Published:Updated:

டேவிட் மலான் | உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன்... ஆனாலும் தன்னை நிரூபிக்க போராட்டம் ஏன்?!

டேவிட் மலான் ( Jon Super )

தினேஷ் அகிரா எழுதும் பவர் ப்ளே தொடரின் நான்காம் பகுதி உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான டேவிட் மலானின் கரியரை அலசுகிறது!

Published:Updated:

டேவிட் மலான் | உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன்... ஆனாலும் தன்னை நிரூபிக்க போராட்டம் ஏன்?!

தினேஷ் அகிரா எழுதும் பவர் ப்ளே தொடரின் நான்காம் பகுதி உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான டேவிட் மலானின் கரியரை அலசுகிறது!

டேவிட் மலான் ( Jon Super )

இன்றைய தேதிக்கு டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயிலோ அல்லது மிஸ்டர் 360° ஜோஸ் பட்லரோ அல்ல. மாறாக இந்த சிறப்புக்கு உரியவர் T20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற தகுதியை மட்டுமே தனக்கான அடையாளமாக மாற்றிக் கொண்ட டேவிட் மலான். இதற்கு முன்னால் 'யார் இந்த டேவிட் மலான்?' என்று கூகுளில் தான் தேடிக் கொண்டிருந்தோம். கிடைத்த தகவல்கள் ஒன்றும் அத்தனை சுவாரசியமானவை அல்ல.

டேவிட் மலான் பிறந்தது தென்னாப்பிரிக்காவில். 11 வருட கவுன்ட்டி கிரிக்கெட்டில் களைத்துப் போனவருக்கு 29-வது வயதில் வருகிறது சர்வதேச கிரிக்கெட் அழைப்பு. 15 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு மலான் மீண்டும் அணிக்கு வெளியே. பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதம் மட்டும் தான் ஒரே ஆறுதல். 29 வயதில் தொடங்கிய மலானின் டெஸ்ட் கரியர் 30 வயதிலேயே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிற நிலைமை.

டேவிட்  மலான்
டேவிட் மலான்
ரமணன்

நிரந்தர இடமில்லாத நம்பர் 1 பேட்ஸ்மேன்!

அப்போது டி20 கிரிக்கெட் தான் மலானுக்கு கை கொடுத்தது. தாய் நாடான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அறிமுக டி20 போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது. 20 போட்டிகளுக்குள் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்கிற உச்சம். தடால் புடால் டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 45 ரன்கள் சராசரி. 140-க்கும் நெருக்கமான ஸ்ட்ரைக் ரேட். இப்படி ஓவர் நைட்டில் மலான் உச்சத்துக்கு சென்றாலும் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம் விட்டபாடில்லை.

மலான் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் அவர் இங்கிலாந்தின் நிரந்தர லெவனில் இடம்பெற்று விட முடியாது. உலகில் எங்காவது இது போன்ற ஒரு கொடுமை நடக்குமா? இங்கிலாந்து அணியில் நடக்கும். காரணம் கேப்டன் இயான் மார்கன் தலைமையிலான அணியின் செய் அல்லது செத்து மடி அணுகுமுறை. டேவிட் மலானின் ஆட்டம் எந்தப் புள்ளியில் இங்கிலாந்து பாணியில் இருந்து விலகுகிறது ? அதற்கு முன்பாக டி20 பேட்டிங்கின் அடிப்படைகளை பார்த்து விடலாம்.

டி20: பேட்ஸ்மேனுக்கு சொர்க்கமா?

T20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரிதான். ஆனால் கொஞ்சம் பிசகினாலும் மீளவே முடியாத நரகத்தில் அவர்களை தள்ளிவிடும்.ஃபார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல் பந்தில் இருந்தே பேட்ஸ்மேன் அடித்தாடியாக வேண்டும். கொஞ்சம் செட்டில் ஆன பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் பவுண்டரி அடித்தவுடன் சிங்கிள் எடுப்பது ஸ்மார்ட் கிரிக்கெட். ஆனால் டி20-ல் அடுத்தடுத்த பந்துகளையும் பவுண்டரிகளாக மாற்றினால் தான் கைதட்டல் கிடைக்கும்.

இங்கு பேட்ஸ்மேனின் விக்கெட்டுக்கு மரியாதை என்பதே கிடையாது. தனிப்பட்ட நபர்களின் ஆசாபாசங்களை விட அணியின் நலனுக்குத்தான் முன்னுரிமை. எந்நேரமும் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு தற்கொலை படைபோல. அணிக்காக இத்தனை தியாகங்கள் புரியும் அவர்களுக்கு ஏதேனும் தனிச் சலுகைகள் உண்டா? ஒன்றும் கிடையாது! தொடர்ந்து இரண்டு போட்டிகள் சொதப்பினால் அணியில் இடம் காலி. உண்மையில் மற்ற எந்த ஃபார்மட்களை விடவும் டீம் ஸ்பிரிட் அதிகமுள்ள ஃபார்மட் டி20 தான். அதனால்தான் பேட்ஸ்மேன் கொஞ்சம் சுயநலமாக ஆடினாலும் உடனே மாட்டிக் கொள்கிறான். சுயநலம் என்று சொன்னதும் உடனே மலான் நினைவுக்கு வருகிறார்.

டேவிட் மலான்
டேவிட் மலான்

சதம் அடித்த மலான்; தண்டனை கொடுத்த மார்கன்!

நவம்பர் 8, 2019. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் நான்காவது போட்டி. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்கிறார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்ட்டோ ஆட்டமிழக்க களத்துக்கு வருகிறார் மலான். சான்ட்னர் ஓவரின் எஞ்சிய பந்துகளில் நான்கை ஏப்பம் விட்டவர் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்கிறார். ஐந்தாவது ஓவரின் முடிவில் மலான் எடுத்தது 10 பந்துகளில் 10 ரன்கள். 10 ஓவரின் முடிவில் 20 பந்துகளில் 24 ரன்கள். அதுவரை பதுங்கிக் கொண்டிருந்தவர் அலாரம் வைத்து எழுந்தது போல சரியாக 11-வது ஓவரில் பாயத் தொடங்குகிறார்.

சான்ட்னர் பந்தில் லாங் ஆனுக்கு மேல் சிக்ஸர்; சவுதி பந்தில் கவர் திசையில் புல்லட் வேகத்தில் பவுண்டரி. 15 ஓவர் முடிவில் 35 பந்துகளில் 59 ரன்கள். மறுபுறம் மார்கன் மாத்து மாத்தென்று மாத்திக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் 18-வது ஓவரின் கடைசி பந்தில் சதத்தை எட்டுகிறார் மலான். அதுவும் ட்ரென்ட் போல்ட் பந்தை டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு. நடு நடுவில் ரிவர்ஸ் ஸ்வீப், ramp ஷாட் போன்ற வஸ்துக்களையும் மலான் ஆடிக் காட்டத் தவறவில்லை. ஆரம்பத்தில் அமைதி. இறுதியில் ஆக்ரோஷம். இதுதான் டேவிட் மலான் ஸ்டைல். ஆனால் சுவாரஸ்யமே இனிமேல் தான். சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய மலானுக்கு மார்கன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மூன்று போட்டிகளுக்கு அணியில் இடமறுப்பு. காரணம் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட்டுக்கு பயந்து சிங்கிள் ஓடாமல் விட்டதற்கு. மார்கனுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை... சுயநலம்.

டேவிட் மலான்: நானே ஹீரோ… நானே வில்லன்!

டேவிட் மலானை ஒருவிதத்தில் கிறிஸ் கெயிலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். சர்க்கரைப் பொங்கலும் வடைகறியும் என்று நினைக்காதீர்கள். காரணம் இருக்கிறது. பொதுவாக கெயில் 30 அல்லது 35 பந்துகள் எடுத்து கொஞ்சம் செட்டில் ஆன பின்பு சரவெடியை ஆரம்பிப்பார். அதுபோல மலானும் 12-வது ஓவர் வரை வெறுமனே தடவிக் கொண்டிருப்பார். அதற்குப் பின்னர் மெதுவாக வேகமெடுத்து 150 ஸ்ட்ரைக் ரேட்டில் இன்னிங்சை முடித்துவிடுவார். ரிஸ்க் குறைவு; ரிவார்ட் அதிகம். சரி இதிலென்ன இங்கிலாந்து நிர்வாகத்துக்கும் கேப்டன் மார்கனுக்கும் பிரச்னை? நாணயத்திற்கு இரு பக்கம் போல மலான் ஸ்டைல் ஆட்டத்துக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அது அணிக்கு மிகவும் ஆபத்தானது.

20 பந்துகளில் அவர் 20 ரன்கள் எடுத்து பிறகு அடுத்த 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் ஒருவேளை 20 ரன்களுடன் அவர் ஆட்டமிழந்து விட்டால் அணியின் நிலைமை என்னாவது? அணியின் மொத்த ரிசோர்ஸ் ஆன 120 பந்துகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் வீண்.

டேவிட் மலான்
டேவிட் மலான்

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிக நீண்டது. பவர் ப்ளேவில் பதம் பார்க்க ராய் பட்லர் ஜோடி. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை வாரிச் சுருட்ட பேர்ஸ்டோ. இறுதிக் கட்டத்தில் பேயாட்டம் ஆட மார்கன். தற்போது புதுவரவாக அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் வேறு. இவர்களைத் தவிர ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற ஆல் ரவுண்டர்களுக்கும் பஞ்சமில்லை. 11-வது பேட்ஸ்மேன் ஆதில் ரஷீத் வரை முதல்தர கிரிக்கெட்டில் 5 சதங்கள் குவித்தவர். 120 பந்துகளுக்கு எத்தனை பேர் போட்டி என்று பாருங்கள். தலை சுற்றிப் போய்விடும் போல. இங்கு மலானுக்கு என்ன வேலை இருக்க முடியும்? அடுத்த டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதும் மலானுக்கு ஒரு பாதகமான அம்சம். தென்னாப்பிரிக்காவில் பிறந்த மலானுக்கு சுழற்பந்து வீச்சு என்றால் எட்டிக்காய்.

லீக் போட்டிகளில் சுமார்; இங்கிலாந்து அணியில் சூப்பர்!

சரி மலானுக்கு சாதகமான அம்சம் என எதுவுமே கிடையாதா? நிச்சயம் இருக்கிறது. அது அவருடைய அனுபவம். PSL, BBL, BPL, T20 Blast, MSL போன்ற உலகின் முக்கிய டி20 தொடர்களில் விளையாடிய அனுபவமுள்ளவர் மலான். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடவுள்ளார். அழுத்தம் மிகுந்த ஃபார்மட்டான டி20-ல் பதற்றமில்லாமல் ஆடுவதற்கு இந்த அனுபவம் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவசியம். தற்போதைய இங்கிலாந்து டி20 பேட்டிங் வரிசையில் பட்லருக்கு அடுத்து false shot percentage குறைவாக உள்ள பேட்ஸ்மேன் மலான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொன்று இங்கிலாந்தின் அசகாய சூரர்கள் அடங்கிய பேட்டிங் வரிசையே இங்கிலாந்துக்கு சில நேரங்களில் ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.

5 ஓவர்களில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற சூழ்நிலையில் ஒருபக்கம் நங்கூரமிட்டு நிற்க ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் வேண்டும். அந்த இடத்துக்கு மலான் உடன் போட்டியிட ஜோ ரூட் மாதிரியான ஒரு சில வீரர்களே இங்கிலாந்தில் உள்ளனர். Big occasion player என்ற இன்னொரு அம்சமும் மலானுக்கு சாதகமாக உள்ளது. சாதாரண டி20 லீக் போட்டிகளில் அவருடைய சராசரி 30, ஸ்ட்ரைக் ரேட் 130. அதுவே இங்கிலாந்துக்கு ஆடும் போது அவருடைய சராசரி 43, ஸ்ட்ரைக் ரேட் 140. ஒருவேளை அனுபவம், Big occasion player போன்ற அம்சங்களை இங்கிலாந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் மலான் இடம்பெற வாய்ப்புள்ளது.

டேவிட் மலான்
டேவிட் மலான்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரீ என்ட்ரி ; தாக்குப் பிடிப்பாரா?

டி20 கிரிக்கெட்டில் மலானின் இடம் குறித்த விவாதங்கள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க டெஸ்ட் அணியில் கதவு அவருக்கு மீண்டும் திறந்துள்ளது. இதை அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். 29 வயதில் கிடைத்து 30 வயதில் கிட்டத்தட்ட முடிந்து போன ஒரு வாய்ப்பு மீண்டும் 33வது வயதில் தேடி வந்தால் அது அதிர்ஷ்டம் தானே? கிடைத்த வாய்ப்பை அவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். லீட்ஸ் டெஸ்டில் ஜோ ரூட்டின் மாஸ்டர் கிளாஸ் சதத்தின் நடுவே அவருடைய அழகான இன்னிங்ஸ் போதிய கவனம் பெறாமல் போய்விட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு மூன்றாம் வரிசையில் ஒரு நல்ல இன்னிங்ஸை பார்க்க முடிந்தது. என்னவொரு சரளமான பேட்டிங். மலான் ஒரு டச் பிளேயர். கால் நகர்த்தல் எல்லாம் அவ்வளவாக இருக்காது. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் அதை பெளண்டரியாக மாற்றிவிடுவார். தென்னாபிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் பிட்ச்சில் கொஞ்சம் வேகத்துடன் பவுன்ஸ் கிடைக்குமா என எதிர்பார்ப்பார். ஆசிய வீரர்களை Flat track பேட்ஸ்மேன் என சொல்வோமே அதுபோல மலான் ஒரு Bouncy track பேட்ஸ்மேன். 2017-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் மலான் கிட்டத்தட்ட 400 ரன்களை குவிக்க காரணமும் இதுதான். ஆனால் அதுவே இங்கிலாந்தின் பசுமையான ஆடுகளங்களில் அவருக்கு வில்லனாக வந்து நிற்கிறது.

Full, short லென்த்களில் வீசப்படும் பந்துகள் மலானுக்கு ஒரு பிரச்னையே அல்ல. ஆனால் corridor of uncertainty என சொல்லப்படும் good லென்த் பந்துகளில் அவருக்கு பலவீனம் உண்டு. 33 வயதான நிலையில் அவருடைய கரியர் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் தங்களுடைய 30-களில் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து சாதித்த மைக் ஹஸ்ஸி உள்ளிட்ட நிறைய ஜாம்பவான்கள் மலானுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். சிறுவயதில் தந்தை சொன்ன ஒரு அறிவுரையை மலான் இன்றைக்கும் நினைவில் வைத்திருக்கிறார். "தகுதி குறைவு காரணமாக நீ கிரிக்கெட்டில் தோற்றுப் போனால் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால் போதிய முயற்சி எடுக்காமல் தோற்றுப் போனாய் என்று இருக்கவே கூடாது."