உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியின் ரஹானேவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. டெஸ்ட் அணியிலிருந்து ட்ராப் செய்யப்பட்டிருந்த ரஹானே மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டு நடந்திருந்தது. அந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதியிருந்தன. அந்தப் போட்டியை வென்று நியூசிலாந்து அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் வைத்து நடந்திருந்தது. இந்த இறுதிப்போட்டி முடிந்த பிறகு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் நடந்தன. அவற்றின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கவே டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆட இரு அணிகளும் தகுதிபெற்றன.
இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஜுன் 7 முதல் 11 வரை நடக்கவிருக்கிறது. 12-ம் தேதி ரிசர்வ் டேவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியைத்தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள்.
இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களின் பட்டியல்.'ரோஹித் சர்மா, சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்.'

இந்த அணியில் ரஹானேவின் பெயரும் இருப்பதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ரஹானே டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக அறியப்பட்டார். வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக ஆடினார். கேப்டனாக ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரையெல்லாம் வென்று கொடுத்தார். ஆனால், மோசமான ஃபார்ம் காரணமாக ஒரு கட்டத்தில் அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டார். துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ரஹானேவின் கிரிக்கெட் கரியர் என்னவாகப் போகிறது எனும் கேள்வி எழுந்திருந்த நிலையில் திடீரென ஐ.பி.எல் மூலம் சென்னை அணிக்காக மிரட்டலான கம்பேக் கொடுத்தார்.
5 போட்டிகளில் 209 ரன்களை 199 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அசத்தியிருந்தார். இந்நிலையில், இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ரஹானேவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.