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரன்கள் குறைவாகத் தோன்றினாலும், இந்தியா விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல், போட்டியின் லகானை, தன் கையில் வைத்துள்ளது.

முதல் நாள் ஆட்டத்திற்கு மழை வில்லனாக, இரண்டாவது நாள் ஆட்டத்தில் வெளிச்சமும் தன் பங்குக்கு ஆடியது. எனினும், வீசப்பட்ட ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இந்தியா, நம்பிக்கையோடு களத்தில் உள்ளது. வரும் நாள்களில், இயற்கை கைகொடுத்தால், உச்சகட்டமான ஒரு மோதலைக் காணலாம்.