Published:Updated:

WTC Final: கைல் ஜேமிசன் - இன்ஸ்விங்கால் இன்னல் தந்தவர்! 5 விக்கெட் ஹாலுக்குத் தீட்டிய திட்டம் என்ன?

அவுட் ஸ்விங்கர்களால் அசரவைத்து, இன்ஸ்விங்க்கர்களால் இடியை இறக்கி, கோலி என்னும் பிக் ஃபிஷ்ஷையே தூக்கி, ஒட்டுமொத்த இந்தியர்களின் முதல் இன்னிங்ஸ் கனவைத் தகர்த்துவிட்டார் கைல் ஜேமிசன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வாக்னரும், போல்டும்தான் அச்சுறுத்தும் வேகத்தோடு அசர வைக்கப் போகிறார்கள் என்று நினைத்தது இந்தியா. ஆனால், அதிர்ச்சி தரும் விதமாக, ஜேமிசன் எல்லாத் தடைகளையும் அடித்து நொறுக்கி, ரெக்கார்டு புத்தகங்களில் தனது பெயரை வேகத்தால் பதிவேற்றிக் கொண்டுள்ளார்.

2020 பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உலக டெஸ்ட் அரங்கிற்கு அறிமுகமானாலும், டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அதற்கு முன்னதாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார் ஜேமிசன். ஆறடி எட்டு அங்குல உயரத்தாலும், தனது வேகத்தாலும், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஆறு டெஸ்ட்களில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தாலும், இப்போட்டிகள் நியூசிலாந்திலேயே நடைபெற்றிருந்ததால் அவரது திறமை குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டேதான் இருந்தன. அதற்கு வலு சேர்ப்பதைப் போல் இந்த ஆண்டு ஐபிஎல்லிலும் ஆர்சிபிக்காக ஆடியபோது, இவரது பந்துவீச்சு அந்தளவு எடுபடவில்லை. ஏழு போட்டிகளில், ஒன்பது விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார் ஜேமிசன். நியூசிலாந்து கண்டிஷன்களில் மட்டுமே அவரது பந்துவீச்சு எடுபடும் என்னும் பேச்சும் எழுந்தது.

Kyle Jamieson
Kyle Jamieson

இந்நிலையில்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முந்தைய இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார் ஜேமிசன். அதில்தான் அவரது அபாரத் திறமை உலகத்தின் பார்வைக்கு இன்னமும் தெளிவானது. அதில் முதல் இன்னிங்சில் சிப்லி, ரூட் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஜேமிசன். அவருடைய பந்துவீச்சுத் திறனும், அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தது. இந்தக் காரணத்திற்காகவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மேட் ஹென்ரியை பின்னுக்குத் தள்ளி, இவரை பிளேயிங் லெவனில் சேர்த்தது நியூசிலாந்து. அப்படிச் சேர்த்ததற்கான நியாயத்தை, வீசும் ஒவ்வொரு பந்திலும் நிரூபித்து வருகிறார் ஜேமிசன்.

இந்தியாவுடனான இந்த முக்கிய இறுதிப்போட்டியில் ஸ்பின்னரே இல்லாமல் வேகப்பந்து படையை மட்டுமே நம்பிக் களமிறங்கினார் வில்லியம்சன். ஆனால், அந்தத் துணிச்சலான முடிவுக்காக, ஒரு கணம்கூட அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். அதற்கு பிரதான காரணம், கைல் ஜேமிசன்.

போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்று பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது நியூசிலாந்து. 10 ஓவர்களைக் கடந்தும் சவுத்தியும் போல்ட்டும் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்க, ஜேமிசனைக் கொண்டு வந்தது நியூசிலாந்து. அந்தச் சமயமிருந்து இந்தியாவின் ரன்குவிப்புக்கு தடா போட ஆரம்பித்தார் ஜேமிசன்.

மற்ற பௌலர்கள் சரியான லைன் அண்ட் லெங்க்த் செட் ஆகாமல் தவித்துக் கொண்டிருந்த போதுகூட கனகச்சிதமாக பந்துவீசினார் ஜேமிசன்.

62 ரன்களோடு பலமான அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த இந்திய ஓப்பனிங் பேட்டிங்கை, ரோஹித்தை ஆட்டமிழக்க வைத்ததன் மூலமாக வெடிவைத்துத் தகர்த்தார் ஜேமிசன். இன் ஸ்விங்களையே வீசத் தெரியாதவர் போல் ஏமாற்றி, ரோஹித்துக்கு அவர் தொடர்ந்து அவுட் ஸ்விங்கர்களாக வீசி பெரிய ஷாட்டுக்குப் போகுமாறு ஆசைகாட்டிக் கொண்டே இருந்தார். அவரது வலையில் விழுந்த ரோஹித் பரிதாபமாக முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

கைல் ஜேமிசன்
கைல் ஜேமிசன்

இதன்பின், மற்ற பௌலர்களது பந்துகளை விட ஜேமிசனது பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆனதோடு பவுன்சும் ஆனது. அதோடு சீம் மூவ்மண்ட், வேகம் ஆகிய ரகசிய பொருள்களும் உள்ளீடு செய்யப்பட்டு, பந்துகள் வேகத் தோட்டாவாக முன்னேறிய போது, துல்லியமாக, அடிக்கவே முடியாத ஒன்றாகவே அவை இருந்தன. இவரது பந்தைத் தொடவே பயந்தனர் இந்திய பேட்ஸ்மென்கள். தொட்டாலும், அதை ஆட முடியாது திணறினர்.

இரண்டாவது நாளில், வீசிய 14 ஓவர்களில் 9 மெய்டன்களுடன் 14 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார் ஜேமிசன். எக்கானமி, வெறும் 1.0 மட்டுமே. இந்த எண்களே சொல்லும், எந்த அளவுக்கு இந்திய பேட்ஸ்மென்களை இவரது பந்துகள் அச்சுறுத்தின என்பதனை. கில் அடித்த இரண்டு பவுண்டரிகள், ஷமி மற்றும் பண்ட் இவரது பந்துகளில் அடித்த தலா ஒரு பவுண்டரியைத் தவிர, பெரிய ஷாட்டுக்குப் போக பேட்ஸ்மென்கள் துணியவில்லை, துணிய இவரும் இடம் தரவில்லை. டைட்டாகவே பந்து வீசிக் கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜேமிசனை எதிர்கொள்ளத் திணறிய பேட்ஸ்மென்களில் கோலி மட்டும் விதிவிலக்கல்ல. இரண்டாவது நாளில், கோலிக்கு அவர் வீசிய 19 பந்துகளில் நான்கு ரன்களை மட்டுமே கோலி சேர்த்திருந்தார். இதில், ஒரு மெய்டனும் அடங்கும். குறிப்பாக, அந்த மெய்டன் ஓவரில் ஐந்து பந்துகள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டு கோலிக்கு அடித்தாடும் ஆசையைத் தூண்ட முற்பட்டது. ஆனால், ரவுண்ட் 1-ல் கோலியே வென்றார். அவரது விக்கெட்டை வீழ்த்த ஜேமிசனால் முடியவில்லை.

உண்மையில், இதுவும் கோலிக்காக அவர் பின்னிய வலைதான். மூன்றாவது நாளிலும் ஸ்டம்ப் லைனில் பந்தை வீசாமல் வெளியேதான் வீசிக் கொண்டிருந்தார் ஜேமிசன்‌. ஐந்து பந்துகள் அப்படி வந்து கோலியின் மூளையை அதனோடு ஒத்திசைவு செய்யவைக்க, அன்றைய தினம் கோலிக்கு தான் வீசிய ஆறாவது பந்தை, இன் ஸ்விங்கராக லெக் ஸ்டம்பிற்கு ஜேமிசன் அனுப்ப, நிலைகுலைந்து ஆட்டமிழந்தார் கோலி. ஆர்சிபியில் விளையாடிய நாள்களில், டியூக்ஸ் பந்துகளை கோலிக்கு நெட் பிராக்டீஸின்போது வீச மறுத்தாராம் ஜேமிசன். அதற்குரிய பொருள், கோலிக்கு தனது விக்கெட் விழுந்தபோது விளங்கியிருக்கும்.

அவுட்சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் ஆப்பு வைப்பார் என்று பார்த்தால், இன்ஸ்விங்கால் இன்னல் தந்தார் ஜேமிசன். போட்டியின் முதல் முக்கிய பார்ட்னர்ஷிப்பான கில் - ரோஹித்தை பிரித்தவர், அதையே இன்னொரு முக்கிய பார்ட்னர்ஷிப்பான கோலி - ரஹானேவுக்கும் செய்தார்.
கைல் ஜேமிசன்
கைல் ஜேமிசன்

இதன்பின் அபாயகரமானவரான பண்ட்டையும் கட்டம் கட்டித் தூக்கினார் ஜேமிசன். அவர் பண்ட்டுக்கு வீசிய முதல் ஏழு பந்துகளில் பண்ட்டால் ரன் எடுக்க முடியாதுபோக, பிரஷர் பில்டப் ஆக, பேடை நோக்கி நகர்ந்த எட்டாவது பந்தை பவுண்டரி ஆக்கினார். இதற்கடுத்து பத்தாவது பந்தை ஜேமிசன், ஓவர் தி விக்கெட்டில் வந்து அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்ப்பில் வீச, முன்னால் அடித்த பவுண்டரியால் அடிக்கும் மைண்ட் செட்டில் இருந்த பண்ட், தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்திருந்த ஜேமிசன், இறுதியாக டெய்ல் எண்டர்களான இஷாந்த் மற்றும் பும்ராவை ஒரே ஓவரில் அடுத்தடுத்த விக்கெட்டுகளாக வீழ்த்தியிருந்தார். அதனால், அவரது ஐந்து விக்கெட் ஹாலும் வந்து சேர்ந்தது. இதன் மூலமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட் ஹாலைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஜேமிசன் பெற்றிருக்கிறார்.

WTC Final: ஜேமிசனிடம் சரண்டரான இந்தியா... இன்று நியூசிலாந்தை குறைந்த ரன்களில் சுருட்டுமா?
இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேமிசன், அதில் 5 ஐந்து விக்கெட் ஹால்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாகவே, எத்தகைய ஒரு நிலைத்தன்மையுடைய பௌலராக அவர் உருவெடுத்து வருகிறார் என்பது தெளிவாகிறது. இந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் ஜேமிசன். எட்டு போட்டிகள் விளையாடி உள்ள நிலையில், அதிகபட்ச விக்கெட்டுகளை (41) வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை, ஜாக் காவ்வி வைத்திருந்தார். இந்த 80 ஆண்டு சாதனையை தற்போது ஜேமிசன், 44 விக்கெட்டுகளோடு முறியடித்துள்ளார்.

ஐசிசி நடத்தும் தொடர்களில் இறுதிப் போட்டியில், இரண்டாவது சிறந்த ஸ்பெல்லாகவும் ஜேமிசனின் 5/31 இடம்பிடித்துள்ளது. இவருக்கு முன்னால் 1979 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஜோயல் கார்னரின் 5/38 தான், இரண்டாவது சிறந்த ஸ்பெல்லாக இருந்தது. அதே போல், 2019 - 2021ல் நடைபெற்றுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறந்த பௌலிங் ஆவரேஜையும் (12.41, ஜேமிசனே வைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் உமேஷ், 17.38 என எட்ட முடியாத தொலைவில் உள்ளார். முக்கியமான, அதே நேரத்தில் அழுத்தம் நிறைந்த ஒரு போட்டியில், தனது திறமை முழுவதையும் மொத்தமாக வெளிக் கொண்டு வந்துள்ளார் ஜேமிசன்.

கைல் ஜேமிசன்
கைல் ஜேமிசன்

வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய அசாத்திய உயரம். பந்துகளை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய வைத்தல், சீம் மூவ்மண்டையும் கொஞ்சம் சேர்த்துப் போட்டு, லெந்த்தையும் லைனையும் வேண்டுமளவு மாற்றி, வேகத்தைத் தேவையான அளவு சற்றே கூட்டி, குறைத்து தொடவே முடியாத பந்துகளாக தனது பந்துகளை அனுப்பி வைப்பதுதான் ஜேமிசனின் பலம். இதுதான் அவரை இந்த உயரத்தை எட்ட வைத்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸ், ஜேமிசனுக்கு எப்படிக் கைகொடுக்கும் என்பது இன்னமும் தெரியாத நிலைதான். இருந்தபோதும், இந்த ஒரே ஸ்பெல் சொல்லி விட்டது அடுத்த சில ஆண்டுகளுக்கு நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சு படையில் ஜேமிசன் தனது பெயரை நிரந்தரமானதாக்கி உள்ளார் என்பதனை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு