Published:Updated:

WTC21 FINAL: முகமது ஷமியின் அற்புத ஸ்பெல்லும், ரோஹித் - கில்லின் சொதப்பலும்!

இரண்டு நாள் ஆட்டம் முழுதாய் கைவிடப்பட்டாலும், ரிசர்வ் நாளில் ரிசல்ட் கிடைக்கும் நிலையை அடைந்துள்ளது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.

நான்காவது நாள் ஆட்டம், மழையால் முழுமையாக ரத்தான நிலையில், 101/2 என்ற நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து ஆரம்பித்தது. ராஸ் டெய்லரும், வில்லியம்சனும் களமிறங்க, விரைவான விக்கெட்டுகள் மட்டுமே, முடிவை நோக்கி போட்டியை எடுத்துச் செல்லும் என்பதால், முனைப்போடு தனது பௌலிங் படையை முடுக்கி விட்டார், கோலி.

எனினும், முதல் ஒரு மணி நேரம், மந்தமாகத்தான் நகர்ந்தது போட்டி.

ஷமிக்கு மட்டுமே பந்து ஸ்விங்காக, வேகத்தை மட்டுமே நம்பி வீசிக் கொண்டிருந்தார் பும்ரா. கிட்டத்தட்ட மணிக்கு 90 மைலை நெருங்கியது பந்துகளின் வேகம். ஆனால், பும்ராவுக்கு விக்கெட்டுகள்தான் விழவில்லை. முதல் ஒரு மணி நேரத்தில் நியூசிலாந்தும், தன் கணக்கில், 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

WTC21 FINAL
WTC21 FINAL

ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற நிலையை நியூசிலாந்துக்கு உருவாக்கி தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த ஷமி, வீசிய முதல் பந்திலேயே, ராஸ் டெய்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். வரிசையாக, மூன்று மெய்டன்களை வீசி, இந்தியா பிரஷர் ஏற்ற, பொறுத்தது போதுமென, ஷமி வீசிய ஃபுல் லென்த் பந்தில் ராஸ் டெய்லர் அடித்த பந்தை, கில் அற்புதமாக பாய்ந்து பிடித்த ஒரு கேட்ச் மூலமாக வெளியேற்றினார். நிக்கோல்ஸ் உள்ளே வந்தார்.

மறுபுறம் வில்லியம்சன், 100 பந்துகளைச் சந்தித்து, வெறும் 15 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஒருமுறை, ஷமி வீசிய பந்தில், எல்பிடபிள்யூ ஆக வேண்டியவர். அம்பயர் கால் ஆல், தப்பிப் பிழைத்திருந்தார். 100 பந்துகளைச் சந்தித்த நிலையில், மிகக் குறைவான ரன்களை அவர் சேர்ந்திருந்தது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த தருணத்திற்குப் பிறகு, அவரது ஸ்கோரிங் ரேட், சற்றே ஏறத் தொடங்கியது. அதனால், இன்னொரு பக்கம் இருந்த பேட்ஸ்மேன்களின் பக்கம் கவனத்தைத் திருப்பியது இந்தியா. ஷமியைப் போலவே, தனது அடுத்த ஸ்பெல்லை வீச வந்த இஷாந்த், அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பில் ஒரு பந்தை வீச, ரன்னெடுத்தே ஆவேன் என்று வீம்புடன், அதைத் தாவித் தொட்டு, செகண்ட் ஸ்லிப்பில் நின்ற ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து, ஆட்டமிழந்தார், நிக்கோல்ஸ்.

அடுத்ததாக உள்ளே வந்த வாட்லிங்கை ஒரு ரன்னோடு, போல்டாக்கி வெளியேற்றினார் ஷமி. ஃபுல் லென்த்தில் வந்த அவரது பந்து, ஸ்டம்ப்பை காலி செய்ய, வாட்லிங் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸ், நடைபெறாது போனால், இதுகூட வாட்லிங்கின் கடைசி இன்னிங்ஸாக இருக்கலாம். அடுத்ததாக கிரந்தோம் உள்ளே வர, 135/5 என மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்து, 25 ரன்களை மட்டுமே கொடுத்து முதல் செஷனை இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது.

இரண்டாவது செஷனே எங்களுடையது என்பதைப் போல், பவுண்டரியுடன்தான் தொடங்கினார் கிரந்தோம். அவர் ஸ்பின் பந்துகளில் சற்றே திணறுவார் என்பதால், ஜடேஜாவைக் கொண்டு வந்தார் கோலி. ஆனால் ஸ்பின்னால் விழாத விக்கெட், ஷமியால் வீழந்தது. வெறும், 13 ரன்களோடு அவர் வெளியேறினார். நியூசிலாந்தின் மத்திய வரிசை பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம், மறுபடியும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. 162/6 என்ற நிலையில், 55 ரன்கள் பின்தங்கி இருந்தது நியூசிலாந்து.

WTC21 FINAL
WTC21 FINAL

ஜேமிசன் உள்ளே வந்தார். பௌலிங்கில் அணிக்கு, பலம் சேர்க்கத் தெரிந்த எனக்கு, பேட்டிங்கா பெரிய விஷயம் என்பதைப் போல், பேட்டை எல்லா திசைகளிலும், சுற்றி அடிக்கத் தொடங்கினார், ஜேமிசன். இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான, வித்தியாசத்தை, கிடுகிடுவென கீழிறக்கினார். ஷமி வீசிய பந்தையே, லாங் ஆனில், அவர் சிக்ஸருக்குத் தூக்கினார். வெள்ளை ஜெர்ஸியில் விளையாடுகிறோம் என்பதையே மறந்து, அதே உத்வேகத்துடன், அதற்கடுத்த பந்தையும் அவர் சிக்ஸருக்குத் தூக்க, பும்ரா, ஒரு அற்புதமான கேட்சை பவுண்டரி லைனில் பிடித்து, ஜேமிசனை வெளியேற்றினார். சவுதி வந்து சேர்ந்தார்.

மறுபுறம் வில்லியம்சன், லீட் எடுக்க வைக்காமல் வெளியேற மாட்டேன் என்னும் உறுதியோடு ஆடிக் கொண்டிருந்தார். இஷாந்த்தின் பந்தில், சவுதி தந்த கேட்ச் வாய்ப்பை, இஷாந்த்தே கோட்டைவிட, இக்கூட்டணி, மெல்ல மெல்ல ரன் சேர்த்தது. இறுதியாக, ஒரு வழியாக கட் ஷாட்டில் சேர்த்த ஒரு பவுண்டரியுடன், அணியை லீட் எடுக்க வைத்து, 220-க்கு ஸ்கோரை எடுத்துச் சென்றார் வில்லியம்சன். காரியம் முடித்த சந்தோஷத்தோடு 49 ரன்களில் நின்றிருந்த வில்லியம்சனை, இஷாந்த் அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப்பில் பந்தை வீசி வீழ்த்தினார். ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து ரஹானேவைப் போலவே, ஒரு ரன்னில் அரை சதத்தைத் தவறவிட்டு வெளியேறினார் வில்லியம்சன். 221/8 என வந்து நின்றது, நியூசிலாந்தின் ஸ்கோர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடக்கை பேட்ஸ்மேன் வாக்னர் உள்ளே வர, கொஞ்சமும் தாமதிக்காமல், அஷ்வினை கொண்டு வந்தார், கோலி. மறுபக்கம் சவுதி சார்ஜ் எடுத்து, சிக்ஸரும் பவுண்டரியும் விளாசினார். எனினும், இடக்கை பேட்ஸ்மேன்களின் விதியை என் கையால் தான் எழுதுவேன் என்பதைப் போல், வாக்னருக்கு தான் வீசிய ஐந்தாவது பந்திலேயே, ரன் எதுவும் எடுக்க விடாமல், அவரை வெளியேற்றினார், அஷ்வின்.

கடைசி பேட்ஸ்மேனாக, போல்ட் வந்துசேர, மூன்று ஓவர்கள், முழுமையாக முடிவதற்குள்ளாகவே, தனது பந்தை ஓவர் த மிட் விக்கெட்டில், சிக்ஸராக்கியதற்கு தண்டனையாக, அடுத்த பந்திலேயே அவரை க்ளீன் போல்டாக்கினார் ஜடேஜா. 100-வது ஓவரில், 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து, இந்தியாவை விட, 32 ரன்கள் முன்னிலையில், முதல் இன்னிங்சை முடித்தது.

WTC21 FINAL
WTC21 FINAL

ஷமி, நான்கு விக்கெட்களையும், இஷாந்த் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்திருக்க, அஷ்வின் மற்றும் ஜடேஜா முறையே, இரண்டு மற்றும் ஒரு விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். ஸ்பின்னர்களே மூன்று விக்கெட் எடுத்த நிலையில், பும்ரா விக்கெட் எடுக்கத் தவறியது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கடைசி இரண்டு விக்கெட்டுகளுக்கு, இந்தியா, நியூசிலாந்தை, 28 ரன்கள் அடிக்கவிட்டதும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. நியூசிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததோடு, தேநீர் இடைவேளை விடப்பட்டு பின் ஆட்டம் தொடர்ந்தது.

கில் மற்றும் ரோஹித்தைக் கொண்டு, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது, இந்தியா. முதல் இன்னிங்சைப் போலவே, நிதானமான தொடக்கத்தையே தந்தனர் இந்திய ஓப்பனர்கள். பத்து ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி, 24 ரன்களைச் சேர்ந்திருந்தனர். இதுவரை, டெஸ்ட் போட்டிகளில், 12 முறை கில் ஆட்டமிழந்ததில், 10 முறை பத்து ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்திருந்தார் என்பதால், பத்து ஓவர்கள் கடந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ரசிகர்கள். ஆனால், ஒரு ஓவர் கழித்து, சவுதி வீசிய ஒரு இன் ஸ்விங்கருக்கு, தன் விக்கெட்டைப் பலியாகக் கொடுத்து, கில் வெளியேற, இந்தியா இன்னமும், எட்டு ரன்கள் பின்தங்கி தான் இருந்தது. கில் தொடர்ந்து இன் ஸ்விங்கிற்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

WTC Final: கைல் ஜேமிசன் - இன்ஸ்விங்கால் இன்னல் தந்தவர்! 5 விக்கெட் ஹாலுக்குத் தீட்டிய திட்டம் என்ன?

புஜாரா உள்ளே வர, முதல் இன்னிங்சை விடவும், இரண்டாவது இன்னிங்ஸில், அதிக கவனத்துடனே ஆடியது இந்தியா. ஓரிரு விக்கெட்டுகள் கூட, சரிவுக்கு வழிவகுத்து விடுமென்பதால், மொத்தமாகவே டிஃபெண்டிங் மோடுக்குள் சென்றுவிட்டனர், ரோஹித்தும், புஜாராவும்.

WTC21 FINAL
WTC21 FINAL

எனினும், அவுட் அண்ட் இன் ஸ்விங் தந்திரத்தால், இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்துக் கொண்டே இருந்தனர் நியூசிலாந்து பெளலர்கள். ரோஹித்தை ரொம்பவே சோதித்தார் சவுதி. தொடர்ந்து அவுட் சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் அனுப்பி வைத்து, ஐந்தாவது பந்தை, இன்ஸ்விங்கராக, சவுதி அனுப்ப, அந்த பந்தும் வெளியே தான் செல்லப்போகிறது என்று பேட்டை தூக்கிய ஷர்மாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இன் ஸ்விங்கான பந்து ரோஹித் பேடை தாக்க எல்பிடபிள்யூவாகி, 30 ரன்களில் ரோஹித் வெளியேறி அதிர்ச்சி தந்தார். ஆட்டம் முடிவடைய சில ஒவர்களே இருந்த நிலையில் ரோஹித் அவுட் ஆனது நியூசிலாந்துக்கு சாதகமாக அமைந்தது.

நைட் வாட்ச்மேனை அனுப்பாமல் உள்ளே கோலியே வர சில ஓவர்கள் வீசப்பட்ட பின், நாளின் இறுதியில், 64/2 என முடித்தது இந்தியா. 32 ரன்கள் முன்னிலை வகிக்கிறது இந்தியா. கோலியும் புஜாராவும் களத்தில் உள்ளனர்.

ரிச(ர்வ்)ல்ட் நாளான இன்றையை தினம், மழை, விடுமுறை எடுத்துக் கொண்டு, போட்டி திட்டமிட்டபடி நடந்தால், மூன்று முடிவுக்குமே சாத்தியமுள்ளது. எனவே போட்டி, சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். 'ஜட்ஜ்மென்ட் டே'யில் யாருக்குச் சாதகமாக தீர்ப்பு வருகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு