Published:Updated:

WTC இறுதிச்சுற்று: கோலியா வில்லியம்சனா... யாருக்கு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ( twitter.com/BCCI )

WTC Final: பிளேயிங் லெவனில் இருக்கும் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி, ஆகியோர் இங்கிலாந்து பிட்சுகளில் உள்ள வேகப்பந்துவீச்சிற்கான சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்த பார்ப்பர்.

ஜூலை 9, 2019. உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தின் இறுதி இரண்டு ஓவர்கள். இந்திய அணியின் வெற்றிக்கு தேவை 31 ரன்கள். களத்தில் தோனி எனும் ஒற்றை நம்பிக்கை வெற்றிக்கான தீப்பொறியை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதால் இறுதிப்போட்டிக்கு எப்படியேனும் முன்னேறிவிடுவோம் என்று ஒவ்வொரு இந்தியனும் நம்பிக்கொண்டிருந்த நேரம். 49ஆவது ஓவரின் முதல் பந்தை அப்பர் கட் செய்து டீப் பேக்வர்ட் பாயிண்ட்டிற்கு சிக்ஸர் அடிக்கிறார் தோனி. அடுத்து பந்து ரன் இல்லாமல் போகவே கடைசி 10 பந்துகளுக்கு 25 ரன்கள் தேவை.

ஃபெர்குசனின் மூன்றாவது பந்தை லெக்சைடில் தட்டிவிட்டு ஒடும் தோனி ஸ்ட்ரைக்கை தக்கவைத்து கொள்ள இரண்டாவது ரன்னுக்கு விரைகிறார். அப்போது டீப்பில் இருந்து கீப்பருக்கு விட்ட மார்டின் கப்டிலின் த்ரோ துல்லியமாக ஸ்டம்ப்பை தகர்கிறது. ஒரு நொடி மான்செஸ்டர் மைதானம் முழுவதும் பேரமைதி. கிரீஸுக்கும் தோனியின் பேட்டிற்கும் இடையேயான அந்த ஓர் அடிக்கும் குறைவான இடைவேளை இந்தியாவின் நூறு கோடி கனவுகளை சுக்குநூறாக்குகிறது.
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
twitter.com/ICC

இவை நடந்து இரண்டு வருடங்கள் நிறைவடைய போகின்றன, அந்த ஒற்றை ரன் அவுட் தந்த வலி ஒவ்வொரு இந்திய ரசிகன் மனதிலிருந்தும் இன்னும் அகலவில்லை. ஆனால் தற்போது ஒரு புதிய நம்பிக்கையுடன் நிமிர்கிறான் அவன். அதே இங்கிலாந்து மண், அதே எதிராளி, ஆனால் இம்முறை அரையிறுதி அல்ல, வெற்றியாளனை நிர்ணயிக்கப்போகும் இறுதிப்போர். ஆம், இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை சந்திக்கப்போகிறது விராட் கோலி தலைமையிலான இந்தியப்படை.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பின்பு இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டி முன்னேறி இருக்கும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவிற்கு எந்த வகையிலும் குறைச்சல் இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது நியூசிலாந்து அணி. ஏன் இந்திய அணியை விட சற்று பலமாகவே காட்சியளிக்கிறது என்றே கூறலாம்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அறிவிப்பிற்கு பிறகு விளையாடிய அனைத்து தொடர்களையும் வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் மட்டுமே தொடரை முழுமையாக இழந்து வைட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் இவ்விரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகள் இரண்டிலும் நியூசிலாந்து அணியே வென்றுள்ளது. 2016-ம் ஆண்டு டி20 உலகப்கோப்பை மற்றும் 2019-ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை என இரண்டிலும் இந்திய அணி முறையே நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் கட்டுபடுத்தி பின் சேஸிங்கில் எதிரணி பௌலர்களிடம் வீழ்ந்திருந்தது.

WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
twitter.com/ICC

ஆனால், இவற்றையெல்லாம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் யோசிக்காது. முன்பு வெளிநாட்டு தொடர்களில் தொடர் படுதோல்வி அடைந்து வந்த ஓர் அணி, இன்று பலம் பொருந்திய எதிரணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் வல்லமை பெற்றுள்ளது. இந்திய அணியின் சமீபத்திய டெஸ்ட் வெற்றிகள் வீரர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும். இந்தியாவிடம் உள்ள பலங்களில் மிக முக்கியமானது அணியின் வேகப்பந்துவீச்சு.

பிளேயிங் லெவனில் இருக்கும் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி, ஆகியோர் இங்கிலாந்து பிட்சுகளில் உள்ள வேகப்பந்துவீச்சிற்கான சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்த பார்ப்பர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்தது அணியில் உள்ள உலகத்தரம் வாய்த்த ஸ்பின்னர் ஆல்ரவுண்டர்ஸ். அஷ்வின் மற்றும் ஜடேஜா போட்டியின் இறுதி நாள்களில் ஸ்பின்னுக்கு சாதகமாகும் ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசுவது மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கினால் இந்திய அணிக்கு வெற்றி எளிதாகும். கடைசியாக அணியின் பலம் வாய்த்த பேட்டிங். கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா மற்றும் டெஸ்ட் ஃபார்மேட்டில் டி20 ஆடும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறும் பேட்டிங் வரிசையில் யாராவது இருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன்களைக் குவித்தாலே மிகப்பெரிய ஸ்கோரை இந்தியா எட்டும்.

WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
twitter.com/BCCI

அணியில் இத்தனை பலம் காணப்பட்டலும் பலவீனங்களும் இல்லாமல் இல்லை. அதில் முதன்மையானது அணியின் ஒப்பனிங் பேட்டிங். முரளி விஜய், ராகுல், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா, அகர்வால், தவான் என இத்தனை வீரர்களை தொடக்க இடத்தில் கேப்டன் கோலி முயற்சி செய்து பார்த்தாலும் இன்னும் அணியில் அதற்கான நிரந்தர தீர்வு இல்லை. அதனால் இந்திய அணி இப்போட்டியை நன்றாக தொடங்குவது மிக அவசியம். இந்தப் போட்டியில் ரோஹித்தும், கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அடுத்ததை பலவீனம் என்று கூறாமல் எதிர்பார்ப்பு என வைத்துக்கொள்ளலாம். அணியை சிறப்பாக வழிநடத்தி இத்தனை மாற்றங்களுக்கு வித்திட்ட கோலியின் சமீபத்திய பேட்டிங் ஃபாரம். அரைசதங்கள் பல விளாசும் அவர் அதை மூன்றிலக்க ரன்களாக மாற்றினால் அது அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையாக அமையும்.
WTC இறுதிச்சுற்று - 9: Gabba கோட்டையைச் சரித்த ரஹானேவின் இளம் படை! Border Gavaskar Trophy 2020-21

மறுபக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2019-ம் தவறவிட்ட கோப்பையை இம்முறை நிச்சயம் வென்றிட போராடும். கேப்டன் வில்லியம்சனில் தொடங்கும் அந்த அணியின் பேட்டிங் வரிசை ராஸ் டெய்லர், டாம் லாதம் மற்றும் சமீபத்திய சூப்பர் ஸ்டார் டெவோன் கான்வே. மேலும் இதைவிட பலமான அந்த அணியின் வேகப்பந்துவீச்சு. போல்ட், சௌதி, மேட் ஹென்ரி, நெய்ல் வாக்னர், கைல் ஜெமிஸன் என நீளும் இந்த வரிசைதான் முந்தைய தோடரில் இந்திய வைட்வாஷ் ஆனதற்கான முக்கிய காரணம். தங்களின் சொந்த நாட்டின் பெரும்பாலான தன்மைகளை கொண்ட இங்கிலாந்து தேசத்தில் இவ்வீரர்கள் தங்களின் முழு திறன்களை வெளிகாட்டுவார் என்பதில் நிச்சயம் சந்தேகமே இல்லை.

WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
twitter.com/BLACKCAPS

இங்கிலாந்து மண்ணில் இரு டெஸ்ட் போட்டிகளை ஆடி அந்த சூழ்நிலைகளுக்கு முழுமையாக பொருந்தி தொடரையும் கைப்பற்றி இந்தியாவுடன் மோதத் தயாராக நிற்கிறது நியூசிலாந்து. மறுபக்கம் ஐபிஎல் நிறுத்தப்பட்டதையடுத்து ஒரு மாத காலம் எந்தவொரு போட்டிகளிலும் ஆடாத இந்திய அணி வீரர்கள் சுமார் 10 நாள்கள் தனிமைக்குப் பிறகு தங்களுக்கு உள்ள வலைப்பயிற்சி மற்றும் இன்ட்ரா-ஸ்குவாட் போட்டிகளை மட்டுமே ஆடி தயாராகி இருக்கின்றனர். போதாகுறைக்கு பல முன்னால் வீரர்களும் நியூசிலாந்துக்கு சாதகமாகவே தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இத்தனை கூடுதல் சாதகங்கள் நியூசிலாந்து அணிக்கு இருந்தாலும் அந்த நிமிடம் அந்த நொடி எதிராளியின் ஒவ்வொரு திட்டத்தையும் தாக்குதலையும் முறியடிக்கும் அணிக்கே கோப்பை வசப்படப்போகிறது. கேப்டன் விராட் கோலியின் கைகளை அலங்கரிக்குமா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் கோப்பை?

- களம் காத்திருக்கிறது. நிறைவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு