Published:Updated:

Ben Stokes: ராஜாவுக்குக் கிரீடம் சூட்டிய மாவீரன் - ஓய்வுபெறும் உலகக்கோப்பை ஹீரோ!

Ben Stokes ( ICC )

கிரீடமேயின்றி ராஜாவாகப் பாவனை செய்து கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட்டை உண்மையிலே கிரீடம் சுமக்க வைத்தார். உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். இங்கிலாந்தை லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டின் ராஜாவாக்கினார்!

Published:Updated:

Ben Stokes: ராஜாவுக்குக் கிரீடம் சூட்டிய மாவீரன் - ஓய்வுபெறும் உலகக்கோப்பை ஹீரோ!

கிரீடமேயின்றி ராஜாவாகப் பாவனை செய்து கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட்டை உண்மையிலே கிரீடம் சுமக்க வைத்தார். உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். இங்கிலாந்தை லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டின் ராஜாவாக்கினார்!

Ben Stokes ( ICC )
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். எதிர்பாராத சமயத்தில் ஸ்டோக்ஸிடமிருந்து வந்த அதிர்ச்சிகரமான முடிவாகவே இது பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்குக் கனவாக இருந்த உலகக்கோப்பையை அந்த அணிக்கு வென்று கொடுத்தவர் இத்தனை சீக்கிரமாக ஓடிஐ போட்டிகளிலிருந்து விலகுவதை ரசிகர்களால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவர். அவருக்கு 12 வயதாக இருக்கும் போது ரக்பீ வீரரான ஸ்டோக்ஸின் தந்தை பயிற்சியாளர் பணிக்காக இங்கிலாந்துக்குக் குடிபெயர்கிறார். அங்கிருந்தே ஸ்டோக்ஸூம் பிரிட்டன் குடிமகனாக மாறுகிறார். கிரிக்கெட் ஆடுகிறார். பின்னாள்களில் ஸ்டோக்ஸின் குடும்பம் நியூசிலாந்துக்குத் திரும்பிய பிறகும் இங்கிலாந்து அணிக்கு ஆட வேண்டும் என்பதற்காக ஸ்டோக்ஸ் மட்டும் இங்கிலாந்திலேயே தங்கிவிடுகிறார். நியூசிலாந்து பிரஜை என்பதால் சில சமயங்களில் வேற்று ஆளாகவும் பாவிக்கப்பட்டிருக்கிறார்.

பிரபலமான வீரர்களும் சில கமெண்ட்டேட்டர்களுமே ஸ்டோக்ஸை 'கிவி' என அடையாளப்படுத்துவதுண்டு. ஆனால், பின் நாளில் இந்த கிவிதான் இங்கிலாந்து அணிக்காக வரலாற்றுச் சம்பவத்தை நிகழ்த்திக் காட்டினார்.
Ben Stokes
Ben Stokes

பென் ஸ்டோக்ஸின் திறனையும் அர்ப்பணிப்பையும் வார்த்தைகளில் வர்ணிப்பதைவிட ஒரு நிகழ்வை அதற்குச் சாட்சியாக முன் வைக்கலாம். 2020-ல் இங்கிலாந்தின் சம்மர் சீசனில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்தது. அந்தத் தொடரின் ஒரு போட்டியில் ஸ்டோக்ஸ் பந்துவீச வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஒருவர் ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆடினார். சரியான டைமிங்கில் அடிக்கப்பட்டதால் பந்து எளிதில் பவுண்டரியைக் கடந்திருக்க வேண்டும். ஆனால், ஸ்டோக்ஸ் விடவில்லை. ஓடி வந்து பந்து வீசிய வேகத்தில் ரன் அப்பைக் கூட முழுமையாக முடிக்காமல் அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுத் திரும்பி பந்தைத் துரத்திச் சென்று பவுண்டரி லைனில் விழுந்து புரண்டு அதைத் தடுத்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் இப்படியான ஃபீல்டிங்கையெல்லாம் காண்பது அரிதினும் அரிது. ஆனால், அதுதான் பென் ஸ்டோக்ஸ்! அணிக்காக அணியின் வெற்றிக்காக தன்னால் இயன்றதைக் கடைசி வரை விடாப்பிடியாகச் செய்வார். இந்தக் குணத்திற்குக் கிடைத்த பரிசுதான் 2019 உலகக்கோப்பை.

ஏறக்குறைய 100 ஓடிஐ போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். 3000 ரன்களுக்கு நெருக்கமாக மட்டுமே அடித்திருக்கிறார். எண்களாகப் பார்த்தால் பெரிய சாதனையாகத் தெரியாது. ஆனால், ஏற்படுத்திய தாக்கத்தை அளவிட்டால் ஸ்டோக்ஸின் ஓடிஐ கரியர் விலைமதிப்பற்றது.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்
ICC

2011-ம் ஆண்டே இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் அறிமுகமாகியிருந்தாலும் 2015 உலகக்கோப்பைக்கு பிறகே முழுமையாக இங்கிலாந்து அணியின் செட்டப்புக்குள் வந்தார். தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பெற்றார். 2015 ஓடிஐ உலகக்கோப்பை இங்கிலாந்துக்கு மாபெரும் சறுக்கலாக அமைந்தது. வங்கதேசத்திடம் தோற்றுத் தலைகுனிவோடு தொடரிலிருந்து வெளியேறியிருந்தனர். அந்தத் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட்டுக்குள் சில சீர்திருத்தங்கள் ஏற்படத் தொடங்கின. பழைமை மரபான பேட்டர்கள் ஓரங்கட்டப்பட்டு துணிச்சலாக இறங்கி அடிக்கக்கூடிய ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸூக்கும் இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம் கிடைக்கத் தொடங்கியது. 2019 உலகக்கோப்பையை மையப்படுத்தி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தக்கூடிய ஓர் அணி உருவாக்கப்பட்டது. அந்த அணியின் முக்கியமான ஆபத்பாந்தவனாக ஸ்டோக்ஸூம் இருந்தார்.

2019 உலகக்கோப்பை தொடங்கியது. சொந்த மண்ணில் இங்கிலாந்து களமிறங்குகிறது. கடந்த உலகக்கோப்பையைப் போன்று இங்கே சொதப்பிவிடக் கூடாது. அப்படிச் சொதப்பினால் கடந்த நான்கு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் அத்தனையும் விரயமாகிவிடும். 2015-ல் இழந்ததை, அங்கே சாத்தியப்படாததை இங்கே நிகழ்த்திக்காட்ட இங்கிலாந்து கொஞ்சம் கூடுதல் உஷாராகவே களமிறங்கியது. ராய், பேர்ஸ்ட்டோ, பட்லர், மோர்கன் என அத்தனை பேரும் வெளுத்து வாங்கினர். ஸ்டோக்ஸ் இன்னும் துடிப்பாக அழுத்தமான இன்னிங்ஸ்களை ஆடினார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே இங்கிலாந்து வென்றது. ஸ்டோக்ஸ்தான் ஆட்டநாயகன். அரைசதம் + 2 விக்கெட் என அசத்தியிருந்தார்.

Jos Buttler - Ben Stokes
Jos Buttler - Ben Stokes
மொத்தமாக அந்த உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் 465 ரன்களை எடுத்திருந்தார். வெற்றிகரமான சேஸிங்குகளை விட இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் எதிராக ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டங்கள் இங்கிலாந்தின் மானத்தைக் காத்தன.

இறுதிப்போட்டியில் ஸ்டோக்ஸ் ஆடிய வெறியான ஆட்டத்திற்கான முன்னோட்டங்கள் அவை. லார்ட்ஸில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் ஆடிய அந்த ஆட்டத்தை மறக்க முடியுமா? உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டி என்னும் கௌரவத்தை அந்த போட்டிக்குக் கொடுத்ததில் ஸ்டோக்ஸின் அந்தத் தீர்க்கமான ஆட்டத்திற்குத்தான் பெரும்பங்குண்டு. கிரீடமேயின்றி ராஜாவாகப் பாவனை செய்து கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட்டை உண்மையிலே கிரீடம் சுமக்க வைத்தார். உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். இங்கிலாந்தை லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டின் ராஜாவாக்கினார்!

அப்பேர்ப்பட்ட ஸ்டோக்ஸ்தான் இப்போது ஓடிஐ போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இன்று நடைபெறும் ஓடிஐ போட்டிதான் தன்னுடைய கடைசி ஓடிஐ போட்டியாக இருக்கும் என அறிவித்துவிட்டார்.

சகவீரர்களுடன் இங்கிலாந்து அணிக்காக ஆடிய ஒவ்வொரு மணித்துளியையும் நேசித்தே ஆடினேன். நாங்கள் அசாத்தியமான பயணங்களை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், இனியும் ஓடிஐ போட்டிகளில் என்னுடைய 100% திறனை வெளிக்காட்ட முடியுமா எனத் தெரியவில்லை. தன்னுடைய முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அணிக்காகக் கொடுக்கக்கூடிய வேறொரு வீரரின் இடத்தை நான் எடுத்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இப்போதைய சூழலில் என்னால் மூன்று ஃபார்மேட்களிலும் ஆட முடியாது.
ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்
England Cricket

என மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறி அணியின் நலன் கருதி ஓய்வு பெறப்போவதாக ஸ்டோக்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நட்சத்திர அந்தஸ்த்தில் வம்படியாகச் சவாரி செய்ய நினைக்காமல் அணியின் நலனை முன்னிலைப்படுத்தியதற்கே தனியாக ஸ்டோக்ஸை பாராட்டலாம்.

2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஸ்டோக்ஸின் தனிப்பட்ட வாழ்விலும் சில இழப்புகள் ஏற்பட்டிருந்தன. ஸ்டோக்ஸ் அதிகம் விரும்பி ஹீரோவாகப் பார்த்த அவரின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மனரீதியான அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காகக் காலவரையின்றி கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்தார். பின், சில மாதங்களிலேயே ஓய்விலிருந்து மீண்டு வந்தார். எப்போதுமே அணிக்கான வீரராக, அணியை முன்னிலைப்படுத்துபவராகவே ஸ்டோக்ஸ் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் கூட ஐபிஎல்-ஐ விட்டுவிட்டு டெஸ்ட் போட்டிகளை மனதில் கொண்டு கவுன்ட்டி கிரிக்கெட்டிற்கு ஆடச் சென்றுவிட்டார். ரூட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் ஆக்கப்பட்டார். ஸ்டோக்ஸ் முழுநேர கேப்டனாகி இங்கிலாந்து எதிர்கொண்ட முதல் 4 போட்டிகளிலுமே இங்கிலாந்து அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்போகிறோம் என ஸ்டோக்ஸ் சபதமிட்டிருக்கிறார். அந்தச் சபதத்தின் நீட்சியாகக்கூட இந்த ஓய்வு முடிவை மதிப்பிடலாம்.

Ben Stokes
Ben Stokes
AP

இனி ஸ்டோக்ஸின் கவனம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளை நோக்கியதாக மட்டுமே இருக்கக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு லிமிட்டெட் ஓவர்களில் இங்கிலாந்து திணறிய சமயத்தில் ஆபத்பாந்தவனாக உள்ளே வந்து அணியை உச்சத்துக்கு அழைத்துச் சென்றார். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தடுமாறுகையில் தன் பார்வையை டெஸ்ட் பக்கமாகத் திருப்பியிருக்கிறார். இங்கேயும் இங்கிலாந்து அணி உச்சத்தைத் தொடுவதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்பட தொடங்கியிருக்கின்றன.

துணிச்சலான விலகலுக்கும் எட்டப்போகும் உயரங்களுக்கும் வாழ்த்துகள் ஸ்டோக்ஸ்!