Published:Updated:

WPL 2023: உபியைக் காலிசெய்த ஹாட்ரிக்கும் நட்சீவரின் அதிரடியும்; இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்!

WPL 2023 - மும்பை இந்தியன்ஸ்

13 வது ஓவரில் கிரண் நவிக்ரே, சிம்ரன், எக்கல்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். வுமன்ஸ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் இதுதான்.

Published:Updated:

WPL 2023: உபியைக் காலிசெய்த ஹாட்ரிக்கும் நட்சீவரின் அதிரடியும்; இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்!

13 வது ஓவரில் கிரண் நவிக்ரே, சிம்ரன், எக்கல்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். வுமன்ஸ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் இதுதான்.

WPL 2023 - மும்பை இந்தியன்ஸ்
`இந்த முறை மிஸ்ஸே ஆகாது' என எலிமினேட்டரில் உபி வாரியர்ஸ் அணியைச் சொல்லியடித்து டெல்லி அணிக்கெதிரான இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணி இந்த எலிமினேட்டர் போட்டியை எப்படி வென்றது? இந்தப் போட்டியை வெல்ல காரணமாக அமைந்த அந்த இருவர் யார்?

உபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இந்தப் போட்டியில் டாஸை உபி-யின் கேப்டன் அலிஸா ஹீலியே வென்றிருந்தார். சேஸிங்கைத் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 182 ரன்களைச் சேர்த்திருந்தது. நட்சீவர் ப்ரண்ட் ஒரு அற்புதமான அரைசதத்தை அடித்திருந்தார். உபிக்கு டார்கெட் 183. ஆனால், அந்த அணியால் இந்த டார்கெட்டை எட்ட முடியவில்லை. 110 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் இஸ்ஸி வாங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடக்கம்.

Harman & Healy
Harman & Healy
WPL

இந்த குட்டியான மேட்ச் ஸ்டோரியிலிருந்தே மும்பையின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த இரண்டு வீரர்கள் யாரென்று தெரிந்திருக்கும். நட்சீவர் ப்ரண்ட்டும் இஸ்ஸி வாங்கும்தான் அந்த இருவர். இந்த இருவரின் பெர்ஃபார்மென்ஸூம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அறிய வேண்டுமெனில், முதலில் டாஸை பற்றி இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டும்.

டாஸை உபி வாரியர்ஸ் வென்றிருந்தது அல்லவா? வென்று சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தது. அப்போது, "நான் டாஸை வென்றிருந்தாலும் சேஸிங்கைத்தான் தேர்வு செய்திருப்பேன். இந்த பிட்ச் சேஸிங்கிற்குச் சாதகமான பிட்ச்தான்" என ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியிருந்தார். "கடந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே சேஸிங்கைத் தேர்வு செய்கிறேன்" என அலிஸா ஹீலி பேசியிருந்தார். ஆக, இரு அணிகளுமே டார்கெட்டை சேஸ் செய்யும் அபிப்ராயத்துடன்தான் டாஸூக்கே வந்திருந்தனர். இவர்களின் கூற்றுப்படியே போட்டி நடைபெற்ற இந்த டீ.ஒய்.பாட்டீல் மைதானம் முழுக்க முழுக்க சேஸிங்கிற்கு சாதகமான மைதானம்தான். இந்த வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் இதுவரை 10 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்திருக்கின்றன.

இந்த 10 போட்டிகளில் 8 போட்டிகளில் டார்கெட்டை சேஸ் செய்த அணிகள்தான் வென்றிருக்கின்றன. இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும்தான் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றிருக்கின்றன. அதிலும், குறிப்பாகக் கடைசி 7 போட்டிகளில் அத்தனையிலுமே டார்கெட்டை சேஸ் செய்த அணிகள்தான் வென்றிருக்கின்றன.

ரெக்கார்ட் இப்படியிருக்கையில், டாஸ் முடிவின் போதே உபி வாரியர்ஸூக்கு ஒரு கூடுதல் சௌகரியம் கிடைத்துவிட்டது. அதையும் தாண்டிதான் மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. இதுவரையிலான ரெக்கார்டை புரட்டிப்போடும் வகையில் டார்கெட்டை டிஃபண்ட் செய்து வெல்ல வேண்டுமெனில் ஒரு பெரிய டார்கெட்டை முதலில் செட் செய்ய வேண்டும். மும்பை இந்தியன்ஸிடம் வலுவான பேட்டிங் யூனிட் இருப்பதால் ஒரு நல்ல ஸ்கோரை செட் செய்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் முழுமையாக சோபிக்கவில்லை. ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டீயா, ஹர்மன்ப்ரீத் என முக்கியமான பேட்டர்கள் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்களை 20 ஓவர்களின் முடிவில் எடுத்திருந்தது. இப்படி சவால்மிக்க ஸ்கோரை அந்த அணி எடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் நட்சீவர் ப்ரண்ட்தான்.

38 பந்துகளில் 72 ரன்களை எடுத்திருந்தார். ஒன் டவுனில் பவர்ப்ளேக்குள்ளேயே க்ரீஸூக்குள் வந்தவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் மும்பையின் ஸ்கோரை தூக்கி நிறுத்த காரணமாக அமைந்தார்.

கடைசி பந்தில் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்ததெல்லாம் மும்பை அணிக்கு பெரிய தெம்பைக் கொடுத்திருக்கும். தொடர்ச்சியாக விக்கெட் விழாமல் தடுத்து ரன்ரேட்டையும் சரியவிடாமல் காத்து நட்சீவர் நிகழ்த்தியது அதிசயம் என்றால் மிகையில்லை.

நட்சீவர்
நட்சீவர்
WPL

பேட்டிங்கில் மட்டுமில்லை. பந்துவீச்சிலுமே ஒரு மிக முக்கியமான விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். ப்ரண்ட் 3 ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்து க்ரேஸ் ஹாரிஸின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். க்ரேஸ் ஹாரிஸ் அதிரடிக்குப் பெயர் போனவர். அட்டகாச ஃபினிஷர். அசகாய மேட்ச் வின்னர். க்ரேஸ் ஹாரிஸ் அதிரடியைத் தொடங்கிய மாத்திரத்திலேயே அவரின் விக்கெட்டை வீழ்த்தி அணிக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தார். ஒரு ஆல்ரவுண்டராக நட்சீவர் தனது முழுமையான திறனையும் உபிக்கு எதிராக வெளிக்காட்டியிருந்தார்.

நட்சீவருக்கு அடுத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் இஸ்ஸி வாங். 13வது ஓவரில் கிரண் நவிக்ரே, சிம்ரன், எக்கல்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். வுமன்ஸ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் இதுதான். ஆனால், இந்த ஹாட்ரிக்கிற்கு முன்பே பவர்ப்ளேயில் இன்னொரு முக்கியமான விக்கெட்டையுமே இஸ்ஸி வாங் எடுத்துக் கொடுத்திருந்தார். அது அலிஸா ஹீலியுடைய விக்கெட். அலிஸா ஹீலி நின்றால் ஒற்றை ஆளாக ஆட்டத்தையே முடித்துக் கொடுத்துவிடுவார். இந்த வுமன்ஸ் ப்ரீமியர் லீகிலுமே அப்படியான இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார்.

அலிஸா தனது அதிரடியை தொடங்குவதற்கு முன்பே இஸ்ஸி வாங் அவரை வெளியேற்றிவிட்டார். நல்ல டைட்டான லைன் லெந்தில் கொஞ்சம் ஃபுல்லாக வீசிய பந்தில் மிஸ் டைம் ஷாட் ஆடி அலிஸா ஹீலி அவுட் ஆகியிருந்தார். அலிஸா ஹீலியை போலவே அதிரடியாக ஆடக்கூடிய கிரண் நவிக்ரே மற்றும் எக்கல்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டையும் பிற்பாதியில் வீழ்த்தி போட்டியை மும்பை பக்கமாக மொத்தமாக மாற்றிவிட்டார் வாங்.

Issy
Issy
WPL

வாங்கை புகழ்கையில் ஹர்மன்ப்ரீத்தின் பௌலிங் ரொட்டேஷன் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். பவர்ப்ளேயில் சைகா இசாக் வீசிய இரண்டாவது ஓவர் விக்கெட் மெய்டன். ஸ்வேதா ஷெராவத் அந்த ஓவரில் அவுட் ஆகியிருந்தார். விக்கெட்டுடன் மெய்டன் என்பதால் உபிக்குப் பெரும் அழுத்தம் ஏற்பட்டது. அந்த அழுத்தத்தை அப்படியே அடுத்தத்த ஓவர்களுக்குக் கடத்தும் வகையில் உடனடியாக இஸ்ஸி வாங்கை அழைத்து மூன்றாவது கொடுத்தார் ஹர்மன். அந்த ஓவரில்தான் அலிஸா ஹீலியின் விக்கெட் கிடைத்தது. இந்த முதல் ஸ்பெல்லில் வாங்கிற்கு ஒரு விக்கெட்தான் கிடைத்தது. இரண்டாவது ஸ்பெல்லை 13வது ஓவரில் தொடங்கினார் வாங். வாங் ஹாட்ரிக் எடுத்த இந்த 13வது ஓவருக்கு முன்பு அமெலியா கெர் வீசிய 12 வது ஓவரில் 19 ரன்களை உபி வாரியர்ஸ் சேர்த்திருந்தது. கிரண் நவிக்ரே சேஸிங்கை முன்னெடுத்து சென்று கொண்டிருந்தார். இந்த சமயத்தில்தான் உபி மீது மீண்டும் அழுத்தத்தைப் போடும் வகையில் வாங்கை மீண்டும் அழைத்து வந்தார் ஹர்மன். இப்போதுதான் அந்த ஹாட்ரிக் நிகழ்ந்தது. வாங்கை ஹர்மன் அழைத்த இரண்டு சமயங்களிலுமே ஆட்டத்தில் பெரிய திருப்புமுனைகள் நிகழ்ந்திருந்தன.

இவற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்று டெல்லிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. வுமன்ஸ் ப்ரீமியர் லீகில் உச்சபட்சமாக பெர்ஃபார்ம் செய்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கின்றன.

ஆக, இறுதிப்போட்டி கட்டாயம் பெரும் சுவாரஸ்யமிக்கதாக இருக்கக்கூடும். அறிமுக சீசனிலேயே சாம்பியன் ஆகப்போகும் அந்த அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.